பொருளடக்கம் பக்கம் செல்க


antima kAlam (a novel) -part 2
by Re. Karthigesu of Malaysia
(in tamil script, unicode format)

அந்திம காலம்
(நாவல்) - பாகம் 2
ரெ.கார்த்திகேசு

ரெ.கார்த்திகேசு ஓய்வு பெற்ற தொடர்புத் துறை (mass communication) பேராசிரியர். இந்நாவல் தவிர "வானத்து வேலிகள்"; "தேடியிருக்கும் தருணங்கள்"; "காதலினால் அல்ல" என்ற மூன்று நாவல்கள் மற்றும் "புதிய தொடக்கங்கள்"; "மனசுக்குள்"; "இன்னொரு தடவை" என்னும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.


அந்திம காலம்
(நாவல்)
(ரெ.கார்த்திகேசு)

அந்திம காலம் - 10


அன்று பகல் முழுவதும் பயங்கரமானதாக இருந்தது. தலை சுற்றல் கொஞ்சமும் ஓயவில்லை. தலையணையில் தலைசாய்ந்திருந்த போதும் ஏதோ பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வே இருந்தது. தலையில் விண் விண்ணென்ற வலி இருந்தது. வயிறு குமட்டியவாறே இருந்தது. சாப்பாட்டை நினைக்கவே முடியவில்லை. ஜானகி ஏதோ சூப் செய்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். இரண்டு கரண்டி சாப்பிட்டு 'குவேக்' என்று குமட்டினார். அப்புறம் அதைத் தொட முடியவில்லை. மாலை மடிந்து இருள் படரத் தொடங்கிய அந்த வேளையில் சோபாவுக்குள் வயிற்றைப் பிசைந்து கொண்டு சுருண்டு படுத்துவிட்டார்.

முன்னிரவில், இன்னமும் கொஞ்சம் மிச்சமாய் இருக்கும் பின்மாலை வௌிச்சத்தில், பிரகாசிக்க முடியாமல் மஞ்சளாய் மங்கியிருக்கும் மின்சாரக் குமிழிகளின் வௌிச்சத்தில், வீடு வெள்ளையும் மஞ்சளும் கலந்த ஒளியில் இருந்தது. ஒரு வாழும் வீட்டுக்குரிய அமைதியான ஒலிகள் அவர் காதுகளை வந்தடைந்தன. அடுப்பில் ஏதோ தாளிக்கும் ஒலி; பைப்பைத் திறந்து தண்ணீர் வடூய விட்டுப் பாத்திரங்களை அலசி எடுக்கும் ஒலி; பீங்கான் தட்டுகளை மேசையில் வைக்கும் ஒலி; இவற்றுக்கெல்லாம் பின்னணியாக அடுப்பங்கரையில் எந்நாளும் பாடியவாறிருக்கும் வானொலி ஆறிலிருந்து ஏதோ ஒரு சினிமாப் பாட்டு; "அடுப்பக் கொஞ்சம் கொறச்சி வைங்க அத்தை" என்ற ஜானகியின் பணிவான குரல்; ஜானகியும் அன்னமும் தணிந்த குரலில் பேசிக் கொள்ளும் வார்த்தைகள் புரியாத ஒலி; எண்ணெய் மணம்; தலைக்கு மேல் சுருதி பிசகாமல் விர் விர்ரென்று சுழன்று கொண்டிருக்கும் விசிறி.

குடும்பத்தின் ஒலிகள், மணங்கள், வௌிச்சங்கள். இவையெல்லாம் சேர்ந்ததுதான் வீடு. இது நல்ல வீடு என்று நினைத்துக் கொண்டார்.

மனமும் உடலும் சோர்ந்திருக்கும் போதுதான் இந்த ஒலிகள் தௌிவாகக் கேட்கின்றன. உற்சாகமாக இந்தக் குடும்பச் சூழ்நிலையில் ஒருவனாக ஆடியோடிக் கொண்டிருந்த நாட்களில் இந்த ஒலிகள் மீது கவனம் இருந்ததில்லை. இந்த ஒலிகள் பின்னணியில் இருந்தன. இன்று ஆட்டம் ஓட்டம் ஓய்ந்து விட்ட போது இந்த ஒலிகள் முன்னணியில் இருக்கின்றன. இவற்றின் சுகம், குடும்பச் சூழ்நிலையில் இவை வகிக்கின்ற இடம் இப்போதுதான் தெரிகிறது. இது விகாரங்கள் இல்லாத சராசரிக் குடும்பம் என்று நினைத்துக் கொண்டார். துன்பங்களும் இன்பங்களும் கலந்து இருக்கின்ற மிதமான குடும்பம்.

ஆனால் இப்போது துன்பம் ஓங்கியிருக்கும் காலம். பென்டுலம் துன்பத்தின் பக்கமாக ஓங்கியிருக்கிறது. இது இறங்குமா? இன்பம் ஓங்குமா? ஓங்கும். பென்டுலம் திரும்பும். ஆனால் அதற்கு முன் தன்னை விழுங்கிவிட்டு இந்த வீட்டில் ஓர் இழவு நடந்து ஒப்பாரிகள் முடிந்த பின்னர் மெதுவாக அமைதி மீண்டு இன்பம் ஓங்கும். அதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கலாம்.

இன்றைக்கு என்ன கிழமை? செவ்வாயா? இரண்டு வார சிகிச்சை முடிந்து மூன்றாவது வாரத்தில் மீண்டும் இரண்டு நாட்கள் சிகிச்சையில் ஓடிவிட்டன. டாக்டர் கொடுத்த மருந்துகளை ஜானகி நேரம் தவறாமல் அளந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மருந்தின் பக்க விளைவுகள் கடுமையாக இருந்தன. குரல் ரணமாகிவிட்டது. தண்ணீர் குடித்தாலும் வலித்தது. பசி என்பது என்ன என்று மறந்து விட்டது. தலை புண்ணாக இருந்தது. கதிரியக்கம் பாய்ச்சப்படும் அந்த இடம் கருத்துத் தீய்ந்து விட்டது. வலித்தது. அந்தப் பக்கம் திரும்பிப் படுக்க முடியாமல் ஒரு பக்கமாகவே ஒருக்களித்துப் படுக்க வேண்டியிருந்தது. உடல் முழுதும் தோல் ரணம் அதிகமாகிவிட்டது. குளிக்க, துவட்ட முடியவில்லை. டவலைத் தண்ணீரில் நனைத்து ஒத்தி ஒத்தி எடுக்க வேண்டியிருந்தது. தூக்கம் வரவேண்டிய வேளைகளில் அதற்குப் பதிலாக மயக்கம்தான் வந்தது. தலை முடி கொட்டத் தொடங்கியிருந்தது.


*** *** ***


நேற்று மௌன்ட் மிரியம் போயிருந்த போது, எக்ஸ்ரேக்களைப் பரிசோதித்து விட்டு டாக்டர் லிம் பெருமூச்சு விட்டுப் பேசினார். "சுந்தரம், இரண்டு வாரம் முழுக்கக் கொடுத்த சிகிச்சை அவ்வளவாகப் பலன் தரவில்லை."

"அப்படியென்றால்...?" சுந்தரம் கவலையோடு கேட்டார்.

"புற்று நோய் செல்களின் வளர்ச்சி தடைப்படவில்லை. கொஞ்சம் செல்கள் தீய்ந்துள்ளன. ஆனால் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை.

அமைதியாக இருந்தார்கள். டாக்டர் லிம் எக்ஸ்ரே படத்தைப் பெரிதாக்கிக் காட்டும் மானிட்டர் திரையில் பல கோணத்தில் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

"இன்னும் ரெண்டு மூன்று நாள் ரேடியோதெராப்பியையும் கெமோதெராப்பியையும் தொடருவோம். பலன் இல்லையானால் இதை நிறுத்தி விடுவோம்."

"நிறுத்தி விட்டு..?"

டாக்டர் யோசித்தார். "இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு புதிய புற்று நோய் ஆராய்ச்சியாளர் நம் மருத்துவ மனைக்கு வருகிறார். மலேசியர்தான். அமெரிக்காவில் ஆராய்ச்சியை முடித்து சில புதிய உத்திகளோடும் மருந்துகளோடும் திரும்ப வருகிறார். இங்கு தங்கியிருந்து மேலும் சில ஆராய்ச்சிகளைச் செய்யப் போகிறார். என்னோடு இணைந்து பணியாற்றப் போகிறார். அவரிடம் உங்களைக் காட்டப் போகிறேன்" என்றார்.

வாழ்க்கை எனக்கு எதிராக இருக்கிறது. தெய்வங்கள் என்னைக் கைவிட்டு விட்டன. ஒரு புதிய டாக்டர் வந்து இந்த விதியை மாற்றி எழுதிவிட முடியாது எனத் தோன்றியது. எனக்கு மரணம் என்பதை எழுதி உறுதிப் படுத்தியாகி விட்டது. ஆனால் அது சாதாரண மரணமாக அமையக் கூடாது என மேலே முடிவு செய்யப்பட்டு தீர்ப்பு எழுதப் பட்டிருக்கிறது. 'இந்த சுந்தரம் என்ற குற்றவாளி ஆறு மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு, இவனது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக அழுகிய பின் இறுதியாக மூச்சுத் திணறலுடன் சாக வேண்டும் என்பது இந்த தேவலோக நீதி மன்றத்தின் முடிவு. முதலாவதாக மூளையின் சில பாகங்கள் அழுக வைக்கப் படும். அதன் பின்னர்...'

"சுந்தரம். கவலைப் படாதீர்கள். இந்த நோய் உங்களுக்கு எப்படி ஒரு சவாலோ அப்படியே எனக்கும் ஒரு சவால்தான். இதைக் கட்டுப் படுத்த என்னால் ஆன அனைத்தையும் செய்வேன். இதற்கிடையில் டாக்டர் ராம்லி வந்ததும் நாம் நடத்தும் போரில் அவரும் பக்க பலமாக இருப்பார்" என்றார் டாக்டர் லிம்.

"வேறு பலன் இல்லா விட்டாலும் உங்கள் ஆராய்ச்சிகளுக்கு என் நோய் பயன் படுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்றார் சுந்தரம்.

டாக்டர் லிம் சிரித்தார். "நல்லது, நல்லது. அந்த மனப் போக்குதான் வேண்டும்" என்றார்.


*** *** ***

சென்ற வாரத்து நினைவுகளுக்கு ஊடே கொஞ்சமாகத் தூக்கம் வந்தது போல் இருந்து அது கலைந்த நேரத்தில் பலவீனமாகக் கண்ணைத் திறந்து பார்த்தார். பரமா கொஞ்சம் தூர நின்றவாறு அவரைக் கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையசைத்துக் கூப்பிட்டார். மெதுவாக பக்கத்தில் வந்து நின்றான். அவனைப் பார்த்து சோர்ந்து புன்னகைத்தார்.

"தாத்தா, ஆர் யூ சிக்?" என்று கேட்டான்.

"ஆமாம்!" என்று தலையாட்டினார்.

அருகில் வந்து அவர் மடியில் கை வைத்து முகத்தையே கூர்ந்து பார்த்தான்.

"வை ஆர் யு சிக்?" என்று கேட்டான்.

'அது தெரிந்தால் வாழ்க்கையின் ரகசியம் புரிந்துவிடும் என் அன்பு பேரப்பிள்ளையே!' என்று எண்ணிக்கொண்டு அவனை அணைத்துக் கொண்டார்.

"சீக்கு எல்லாருக்கும் வரும் பரமா! வந்து வந்து போகும். என்ன செய்றது? உடம்புன்னு இருந்தா சீக்கு வரத்தான் செய்யும்!" என்றார்.

அவர் பக்கத்தில் நெருக்கமாக வசதியாக உட்கார்ந்து கொண்டான்.

"ஐ ஏம் அல்சோ சிக்! சீ!" இருமிக் காட்டினான். அவன் நெஞ்சில் சளி கட்டியிருப்பது தெரிந்தது.

அவனுடைய இருமலும் சளியும் அவருக்கும் கவலையாகத்தான் இருந்தது. எப்போதும் சோர்ந்து இருந்தான். அவனுடைய எடையும் குறைந்து கொண்டே வந்தது. ஜானகி அவனை இரண்டு மூன்று முறை கிளினிக்குக் கொண்டு சென்று வந்தாள். அங்கிருந்து தனியார் குழந்தை நோய் நிபுணரிடமும் கொண்டு சென்றிருந்தாள். இருந்தும் அவன் இருமலும் சோர்வும் அவனை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.

ஜானகியும் அன்னமும் அடுப்படியில் வேலை முடித்து அந்தப் பக்கமாக வந்தார்கள். ஜானகி பரமாவை அவரிடமிருந்து பிரித்து அழைத்துக் கொண்டாள். "பரமா! தாத்தா படுத்திருக்கும் போது தொந்திரவு பண்ணாதேன்னு சொன்னேனா இல்லியா?" என்று அவனை அதட்டினாள். அவன் சிணுங்கினான்.

சுந்தரம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். இந்த இரண்டு பெண்களும் பார்க்கின்ற வேளையில் துவண்டு கிடந்து தனது இயலாமையைக் காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

"ஏதாகிலும் குடிக்கக் கொண்டு வரட்டுமாங்க?" என்று கேட்பாள் ஜானகி.

வேண்டாம் என்று தலையாட்டினார். "அதிருக்கட்டும் ஜானகி. பரமா இப்படி இருமிக்கிட்டே இருக்கானே, டாக்டர் என்னதான் சொல்றாரு?"

"அதாங்க கிளினிக்கில குடுத்த மருந்தில ஒண்ணும் மாற்றத்தக் காணும். குழந்தை டாக்டர் நாதன்கிட்ட காட்டியிருக்கு. அவர் ரெண்டு தடவ ரத்த சாம்பிள் எடுத்து சோதனைக்கு அனுபியிருக்கிறாரு. நாளன்னைக்குத்தான் முடிவு வருமாம். போய்ப் பார்த்தாத்தான் தெரியும்" என்றாள் ஜானகி.

அன்னம் பேசினாள்: "பிள்ளைக்கு அப்பா அம்மாவ இப்படித் திடீர்னு பிரிஞ்சிருக்கிறதே பெரிய பாதிப்பா இருக்கும் தம்பி. சின்னப் பிள்ளதானே! ஏக்கத்திலேயே சோர்ந்து போய் சீக்கும் வந்திரும்."

"வென் இஸ் மை மம்மி கமிங் பேக்?" என்று கேட்டான் பரமா.

"ஆமா! பாத்துக்கிட்டே உக்காந்திரு. ஒங்க அம்மா ஒன்னத் தேடி வரப்போறா" என்று வெடுக்கென்று பேசினாள் ஜானகி.

"ஜானகி, கொழந்த கிட்ட அப்படிப் பேசாதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்!. ஏற்கனவே நொந்து போன கொழந்த! நாமில்லையா அவன்கிட்ட அன்பா இருக்கணும்!" என்று கோபப்பட்டார் சுந்தரம். கோபப்பட உடம்பில் தெம்பிருப்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஜானகி பரமாவின் தலைமுடியைக் கோதி விட்டவாறே பேசினாள். "கொழந்த மேல எனக்கு என்னங்க கோவம்? இந்தப் பாவி இப்படி நம்பள விட்டுட்டுப் போயிட்டாளேன்னுதான்..."

பரமா பாட்டியின் மடியில் பாசமாகச் சாய்ந்தான்.

அன்னம் திடீரெனப் பேசினாள். "தம்பி! சனிக்கிழம, ஞாயித்துக் கிழம ஒனக்கு சிகிச்சை கெடையாதுதான?" என்று கேட்டாள்.

"ஆமா கிடையாது! ஏன் கேக்கிற அக்கா?" என்று கேட்டார்.

"இல்ல, இந்த வாரம் வெள்ளிக் கிழம எல்லாருமா என்னோட தைப்பிங் வந்திடுங்க! ரெண்டு நாள் அங்க வந்து ஓய்வா இருங்க. தைப்பிங் லேக் கார்டன்ல போய் உக்காந்தா உன் நோயில பாதி குறைஞ்சிடும்! என்ன சொல்ற?" என்று கேட்டாள்.

நல்ல திட்டம்தான். தைப்பிங் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஏரிக் கரையும் ரொம்பப் பிடிக்கும். அந்த நினைப்பிலேயே ஒரு குளுகுளுப்பு இருந்தது. ஆனால்...

"நல்ல திட்டந்தாக்கா. ஆனா அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணனுமே!" என்றார்.

"பிரயாணம் என்ன பெரிய பிரயாணம்? என்னோட கார்லியே உன்ன அழச்சிக்கிட்டுப் போறேன். ஏறி ஒக்காந்தா ஒரு மணி நேரத்தில தைப்பிங்! அப்படியே களைப்பா இருந்தா இடையில இளைப்பாற எத்தனையோ இடம் இருக்கு!"

ஜானகியின் முகத்தைப் பார்த்தார். "என்ன சொல்ற ஜானகி?" என்றார்.

"போறது நல்லதுதாங்க. நீங்களும் வீட்டுக்குள்ளயே கெடக்கிறிங்க. இந்த மாற்றம் நல்லதுதான்!" என்றாள்.

உண்மைதான். இந்த உடம்பின் உபாதைகளுக்கு இடம் கொடுத்து இருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்க முடியாது. நோய் இன்னும் இடம் எடுத்துக் கொள்ளும். இன்னும் உற்சாகமாக வளரும். அதை உதாசீனம் செய்ய வேண்டும். உடம்பு சோரும் நேரங்களில் உள்ளத்துக்கு உற்சாகம் ஏற்படுத்த வேண்டும். இந்த நோயைப் புறந்தள்ள வேண்டும். புதிய காற்றும் காட்சிகளும் உள்ளத்துக்குக் கள்ளூட்டினால் உடம்பின் உபாதைகள் தாமாக மறையும்.

அவர் எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல பரமா உற்சாகமாகச் சொன்னான் "ஓக்கே தாத்தா, லெட் அஸ் ஆல் கோ டு தைப்பிங்!" ஜானகி சிரித்துக் கொண்டே அவனை உச்சி மோந்தாள்.

வார இறுதியில் தைப்பிங் போவதென முடிவாயிற்று. அந்த எண்ணமே எல்லார் மனத்திலும் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த வாரம் முடிவதற்குள் வாழ்க்கையில் இன்னொரு இடி விழவிருக்கிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.


*** *** ***

வியாழனன்று சிகிச்சைக்குப் போனபோது டாக்டர் லிம்மோடு மதர் மேகியும் இன்னொரு இளம் மலாய் டாக்டரும் இருந்தார்கள். டாக்டர் லிம் சுந்தரத்திற்கு அந்தப் புதியவரை அறிமுகப் படுத்தி வைத்தார். "மிஸ்டர் சுந்தரம், இவர் டாக்டர் ராம்லி. அன்றைக்குச் சொன்னேனல்லவா, இவர்தான்!"

டாக்டர் ராம்லி உட்கார்ந்திருந்த வாக்கில் கை குலுக்கினார். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார். சிரிப்பற்ற கடுமையான முகம். மிகவும் சீரியசான ஆராய்ச்சியாளராக இருப்பார் போலும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

மதர் மேகி என்றும் போல் மாறாத சிரிப்புடன் இருந்தார். "ஹலோ சுந்தரம்! உங்கள் வியாதியால் எங்கள் மருந்துகளையெல்லாம் நீங்கள் முறியடிப்பதாக டாக்டர் லிம் சொல்கிறாரே, உண்மைதானா?" என்று கேட்டுச் சிரித்தார்.

சுந்தரத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. "சாகப் போகிறவனை ஒரு வீரனாக்கப் பார்க்கிறீர்கள்" என்றார்.

டாக்டர் லிம் பேசினார். "சுந்தரம், டாக்டர் ராம்லி உங்கள் மருத்துவ வரலாற்றை எல்லாம் பார்த்து விட்டார். மேலும் சில சோதனைகள் மேற்கொள்ளவிருக்கிறார். ரத்த சோதனையும் பயோப்சியும் செய்வார். உங்கள் மருந்துகளை ரத்துச் செய்து விட்டேன். அடுத்த திங்கள் கிழமை நீங்கள் வரும் போது டாக்டர் ராம்லி பரிசோதனைகள் முடித்து புதிய சிகிச்சை ஆரம்பிப்பார்."

டாக்டர் ராம்லி முதன் முறையாகப் பேசினார். "சில புதிய மருந்துகள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் இப்போதுதான் இவற்றைப் பயன் படுத்த அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மலேசியாவில் சோதனை முறையில் இவற்றைப் பயன் படுத்த நான் தனி அனுமதி வாங்கியிருக்கிறேன். அந்த உண்மையை உங்களிடம் நான் தெரிவிக்க வேண்டியது கடமை" என்றார். ஏக அமெரிக்க வாடையுடன் ஆங்கிலம் பேசினார். அவர் குரல் கொஞ்சம் முரட்டுத் தனமாகவும் இருந்தது.

மதர் மேகி குறுக்கிட்டார். "உண்மையில் மலேசியாவில் இந்த மருந்தைப் பெறப் போகும் முதல் புற்று நோய் நோயாளி நீங்கள்தான். ஆகவே நீங்கள் குணமடைவது அல்லது குணமடையாமல் இருப்பது என்பது இந்த மருந்தின் வெற்றி தோல்விக்கு ஒரு சோதனையாக அமையும். அதனால்தான் உங்கள் முன்னேற்றத்தை அணுக்கமாகக் கவனித்து மற்ற நோயாளிகளுக்கு இதை அறிவிக்கும் பணியை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த டாக்டர்களுடன் நானும் இங்கிருக்கிறேன்!" என்றார்.

சுந்தரத்திற்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. அன்னையே, நான் முழுகிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கரையேற்ற நீங்கள் வீசும் கயிறு கந்தலாய் இருந்தால் என்ன, பொன்னிழையால் செய்திருந்தால் என்ன? எனக்கு அவற்றின் வித்தியாசம் தெரியாது. எதுவாக இருந்தாலும் நான் பிடித்துக் கொள்ளுவேன்.

"மதர் மேகி. நான் தயார். இந்த நோய் என்னை உருக்குகின்றது. அதிலிருந்து என்னை மீட்க நீங்கள் முடிவு செய்யும் எந்த மருந்துக்கும் எந்த சோதனைக்கும் நான் தயார். நான் பிழைத்தால் ஹீரோ. பிழைக்காவிட்டால் தியாகி. இரண்டு வேஷங்களும் எனக்குச் சம்மதம்தான்" என்றார்.

"பலே, பலே! சரியாகச் சொன்னீர்கள்" என்றார் மதர் மேகி.

டாக்டர் ராம்லி சுந்தரத்தின் ஃபைலைப் பார்த்தவாறு பல கேள்விகள் கேட்டுக் குறித்துக் கொண்டார். பெரும்பாலும் இப்போது சாப்பிடும் மருந்தின் பக்க விளைவுகளைப் பற்றியே அவை இருந்தன.

பின்னர் படுக்கையில் படுக்க வைத்து உடம்பின் பல பாகங்களையும் அழுத்திப் பார்த்தார். வலிகளைக் குறித்துக் கொண்டார். வாயைத் திறந்து கண்களைப் பிதுக்கி வயிற்றைத் தட்டிப் பல குறிப்புகளை எழுதினார். டாக்டர் லிம்மும் அவரும் மருத்துவ மொழியில் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அதன் பின் எக்ஸ்ரே அறைக்கு அழைத்துச் சென்று டெக்னீஷியனிடம் சொல்லிப் பல எக்ஸ்ரேக்களை எடுக்க வைத்தார் டாக்டர் ராம்லி.

முடிந்தவுடன் ஓர் ஊசியுடன் அறைக்குள் வந்தார். தோள்பட்டையில் கிருமிநாசினி தடவி மென்மையாகக் குத்தி மருந்தை மெதுவாகப் பாய்ச்சிய பின் ஊசியை உருவித் துடைத்து விட்டார்.

"இது என்ன மருந்து?" சுந்தரம் சந்தேகத்துடன் கேட்டார்.

"புதிய மருந்து. முன்பு சாப்பிட்ட மருந்துகளால் உங்களுக்கு ஏற்படும் குமட்டலையும் வயிற்றுப் பிரட்டலையும் தலை மயக்கத்தையும் இது குறைக்கும் சக்தியுள்ளது. நீங்கள் வீடு திரும்பலாம். இனி திங்கள் கிழமை வாருங்கள். வீட்டில் மீதியுள்ள எந்த மருந்தையும் இனி சாப்பிட வேண்டாம். திங்கள் கிழமை புதிய சிகிச்சை பற்றி உங்களுக்கு விளக்குகிறேன்" என்றார். அந்தக் குரலில் இருந்த கண்டிப்பு அவர் பேச்சைக் கட்டளையாக்கிற்று.

கதவு வரை போய் அதைத் திறக்கப் போன டாக்டர் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்தார். "உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்" என்றார்.

"நீங்கள் ஞாபகப் படுத்த வேண்டியதில்லை. திங்கள் கிழமை தவறாமல் வந்து விடுவேன். அதைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு இப்போது வேறு முக்கியமான வேலைகள் ஏதுமில்லை" என்றார் சுந்தரம். இந்த டாக்டரிடம் கொஞ்சம் வேடிக்கை பேசி அவரது இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்று நினைத்தார்.

"நான் சொல்லியது அதுவல்ல. நான் யார் என்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டும். அது என் கடமை"

"நீங்கள் டாக்டர் ராம்லி..."

"ஆமாம். டாக்டர் ராம்லி பின் டத்தோ யூசுப். உங்கள் முன்னாள் மாணவன். நினைத்துப் பாருங்கள்"

கதவை மூடிப் போய்விட்டார்.

ராம்லியா? தான் கட்டொழுங்கு ஆசிரியராக இருந்த போது தன்னை இக்கட்டில் மாட்டிவிட்ட ராம்லியா? கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் உருப்பட மாட்டான் என்றும், எதிர்காலத்தில் கயவனாகப் போவான் என்றும் தான் கணித்து வைத்திருந்த அந்த விஷமி ராம்லியா?

என்ன நினைப்பதென்று தெரியவில்லை. அதனால்தான் தன்னிடம் இப்படிக் கடுமையாக நடந்து கொள்கிறாரா? நெஞ்சில் இன்னும் வஞ்சம் வைத்துக் கொண்டிருக்கிறாரா? அவரிடம் இப்போது வசமாக மாட்டிக் கொண்டேனா?

ஊசி போட்ட இடத்தைப் பார்த்தார் சுந்தரம். இலேசான எரிச்சல் ஆரம்பித்திருந்தது.


*** *** ***

"புதுசா ஒரு டாக்டர் வந்திருக்காரு ராமா!" ராமாவுடன் காரில் திரும்பும் போது சுந்தரம் சொன்னார்.

"அப்படியா! வௌிநாட்டுக்காரரா? புற்று நோய் நிபுணரா?" என்று கேட்டார் ராமா.

"மலேசியர்தான். மலாய்க்காரர். ஆராய்ச்சியாளர். அமெரிக்காவில ஆராய்ச்சிகள் முடிச்சி வந்திருக்காராம். புதுசா மருந்துகள் கொண்டாந்திருக்கிறாராம்"

"அடடே! அப்ப உன் வியாதி சீக்கிரம் குணமாயிருமா?"

யோசித்தார். "தெரியில. அடுத்த வாரம் வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கணும். ஆனா, டாக்டரப் பார்த்தா பயமாயிருக்கு ராமா!"

"பயமா இருக்கா? ஏன்?"

"டாக்டர் யாருன்னு தெரிஞ்சா நீ கூட பயப்படுவ"

ராமா வியப்பாகப் பார்த்தார். "என்ன சொல்ற சுந்தரம்?"

"டாக்டர் வேற யாருமில்ல. ராம்லி. டத்தோ யூசுப்போட மகன். ஃப்ரீ ஸ்கூல் பழைய மாணவர்"

"ராம்லியா? ஒரு பொண்ண கெடுக்கப் பாத்து உன்ன ஆபத்தில மாட்டி வச்சான, அந்த ராம்லியா?"

"அவனேதான்"

ராமா மௌனமானார். கொஞ்ச நேரம் இருந்து பேசினார். "அதுதான் பயமாயிருக்குன்னு சொல்றியா? பழசயெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருப்பார்னு சொல்றியா?"

"அப்படித்தான் தெரியிது ராமா! என்னோட ஃபைலைப் பார்த்து நான் யார்னு தெரிஞ்சிக்கிட்டும் எங்கிட்ட சுமுகமா பேசல. தன்ன கடைசி நேரம் வரைக்கும் அடையாளம் காட்டிக்கில. மொகத்தை இறுக்கமா வச்சிக்கிட்டு மொரட்டுத் தனமா பேசிறாரு. கடைசியா எல்லாம் முடிஞ்சப்பறம்தான் "நான் யாருன்னு தெரியுதா"ன்னு ஒரு மிடுக்கா கேட்டுட்டுப் போறாரு."

ராமா யோசித்தார். "சேச்சே, நீ நினைக்கிறது சரியில்ல சுந்தரம். இளவயதில எப்படி இருந்தாலும் இத்தனை தூரம் படிச்சி முன்னேறி ஒரு டாக்டராகி ஆராய்ச்சியாளராகி அறிவாளியா இருக்கிற ஒருத்தரோட மனசில பழைய அர்த்தமில்லாத வெறுப்புகள் இருக்க முடியாது. ஒரு டாக்டரோட பயிற்சி அதுக்கு இடங்கொடுக்காது."

"எத்தனை டாக்டர்கள் அயோக்கியர்களா இருக்காங்கன்னு தெரியுமா ராமா? மனித உணர்ச்சிகளை வெல்றதுக்கு டாக்டர்கள் ஒண்ணும் துறவிகள் இல்லியே!"

"இல்ல சுந்தரம். அப்படி நெனைக்காதே! அப்படியே ராம்லி உன்னப் பழி தீர்க்கணும்னு நெனைச்சாலும் நீ அவர்கிட்ட பேஷன்டா இருக்கிற நேரத்தில உன் பலவீனத்தப் பயன் படுத்தி அப்படிச் செய்யமாட்டார். மருத்துவ நெறி அதுக்கு இடங்கொடுக்காது!"

"அப்படின்னா என்ன பூரணமா சுகப் படுத்தி அப்புறமாதான் கொல்வாருன்னு சொல்றியா?"

ராமா பெரு மூச்சு விட்டார். "ஏன் இப்படி வக்கிரமா யோசிக்கிறியோ தெரியில. உனக்கு நம்பிக்கையூட்ட என்னால முடியாது" என்றார்.

ஊசி போட்ட இடத்தில் இன்னமும் எரிச்சல் இருந்தது. என்ன விஷத்தை என் உடலுள் ஏற்றினான்? மதர் மேகியிடமும் டாக்டர் லிம்மிடமும் பேசி இந்தப் புதிய டாக்டரும் புதிய சிகிச்சையும் எனக்கு சம்மதமில்லை என்று சொல்லி டாக்டர் ராம்லியிடமிருந்து விடுபட வேண்டும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

ஆனால் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் நெஞ்சுக் குமட்டலும் வயிற்றுப் புரட்டலும் முற்றாக நின்றிருந்தன. மூளை தௌிவாகி தலை கனமற்றிருந்தது. முதன் முறையாக வயிறு பசிக்கக் கூடச் செய்தது. வீட்டுக்குப் போனதும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பல வாரங்களுக்குப் பிறகு உண்மையிலேயே பசியெடுத்து ஆகாரத்தின் மீது வெறுப்பு வராமல் ஆசை வந்திருப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வீடு சேர்ந்ததும் தலையை மீண்டும் சுற்ற வைக்கும் செய்தி காத்திருந்தது.

*** *** ***

பகவான் ஸரீ இராமகிருஷ்ணர் உபதேசம்; பக்கம் 266; பகவான் நோய்வாய்ப்பட்டுள்ள தமது நண்பர் கெஷாப் சந்திர சென்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்:

"காலைப் பனி நீரை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோட்டக்காரன் ரோஜாச் செடியைச் சுற்றி வேர் வரை மண்ணைத் தோண்டி எடுத்து விடுகிறான். அந்தப் பனி ஈரத்தை வாங்கிக் கொண்டு அந்தச் செடி இன்னும் நன்றாகத் தழைக்கிறது. அதனால்தான் உன்னையும் கடவுள் வேர் வரை பிடித்து உலுக்குகிறார் போலும். நீ குணமானதும் பிரம்மாண்டமான காரியங்களைச் சாதிக்கப் போகிறாய் போலும்.

"நீ நோய் வாய்பட்டிருக்கிறாய் என்று கேள்விப் படும் போதெல்லாம் என் மனநிலை தடுமாறுகிறது. உன் நோயைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அன்னையிடம் சென்று விடியற்காலை வேளைகளில் அழுதிருக்கிறேன். "அன்னையே! கெஷாப்பிற்கு ஏதாவது நடந்து விட்டால் நான் கல்கத்தாவில் யாருடன் பேசுவேன்?" என்று கேட்டிருக்கிறேன். கல்கத்தா வந்தடைந்ததும் அன்னைக்கு பழங்களும் பலகாரங்களும் படைத்து உன் நலத்துக்காக வேண்டியிருக்கிறேன்!"

அந்தத் தடிப்பான ஆங்கில புத்தகத்தை மெதுவாகக் கீழே வைத்தார் சுந்தரம். போனவாரம்தான் ராமா இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். The Gospel of Ramakrishna. "இராம கிருஷ்ணா ஆசிரமத்திற்குப் போயிருந்த போது இதைப் பார்த்தேன். உனக்காகத்தான் வாங்கினேன். உனக்குத்தான் இப்போ உக்காந்து படிக்க நிறைய நேரம் இருக்கே! படிச்சுப்பார்!" என்றார்.

பரமா வரவேற்பறையில் சோபாவிலேயே உறங்கிக் கொண்டிருந்தான். அவன் மூச்சு மெதுவாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. டாக்டர் அவனுக்கு வலி நிவாரணி கொடுத்திருந்தார். அது அவனை மயக்கிப் போட்டிருந்தது.

அவனைப் பற்றி செய்தி கேள்விப்பட்டுத் தான் வாயடைத்துப் போனபிறகு, மனத்தில் சூறாவளி அடித்துத் தணிந்த பிறகு, ஏனோ இந்தப் புத்தகத்தில் அமைதி தேடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

மத்தியானம் மௌன்ட் மிரியத்திலிருந்து திரும்பியதும் ராமாவுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுக் கொஞ்சம் உற்சாகமாகவே நடந்து வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம். ஜானகியும் அன்னமும் ஹாலிலேயே அவருக்காகக் காத்திருந்தது போல் இருந்தார்கள்.

"ஜானகி! ஒரு புது டாக்டர் அருமையான மருந்து கொடுத்தார். தலை சுத்தெல்லாம் டக்குன்னு நின்னு போய் வயிறே பசிக்க ஆரம்பிச்சாச்சி. சாப்பிட ஏதாவது இருக்கா?" என்று கேட்டார்.

ஜானகி சரேலென்று எழுந்து உள்ளே போய் அவருக்குச் சாப்பாடு எடுத்து வைத்தாள். சாம்பார் ரசத்துடன் சாப்பிட்டார். கொஞ்சமாகத்தான் சாப்பிட முடிந்தது என்றாலும் ருசித்துச் சாப்பிட்டார். சாப்பிடும்போதே இந்த டாக்டர் ராம்லியின் கதையையும் சொல்ல மறக்கவில்லை. ஜானகி பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். "ஊம்" கூடப் போடவில்லை.

"என்ன நான் நல்ல நல்ல கதை சொல்லிக்கிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு கவனிக்காம இருக்க?" என்று கேட்டார்.

"கவனிச்சிக்கிட்டுத்தாங்க இருக்கேன். இப்படி அதிசயமா நல்லா சாப்பிட்றிங்களே, அதுவே சந்தோஷந்தான்!" என்றாள் உற்சாகமில்லாமல்.

"பரமா எங்க?"

"தூங்கிறான்"

திடீரென்று நினைத்துக் கொண்டு கேட்டார். "ஆமா ஆஸ்பத்திரிக்குப் போனியே, பரமாவப் பத்தி டாக்டர் என்ன சொன்னார்?"

ஜானகி எழுந்து நின்றாள். "சாப்பிட்டு வாங்க, சொல்றேன்."

சரேலென்று ஹாலுக்குப் போய்விட்டாள். அவருக்கு அப்புறம் சாப்பாடு இறங்கவில்லை. கைகழுவி வௌியே வந்தார்.

"என்ன ஜானகி பதில் சொல்லாம வௌிய வந்துட்ட?"

ஜானகி அன்னத்தை ஒட்டிக்கொண்டு சூம்பிப் போய் உட்கார்ந்திருந்தாள். அன்னத்தின் முகமும் கருத்திருந்தது.

"சொல்லு ஜானகி!"

ஜானகி விசும்பினாள். அன்னத்தின் தோளில் தலை சாய்த்தாள். தேம்பி அழுதாள்.

"என்ன அக்கா, என்ன விஷயம்? ரெண்டு பேரும் இப்படி இருக்கிங்க?" வயிறும் நெஞ்சும் மீண்டும் கலவரமடைந்தன. கால் பலவீனமானது. உட்கார்ந்து கொண்டார்.

அன்னம் பேசினாள். "பரமாவோட ரத்தப் பரிசோதனை முடிவு வந்திருக்கு தம்பி. இன்னும் சில பரிசோதனைகள் பண்ணனுங்கிறாரு டாக்டர். ஆனா..."

"ஆனா...?"

"80, 90 சதவிகிதம் தௌிவாகத் தெரியுதுன்னு சொன்னார்."

"என்ன தௌிவாத் தெரியுது...?"

"பரமாவுக்கு லியுகேமியா தம்பி! இரத்தப் புற்று நோய்!"

நாற்காலியில் சாய்ந்தார். வயிறு புரண்டு அடங்கிற்று. செறிக்காத சோறும் ரசமும் சாம்பாரும் புளித்த குழம்பாகத் தொண்டைக் குழாய் வடூயே பீய்த்துக் கொண்டு ஏறி இறங்கி நெஞ்சை எரித்தன.

"நெஜமாவா அக்கா? நிச்சயமாவா?"

அன்னம் "ஆம்" என்று தலையாட்டினாள்.

'உண்மைதானா? சரியாகத் தெரிந்து கொண்டீர்களா? டாக்டர் தப்பு செய்து விட்டாரோ? இரத்தப் பரிசோதனையில் தவறு நடந்திருக்குமா?' இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்க நினைத்து கேட்காமல் சோர்ந்து போனார். இவை அலுக்க வைக்கும் கேள்விகள். மனத்தின் அலைச்சலை அதிகப் படுத்தும் கேள்விகள்.

இன்னொரு சோக நாடகம், இரண்டாம் காட்சியாக இன்றிரவு நடக்கிறது. பல தீய தெய்வங்கள் ஒன்று கூடி இந்த நாடகத்தை நடத்தி அனுபவிக்கின்றன. "ஒன்ஸ்மோர்" என்று கேட்டு மீண்டும் பார்த்து கைகொட்டி அனுபவிக்கின்றன. "ஐயோ பாவம்" என்று இச்சுக்கொட்டி ரசிக்கின்றன.

என்ன சொல்ல முடியும் ஜானகிக்கும் அக்காவுக்கும்? ஆறுதல் கூறத்தான் வேண்டும். எந்த வார்த்தைகளில் கூறுவது?

"பரவால்ல விட்டுத் தள்ளு ஜானகி! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு"

"அழாதே அக்கா! அழாதே ஜானகி! நான் இருக்கேன்!"

"தெய்வம் விட்டபடி நடக்கட்டும்"

"நான் முதல்ல போயிட்றேன் ஜானகி! இதையெல்லாம் பார்த்து சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது!"

"ஐயோ தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா?"

மனத்தில் நினைத்து நினைத்துப் பார்த்தார். எந்த வார்த்தைகள் இந்த சந்தர்ப்பத்திற்குச் சரியாக இருக்கும்? நெடு நேரம் யோசித்திருந்தார்.

பகல் நேரம் அப்படியே சோகத்தின் இறுக்கம் தளராமல் நகர்ந்தது. மாலை வந்தது. அப்போதுதான் இந்த இராமகிருஷ்ண போதனையைக் கையில் எடுத்தார்.

பக்கம் 267: பகவான் கூறுகிறார்:

"கடவுள் இரண்டு சந்தர்ப்பங்களில் சிரிக்கிறார். இரண்டு சகோதரர்கள் நிலத்தைப் பிரித்துக் கொள்ளும்போது, ஒரு கயிற்றைக் குறுக்கே போட்டுவிட்டு "இந்தப் பக்கம் என்னது, அந்தப் பக்கம் உன்னது" என்று சொல்லும்போது 'இந்த அண்டமே என்னுடையது. இதில் என்ன அந்தப் பக்கம் இந்தப் பக்கம்?' என்று சிரிக்கிறார்.

"கடவுள் மீண்டும் சிரிப்பது எப்போது என்றால் அழுது அரற்றும் ஒரு தாயைப் பார்த்து ஒரு மருத்துவர் "பயப்படாதே அம்மா! இந்தப் பிள்ளையை நான் குணப்படுத்துகிறேன்" என்று சொல்லும் போது. கடவுள் ஒரு பிள்ளையின் காலம் முடிந்து விட்டது என்று தீர்மானித்து விட்டாரானால் யாரும் அந்தப் பிள்ளையை மீட்க முடியாது என்று அந்த மருத்துவருக்குத் தெரியாதா?"

-----

அந்திம காலம் - 11


தட்டாம் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி பறந்த பின் ஒரு இலை மீது வந்து அமர்ந்தது. பரமா மூன்றாம் முறையாக பதுங்கிப் பதுங்கிப் போய்ப் பிடிக்க முயன்றான். ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டதில் பிசுபிசுத்துள்ள அவன் விரல்கள் அதன் இறக்கை மீது மூடுகின்ற கடைசி தருணத்தில் அது சர்ரென்று பறந்து போய் இன்னொரு இலையில் உட்கார்ந்தது. அவன் கோபத்தில் ஒரு சுள்ளியைத் தூக்கி வீசினான். அது எங்கோ போய் விழ தட்டாம் பூச்சி அரண்டு போய் ஏரியை நோக்கிப் பறந்தது.

"பட்டுக் கருநீலப்புடவை" என பாரதியார் வருணித்தாரே, அப்படி பளபளத்துக் கிடந்தது அந்தத் தைப்பிங் ஏரி. அது ஓர் ஓய்வான சனிக்கிழமையின் மாலை நேரம். ஓய்வு தேடி வந்த ஏராளமான மக்கள் அந்த ஏரிப் பூங்கா முழுவதும் இருந்தாலும் சுந்தரம் உட்கார்ந்திருந்த இடத்தில் ஓர் ஏகாந்தம் இருந்தது. அந்த அகண்ட ஏரியின் இந்த மூலை தனக்கும் பரமாவுக்கும் மட்டும் என்று எல்லை வகுத்துக் கொண்டது போல ஜனநடமாட்டம் குறைந்த ஒரு மூலையில் ஒரு மரத்தினடியில் அவர் சென்று உட்கார்ந்திருந்தார். ஏரியை ஒட்டிச் செல்லும் சாலையிலிருந்து வரும் கார்கள், மோட்டார் சைக்கிள் ஒலிகள் செவியைத் தாக்கினாலும் இந்த ஏரியின் அமைதியில் அவை கரைந்தன.

"இத்தனை ஒலிகள் இங்கு வந்து உலவுகின்றனவே, இவற்றில் எது இந்த ஏரியின் மொழி?" என்று யோசித்துப் பார்த்தார். ஏரியின் நீர்ப்பரப்பினைப் பார்த்தார். இலேசான காற்றில் கொஞ்சம் சலசலத்ததைத் தவிர வேறு ஒலிகள் அந்த நீரிலிருந்து வரவில்லை. "ஏரியின் மொழி மௌனம்" என எண்ணிக் கொண்டார். அது பேசுவதில்லை. அது அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு யோகியைப் போல இருக்கிறது.

லாருட் மலையின் நிழலில் அந்தத் தைப்பிங் ஏரி பரந்திருந்தது. அந்த மலைத் தொடரில்தான் உல்லாசத் தளமான மேக்ஸ்வெல் மலை இருக்கிறது. ஒருகாலத்தில் ஈயச்சுரங்கமாக இருந்து பின் ஏரியாக மாறியிருந்தது அந்த நீர்ப்பரப்பு.

அன்னம் பல ஆண்டுகளுக்கு முன் தைப்பிங் வர முடிவு செய்த போது இராம கிருஷ்ணன் மாமா இந்த ஏரிக்குப் பக்கமாக உள்ள அழகிய வீடமைப்புப் பகுதியான இனிய தமிழ்ப் பெயரைக்கொண்ட 'தாமான் இளையதம்'யில்' இந்த வீட்டை வாங்கிக் கொடுத்திருந்தார். தைப்பிங் ஏரிப் பூங்காவை ஒட்டி ஓடுகிற இந்த சாலையிலிருந்து ஜாலான் கம்போங் பெர்ச் வழியாக மூன்று நிமிடம் நடந்தால் அந்த தாமான் இளையதம்பி கண்ணுக்குத் தெரிந்து விடும். மரங்கள் அடர்ந்த சோலை அந்தப் பகுதி. அந்தத் திருப்பு முனையில் ஒரு சிறிய இந்துக் கோயிலும் உருவாகியிருந்தது.

தைப்பிங் வரும்போதெல்லாம் அக்காவின் வீட்டிலிருந்து மாலை வேளைகளில் அவர் நடந்தே இந்த ஏரிக்கு வந்து விடுவார். குழந்தைகளோடும் ஜானகியோடும் வந்து உலவிக் குலவிய நாட்கள் பல.

அப்போது அக்கா சேர்த்து வைத்திருந்த பணம் வைப்புத் தொகைக்கு மட்டும்தான் சரியாக இருந்தது. இப்போது கடன் முழுவதையும் கட்டி அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறாள். தைப்பிங்கிலேயே இன்னொரு இடத்தில் இன்னொரு சிறிய வீட்டையும் வாங்கி வாடகைக்கு விட்டுத் தன் பென்ஷன், அந்த வாடகை, டியூஷன் வருமானம் என மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பரமாவும் இப்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறான். நேற்றுப் புறப்பட்டு தைப்பிங் வந்ததுமே அவனுக்கு ஒரு உற்சாகம் வந்து விட்டது. இருமிக்கொண்டும் பலவீனமாகவும் இருந்தாலும் அவன் மனம் மாற்றத்தின் காரணமாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் சுந்தரத்துக்கு அப்படியில்லை. டாக்டர் ராம்லியின் மருந்து கொடுத்த ஒரு சில மணி நேர நிவாரணத்துக்குப் பிறகு பரமா பற்றிய செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவர் மனம் பயங்கர இருளில் ஆழ்ந்துவிட்டது. அந்த இருளில் உடம்பின் உபாதைகளும் அதிகமாயின. வாந்தியும் வயிற்றுப் புரட்டலும் அதிகமாயின. வழக்கமான தலைவலி பயங்கரமாக வந்து தாக்கியது. இரவில் தூக்கத்தை எதிர்பார்த்து தலை சுழலும் மயக்தத்திலேயே கழித்தார்.

பரமாவின் செய்திக்குப் பிறகு அன்றும் அடுத்த நாளும் தைப்பிங் பிரயாணம் பற்றி யாருக்கும் பேசத் தோன்றவில்லை. ஆனால் இரவில் அன்னம் தீர்மானமாகச் சொன்னாள்: "தம்பி, சொன்ன மாதிரி நாளைக்கு தைப்பிங் போறோம்."

சுந்தரம் தயங்கினார்: "என்ன அக்கா, இந்த நெலமையில...!"

"எந்த நெலமையில...? இப்படி நடந்திடிச்சின்னு உக்காந்து அழுதுக்கிட்டே இருக்கிறதா? வேணாம். கண்டிப்பா போவோம். பரமாவோட மருத்துவ சோதனை கடைசி முடிவு திங்கள் கிழமைதான் தெரியும். உனக்கும் திங்கள் கிழமை வரையில சிகிச்சை ஒண்ணுமில்ல. அப்புறம் என்ன?"

சுந்தரத்திற்கு அது சரியெனப் பட்டது. எல்லோரும் புறப்பட்டு வந்து விட்டார்கள்.

வந்த மறுநாளான இன்று மாலை தமக்குக் கொஞ்சம் தனிமை வேண்டும் என ஏரிக்குப் புறப்பட்டார். அனைவரும் தடுத்தார்கள். "வீட்டில இருந்து ஓய்வெடுக்கிறதுக்கு பதிலா ஏங்க போய் அலையிறிங்க?" என்று மறுத்தாள் ஜானகி.

"இது அலைச்சல் இல்ல ஜானகி! நான் தனிமையில சில விஷயங்கள யோசிக்க வேண்டியிருக்கு! என்னப் போகவிடு!" என்றார்.

ஜானகி கொஞ்சம் பயத்தோடு பார்த்தாள். "அப்படின்னா இருங்க! நானும் வாறேன்" என்றாள்.

சுந்தரம் அவளைப் பார்த்துச் சிரித்தார். "ஏன் ஜானகி, நான் தைப்பிங் கொளத்தில விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன்னு பயப்பட்றியா? சும்மா இரு. தனிமைன்னு சொன்னேன்ல. நீயும் கூட வந்தா அது தனிமையா இருக்காது. ஒரு மணி நேரம் உக்காந்திருந்து வந்திருவேன்" என்று புறப்பட்டார்.

ஆனால் பரமா விடவில்லை. "தாத்தா டேக் மீ என்ட் கோ!" என்றான்.

"ஐயோ, வேணாங்க! உங்களப் போட்டு அலைக்கழிச்சிருவான்! அவனுக்கும் உடம்பு சரியில்ல" என்றாள் ஜானகி.

ஆனால் பரமாவின் துணை அப்போது தனக்கிருந்தால் நல்லது என அவருக்குத் தோன்றியது. இருவருமே நாள் குறிக்கப்பட்டுவிட்ட மரண தண்டனைக் கைதிகள். ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம்.

அவனையும் அழைத்துக் கொண்டு மெதுவாக நடந்து ஏரிக்கரையை வந்தடைந்தார். தயக்கத்துடன்தான் அனுப்பி வைத்தாள் ஜானகி.

ஏரியை ஒட்டிய சாலைக்கு அப்பால் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த மழை மரங்கள் தங்கள் கிளைகளைச் சாலையைத் தாண்டி விரித்து ஏரியின் நீரைத் தொட முயன்று கொண்டிருந்தன. அந்தக் கிளைகள் சாலையைப் பந்தலாக மூடியிருந்தன. வாகனங்களும் பாதசாரிகளும் வெயில் படாமல் உல்லாசமாகப் போய் வர அந்த இயற்கைப் பந்தல் உதவியது.

அந்த மரங்களைப் பார்த்தால் பல கைகளைக் கொண்ட ஒரு அழகிய நாட்டியக்காரி அபிநயித்து நிற்பது போல அவருக்குத் தோன்றியது. அந்த மரத்தின் கிளை நீண்டு வளைந்து தண்ணீரைத் தொட முயன்ற காட்சி மைக்கலாஞ்சலோவின் வத்திக்கன் தேவாலயக் கூரை ஓவியத்தில் கடவுளின் விரல் மனிதனை நோக்கி நீண்டு தொட்டும் தொடாமல் நிற்கிறதே அதை அவருக்கு நினைவு படுத்தியது.

மரம் முழுவதிலும் காளான்கள் பூத்திருந்தன. ஏதோ ஒட்டுண்ணிச் செடிகள் பொத்தான் பொத்தானாகப் பூத்து பற்றிக்கொண்டு சரம் சரமாகத் தொங்கின. கிளைகளின் முடிவில் குட்டி உதய சூரியன்களாக ஆயிரம் பூக்கள். அந்தக் கிளைகள் தண்ணீரை அள்ள ஏந்திய கைகளாய் தொட்டும் தொடாமலும்....

எங்கும் உயிர் பூத்துக் குலுங்குகிறது. இதோ இந்தத் தட்டான் பூச்சிகளில்... இந்த நீர்ப்பரப்பில் நீந்தும் நீர்ச்சிலந்திகளில்... உள்ளே திரியும் மீன் குஞ்சுகளில்... தவளைச் சினைகளில்... எங்கும் உயிர் இருக்கிறது.

ஆனால் இதோ இங்கே ஓர் உயிருக்கு முடிவு நாள் நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. பூக்கு முன்னே ஒரு பூவுக்கு கருகும் தண்டனை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

எனக்கும்தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நான் வாழ்ந்து சிலவற்றையெல்லாம் அனுபவித்துப் பார்த்துவிட்டேன். எனக்கு இது சாயுங்காலம். எனக்கு இது அந்தி. கொஞ்சம் சீக்கிரமாக இந்தப் பொழுது சாயவேண்டும் என்று இருக்கிறது. அது பரவாயில்லை.

ஆனால் இதோ இவனுக்கு இது விடிகாலைப் பொழுதல்லவா? கிழக்கு வெளுக்கும்போதே அஸ்தமனமா? அரும்பிலேயே கருகிப் போவதா?

இந்த ஏற்பாடு எனக்குப் புரியவில்லை. இறைவனா? இயற்கையா? ஏதோ ஒன்று ஒரு திட்டம் வைத்துக் கொண்டு இப்படிச் செயலாற்றுகிறது. இந்தத் திட்டத்தின் பின்னே வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏன் எனக்கு இந்தத் திடீர் நோயைக் கொடுக்க வேண்டும்? கொடுத்த பின் என் அந்திம காலத்தில் ஏன் இந்தச் சின்னப் பிள்ளையைக் கொண்டு வந்து என்னிடம் சேர்க்க வேண்டும்? சேர்த்த பின் ஏன் அவனுக்கும் நாள் நிர்ணயிக்க வேண்டும்? நாங்கள் இருவருமாக இணைந்து சென்று ஆற்ற வேண்டிய வேலைகள் சொர்க்கத்தில் காத்திருக்கின்றனவா? அல்லது நாங்கள் இருவரும் சென்ற பிறவியில் ஒரே மாதிரி குற்றம் செய்து இந்தத் தண்டனையைப் பெற்று வந்தோமா? தெரியவில்லை. புரியவில்லை.

பரமா சோர்ந்து போய் அவரை நோக்கி நடந்து வந்தான். "திஸ் பூச்சி இஸ் வெரி நோட்டி!" என்றான்.

"ஏன் பரமா? பூச்சி உன்ன என்ன பண்ணுது?" என்று கேட்டார்.

"ஐ வாண்ட் டு கேட்ச் ஹிம். பட் ஹீ பிளைஸ் எவே!" என்றான்.

"அந்தப் பூச்சிக்கு என்ன பேர் சொல்லு பாப்போம்?"

"ஐ டோன்ட் நோ" என்றான்.

"தட்டாம் பூச்சி! சொல்லு!"

"தட்டாம் பூச்சி!" என்று திரும்ப சொன்னான்.

"தட்டாம் பூச்சி, பறந்து போச்சி! சொல்லு பாப்போம்!"

"தட்டாம் பூச்சி, பறந்து போச்சி!" மழலையில் ஆனால் சுத்தமாக ஒப்புவித்தான்.

அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வளர்ப்பில் தமிழ் இருந்தால் எந்தக் குழந்தையால் தமிழ் பேச முடியாது. இவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்கிறான். ஒரு வெறுப்பும் இன்றிப் பேசுகிறான். குழந்தையின் மனத்தில் ஒரு மொடூ மீது வெறுப்பு எப்படி வரும்? பெற்றோரின் அசிரத்தைதான் இந்த மத்தியதர வர்க்கக் குடும்பங்களில் தமிழ் அடூந்து போவதன் காரணம் என நினைத்தார்.

இப்படிச் செய்தாலென்ன? எனக்கு மீதியிருக்கும் இந்தச் சில நாட்களில் - வாரங்களோ வருடங்களோ தெரியவில்லை - அவனுக்கும் எஞ்சியிருக்கும் இந்தச் சில நாட்களில் - அவையும் வாரங்களோ வருடங்களோ தெரியவில்லை - அவனுக்கு நல்ல தமிழை அக்கறையோடு சொல்லிக் கொடுத்தாலென்ன?

நோயெனும் தீயில் விட்டில் பூச்சிகள் போல அவர்கள் சிறகெரிந்து விழ மீதியிருக்கும் இந்தச் சில நாட்களில் தமிழைக் கற்பித்தலும் கற்றுக் கொள்ளுதலும்தான் அவர்கள் இருவருக்கும் வாழ்க்கை இலட்சியம் என்று விதிக்கப் பட்டிருப்பதாக அவருக்குத் திடீரெனத் தோன்றியது.

"பரமா! தாத்தா ஒனக்குத் தமிழ் சொல்லிக் குடுக்கிறேன். கத்துக்கிறியா?" என்று கேட்டார்.

"ஐ நோ ஹவ் டு ஸபீக் டமில்!" என்றான்.

வியந்தார். "எப்படித் தெரியும்?" என்று கேட்டார்.

"மை ஃபாதர் டோட் மீ!"

மேலும் வியந்தார். அந்த முரடனா? வாழ்க்கையில் உன்னதமான எதையும் அறிந்து கொள்ளும் திறமையற்ற அந்த அப்பனா தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறான்?

"சரி! என்ன சொல்லிக் குடுத்தார் உங்கப்பா?" என்று கேட்டார்.

"மை ஃபாதர் ஆல்வேய்ஸ் சேய்ஸ் "போடா மடையா!"

நினைத்தது சரியாக இருந்தது. தனது அநாகரிப் பழக்க வழக்கங்களைத்தான் இந்தப் பிள்ளைக்குக் கற்றுக் கொடுத்து வேடிக்கை பார்த்திருக்கிறான். சில குடும்பங்களில் தமிழை இந்த வேடிக்கை விளையாட்டுக்களுக்குத்தான் பயன் படுத்துகிறார்கள். சினிமாவில் வருகின்ற கொச்சைப் பேச்சுக்களை மனப்பாடம் செய்து பரிமாறிக் கொண்டு சிரித்து மகிழத்தான் பயன் படுத்துகிறார்கள்.

"அதெல்லாம் வேணாம் பரமா! நான் நல்ல தமிழ் சொல்லித் தாறேன். கத்துக்கிரியா?"

"யெஸ்" என்றான்.

"சரின்னு சொல்லு பாப்போம்!"

"சரி தாத்தா!" என்றான். தாத்தாவை அவனாகச் சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

"சரி. இப்ப உன் பேர எப்படிச் சொல்லுவ?

"மை நேம் இஸ் பிரேம்" என்றான்.

அதையே தமிழ்ல சொல்லு! என் பேர் பிரேம்!"

"என் பேர் பிரேம்!" அப்படியே திருப்பிச் சொன்னான்.

"பாட்டி எனக்குப் பசிக்கிது"

"பாட்டி எனக்குச் சாக்லேட் குடு!"

"தாத்தா எனக்குத் தூக்கம் வருது"

அவர் சொல்லச்சொல்ல எல்லாம் அழகாகத் திருப்பிச் சொன்னான்.

"இப்ப பரமா, கொஞ்சம் கஷ்டமானது சொல்றேன். கத்துக்கிறியா?" என்றார்.

"ஐ கேன்" என்றான்.

"முடியும்னு சொல்லு!"

"முடியும் தாத்தா!" மீண்டும் தாத்தா கொஞ்சலாய் வந்தது.

தயங்கி மெது மெதுவாக, சீர் சீராகச் சொன்னார்.

"அகர..."

"அகர..:"

"முதல..."

"முதல..."

"எழுத்"

"எழுத்"

"தெல்லாம்..."

"தெல்லாம்..."


"ஆதி"

"ஆதி"


"பகவன்"

"பகவன்"

"முதற்றே"

"முதறே.."

"இல்ல... முதற்றே..."

"முதற்றே"

"உலகு"

"உலகு"

எல்லாவற்றையும் அவன் கோர்த்து முழுமையாகச் சொன்ன போது அவருக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவன் பெற்றோரின் மத்திய தர வர்க்க விகாரங்களுக்குள் இவனை முற்றாக இழந்து விட்டேன் என்று எல்லாவற்றையும் கைகழுவிவிட்ட நிலையில் இப்படி ஒருநாள் இவன் வாயில் நான் திருக்குறள் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறேனே என நினைத்துக் கொண்டார். "குழலினிது யாழினிது என்பர்" நினைவுக்கு வந்தது. அவனை அணைத்து முத்தம் கொடுத்தார்.

"பரமா! வீட்டுக்குப் போனதும் அன்னம் பாட்டி ஜானகிப் பாட்டி ரெண்டு பேருக்கும் சொல்லிக் காட்டிறியா என்று கேட்டார். இந்த சாதனையைத் தன் குடும்பத்துக்குப் பறைசாற்ற வேண்டும். இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கேடயத்தை உயர்த்திப் பிடித்து திடல் முழுக்கச் சுற்றி ஓடி வரவேண்டும்.

"சரி தாத்தா! "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!" சொல்லிக் காட்டிச் சிரித்தான். "ழ" அழகாக வந்து விழுந்தது.

"சரி! வா வீட்டுக்குப் போவோம்" அவசரமாக எழுந்தார். எழுந்த வேகத்தில் தலை விர்ரென்று சுற்றியது. அந்த பிரம்மாண்டமான மழை மரத்தின் விரிந்த கிளைகள் ராட்டினக் குடை போல சுற்றின. அப்படியே தடுமாறி விழுந்தார்.

"தாத்தா! தாத்தா" என பரமா கத்தியது கேட்டது. 'ஐயோ இந்தக் குழந்தையை இப்படித் தனியாக விட்டுவிட்டுப் போகிறோமே' என்ற நினைப்பு அந்த நிலையிலும் அவரைத் தாக்கியது. அந்த நினைவோடு கண்களில் கரிய இருள் படர்ந்தது.


*** *** ***

"நான் அப்பவே சொன்னேன் தனியா போகாதீங்கன்னு! சொன்னா கேக்கிறிங்களா?" என்று ஜானகி அழுதாள்.

"சும்மா இரு ஜானகி! இப்ப என்ன நடந்து போச்சி? கொஞ்சம் அவசரமா எந்திரிச்சதில தலை சுத்தி மயக்கம் வந்திருச்சி! இது பெரிய விஷயமா? எல்லாருக்கும் நடக்கிறதுதானே!" என்றார்.

"இப்படியே நீங்க தண்ணிக்குள்ள விழுந்திருந்திங்கன்னா என்ன ஆயிருக்கும்?"

என்ன ஆகியிருக்கும்? உரிய நேரத்தில் ஆட்கள் வந்து தூக்காமல் இருந்தால் மூச்சுத் திணறி உயிர் போயிருக்கும். ஒன்றும் நட்டமில்லை. நோயில் அழுகிச் சாவதை விட இந்த இனிய ஏரியின் அரவணைப்பில் செத்து விடுவது எவ்வளவோ சுகம். எவ்வளவோ கௌரவம்.

பரமா "தாத்தா, தாத்தா" என்று அலறியதைக் கண்ட பக்கத்திலிருந்த இரண்டு மலாய்க்கார இளைஞர்கள் ஓடிவந்து அவரைத் தூக்கினார்கள். அவர்களில் ஒரு இளைஞனுக்கு முதலுதவி தெரிந்திருந்தது. இடுப்பில் சிலுவாரைத் தளர்த்தி விட்டு, கால்களைத் தூக்கி தலைக்கு ரத்தம் பாயப் பண்ணினான். மற்றவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தௌிக்க அவர் கண்களுக்குள் ஒளி பூத்து ஓரிரு நிமிடங்களில் நினைவு திரும்பியது.

அவர் கண்ணைத் திறந்ததும் அந்த இளைஞன் தன் பக்கத்தில் வைத்திருந்த குளிர்பான டின்னை அவரிடம் நீட்டினான். அவர் வாங்கி ஆழப் பருகி காய்ந்திருந்த தொண்டையை நனைத்துக் கொண்டார். நன்றி சொன்னார். தனக்கு ஒன்றுமில்லை. சிறு மயக்கம்தான் என்றார். மருண்டு நின்ற பரமாவை அணைத்துக் கொண்டார்.

வீடு எங்கே என்று கேட்டறிந்து அவரைக் கைத் தாங்கலாகப் பிடித்து வீடு வரை கொண்டு வந்து சேர்த்து விட்டு அந்த இளைஞர்கள் விடை பெற்றுப் போனார்கள். அன்னம் அவர்களுக்கு பலமுறை நன்றி சொல்லி அனுப்பி வைத்தாள்.

ஜானகியின் அரற்றல் ஓயவில்லை. தான் தனியாக ஏரிக்குப் போனது தப்பு என்று சாதித்தாள். அவரால் அவளை எதிர்த்துப் பேச உடம்பில் சக்தியிருக்கவில்லை. இந்த நோய்க்கு பயந்து வீட்டுக்குள் அறைக்குள் படுக்கையில் சுருண்டு கிடந்து உலர்ந்த கீரைத் தண்டு போல வதங்கிப் போவதில் ஒரு பெருமையுமில்லை என்பதை அவளுக்கு அவரால் விளங்க வைக்க முடியவில்லை. அவளுடைய அணைப்பு அன்பு அணைப்பே ஆனாலும் அதற்குள் கட்டுண்டு தன் நடமாட்டச் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து விடுவதில் கௌரவமில்லை எனத் தனக்குள் எண்ணிக் கொண்டார்.

இந்தக் கலவரத்தில் தான் முதலில் செய்ய வேண்டும் என எண்ணிய காரியம் மறந்தே போய்விட்டது. நினைவு வந்தவுடன் சொன்னார்:

"போதும் ஜானகி. இப்ப இதக் கேளு. அக்கா நீயும் வா! இதக் கேளு!" என்றார்.

அவர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்ட பிறகு பரமாவை நோக்கிச் சொன்னார்:

"பரமா, எங்கே நான் சொல்லிக் குடுத்தத பாட்டிக்குச் சொல்லிக் காட்டு பாக்கலாம்!" என்றார்.

"பாட்டி எனக்கு சாக்லேட் குடு" என்றான் பரமா.

சிரித்தார். "அது இல்ல கண்ணு! திருக்குறள். "அகர முதல!" என அடி எடுத்துக் கொடுத்தார்.

கொஞ்சம் தயங்கித் தயங்கி ஒப்புவித்தான்: "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!"

அன்னம் கை தட்டினாள். "அடேயப்பா! தமிழே பேசத் தெரியாத பிள்ள ஒரு மணி நேரத்தில திருக்குறளே ஒப்புவிக்குதே!" என்றாள்.

"எல்லாம் வளர்ப்பிலதான் இருக்கு அக்கா! பிள்ளைகள் பச்சைக் கொடிகள் மாதிரி. நாம் எப்படிப்பட்ட பந்தல் போட்டுப் படர விட்றோம்கிறதப் பொறுத்துத்தான் அவங்க வளர்ரதும் படர்ரதும் அமையும்!" என்றார்.

ஜானகி அவனை அணைத்து உச்சி மோந்தாள். தொடர்ந்து அவள் முகம் சூம்பியது. கண்களிலிருந்து கண்ணீர் கசியத் துடைத்து விட்டுக் கொண்டாள்.

"பாட்டி! ஐ ஏம் டயர்ட்!" என்றான் பரமா.

"வா கண்ணு! ஒடம்ப தொடச்சிட்டு சாப்பிட்டிட்டு படுக்கலாம்!" என்றாள்.

"ஐ டோன்ட் வான்ட் டு ஈட்!" என்றான். அவள் அவனைக் கையோடு குளியலறைக்கு அழைத்துச் சென்றாள்.

சுந்தரம் பெருமூச்சு விட்டார். "இந்தக் குழந்தய நம்மோடயே விட்டிருந்தா எப்படியோ வளர்த்து எடுத்திருக்கலாம். ஒரு பண்பில்லாத அப்பன், அக்கறையில்லாத தாய் இவங்க கையில இருந்து இப்ப எல்லாம் முடியப் போற காலத்தில இங்க வந்து சேந்திருக்கான் பாரு அக்கா!" என்றார்.

"என்ன பண்றது, தம்பி! அதனோட விதி அப்படி! " என்று மட்டும் சொன்னாள் அன்னம்.

டெலிபோன் அலறியது. எழுந்து சென்று எடுத்து "ஹலோ" என்றாள்.

எதிர்க் குரல் கேட்டு "ஆமா! அன்னம்தான் பேசிறது! ராதாவா?" என்றாள்.

"ஆமா ராதா இங்கதான் இருக்காங்க. பிரேம் இங்கதான் இருக்கான்! இதோ உங்கப்பாகிட்ட பேசு!" என்று போனை அவர் கையில் கொடுத்து "ராதா, லண்டன்ல இருந்து பேசுது!" என்றாள்.

கையில் வாங்கி "ஹலோ ராதா!" என்றார்.

"அப்பா! வீட்டுக்குப் போன் பண்ணினேன். பதில் இல்ல. ஒரு வேள அன்னம் அத்தை வீட்டுக்குத்தான் போயிருப்பீங்கன்னுதான் இங்க போன் பண்ணினேன்!" என்றாள்.

பரமாவின் நலம் பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தாள். அவன் நினைவாகவே இருப்பதாகச் சொன்னாள். பரமாவைக் கூப்பிட்டாள். அவன் குளியலறையிலிருந்து பாதி ஈரத்தில் ஓடிவந்தான். இருமிக் கொண்டே போனை வாங்கினான்.

குழைந்து குழைந்து இருவரும் பேசினார்கள்.

"தாத்தா ஃபெல் டவுன் நியர் த லேக்!" என்றான். "ஐ எம் சிக்" என்று இருமிக் காட்டினான். "ஐ டோன்ட் வாண்ட் டு கோ வித் அப்பா!" என்றான். "வென் ஆர் யூ கமிங் பேக்?" என்று கேட்ட போது அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

சுந்தரம் போனை வாங்கிக் கொண்டார். இவளுக்கு உண்மையச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என அவருக்குத் தோன்றியது. இவள் தாய். இவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

"ராதா! நான் சொல்றத அமைதியா கேளம்மா. பரமாவுக்கு கடுமையான நோய். இன்னும் சில சோதனைகள் பண்ணவேண்டியிருந்தாலும் பெரும்பாலும் உறுதியாயிடுச்சின்னு டாக்டர் சொல்லியிருக்காரு"

"என்னப்பா? என் டார்லிங்குக்கு என்ன? சீக்கிரம் சொல்லுங்க" என்று படபடத்தாள்.

"படபடக்காதேம்மா! படபடத்து அங்கிருந்த வாக்கில டெலிபோன்ல அழுது பிரயோஜனமில்ல! அமைதியா கேட்டுக்க!"

"சரி சொல்லுங்க!"

"பரமாவுக்கு லியுகேமியாவாம். கொஞ்சம் முத்திப்போன நெலமதான்னு டாக்டருங்க சொல்றாங்க."

"லியூகேமியாவா?" சொல் அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது. "அப்பா! என்ன சொல்றிங்க? நல்லா இருந்த பிள்ளைக்கு எப்படி வரும்...?"

"நல்லா இருக்கிறதா நீ நெனைச்சா போதுமா அம்மா! உனக்கும் உன் புருஷனுக்கும் இடையில நடந்த சண்டையில குழந்தைக்கு உள்ளேயே வளர்ர நோய கவனிக்க நேரமில்லாம போச்சி...!"

விக்கினாள். டெலிபோன் அமைதியானது. அவரும் அமைதியாக இருந்தார். பின் பேசினாள்.

"உறுதியா அப்பா?"

மீண்டும் அதே கேள்விகள். அதே வழக்கமான சந்தேகங்கள். அப்படி இருக்க முடியாது என்ற பிடிவாதம்.

"இன்னும் ஒண்ணு ரெண்டு டெஸ்ட் இருக்கு, ஆனா, அப்படித்தாம்மா!"

"ரொம்ப வலியில இருக்கிறானாப்பா? இப்ப கூட நல்லாத்தானே பேசினான். கொஞ்சம் இருமினான். அவ்வளவுதான?"

"ரொம்ப சோர்ந்திருக்காம்மா. சாப்பாடு கொறஞ்சு போயி ரொம்ப மெலிஞ்சிருக்கான். உள்ளுக்குள்ள அவனுக்குள்ள வேதனைய சொல்லத் தெரியுமா பிள்ளைக்கு...?"

"அப்பா! நான் இப்பவே புறப்பட ஏற்பாடு பண்றேன். அவனுக்கு என்ன ட்ரிட்மன்ட் கொடுக்க முடியுமோ அத ஏற்பாடு பண்ணிடுங்க. பணம் நான் கொடுக்கிறேம்பா. அவனுக்காக இன்சூரன்ஸ்கூட எடுத்து வச்சிருக்கிறேன்"

"எங்களால முடிஞ்ச எல்லாம் செய்யிறோம்மா. நீ சீக்கிரமா புறப்பட்டு வா!" என்றார்.

"அப்பா! என் பிள்ளைய பாத்துக்குங்க! உங்களதான் மல போல நம்பியிருக்கேன்!" அழுதாள்.

'இந்த மலை உள்ளுக்குள் புரையோடித் தானும் சரிந்து விழக் காத்திருக்கும் அந்தக் கதை இப்போது உனக்கு வேண்டாம் என் அன்பு மகளே!' என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

"அப்பா!" மீண்டும் விம்மினாள். "அப்பா! அவருக்கு, சிவமணிக்கு தெரியுமா?" என்று கேட்டாள்.

"இல்லம்மா! சொல்ற சந்தர்ப்பம் இன்னும் வரல. எங்களுக்கே ரெண்டு நாளைக்கு முந்திதான் தெரிஞ்சது. அதோட டாக்டர் வர்ர வாரம்தான் கடைசி சோதனைய உறுதிப் படுத்திறதா சொல்லியிருக்காரு. அதத் தெரிஞ்சிக்கிட்டு..."

"வேண்டாம்பா! சொல்லவே வேணாம். அந்த அரக்கனுக்கு சொல்ல வேணாம்!"

"ராதா! அது சரியில்லம்மா. உனக்கு அவன் அரக்கனா இருக்கலாம். ஆனா இந்தப் பிள்ளைக்கு தகப்பன் இல்லியா? எப்படிம்மா மறைக்க முடியும்?"

"அப்பா! அவன் கிட்ட சொல்லாதீங்க! என் பிள்ளய அவன் கிட்ட குடுத்திறாதீங்க! நான் வர்ர வரைக்கும் அவன் அங்கயே உங்ககிட்ட இருக்கட்டும். அவன பினாங்கிலேயே வச்சி சிகிச்சை பண்ணுங்க. எவ்வளவானாலும் நான் கொடுக்கிறேம்பா! நான் உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேம்பா!" என்று மீண்டும் பெரிதாக அழுதாள்.

"போதும் ராதா! அமைதியா இரு. எங்களால முடிஞ்சத செய்யிறோம்!" என்றார்.

மீண்டும் பரமாவை அழைத்துப் பேசினாள். அவன் ஏதேதோ பேசி "டோன்ட் கிரை அம்மா!" எனத் தானும் அழ ஆரம்பித்தான்.

சுந்தரம் அவனிடமிருந்து டெலிபோனை மெதுவாகப் பறித்து ராதாவுக்குச் சமாதானம் சொல்லி வைத்தார். ஜானகியை "பேசுகிறாயா" எனச் சைகையால் கேட்டபோது மாட்டேன் எனக் கண்டிப்பாகத் தலையாட்டி மறுத்துவிட்டாள்.

அன்று இரவு எவ்வளவு வற்புறுத்தியும் பரமா சாப்பிட மறுத்துவிட்டான். அன்னம் கொஞ்சம் இனிப்பான ஓட்ஸ் கலந்து தண்ணீராகக் கொடுத்ததை சிரமப்பட்டுக் குடித்தான். இருமிக் கொண்டே இருந்தான்.

முன்னிரவில் டெலிவிஷன் முன்னால் குடும்பம் முடங்கியிருந்த வேளையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சுந்தரத்தின் மடியில் வந்து தலைவைத்துப் படுத்துக் கொண்டான். அவனைத் அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவாறிருந்தார் சுந்தரம். அரைத் தூக்கத்தில் இருந்தவன் திடீரென தலை தூக்கிக் கேட்டான்:

"அகர முதல எழுத்தெல்லாம்... தென் வாட் தாத்தா?"

"ஆதி பகவன் முதற்றே..."

"உலகு" என முடித்தான் பரமா. அவரைப் பார்த்துச் சிரித்தான். தலை சாய்த்துக் கொண்டான் தூங்கிப் போனான்.

அவன் பேச்சை மனதுக்குள் திரும்பத் திரும்ப அசை போட்டார். அந்த மழலையை எண்ணிப் பெருமைப் பட்டார். அவனுக்கு இந்தக் குறளைச் சொல்லிக் கொடுத்து விட்டதில் தான் ஏதோ மலையளவு சாதித்ததாக எண்ணிக் கொண்டார். அதைச் சரியாகப் பாடம் செய்து அவன் ஒப்புவித்துவிட்டதில் தன் நோய்த் துன்பங்கள் பாதி கரைந்து போனதாக அவருக்குத் தோன்றியது.

"சொல்லு மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்"

பரமாவின் தகப்பன் மூர்க்கமாக ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதை அவர் அப்போது அறிந்திருக்க ஞாயமில்லைதான்.

----

அந்திம காலம் - 12

இரவெல்லாம் புரண்டு கிடந்து, விட்டுவிட்டுக் கண் விழித்திருந்தும் கூட நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. ஜானகியும் இரவெல்லாம் புரண்டு கொண்டிருந்தாலும் அந்த அதிகாலையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாறே ஜன்னல் பக்கம் தலை திருப்பிப் பார்த்தார். தூரத்து சாலை விளக்கின் மங்கிய மஞ்சள் வௌிச்சம் தவிர காலையின் அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. மேற்கு நோக்கிய தன்னறைக்கு சூரிய வௌிச்சம் தாமதமாகத்தான் வரும் என்றாலும் சாதாரண நாட்களில் வானம் வெளுக்கப் போகும் அடையாளங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சில அதிகாலை வேளைகளில் வானம் தௌிவாக இருந்தால் மறையவிருக்கும் சந்திர ஒளி ஜன்னல் வழியே தெரியும். இளமையில் சீக்கிரம் விழிப்பு வந்து விட்டால் அந்த வௌிச்சம் தெரியும் போது படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலருகே வந்து சந்திரனை உற்றுப் பார்க்காமல் இருந்ததில்லை. அப்போது அதில் இருக்கும் மயக்கம் - காதல் - சொல்லி விளக்க வைக்க முடியாததுதான். ஆனால் இப்போது அந்த ஒளியைப் பார்க்கும் போது இதயத்தின் ஒரு பக்கத்தில் அந்த மோகனம் புகையாகப் படர்ந்தாலும், மூளை குறுக்கிட்டு "இந்த ஒளி வெறும் பிரதிபலிப்புத்தான்; இது ஒரு செத்த, வறண்ட கோளம்" என்று சொல்லி அந்தப் புகையைக் கலைத்து வாழ்க்கையை வறட்சி ஆக்குகிறது.

படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். முன்பு இப்படி எழுந்து உட்கார்ந்ததும் உடம்பை முறித்து நரம்புகளைத் தளரப் படுத்தும் பழக்கம் இருந்தது. இப்போது முடியாது. உடம்பின் எந்தப் பாகத்தையும் யோசித்து அசைக்க வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் ஏதாவது ஒரு புண்பட்ட தசையில் வலி வெடித்து முகம் சுளித்துக் கழுத்து வலித்து அவதிப்பட வேண்டிவரும்.

ஞாயிறு முன்னிரவு வாக்கில் தைப்பிங்கிலிருந்து வீடு வந்து சேர்ந்த போது அனைவருமே களைத்துச் சோர்ந்திருந்தார்கள். பரமாவுக்கு உடம்பு அபாயகரமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. தைப்பிங் டாக்டர் ஒருவர் கொடுத்திருந்த தற்காலிக நிவாரணி மாத்திரைகளில் அவன் காய்ச்சல் போவதும் வருவதுமாக இருந்தது. முனகிக் கொண்டே இருந்தான். மறுநாள் காலையில் ஸ்பெஷலிஸ்ட் சென்டரில் அவனுக்கு டாக்டரைச் சந்திக்கும் முறை இருந்ததால் அன்றிரவு அவனுக்கு மருத்துவ உதவியை அவசரமாகத் தேடுவது தேவையில்லையென அனைவரும் பொறுத்திருந்தார்கள். அன்று இரவு அன்னம் அக்காள் அவனுடனேயே படுத்துக் கொண்டாள்.

வீட்டிலிருந்த இரண்டு ஆண் நோயாளிகளுக்கு இரண்டு பொறுப்பான பெண்மணிகளையும் இப்படி நியமித்துக் கொடுத்திருப்பது, ஆண்டவன் திருவிளையாடல்கள் என்று சொல்கிறார்களே, அவற்றில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என, வயிற்றில் வலி குறைந்து எண்ணங்கள் அலைய ஆரம்பித்திருந்த நேரத்தில் சுந்தரம் நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

அடிமேலடி எடுத்து வைத்து குளியலறை சென்று முகம் கழுவித் துடைத்து மெதுவாக சமயலறைக்குச் சென்றார். விளக்கைப் போட்டு மின்சாரக் கேத்தலில் தண்ணீர் பிடித்துக் கொதிக்க வைத்து ஒரு கப் காப்பி கலக்கிக் கொண்டார். ஆவி பறக்கும் காப்பியுடன் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார்.

தான் தைப்பிங் போயிருந்த வெள்ளியும் சனியும் வீட்டுக்கு வந்திருந்த கடிதங்கள் பிரிக்கப் படாமல் கிடந்தன. காப்பியை இரண்டு மிடறுகள் உறிஞ்சி பக்கத்தில் வைத்து விட்டுக் கடிதங்களை எடுத்துக் உறையைப் பார்த்தார். பொருளகத்தில் இருந்து சில கடிதங்கள் வந்திருந்தன. தனது வைப்புத் தொகைகள் பழுத்து வட்டி சேர்க்கப் பட்டிருப்பதை அறிவிக்கும் கடிதங்களாக இருக்க வேண்டும். பிரிக்காமலேயே போட்டார்.

பினாங்கு நகராண்மைக் கழகத்திலிருந்து வந்த கடிதம் வீட்டு வரியாக இருக்க வேண்டும். மெதுவாகப் பிரிக்கலாம்.

வசந்தனுடைய கடிதம் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. போன ஆண்டு இறுதியில் அவன் தோல்வியடைந்த ஒரு பரிட்சைத் தாளுக்கு மறு அமர்வில் அவன் தேர்ச்சி அடைந்து விட்டதாகவும், புதிய ஆண்டுக்குப் பணம் கட்ட வேண்டும் என எழுதியிருந்தான்.

கட்டிவிடலாம். அவருடைய நிதி நிலைமை நன்றாக இருந்தது. போதுமான பணம் சேர்த்து வைத்திருந்தார். அன்னம் அக்காளைப் போலவே செலவைக் கட்டுப் படுத்தி வரவில் ஒரு பகுதியைச் சேமித்து சொத்தாகவும் வைப்புத் தொகையாகவும் வைத்திருந்தார். அப்படி இருந்ததால்தான் வசந்தனை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்ப முடிந்தது. ராதாவுக்குச் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் கல்யாணம் செய்து வைக்க முடிந்தது.

அவருக்கு இப்போது வந்துள்ள நோய்க்குத் தானாக மருத்துவம் பார்த்துக் கொள்வதென்றால் அவருடைய சேமிப்பு பூராவும் கரைந்திருக்கும். ஆனால் அரசாங்க ஓய்வூதியம் பெறுபவராதலால் மருத்துவச் செலவை அனேகமாக அரசாங்கமே பூராவுமாக ஏற்றுக் கொண்டிருந்தது. அதை நினைத்து நன்றியுடனும் நிம்மதியாகவும் ஒரு பெருமூச்சு விட்டு, மீண்டும் காப்பியை எடுத்துப் பருகினார்.

கிரெடிட் கார்டு கம்பெனியிலிருந்து பில் வந்திருந்தது. அதிலும் கடன் ஒன்றுமில்லை. எல்லாம் கட்டி முடித்துவிட்டார். ஏதாவது ஆடம்பரப் பொருள்களை 'அதைவாங்கினால் இது இனாம்' என்ற ரீதியில் விளம்பரங்கள் அனுப்பியிருப்பார்கள். இந்தக் கார்டு நிறுவனத்துக்கு எழுதிக் கார்டை ரத்துச் செய்து தொலைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்.

Pemadam என்ற முத்திரையுடன் போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த சங்கத்தில் அவர் நீண்ட நாள் உறுப்பினர். செயலவையிலும் பல காலம் இருந்திருக்கிறார். தலைமை ஆசிரியராக இருந்த போது மாணவர்கள் சம்பந்தப் பட்ட போதைப் பொருள் கருத்தரங்கங்களில் பல முறை ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வாசித்திருக்கிறார். பல அனைத்துலகக் கருத்தரங்கங்களில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொண்டிருக்கிறார். ஓய்வு பெற்ற பின்னும் தொடர்ந்து அந்தக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தார்.

கடிதத்தைப் பிரித்தார். இன்னும் மூன்று மாதங்களில் கனடாவில் நடைபெறவிருக்கும் "பள்ளிக்கூடங்களில் போதைப் பொருள்கள்" என்ற கருப்பொருளிலான மாநாடு பற்றிய விவரங்கள் இருந்தன. அந்த மாநாட்டில் மலேசியாவின் சார்பில் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பிக்க முடியுமா என அதன் செயலாளர் திரு சுலைமான் செலாட் கேட்டு எழுதியிருந்தார்.

'போகலாமா' என ஒரு நப்பாசை எழுந்தது. கட்டுரை எழுதுவது சிரமமில்லை. ஏற்கனவே எழுதிய கட்டுரைகளுக்கான தகவல்கள் இருந்தன. புதிதாக மலேசியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், புள்ளி விவரங்கள் குறித்து வைத்திருந்தார். அதோடு கானடா நாட்டுக்கு அவர் இதுவரை போனதில்லை. போகலாம். புதிய இடங்களைப் பார்க்கலாம். புதிய மனிதர்களை, அறிஞர்களைச் சந்திக்கலாம். இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் எந்தக் கூட்டத்திலும் தங்களுக்கே உரிய சுய நம்பிக்கையுடன் கவர்ச்சியாகப் பேசுவார்கள். ஜப்பானிய கொரிய ஆய்வாளர்கள் தயங்கித் தயங்கி சரளம் இல்லாத ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளிலும் முடிவுகளிலும் ஆழம் இருக்கும். எல்லாம் மீண்டும் பார்த்து கேட்டு அனுபவிக்க மனதிற்கு உற்சாகமாக இருக்கும்.

'ஆனால், இஞ்சே சுலைமான், அது வரை நான் உயிரோடு இருப்பேனா என்பதே கேள்வியாக இருக்கிறதே!' என்று நினைத்துக் கொண்டார். இஞ்சே சுலைமானுக்குத் தன் நோயின் விவரங்களைத் தெரிவிக்காமல் இந்த மாநாட்டுக்குத் தாம் போக முடியாததற்கு வேறு காரணங்கள் கற்பித்து எழுதிப் போடவேண்டும் என முடிவு செய்து கொண்டார். அதுவும் உடனடியாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் வேறு ஆளைத் தயார் செய்ய முடியும்.

கப்பை எடுத்து காப்பியை உறிஞ்ச முற்பட்ட போது அது முடிந்துவிட்டிருப்பது தெரிந்தது. கடிதங்களை மேசையில் வைத்து விட்டு வௌியே வந்தார். வௌி வாசல் கதவைத் திறந்த போது குளிர் சில்லென வீசியது.

அவர் வௌியே வரமாட்டாரா என்று காத்துக் கிடந்த ஜிம்மி வழக்கம் போல அவர் அருகே வந்து நின்று வாய் பிளந்து வாலாட்டி காலை நக்கி ஒட்டிக் கொண்டு நின்றது. குனிந்து அதன் தலையைச் சொறிந்து விட்டார். ஒரு நாளாவது இந்த நாய் இந்த விடியற்காலை வேளையில் என் தூக்கத்தைக் கெடுக்கிறீர்களே என்று மனிதர்களை கோபித்துக் கொண்டிருக்குமா என்று நினைத்து வியந்தார். ஜிம்மி அவருடைய முகத்தை நக்க முயன்று தோற்றது.

வௌியே கொஞ்ச நேரம் போய் நடக்கலாமா என யோசித்தார். சாலையில் விளக்குக் கம்பங்களில் சிறு தூசுப் படலத்தை ஒளிப்படுத்தியவாறு விளக்குகள் அமைதியாக எரிந்து கொண்டிருந்தன. தெய்வங்களின் தலைக்கு மேல் ஓவியர்கள் வரையும் ஒளிவட்டங்கள் போன்று அவை தோன்றின. அந்தக் காட்சி கவர்ச்சியாக இருந்தது.

அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் இல்லை. நடக்க வசதியான வேளைதான். ஆனால் உடம்பு இடம் கொடுக்குமா? நேற்று தைப்பிங் ஏரிப் பூங்காவில் பரமாவுடன் பேசி அவசரமாக எழுந்து மயக்கம் போட்டு விழுந்த நினைவுகள் வந்து அவரை அச்சுறுத்தின.

இந்த மனித நடமாட்டமற்ற வேளையில் நடக்கப் போய் எங்காவது தடுக்கி விழுந்து மண்டையைப் போட்டுவிட்டால்...? பாக்கெட்டில் அடையாளக் கார்டு கூட இல்லாத நிலையில், வடூப்போக்கர்கள் கொடுத்த தகவலில் ஆம்புலன்ஸ் வந்து அனாதைப் பிணமென்று தூக்கிப் போய் பொது மருத்துவ மனைப் பிணக் கொட்டகையில் போட்டு...

"தனியா எங்கியும் போகாதிங்கன்னு தலையால அடிச்சிக்கிட்டன, கேட்டீங்களா...!" என்று ஜானகி தன் பிணத்தின் முன் அலறி அழுகின்ற அவலமான காட்சி ஒன்று மனதுக்குள் வந்தது. சோகமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் வந்தது.

இப்படியெல்லாம் யோசித்து இயலாமையிலும் தன்னிரக்கத்திலும் அவ்வப்போது ஆழ்ந்து விடுவது அவருக்கே வெட்கமாக இருந்தது. இந்த இயலாமையை மனதிலிருந்து ஓட்டுவதற்கு ஒரே வழி எதையும் முயன்று பார்த்து விடுவதுதான் என்று முடிவு செய்து கொண்டார்.

உள்ளே நுழைந்து தம் சட்டையை அணிந்து கொண்டு முன் கேட்டை கொஞ்சமாகத் திறந்து ஜிம்மி திமிறி ஓடுவதற்குள் அடைத்துவிட்டு சாலையில் இறங்கி நடந்தார். ஜிம்மி எரிச்சலில் ஒரு முறை குரைத்து விட்டு கேட்டைச் சுரண்டியது. அதை அலட்சியப் படுத்திவிட்டு நடந்தார்.

அக்கம் பக்கத்து வீடுகள் சுத்தமாக அடைத்துக் கிடந்தன. பெரும்பாலான வீடுகளில் கார் போர்ச்சின் விளக்குகள் எரிந்தவாறிருந்தன. மனித நடமாட்டம் எதையும் காணோம்.

காலைக் குளிர் உடம்பைத் துளைத்தது. அந்த அனுபவம் இனிமையாகத்தான் இருந்தது. இன்னும் இந்த உடம்பில் இதமான குளிரை உணரவும், அந்த இன்பத்தில் உள்ளம் கதகதப்படையவும் போதிய சொரணை இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. விடியற்காலை வேளையின் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும், அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி உடம்பிலும் உள்ளவரை தன் வாழ்க்கை நோயில் மரத்துப் போகவில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டு உற்சாகப் படுத்தியது.

நள்ளிரவு வேளை பேய்களின் வேளை என்றால் இந்த விடியற்காலை வேளை தெய்வங்களின் வேளையா? எங்கே அவை? வானத்தை அண்ணாந்து பார்த்தார். தௌிவாக இருந்தது. நட்சத்திரங்கள் சில மின்னின. குறைவான மேகங்கள் இருந்தன. தெய்வங்கள் சஞ்சரிப்பதற்கான அடையாளங்கள் தெரியவில்லை.

அந்தத் தேடலே அபத்தம் எனத் தோன்றியது. என்னைப் போன்ற மனிதர்கள் பார்க்க விரும்பிய போதெல்லாம் வந்து குஷிப்படுத்துவதற்காகவா தெய்வங்கள் இருக்கின்றன? தெய்வத்தின் தேடலில் முயற்சியும் வருத்தமும் துயரமும் உருக்கமும் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத பக்தி இருக்க வேண்டும். "வருமா வராதா, இருக்கிறதா இல்லையா" என்ற சந்தேகம் கலந்து ஒரு வேடிக்கையாக தெய்வத்தைப் பார்க்க நினைக்கும் தன்னைப் போன்றோருக்கு அது நிறைவேறாது.

"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா, இன்புருகு சிந்தை இடுதிரியாய்" இருக்க வேண்டும். அப்டிப்பட்ட சிந்தை எப்படி எப்போது தோன்றும் என்று தெரியவில்லை. நன்றாயிருந்த நாட்களிலும் சந்தேகப் பூச்சு கலந்த நம்பிக்கைதான் இருந்தது. நோயுற்ற நாட்களில் பயம் அதிகமானாலும் சந்தேகம் விடவில்லை.

வெண்கலத் தாம்பாளத்தை புளிபோட்டுக் கறையில்லாமல் தேய்த்து வைத்தால் அதில் சூரிய பிம்பம் தௌிவாகத் தெரிவது போல் கறையில்லாத மனத்தில் இறைவன் பிரதிபலிப்பான் என இராம கிருஷ்ணர் கூறியிருக்கிறார். என் மனதில் கறை துருவாக வளர்ந்திருக்கிறது. எப்படி வருவான் இறைவன்?

திடீரென "ஹம்மென்று" ஒரு ஒலி அசரீரியாக ரீங்காரித்தது. அந்தப் பிரதேசம் முழுவதையும் நிறைத்தது. எங்கிருந்து வருகிறது? என்ன ஒலி? அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. பின்னர் ஒரு சிறிய குரல் ஒரு பெரிய ஒலி பெருக்கியில் முனுமுனுப்பது கேட்டது: "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..." தொடர்ந்து கம்பீரமான ஒலியில் பாங்கு வந்தது: "அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்...."

முஸ்லிம் பெருமக்களின் காலைத் தொழுகைக்கு அழைப்பு கம்பீரமாக வந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நேரத்தில் பக்கத்தில் உள்ள கோயில்களிலிருந்து மணியோசையும் நாதஸ்வர ஓசையும் கேட்கும்.

இந்த மண் பக்தி மண். இது உலகின் உன்னதமான சமயங்கள் சமாதான சகவாழ்வு நடத்துகின்ற மண். இஸ்லாத்தின் பாங்கு ஒலியும், கிறிஸ்துவ மாதாகோவில் மணியோசையும், இந்துக்களின் கோயில் நாதசுரமும், பௌத்த பிக்குகளின் மந்திரங்களும், சீனர் கோயில்களிலிருந்து மேளமும் இரத்தப் பெருக்கை ஏற்படுத்தாமல் பக்திப் பெருக்கை மட்டுமே ஏற்படுத்துகின்ற பூமி. நினைக்கப் பெருமிதமாக இருந்தது. இந்த அழைப்புக்களுக்கெல்லாம் தான் கொஞ்சம் அந்நியமானவனாக இருந்தாலும் அந்தப் பெருமிதம் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று நினைத்துக் கொண்டார்.

மனம் உற்சாகமாக இருந்தாலும் உடல் களைக்க ஆரம்பித்திருந்து. கால்கள் கடுத்தன. இது மோசமாவதற்குள் திரும்பிவிட வேண்டும் என்று திரும்பி நடந்தார். கூடக் கூடப் போனால் அரை கிலோ மீட்டர் நடந்திருப்பார். இவ்வளவுதானா?

அரை மராத்தோன் ஓடியிருக்கிறார். பத்து கிலோமீட்டர் ஜோகிங் போயிருக்கிறார். காற்பந்து நடுவராக இருந்து ஆட்டக்காரர்களோடு திடல் முழுதும் சுற்றி ஓடியிருக்கிறார். இப்போது அரை கிலோ மீட்டர் நடப்பதற்கே இளைக்கிறது.

டாக்டர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? எந்த மருந்துக்கும் தன் புற்று நோய் செல்கள் மசியவில்லை என டாக்டர் லிம் சொல்லிவிட்டார். இனி டாக்டர் ராம்லி - என் பழைய மாணவர் - என் பழைய பகைவர் - எனக்கு சிகிச்சை ஆரம்பிக்கப் போகிறார். சிகிச்சையா அல்லது மெதுவான வௌியே தெரிந்து கொள்ள முடியாத கொலையா? தெரியவில்லை. ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சாவு எப்படியும் வரப் போகிறது. டாக்டர் ராம்லி என்னைக் கொல்ல முடிவு செய்து விட்டால் அதுவும் நல்லதுதான். ராம்லி, நீங்கள் என்னைக் கொல்லப் போவது எனக்கு ஒரு தண்டனை அல்ல. என் நோயிலிருந்த எனக்கு விடுதலை அளிக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். கொன்று விடுங்கள். நான் இதைக் கருணைக் கொலை என்றே எடுத்துக் கொள்ளுகிறேன்.

ஆனால் பரமாவுக்கு வாழ்வு வேண்டும். அவன் முகை. அவன் மலராக வேண்டும். காயாகிப் பழமாக வேண்டும். அவனுக்குத் தமிழ் சொல்லித் தர எனக்கும் நேரம் வேண்டும். அவன் வாயால் திருக்குறள், தேவாரம், திருமுருகாற்றுப்படை சொல்வதை நான் கேட்க வேண்டும். ஆனால் அவை கூட இப்போது முக்கியமில்லை. இந்த உலகத்தில் எத்தனை இன்பங்கள் இருக்கின்றன! அவற்றில் ஒரு சிறு பகுதியைக்கூடப் பார்த்திராத அவனை சாவு எடுத்துக் கொள்ளுவது எத்தனை கொடுமை?

நான் பலவற்றைப் பார்த்து விட்டேன்! நான் தேய்ந்த நாணயம். அவன் பிழைப்பதற்கு என் சாவு எப்படியாவது பயன்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? டாக்டர் லிம், டாக்டர் ராம்லி! மாற்று உயிர் பொருத்தும் அளவுக்கு உங்கள் மருத்துவம் வளர்ந்திருக்கிறதா? அந்தத் திசையில் பரிசோதனைகள் நடக்கின்றனவா? இங்கே நான் ஒருத்தன் அந்தப் பரிசோதனைக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

வீடு நெருங்கியபோது உடல் கொஞ்சம் நடுங்கியது. கால்களில் கடுப்பு அதிகமாகியிருந்தது. தலை கொஞ்சமாகச் சுற்றியது. ஒரு விளக்குக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நின்று இளைப்பாறினார். இந்தக் காட்சியை ஒரு ஓவியன் பார்த்தால் அழகிய ஓவியமாக்குவான் என நினைத்துக் கொண்டார். ஒரு ஓங்கிய விளக்குக் கம்பம். அதிலிருந்து ஒரு கோமாளியின் கூரான தொப்பியைப் போல் விழும் ஒளி. அதன் அடியில் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு ஒடுங்கி நிற்கும் நோயாளி. தன்னைப் போல் நிமிர்ந்து நிற்காமல் ஆளை கூன் வளைந்தவனாய் வளைத்துப் போட்டால் நோய் உருவகம் இன்னும் நன்றாக வரும். இலேசான எண்ணெய் வர்ணங்களைக் கலந்து தூரிகையால் வரைந்து "வௌிச்சத்தில் நோய்" என மர்மமான தலைப்பிடலாம். கண்காட்சியில் வைத்தால் பரிசு கூடக் கிடைக்கும். தனக்குள் சிரித்துக் கொண்டார்.

உடம்பு கொஞ்சம் தெம்பானது. தொடர்ந்து நடந்து வீட்டை அடைந்தார். ஜிம்மி கேட்டிற்குப் பின்னிருந்து மகிழ்ச்சியில் குதித்துக் குரைத்தது. வீட்டில் யாரும் இன்னும் எழவில்லை எனத் தெரிந்தது. இந்தக் காலை நடையை தனி ஒருவனாக இத்தனை ரகசியமாக வெற்றிகரமாக முடித்த சாதனையை எண்ணி மகிழ்ந்தார்.

வீட்டின் கதவைத் திறக்கு முன்னரே டெலிபோன் மணி அலறியது. காலை ஆறு மணிக்கு யார் கூப்பிடுகிறார்கள்? நண்பன் ராமாவாக இருக்குமா? இவ்வளவு சீக்கிரம் கூப்பிடக் காரணமில்லையே! ராதாவாக இருக்கலாம். பரமாவின் நோயைக் கேட்டதிலிருந்து போன இரு நாட்களில் மூன்று முறை போன் செய்து அழுதுவிட்டாள். உடனே புறப்பட விரும்பினாலும் எந்த விமானத்திலும் இடம் கிடைக்கவில்லை என்றும் வியாழக்கிழமை விமானத்தில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதாகவும் கூறியிருந்தாள். அவளுக்கு டிக்கட் கிடைத்து விட்டதோ? வருகிறேன் என்று போன் செய்கிறாளோ?

போனை எடுக்க அவசரமாக நடக்க முயன்ற போது தலை கொஞ்சம் கிர்ரென்று சுற்றி நின்றது. இடது கால் தொடைத் தசையில் இறுக்கமும் வலியும் தோன்றின. சில விநாடிகள் நின்று இளைப்பாறினார். போன் தொடர்ந்து அலறியது.

போன் சத்தத்தில் ஜானகி எழுந்து வௌியே வந்து விட்டாள். அவளே போய் அவசரமாகப் போனை எடுத்து தூக்கம் இன்னும் கலையாத குரலில் "ஹலோ" என்றாள்.

பதிலைக் கேட்டு அவள் முகம் திடுக்கிட்டது. அவர் இருக்கும் பக்கம் போனை நீட்டினாள். "சிவமணி! உங்ககிட்ட பேசணுமாம்!" என்றாள் ரகசியமான குரலில்.

சிவமணியா? இந்த நேரத்திலா? கொஞ்சம் நொண்டியவாறு போய் போனை வாங்கிக் கொண்டார். "ஹலோ" என்றார்.

"நேத்தும் முந்தா நாளும் எத்தனியோ தடவ போன் பண்ணினேன், ஏன் யாருமே போன எடுக்கல?" என்று கேட்டான். அந்தக் குரலில் வழக்கமான முரட்டுத் தனம் இருந்தது.

"சிவமணியா? நேத்து குடும்பத்தோட தைப்பிங் போயிருந்தோம்பா!" என்றார்.

"ஏன், என் மகனைக் கொண்டி அங்க ஒளிச்சு வைக்கப் பார்க்கிறிங்களா?" என்றான்.

வீண் வம்பு வளர்க்கிறான் எனத் தோன்றியது. "ஒளிச்சு வைக்க வேண்டிய அவசியம் என்னப்பா வந்தது இப்ப?" என்றார்.

"அந்த பிச் சொல்லியிருப்பா! பிள்ளய கொண்டி எங்கயாச்சும் ஒளிச்சி வச்சிருங்கன்னு...!" என்றான்.

அவன் என்னதான் முரட்டுத் தனமாகவும் கிண்டலாகவும் பேசினாலும் அவனிடம் பரமாவின் நோயைப் பற்றிச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் இது என்று நினைத்தார். ராதா எவ்வளவுதான் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தாலும் பெற்ற அப்பனிடமிருந்து மறைத்து வைப்பது முறையல்ல என்று எண்ணினார்.

"இல்ல சிவமணி... இதக் கேளு..."

"இதப் பாருங்க!" என்று இடைமறித்து வெட்டினான். "ஒரு முக்கியமான சமாசாரம் சொல்றதுக்காகத்தான் ரெண்டு நாளா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்."

"நானும் முக்கியமான செய்திதான் சொல்லணும்"

"உங்கக் கதையெல்லாம் அப்புறம் வச்சிக்குங்க. இன்னக்கி ராத்திரி நான் அங்க பினேங்குக்கு வர்ரேன். பரமாவோட துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க! அவனக் கையோட அழச்சிட்டு வரப் போறேன்!"

அதிர்ச்சியடைந்தார். மூன்று வாரம் ஒரு பேச்சும் பேசாமல் பிள்ளையைப் பற்றி ஒன்றும் விசாரிக்காமல் கிடந்தவன் இன்றைக்கு இப்படி உத்தரவிடுகிறான்.

"வேணாம் சிவமணி. அவன உன்னால ஒண்டியா வச்சி பாத்துக்க முடியாது!"

"என் அம்மா கூட வர்ராங்க! அவங்க பாத்துக்குவாங்க!" என்றான்.

அவருக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும். ராதாவையும் தன் குடும்பத்தையும் பழிவாங்கும் ஒரு வஞ்சமாகத்தான் இதைச் செய்யத் தூண்டியிருக்கிறாளே தவிர குழந்தை மேல் உள்ள பாசத்தினால் அல்ல!

"சிவமணி! நான் சொல்றதக் கேளு...!"

"முடியாது. நான் அன்னைக்கு வந்து கேட்டப்ப பையன் மனச மாத்தி அவன வரவுடாம பண்ணிட்டிக்க. அவன் என் மகன். எங்கம்மா கிட்ட இருக்கட்டும். உங்க சகவாசமே எனக்கு வேணாம்!" என்று கத்தினான்.

அவனுடைய தொனியும் தன்னை எடுத்தெறிந்து பேசிய விதமும் அவருடைய மனதில் ஆத்திர தீக் கொழுந்துகளைக் கிளப்பின. ஆனால் இது ஆத்திரப் படும் நேரம் இல்லை. ஒரு குழந்தையின் வாழ்வு இங்கே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆத்திரத்தை விழுங்கி விட்டு மெதுவாகக் கனிவாகப் பேசினார்: "சிவமணி அவனுக்கு ஒடம்பு ரொம்ப சரியில்லப்பா! ரொம்ப கடுமையான நோய்..."

"அதல்லாம் எங்களுக்குப் பாத்துக்கத் தெரியும். இங்க டாக்டர் இல்லியா? ஆஸ்பத்திரி இல்லியா? நான் ராத்திரிக்கு வருவேன் பையன ரெடியா வச்சிருங்க! எதாச்சும் கோளாறு பண்ணுனிங்க, நான் அடிதடில எறங்கிடுவேன்! விஷயம் போலிஸ் வரைக்கும் போயிடும் ஆமா!" போனைப் படேரென்று அறைந்து வைத்தான்.

கொஞ்சம் நடுங்கிய கையுடன் போனை வைத்தார். என்ன பிறவி இவன்? குழந்தைக்கு நோயென்றால் என்ன நோய் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய அக்கறை கூட இல்லை. தன் பொருள் தனக்கு வேண்டும். கொடுக்காவிட்டால் அதைப் பிய்த்துப் பிய்த்துக் குதறிப் போடவும் தயாரான ராட்சசனாக இருந்தான்.

"என்னங்க சொல்றான்?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் ஜானகி.

"இன்னக்கி ராத்திரி அவங்க அம்மாவோட இங்க வந்து பரமாவ கையோட அழச்சிக்கிட்டுப் போகப் போறானாம் ஜானகி!"

ஜானகி "ஐயோ" எனத் தலையில் கைவைத்தாள். "இப்படி சீக்கா இருக்கிற பிள்ளையையா...?"

"அதச் சொல்லத்தான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன்! நீ கேட்டுக்கிட்டுத்தான இருந்த! அவன் எனக்குப் பேசவே சந்தர்ப்பம் கொடுக்கிலியே!"

சோர்ந்து உட்கார்ந்தார். ஜானகியும் உட்கார்ந்து விட்டாள். பேச்சுக் குரல் கேட்டு அன்னமும் அறையிலிருந்து எழுந்து வந்தாள். விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவளும் கொஞ்ச நேரம் அயர்ந்து உட்கார்ந்து விட்டாள்.

"பரமா எப்படிக்கா?" என்று கேட்டார்.

"ராத்திரி முழுக்கக் காய்ச்சதான் தம்பி! ஒரு தடவ மாத்திர குடுத்தேன். விடிய காலையிலதான் கொஞ்சம் தூங்கிறான்!" என்றாள்.

"ஐ டோண்ட் வாண்ட் டு கோ!" என்று பரமா அன்று அழுத காட்சி நினைவுக்கு வந்தது. சுந்தரத்தின் வயிற்றுக்குள் என்னென்னவோ அமிலங்கள் எல்லாம் சுரந்தன. வயிற்றையும் நெஞ்சையும் திருகின.

கவலையில் தோய்ந்திருந்த அன்னம் திடீரெனத் தலை தூக்கிச் சொன்னாள்: "ஏன் தம்பி! இன்னக்கிக் காலயில டாக்டர் கிட்ட காட்டிட்டு நான் இவனத் தைப்பிங்கில கொண்டி கொஞ்ச நாள் வச்சிக்கிட்டுமா?"

சுந்தரம் தலையாட்டினார். "வேணாம் அக்கா! அத விட வேறு வினையே வேணாம். இப்ப ரெண்டு நாள் தைப்பிங்குக்கு நாம போனது தெரிஞ்சி "பிள்ளைய ஒளிச்சு வைக்கிறிங்களா?"ன்னு கேக்கிறான். இனி நாம் தெரிஞ்சே கொண்டி வச்சா, என்னையும் விட மாட்டான், உன்னயும் சும்மா விடமாட்டான்!"

அன்னம் ஆமோதித்து மௌனமாக இருந்தாள்.

பிறகு சுந்தரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். பின்னர் சொன்னார். "அக்கா அவங்க ரெண்டு பேரும் வரட்டும். வந்தவுடன முடிஞ்ச வர சொல்லிப் பார்க்கலாம். கேக்கலைன்னா அவன்கிட்டயே பிள்ளய ஒப்படைச்சிருவோம்" என்றார்.

"என்ன பேச்சுப் பேசிறிங்க? பிள்ளய கொல்லப் போறிங்களா?" என்று ஜானகி சீறினாள். "ராதா எத்தன தடவ திருப்பித் திருப்பிச் சொன்னா பிள்ளய அவன்கிட்ட குடுக்காதீங்க, குடுக்காதீங்கன்னு!"

"அவ சொல்றது சுலபம் ஜானகி! ஆனா பிள்ளைக்கு உரிமை உள்ளவன் தகப்பன். அவன்கிட்ட இருந்து பிள்ளய பிரிக்கிறது சட்டப்படி குற்றம்" என்றார்.

"உங்க சட்டத்துக்குத் தெரியுமா அவன் எவ்வளவு கொடுமைக்காரன்னு?" என்று கேட்டாள்.

"என் சட்டம் இல்ல ஜானகி! நாட்டினுடைய சட்டம். அவன் அப்பங்காரன் கொடுமைக்காரன்கிறத நிருபிக்கிறதுக்கு நம்மகிட்ட ஒரு ஆதாரமும் கிடையாது. இந்த நிலைமையில இந்த வழக்கு எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் அவன் பக்கம்தான் ஜெயிக்கும்! அந்த வழக்க முறியடிக்கக் கூடிய ஒரே ஒரு நபர் ராதாதான். அவளும் அதச் செய்ய இன்னக்கி ராத்திரி இங்க இருக்கப் போறதில்ல!"

ஏதாகிலும் ஒரு அற்புதம் நிகழ்ந்து இன்றிரவுக்குள் ராதா இங்கு வந்து சேர்ந்து இந்த அபாயத்தைத் தவிர்க்கக் கூடாதா என்று எண்ணினார். ஆனால் அது நப்பாசை என்று அவருக்கே தோன்றியது.

ஜானகியின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

சட்டத்தின் நியாயத்தைப் பற்றி அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கே பிடிக்கவில்லை. ஓநாயிடம் ஆட்டுக் குட்டியை ஒப்படைக்கக் கூட சட்டம் இருக்கிறதா? ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு ஒரு ஓநாய் தகப்பன் ஆடு என்று வேஷம் போட்டிருப்பது கண்களைக் கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதைக்குத் தெரியுமா?

காலை பூத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தன்னை அழைத்துப் போக ராமா சரியாக வந்து விடுவார். இந்தக் குடும்பத்தில் என்ன குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த ராமா மட்டும் குழப்பமில்லாத, நேரான மனிதனாக இருக்கிறார். நேரம் தவறுவதில்லை. முறை தவறுவதில்லை. சமாதானங்கள் கூறுவதில்லை. தன் சமாசாரங்களில் அதிகமாகக் குறுக்கிடுவதில்லை. சொன்னதைச் செய்யும் சேவகன். அழும் நேரத்தில் கண் துடைத்துவிடும் உண்மை நண்பன். எங்கிருந்து வந்தான் என் வாழ்க்கைக்குள்...? தன்னைத் தண்டிக்கும் இந்தத் தெய்வங்கள் இடையிடையே சமாதானம் செய்வதற்காகத் தனக்கு அனுப்பியுள்ள அன்பளிப்பாகத்தான் இருக்க வேண்டும் இவன்.

அன்னம் அன்றைய நடவடிக்கைகளை தன் வழக்கமான திறமையுடன் நிர்வாகம் செய்ய ஆரம்பித்திருந்தாள். "சரி, சரி தம்பி! எல்லாம் பிறகு பாத்துக்குவோம். உனக்கு ஆஸ்பத்திரி போக நேரமாச்சி! போய் தயாராயிடு. ஜானகி! எந்திரிச்சி வேலய பாரு. பரமாவ எழுப்பித் தயார் பண்ணிக் கூட்டிட்டுப் போகணுமில்ல!"

குளியலறை போய்த் தயாராக வேண்டும் என மெதுவாக எழுந்தார். ஜானகியும் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

சமையலறையில் அத்தை எதனையோ வறுத்துக் கொண்டிருந்தாள். தானியங்கள் கருகும் மணம் ஹால் வரை வந்தது. இட்டலிக்குச் சட்டினி தயார் பண்ணிக் கொண்டிருப்பாள் போலும்.

இந்த வீட்டில் இப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு ஆள் இல்லை என்பதை அவளுக்குச் சொல்லி விளங்க வைக்க முடியவில்லை. அவருக்குச் சாப்பாட்டில் ருசி இல்லை. அவர் சாப்பிடாத பொருள்களை இந்தப் பெண்கள் யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் அத்தை சமைப்பதை விடவில்லை.

தனக்கு கெமோதெராப்பி தேவைப்படுவது போல் அத்தைக்குச் சமையல் ஒரு தெராப்பியாக இருக்க வேண்டும். தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டு வௌியே பொங்காமல் இருக்கிற உணர்ச்சிகளை இடைவிடாத சமையலறை வேலைகளில் அவள் தணித்துக் கொண்டிருக்கிறாள். அது இல்லையேல் அவளுக்கும் நோய் வந்து விடும்.


*** *** ***

மிக மெதுவாக சவரம் செய்ய வேண்டியிருந்தது. தோல் மிக மென்மையாகிவிட்டது. தொங்கவும் ஆரம்பித்திருந்தது. இழுத்து வைத்து சவர பிளேடை பட்டும் படாமலும் இழுக்க வேண்டும். அப்படியும் அங்கே இங்கே வெட்டி விடுகிறது. இன்று ஒரே ஒரு வெட்டுத்தான் என்பது ஒரு நிம்மதியாகக் கூட இருந்தது.

சவரம் பண்ணி முடித்து முகத்தில் தண்ணீர் அடித்துச் சுத்தப்படுத்தி மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் முகத்தை உற்றுப் பார்த்தார். இந்த இரண்டு மாதங்களில் முகம் இப்படி மாறிப் போகும் என அவர் எதிர் பார்க்கவில்லை. வலியால் சுளித்துச் சுளித்து அதுவே வழக்கமாகி முகத்தில் நிரந்தரமான ஒரு சுளிப்பு இருப்பதுபோல் இருந்தது. தோல் கருத்திருந்தது. சுருங்கியும் வறண்டும் இருந்தது.

முகத்தில் இப்போது வந்திருப்பது... ஆமாம் அந்த வருணனை ஒன்றுதான் சரியாக இருக்க முடியும் - சாவுக்களை. டாக்டர் ராம்லி! இந்தப் பழைய பகைவனைக் கொல்வதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் படவேண்டாம். எனக்கு சாவுக்களை வந்து விட்டது. நான் சாவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. நீங்கள் என்னைத் தள்ளாமலேயே இருந்தாலும் நானே தள்ளாடி விழுந்து விடுவேன்.

தாம் இப்படி டாக்டர் ராம்லியிடம் போவது தெய்வ பலிக்கு மாலை போட்டுக்கொண்டு சுகமாகப் போகும் ஆட்டை அவருக்கு நினைவு படுத்தியது. நான் எந்தத் தெய்வத்திற்குப் பலி? வாயில் இரத்தம் கசிய கையில் அரிவாள் ஏந்தி அசுரக் குழந்தையின் தலை மீது பாதம் அழுந்தி நிற்கும் எந்தத் தெய்வம் என்னைப் பலியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது? ஏன் என்னை...?

ஷவரைத் திறந்து விட்டார். சுடு நீர் உடம்பில் வழிந்தது. சுத்தமாக அழுக்குப் போக நுரை நுரையாகச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலைக்கு நறுமண ஷாம்பூ போட்டு மயிரைப் பூப்போல மென்மையாக்க வேண்டும். துடைத்து உடம்புக்கு நிறையப் பவுடர் போட்டு, தலைக்கு எண்ணெய் விட்டுப் படிய வார வேண்டும். உடம்பு மணக்க மணக்க இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தெய்வங்கள் மகிழ்ச்சியாக இந்தப் பலியை ஏற்றுக் கொள்ளும். ஏதாகிலும் அழுக்கோ அங்கவீனமோ இருந்தால் தெய்வங்கள் பலியை ஏற்றுக் கொள்ளாதாமே! தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட பல புராணப் படங்களில் சிறு வயதில் பார்த்திருக்கிறார். அவருக்குச் சிரிப்பு வந்தது.

ஆம், தான் சிரிப்புக்குரிய பொருள்தான். விதி ஒரு கொடுமைக்காரக் குழந்தையைப் போல தன்னை ஒரு துவண்ட துணிப் பொம்மையாகப் பாவித்து அடித்துத் துவைத்து மூலைக்கு மூலை தூக்கி எறிகிறது. பொம்மைக்கும் வலியுண்டு என்ற எண்ணமே அந்த ராட்சசக் குழந்தைக்கு இல்லை. காலைத் திருகு! வயிற்றைத் திருகு! நெஞ்சுக் கூட்டைத் திருகு! இரண்டு கால்களையும் பிடித்து எதிரும் புதிருமாக இழு! தலையை நசுக்கு! ஓட்டையிடு! உள்ளே உள்ள பஞ்சைப் பற்றியெறி! சுற்றிச் சுற்றி சுவரில் கொண்டு எறி! சிரி! சிரி! எத்தனை வேடிக்கை! பார், பார், இந்தப் பொம்மை படும் பாடு பார்! சிரி! சிரி!

அவருக்கு அழுகை வந்தது. ஷவரிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த சுடு நீருடன் கலந்து வழிந்தது.

*** *** ***

உடை உடுத்தி வௌியே வந்த போது ராமா சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து அத்தையின் இட்டிலியை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "சட்னி ரொம்பப் பிரமாதம்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். சுந்தரத்தைப் பார்த்ததும் "குட் மோர்னிங்" என்றார்.

"மோர்னிங் ராமா!" என்றார் சுந்தரம்.

"சுந்தரம். அத்தையோட சட்னி ரொம்ப பிரமாதம். வந்து சாப்பிடேன்!" என்றார். அவருடைய உற்சாகம் அந்த வீட்டின் கருமை படர்ந்த சோகத்தை கொஞ்சமாகப் பிரகாசப் படுத்தியது.

"முடியாது ராமா! நீ எனக்கும் சேர்த்துச் சாப்பிடு. குடுத்து வச்சவன்! நான் இதையெல்லாம் சாப்பிட்டால் வயித்தப் பெரட்டும். வழக்கம் போல காப்பியும் ஓட்ஸ் கஞ்சியும் போதும்!"

ஜானகி தயாராக எடுத்து வைத்திருந்தாள். மெதுவாகச் சாப்பிட்டார்.

அடுத்த அறையில் பரமாவை அன்னம் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து வரும் வழக்கமான ஆர்ப்பாட்டமான சத்தம் எதையும் கோணோம்.

"பரமா எப்படி இருக்கிறான் ஜானகி இன்னக்கி?" என்று கேட்டார்.

"காய்ச்சல் இல்லிங்க! ஆனா ரொம்ப சோந்திருக்கிறான். காலையில அவனப் படுக்கைய விட்டு எழுப்ப முடியில. பாத் ரூமுக்குத் தூக்கிட்டுப் போக வேண்டியதாப் போச்சி!" என்றாள்.

"பிரேமுக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டார் ராமா. அவருக்கு இன்னும் விஷயம் தெரியாது. போன வெள்ளிக் கிழமையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் ஏதும் ராமாவுக்குத் தெரியாது.

"நான் ஆஸ்பத்திரிக்குப் போற வடூயில சொல்றேன் ராமா! உங்கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் பலது இருக்கு!" என்று சீரியசான குரலில் சொன்னார் சுந்தரம். ராமா மௌனமாகச் சாப்பிட்டு முடித்தார்.

புறப்படு முன் பரமாவைத் தூக்கி மார்போடு இறுக அணைத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அவன் துவண்டிருந்தாலும் புதிய உடை போட்டு உடம்பில் சோப்பும் பௌடரும் கலந்த மணத்தோடு சுத்தமாக இருந்தான். நெற்றியில் அவனுக்கு விபூதி பூசிவிட்டிருந்தாள் ஜானகி.

ஒரு மாலை போட்டுக் கொண்ட பலி கடாவின் உருவகம் மீண்டும் அவர் மனதில் வந்து மறைந்தது.

-----

அந்திம காலம் - 13


டாக்டர் ராம்லி, டாக்டர் லிம், மதர் மேகி மூவரும் அந்த அறையில் இருந்தார்கள். போன வாரத்தின் எக்ஸ்ரே படங்கள் அவற்றை ஒளிப்படுத்தும் பெட்டியின் மேல் தொங்கிக் கொண்டிருந்தன. அவரது கபாலம், நெஞ்சுக்கூடு, இடுப்பு என்ற உறுப்புகள் கருப்புப் புகைப் பின்னணியில் எலும்புக் கோடுகளாகத் தெரிந்தன. அவரது பழுதடைந்த செல்களை எலக்ட்ரான் நுண்பெருக்காடியில் பதிவு செய்து கணினியில் உயிரூட்டப்பட்ட வடிவங்கள் ஒரு கணினித் திரையில் மூன்று பரிமாணங்கள் கொண்ட படங்களாகச் சுற்றியவாறிருந்தன. "சுந்தரம் s/o சாமிநாதன்" என்ற தலைப்பிட்ட கோப்பு ஒன்று மேசையில் கிடந்தது. டாக்டர் ராம்லி வந்த இந்தச் சில நாட்களில் அந்தக் கோப்பில் இன்னும் பல குறிப்புகள் சேர்ந்து அது தடிப்பாகி விட்டிருந்தது.

டாக்டர் ராம்லி ஒரு மாணவனுக்குப் பாடம் நடத்துவது போல ஒரு சுட்டும் கம்பைக் கையில் வைத்துக் கொண்டு கணினித் திரையையும் எக்ஸ்ரே படங்களையும் சுட்டியவாறு தமது தடிப்பான குரலில் அமெரிக்க ஆங்கிலத்தில் உணர்ச்சி காட்டாமல் பேசினார்.

"மிகவும் அபூர்வமாக சில புற்று நோய் செல்கள் கதிரியக்கத்துக்கு மசிவதில்லை. அதற்கு மேலாக அவற்றை ஒழிப்பதற்காக ஊட்டப்படும் மருந்துகளையும் விரைவில் எதிர்க்கக் கற்றுக் கொண்டு செழிக்கின்றன. அப்படித்தான் உங்கள் உடலில் நிகழ்ந்து வருகிறது. சில பேருக்கு என்டிபயோட்டிக் மருந்துகள் கொடுக்கும்போது உடலிலுள்ள சில நோய்க் கிருமிகள் சாவதற்கு பதிலாக அதை மெதுவாக எதிர்க்கக் கற்றுக் கொள்ளுகின்றனவல்லவா, அது போல. இதோ பாருங்கள்: இது நீங்கள் இங்கு வந்து சேர்ந்த போது எடுத்த மூளை செல். இது இரண்டு நாட்களுக்குப் பிறகு. இது முதல் வார முடிவில். இது இரண்டாம் வார முடிவில். இது மூன்றாம் வார முடிவில் கடைசியாக எடுத்தது. மூன்று வாரக் கதிரியக்கம், மூன்று வார மருந்துகளின் முடிவில் அந்தப் புற்று நோய் செல்கள் முதலில் கொஞ்சமாக அழிந்து பின் பெருகியிருக்கின்றன."

கணினியில் அவர் சில பொத்தான்களைத் தட்ட அந்தப் பெருக்கம் விரைவு படுத்திக் காட்டப்பட்டது. அந்த கொலை செல்கள் அழகிய வண்ணங்களில் இருந்தன. ஒன்றின் மேல் ஒன்றாக ஏறிப் புற்றாகக் கட்டியிருந்தன.

"இந்தப் புற்று நோய் செல்கள் இப்போது உங்கள் உடலில் பல இடங்களில் பரவியிருப்பதை இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. எக்ஸ்ரேயிலும் இருக்கிறது. உங்கள் எலும்புக்குள் உள்ள எலும்புச் சோற்றையும் இவை பாதித்துள்ளன. அதனால் இரத்த சோகை கடுமையாகியிருக்கிறது."

அந்த அறையில் ஒளியைக் குறைத்து வைத்திருந்தார்கள். பாதி இருளில் இருந்தது. வௌியில் உள்ள ஒலி உள்ளே புக முடியாமல் முற்றாகத் தடுக்கப்பட்ட அறை. ஏர் கண்டிஷனின் மெல்லிய சுருதி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் லிம்மோ மதர் மேகியோ சுந்தரமோ டாக்டர் ராம்லியின் பேச்சைக் கொஞ்சமும் தடை செய்யவில்லை.

"தொடர்ந்து கெமோதெராப்பியில் உங்களுக்குக் கொடுக்கப் படும் மருந்துகளை அதிகரித்தால் அவை உங்கள் நல்ல செல்களையும் அடூத்து விடும். இப்போதே கல்லீரலில் ஒரு பகுதியும் இடது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வயிற்றில் புண்கள் தோன்றியிருப்பதற்கும் இந்த மருந்துகள்தான் காரணம். உங்கள் வயிறு உணவைச் சிரமப்பட்டுத்தான் ஏற்கிறது. இது தொடர்ந்தால் வயிற்றின் சுவர்களில் துளை ஏற்பட்டு விடும்."

இப்படி என் நோய்க்கு விடிவே கிடையாது என்று எனக்கு அறிவிப்பதற்காகவா அமெரிக்கா போய் படித்து வந்திருக்கிறீர்கள் டாக்டர் ராம்லி? நீங்கள் மருத்துவரா மரணத்தின் தூதரா? என் நோய் குணமாகாது என இப்படி அறிவியல் பூர்வமாக இரண்டு சாட்சிகளை வைத்து அறிவித்து விட்டால் என்னைக் கொல்ல வேண்டும் என்கின்ற உங்கள் லட்சியம் எளிதாக நிறைவேறிவிடும் அல்லவா? அதுதான் நீங்கள் இங்கே நடத்துகிற நாடகம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

"ஆகவே இந்த வழக்கமான மருந்துகளை உங்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வருவதில் பயன் இல்லை என நானும் டாக்டர் லிம்மும் கருதுகிறோம்" டாக்டர் லிம் தலையாட்டி அதனை ஆமோதித்தார்.

டாக்டர் லிம், மதர் மேகி! மருத்துவப் போர்வையில் நடத்தப் படும் இந்த டாக்டர் ராம்லியின் சூழ்ச்சிகளை எப்படி உங்களுக்கு நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் என மனதுக்குள் சோர்ந்து போனார் சுந்தரம். அவர்கள் இருவரின் கவனமும் முற்றாக டாக்டர் ராம்லியின் மீது இருந்ததே தவிர சுந்தரத்தின் மீது இல்லை.

"பழைய மருந்துகள் உங்களுக்கு உதவா என நாங்கள் உறுதியாக நம்பியதால்தான் இந்தப் புதிய சிகிச்சை முறைய உங்களுக்கு அளித்துப் பார்க்க நான் முடிவு செய்தேன். இந்தப் புதிய முறை டாக்டர் லிம்முக்குப் பரிச்சயமில்லாத முறை ஆதலால் இந்த சிகிச்சைக்கு நானேதான் முற்றாகப் பொறுப்பேற்றுக் கொள்வேன்!"

எவ்வளவு வசதியாகப் போய்விட்டது! என நினைத்துக் கொண்டார். பரிவு மிக்க டாக்டர் லிம்மின் கைகளிலிருந்து என்னை முற்றாக எடுத்துக் கொண்டால் அப்புறம் நான் உங்கள் கையில் பொம்மை. நீங்கள் விரும்பியவாறு என்னை ஆட்டுவிக்கலாம்.

"இந்தப் புதிய சிகிச்சையில் உங்களுக்கு நான் ஹோர்மோன்தெராப்பியை அறிமுகப் படுத்தப் போகிறேன். உங்கள் இயற்கை ஹோர்மோன்கள் சிலவற்றைத் தணிக்கவும், இன்னும் சிலவற்றைப் பெருக்கவுமாக இவை வேலை செய்யும். செயற்கை ஹோர்மோன்கள் சிலவற்றையும் உங்கள் உடலில் செலுத்துவேன். ஏற்கனவே பெண்களுக்கு மார்பகப் புற்று நோய்க்கு இதனைப் பயன் படுத்தியிருக்கிறோம். ஆண்களுக்கு அதிகம் பயன் படுத்தியதில்லை. ஆண்களின் ஹோர்மோன் சுரப்பிகளில் வேலை செய்கின்ற புதிய மருந்துகள் இவை. அமெரிக்காவில் 55% பலன் கண்டிருக்கிறோம்." நிறுத்தினார்.

சுந்தரம் இடை மறித்து முதன் முறையாகப் பேசினார்: "55% பலன் கண்டிருந்தால் 45% பலன் இல்லை என்றுதானே அர்த்தம்?"

"ஆமாம் அப்படித்தான் அர்த்தம். அதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் சொன்னேன்!"

"பலன் இல்லை என்றால் எப்படி?"

"சில வேளைகளில் ஹோர்மோன்களில் நாம் நினைக்கும் மாற்றம் ஏற்படுவதில்லை. மாற்றம் ஏற்பட்டாலும் செல்களில் இவை ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை"

"மாற்றங்கள் ஏற்படுத்தா விட்டாலும் நோயை அதிகரிக்காது இல்லையா?"

"நோயை இந்த ஹோர்மோன்கள் அதிகரிக்காது. உண்மைதான். ஆனால் ஹோர்மோன்கள் மாறும் என்று நாம் காத்திருக்கும் மூன்று முதல் நான்கு வார காலத்தில் வேறு பல வழக்கமான மருந்துகளை நிறுத்தி விடுவதால் புற்று நோய் செல்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு விரைவாக முற்றி விடலாம். அதுதான் அபாயம்!"

வேறு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவற்றைக் கேட்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை. கேட்டால் நல்ல பதில்கள் வரும் என்றும் தோன்றவில்லை. டாக்டர் ராம்லி தொடர்ந்தார்:

"ஹோர்மோன்தெராப்பியின் பக்க விளைவுகள் சில கடுமையானவை. மார்பும் கழுத்தும் வீங்கலாம். தொண்டை கரகரப்பாகலாம். உங்களுக்குள் பய உணர்ச்சி அதிகமாகலாம். பயங்கரமான பிரமைகள் தோன்றலாம்! ஆனால் இவை யாவும் தற்காலிகமானவைதான். சில ஓரிரவில் தோன்றி மறைந்து விடக் கூடியவை. இந்த பக்க விளைவுகள் தோன்றத் தோன்ற அவற்றை முறியடிக்க நான் மாற்று மருந்துகள் கொடுப்பேன்"

என்னைக் கொல்வதென்று முடிவு செய்த பிறகு இந்தச் சித்திரவதைகளையும் நீங்கள் செய்து பார்க்கத் துணிந்து விட்டீர்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அவருக்குப் பெரிய அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. தெய்வங்கள் அவருடைய முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த விஷயம்தான். ராம்லி அவர்களின் தூதுவர்தான்.

"நீங்கள் இந்தப் புதிய சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்திலும் கட்டாயமில்லை. மறுத்து விடலாம். மறுத்து விட்டால் நாங்கள் உங்களைக் கைவிட்டு விட மாட்டோம். பழைய மருந்துகள் உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம். யார் கண்டார்கள்? இந்த நான்காவது வாரத்தில் அவை பயன் தர ஆரம்பிக்கலாம். அவற்றின் மூலம் உங்கள் புற்று நோய் குணமும் ஆகலாம். அந்த சாத்தியக் கூற்றை யாரும் மறுக்க முடியாது."

திடீரென அவருக்கு அந்த நப்பாசை தோன்றியது. இந்த டாக்டர் ராம்லியின் மரணப் பிடியிலிருந்து தப்ப, அல்லது தவணை பெற்றுக் கொள்ள இது ஒரு வழி எனத் தோன்றியது.

"அப்படியானால் இன்னும் ஒரு வாரம் பழைய சிகிச்சையைத் தொடர்ந்துவிட்டு, அப்புறம் இதைப்பற்றி யோசித்தால் என்ன?" என்று ஆர்வத்துடன் கேட்டார்.

"ஆமாம் அப்படிச் செய்யலாம். ஆனால் தொடர்ந்து இந்த மருந்துகள் இப்போது போலவே பலனளிக்காமல் இருந்தால் எந்த நேரத்திலும் உள் உறுப்புகள் ஒன்றில் உங்களுக்கு ரத்த ஒழுக்கு ஏற்பட்டு விடலாம். இந்த அபாயத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இரத்த ஒழுக்கை உடனடியாக அடைக்காவிட்டால் மருத்துவ உதவிக்கு அப்பால் நீங்கள் சென்று விடுவீர்கள்!"

"அதாவது செத்து விடுவேன் என்கிறீர்கள்!" என்றார் சுந்தரம்.

"ஆமாம். அப்படித்தான்!" என்றார் டாக்டர் ராம்லி.

மற்ற இருவரின் முகங்களையும் பார்த்தார் சுந்தரம். டாக்டர் லிம் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். மதர் மேகி அந்த புன்னகைக் கோடு மாறாத முகத்துடன் இருந்தார்.

டாக்டர் ராம்லியைப் பார்த்தார். நீ என்னை ரட்சிக்க வந்த தெய்வமா கொல்ல வந்த யமனா என்பதைப் பார்த்து விடுவோம் ராம்லி! என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு "சரி! டாக்டர் ராம்லி! நான் இந்த ஹோர்மோன்தெராப்பிக்குச் சம்மதிக்கிறேன்" என்றார்.

டாக்டர் ராம்லி அந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்தவராகவோ வருந்தியவராகவோ தெரியவில்லை. வழக்கம் போன்ற சீரியசான முகத்துடன் அவருடைய கோப்பைத் திறந்து ஏதோ பத்திரங்களை வௌியில் எடுத்தார். மேசைமேல் வைத்தார்.

"சரி! நீங்கள் அப்படிச் சம்மதிப்பதானால் சில பத்திரங்களில் கையெழுத்திட வேண்டும். இந்த அபாயங்களைத் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவற்றை உணர்ந்து இந்தப் புதிய சிகிச்சை முறைக்கு முழு மனதுடன் சம்மதிப்பதாகவும் சட்ட பூர்வப் பத்திரங்கள் தயாரித்திருக்கிறோம். அதில் நீங்கள் கையெழுத்துட வேண்டும்!" என்றார் ராம்லி.

"இது ஏன் தேவை?" என்று கலவரத்துடன் கேட்டார் சுந்தரம்.

"இது இந்த மருத்துவ மனைக்கும் டாக்டர்களுக்கும் இன்சூரன்ஸ் வழக்குகளிலிருந்து தற்காப்பு அளிக்கும். நாங்கள் தவறான மருந்துகளை உங்களுக்குக் கொடுத்ததாக வழக்குகள் பின்னால் எழுந்தால் அதை முறியடிக்க இவை சான்றாக இருக்கும். இதை உறுதிப் படுத்திக்கொள்வதற்காகத்தான் இவ்வளவும் உங்களுக்கு விளக்கிச் சொன்னேன்!" என்றார் ராம்லி.

சுந்தரம் பெருமூச்சு விட்டு அமைதியாக இருந்தார். எல்லா வகையிலும் இந்த டாக்டர் கெட்டிக்காரர். என் கழுத்துக்குக் கத்தியை வைத்து விட்டு, அறுத்ததற்கு நான் பொறுப்பில்லை என்று என்னிடமே கையெழுத்தையும் வாங்கிக் கொள்ளும் அபார புத்திசாலி. ராம்லி! உன் கெட்டிக்காரத் தனத்தை உன் பழைய ஆசிரியர் என்ற முறையில் மெச்சுகிறேன்.

மதர் மேகி முதன் முறையாகப் பேசினார். "சுந்தரம். உங்களுக்கு யோசிக்க அவகாசம் வேண்டுமானால் நேரம் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் குடும்பத்தாரோடு பேசி முடிவு செய்வதானாலும் சரி. வேண்டிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்!" என்றார்.

மதர் மேகியின் அன்பு முகத்தைப் பார்த்தார் சுந்தரம். வழக்கம் போல் அதில் கருணையும் சிரிப்பும் இருந்தன. சுந்தரம் கேட்டார்: "மதர் மேகி இதில் நான் கையெழுத்திடு முன் உங்களிடம் தனியாக ஒரு அரை மணி நேரம் பேசலாமா?"

மதர் மேகி கொஞ்சமும் யோசிக்கவில்லை. "கண்டிப்பாகப் பேசலாம். வாருங்கள் என்னறைக்குப் போகலாம். டாக்டர்கள் அவர்கள் வேலையைப் பார்ப்பார்கள். நாம் எப்பொழுது பேசி முடிக்கிறோமோ அப்பொழுது அடுத்த நடவடிக்கையைப் பற்றி யோசிக்கலாம்" என்றார்.

மதர் மேகி எழ அனைவரும் எழுந்து விட்டார்கள். சுந்தரத்தின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு அவரைத் தன் அறைக்கு வடூநடத்திச் சென்றார் மதர் மேகி.


*** *** ***

மதர் மேகி அறையில் ஒரு தெய்வீகம் இருந்தது. அதிகமாகத் தளவாடச் சாமான்கள் இல்லாத எளிமையான அறை. ஏசு சிலுவையில் தொங்கும் பெரிய படம் ஒன்று இருந்தது. நாங்கள் பாரம் சுமக்கவே பிறந்தவர்கள் என்று அனைவருக்கும் அறிவிப்பது போல் இருந்தது அந்தப் படம். சுந்தரம் கொஞ்ச நேரம் அந்தப் படத்தை உற்றுப் பார்த்து விட்டுப் பேசினார்.

"மதர் மேகி, என்னைப் பலவகையிலும் தண்டிப்பதற்கு எல்லா தீய தெய்வங்களும் சேர்ந்து முடிவு செய்திருக்கின்றன. என்னைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்றும், அணு அணுவாகக் கொல்வதென்றும் முடிவு செய்திருப்பது போல் தெரிகிறது!"

மதர் மேகி அமைதியாகக் கேட்டார். பிறகு சொன்னார். "சுந்தரம் நீங்கள் அப்படி நினைக்க வேண்டியதில்லை. இந்த நோயை கடவுள் கொடுத்த தண்டனை என்று நினைக்க வேண்டாம். ஒரு சோதனை என்று நினைத்துக் கொள்ளுங்கள்! தனக்கு விருப்பமானவர்களைத்தான் இறைவன் எப்போதும் சோதிப்பானாம்" என்றார்.

"நான் என் நோயை மட்டும் கருதி இப்படிச் சொல்லவில்லை மதர் மேகி!" என்றார்.

"அப்புறம்?"

பெரு மூச்சு விட்டார். தயங்கினார். மெல்லச் சொன்னார்: "எனக்கொரு ஒரு பேரப் பிள்ளை இருக்கிறான். மூன்று வயது. என் மகளின் பிள்ளை. என் புற்று நோய் உறுதி செய்யப்பட்ட அதே நாளில் என் வீட்டுக்கு வந்து சில சந்தர்ப்பங்களினால் பெற்றோர்களைப் பிரிந்து என் பொறுப்பில் விடப்பட்டு வந்து எங்களோடு தங்கியிருக்கிறான். வந்ததிலிருந்து இருமலும் காய்ச்சலுமாக இருந்தான். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். அவனுக்கு..."

எப்படி அவரையும் மீறி இந்த உணர்ச்சி தொண்டைக்குள் வந்ததோ தெரியவில்லை. தொண்டை அடைத்து விக்கியது. அவர் எவ்வளவோ அடக்க முயன்றும் முடியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. டாக்டர் மேகி அவர் கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினார்.

"அவனுக்கு லியூகேமியா என்று மருத்துவப் பரிசோதனைகள் காட்டுகின்றன. இன்றைக்கும் மருத்துவ மனைக்குப் போயிருக்கிறான். இன்றைக்குத்தான் அது உறுதியாகும்!" வழிகின்ற நீரைக் கூடத் துடைக்காமல் நிமிர்ந்து மதர் மேகியின் முகத்தைப் பார்த்தார். 57 வயது ஆண்பிள்ளை ஒரு மேற்கு நாட்டுப் பெண் முன் அழுவது அவருக்கே வெட்கமாக இருந்தது. ஆனால் உணர்ச்சிகள் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை.

மதர் மேகி அவருடைய தோளில் கை வைத்தார். "அப்படியா! மிக வருந்துகிறேன் சுந்தரம். நான் சமாதானம் எதையும் கூற முயல்வதற்கு முன் இதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தை நீங்கள் டாக்டர் லிம்மிடமும் டாக்டர் ராம்லியிடமும் சொல்ல வேண்டும். இந்தப் புற்று நோய்க்குப் பாரம்பரிய காரணங்கள் அல்லது தலைமுறைக் காரணங்கள் இருக்கின்றனவா என அவர்கள் ஆராய்வார்கள்.

"அது எப்படியிருந்தாலும் உங்களுக்கும் உங்கள் பேரக் குழந்தைக்கும் ஒரே நேரத்தில் புற்று நோய் வந்து தாக்கியிருப்பது எந்த மனிதரையும் உருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் மீண்டும் ஒரு முறை இதை ஒரு தெய்வத் தண்டனை என நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களையும் உங்கள் பேரப் பிள்ளையை மட்டும்தான் இந்த நோய்களுக்குக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என நினைக்க வேண்டாம். அந்த நினைவு உங்களைக் கடவுளிடமிருந்து அன்னியப் படுத்தி விடும். இது நீங்கள் கடவுளை நெருங்கியிருக்க வேண்டிய நேரம். கோபப்பட்டு விலகி நிற்க வேண்டிய நேரம் அல்ல.

"ஆயிரக் கணக்கில் மில்லியன் கணக்கில் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். மரணத்தைப் போலவே நோய்களும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதை முன்னின்று எதிர்க்கப் பாருங்கள். அது உங்கள் உடலை அடிமைப் படுத்தினாலும் மனத்தை அடிமைப் படுத்த விடாதீர்கள்" என்றார்.

"என் கதை இன்னும் முடியவில்லை மதர் மேகி! நீண்ட கதை. உங்கள் நேரத்தை வீணாக்குவதற்கு மன்னியுங்கள்!" என்றார்.

"சொல்லுங்கள் சுந்தரம். நோயாளிகளின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிவதும் எங்கள் சிகிச்சையில் ஒரு பகுதிதான். ஆகவே என் நேரத்தை வீணாக்குவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்லலாம்!" என்றார்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு மெதுவாக ராதாவைப் பற்றிச் சொன்னார். அவள் கணவனைப் பற்றிச் சொன்னார். அவர்கள் வாழ்க்கையின் விரிசல் பற்றிச் சொன்னார். பரமா தன் பொறுப்புக்கு வந்து சேர்ந்த சூழ்நிலைகளைச் சொன்னார். சிவமணியின் மிரட்டலையும் அவன் இன்றிரவு வரவிருக்கும் விஷயத்தையும் சொன்னார்.

மதர் மேகி எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார். அவர் கேட்கக் கேட்க சுந்தரத்தின் மனது கொஞ்சம் இலேசானது. ஆனால் இந்த அந்தரங்கமான குடும்பக் கதையையெல்லாம் ஏன் ஒரு வேற்றுப் பெண்ணிடம் சொல்லுகிறோம் என்ற வெட்கமும் எழுந்தது. ஆனால் மதர் மேகியை ஒரு வேற்றுப் பெண்ணாகவும் நினைக்க முடியவில்லை. தான் வெகு காலத்திற்கு முன் இழந்து முகமும் மறந்து போன தாய் போல அவர் இருந்தார்.

சுந்தரம் கதையை நிறுத்தி சோர்ந்து மௌனம் சாதித்த ஓரிடத்தில் மதர் மேகி சொன்னார். "உங்களுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கே நடந்திருந்தாலும் உங்களைப் போலத்தான் குலைந்து போயிருப்பேன். ஆனால் இப்படியெல்லாம் அடுத்தடுத்து நடப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் சுந்தரம். அது என்னவென்று நமக்குச் சரியாகப் புரியமாட்டேனென்கிறது. நீங்கள் இதைக் கடவுளின் தண்டனை என நினைப்பதால் உங்களுக்கு ஓர் உண்மைக் கதை சொல்கிறேன். கேட்கிறீர்களா?" என்று மதர் மேகி சுந்தரத்தின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். சுந்தரம் சரி என்று தலையாட்டினார்.

"அமெரிக்காவில் வெர்ஜினியாவில் ரோய் சல்லிவன் என்ற ஒரு மனிதர் இருந்தார். 1942-க்கும் 1977-க்கும் இடையில் இந்த மனிதரை மின்னல் ஏழு முறை விரட்டி விரட்டித் தாக்கியிருக்கிறது. முதல் தாக்குதலில் அவர் தன் பெருவிரல் நகத்தைப் பறி கொடுத்தார். அடுத்தது அவருடைய புருவங்களை எரித்தது. அதற்குப் பிந்தைய தாக்குதல்களில் தோள்பட்டை, கால், மார்பு, வயிறு ஆகிய உறுப்புக்களில் கடுமையான தீப்புண்கள் ஏற்பட்டன. அவர் தலைமுடி இரண்டு முறை தீப் பிடித்துக் கொண்டது. இந்தக் கதையை கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் நீங்கள் பார்க்கலாம். ஆனால் இதனால் எல்லாம் இறக்காத இந்த மனிதர் 1983-இல் தன்னுடைய காதலி இவரை மறுத்ததனால் மனமுடைந்து இறந்து போனாராம். இது தெய்வ தண்டனை என்றா நாம் எடுத்துக் கொள்வது?

"எரிமலை வெடிக்கிறதே என்று பயப்படுகிறோம். ஆனால் அதனால்தான் நிலத்திற்கு வளமான எரு கிடைக்கிறது. காடுகள் எரிகின்றனவே என்று கவலைப் படுகிறோம். அதனால்தான் நோய்வாய்ப்பட்ட பழைய பெரிய மரங்கள் எரிந்து புதிய கன்றுகள் வளர முடிகிறது. அந்த நெருப்பினால்தான் காடுகள் செடூக்கின்றன. கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டு அலைக்கழிக்கிறது. கப்பல்களைக் கவிழ்த்து கடல் பொங்கி மீனவர் கிராமங்களை அடூக்கிறது. ஆனால் அதுவே கடலுக்கு மத்தியில் புதிய நிலத்தை உருவாக்கி புதிய உயிர்களையும் உற்பத்தி செய்கிறது. ஆகவே இந்த உலக நியதிக்கு இதெல்லாம் உட்பட்டதுதான் எனத்தான் நாம் அமைதி கொள்ள வேண்டும்" என்றார்.

சுந்தரம் கேட்டுவிட்டுச் சொன்னார். "மதர் மேகி, இவற்றையெல்லாம் நான் சொன்னது இப்போது நான் சொல்லப் போவதற்கு ஒரு முன்னுரையாகத்தான். இதையும் கேட்டுவிட்டு இதெல்லாம் எனக்கொரு தண்டனை என்று நான் நினைப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள்!"

மதர் மேகி அவருடைய கண்களைக் கூர்மையாகப் பார்த்தவாறு அடுத்து வரும் செய்திக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்.

"இந்த டாக்டர் ராம்லி இருக்கிறாரே, இவர் என்னுடைய பழைய மாணவர்" என்று ஆரம்பித்தார்.

"உங்கள் பழைய மாணவரா? சொல்லவே இல்லையே! அவருக்குத் தெரியுமா?" என்றார்.

"அவருக்குத் தெரிந்துதான் எனக்குச் சொன்னார்!" என்றார். பின் அந்தப் பழைய காலத்தில் தன் பள்ளியில் ராம்லி செய்ததையும் தான் அவரைப் பிடித்ததையும் அந்த சம்பவம் முடிவடைந்த விதத்தையும் சுருக்கமாகச் சொன்னார்.

"என்ன ஒரு விசித்திரம்? அவரே உங்களுக்கு டாக்டராக வந்திருக்கிறாரே!" என்றார் மதர் மேகி.

"டாக்டராக வந்திருக்கிறாரா, யமனாக வந்திருக்கிறாரா என்பதுதான் இப்போது என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி!" என்றார் சுந்தரம்.

மதர் மேகி வியப்புடன் அவரைப் பார்த்தார். "என்ன சொல்கிறீர்கள்? அந்தப் பழைய பகையை இன்னும் நினைவில் வைத்து உங்களுக்குத் தீங்கு செய்யப் போகிறார் என்றா?"

சுந்தரம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

"இல்லை சுந்தரம். அந்த எண்ணமே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. ஒரு டாக்டருக்கு இப்படி ஒரு சிந்தனை தோன்றும் என்று கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நீங்கள் இதை மிகவும் பெரிது படுத்திக் கொண்டு பயப்படுகிறீர்கள்."

டாக்டர் ராம்லி தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட முறை பற்றியும் தன்னுடன் சுமுகமாகப் பேசாமல் பரிவு காட்டாமல் இருப்பது பற்றியும் மதர் மேகிக்குச் சொன்னார்.

"டாக்டர் ராம்லியின் சமூக உறவு கொஞ்சம் நயமில்லாமல் இருக்கலாம் ஒத்துக் கொள்ளுகிறேன். அதைப் பகைமை, வஞ்சம் என அர்த்தப் படுத்திக் கொள்ள முடியுமா? பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியிலேயே முழுதாக மூழ்கி விடுகிறார்கள். நோயாளிகளை கேஸ்களாக நினைக்கிறார்களே தவிர மனிதர்களாக நினைப்பதில்லை. அப்படி இருப்பதால்தான் இந்த மாதிரி மருத்துவ மனைகளில் என்னைப் போன்றவர்களையும் வைத்து மனித நேயத்தை வளர்க்கிறார்கள். டாக்டர் ராம்லி அப்படிப் பட்டவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. உணர்ச்சிகளுக்கு இடங் கொடுக்காத ஆராய்ச்சியாளர். எனக்கும் அவரைக் கொஞ்ச நாளாகத்தான் தெரியும். ஆனால் இவரைப் போன்று பல உணர்ச்சியே காட்டாத பல டாக்டர்களை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். டாக்டர் உணர்ச்சியைக் காட்ட ஆரம்பித்தால், அல்லது நோயாளியின் சுக துக்கங்கள் தன்னைப் பாதிக்க அனுமதித்தால் அவரால் அவருடைய கடமையை ஆற்ற முடியாது சுந்தரம்!"

சுந்தரம் கேட்டார்: "டாக்டர் ராம்லிக்கு என் மேல் பகைமை இல்லை என்பதை எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது?"

மதர் மேகி பெருமூச்சு விட்டார். பின்னர் பேசினார். "இரண்டு வழிகள் உள்ளன. இந்த சிகிச்சை வேண்டாம் என நீங்கள் ஒதுக்கிவிட்டு முன்பு போல் டாக்டர் லிம்மிடமே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் புதிதாகக் கிடைக்கும் சிகிச்சை முறையை நீங்கள் பயன் படுத்திக் கொள்ள முடியாமல் போகும். இரண்டாவது வழி..."

மதர் மேகி நிறுத்தி யோசித்தார். "ஒரு டாக்டரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதே ஒரு மானப் பிரச்சினையாக இருக்கும் என அஞ்சுகிறேன். ஆனால் நீங்கள் சந்தேகம் கொண்டிருப்பதால் உங்கள் சந்தேகத்தை அவரிடமே சொல்லி விளக்கம் கேட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படிச் செய்ய நான் தயார்!" என்றார்.

சுந்தரத்திற்கு அது பிடித்திருந்தது, "சரி! இதை மட்டும் நீங்கள் உறுதி செய்து கொண்டால் அந்தப் பத்திரங்களைக் கையோடு கொண்டு வாருங்கள். டாக்டர் ராம்லியின் புதிய சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட நான் தயார்" என்றார் சுந்தரம். சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள இதுதான் வடூ என்று தோன்றியது. சந்தேகப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப் பிழைப்பதை விட ஒரேயடியாக இதை வௌிப்படுத்திச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

"இங்கேயே இருங்கள்!" என்று சொல்லிவிட்டு மதர் மேகி அறையை விட்டு வௌியேறினார்.

வெற்றுச் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம். "தவறு செய்து விட்டாய் சுந்தரம்! ஒரு டாக்டரின் மேல் தேவையில்லாத சந்தேகத்தை எழுப்பிவிட்டாய். பள்ளிக்கூட நாட்களில் ராம்லி செய்த தவறு உறுதியாகத் தெரிந்தது. குற்றம் சாட்டியதில் நியாயம் இருந்தது. ஆனால் இன்று ராம்லி ஒரு டாக்டர். அவர் மேல் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டி அவர் நல்ல பெயருக்கும் களங்கம் விளைவித்து மருத்துவத் துறைக்கும் களங்கம் விளைவிக்கிறாய்!" என உள்ளம் சொல்லிக் கொண்டே இருந்தது. குழம்பி உட்கார்ந்திருந்தார்.

மதர் மேகி ஒரு பத்து நிமிடங்களில் திரும்பிவிட்டார். அவர் கையில் அந்தப் பத்திரங்கள் இருந்தன. சுந்தரத்தைப் பார்த்துச் சிரித்தார். "சுந்தரம். நான் தௌிவாகக் கேட்டுவிட்டேன். டாக்டர் ராம்லி அந்தச் சம்பவத்தையே மறந்திருந்தாராம். உங்களை இங்கு பார்த்ததும்தான் அந்தப் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்ததாம். தன் மனதில் பகையில்லை என்று மட்டும் சொன்னார். ஆனால் உங்கள் மனதில் சந்தேகம் இருந்தால் இந்த சிகிச்சையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என்று சொன்னார். என் ஆலோசனையும் அதுதான்! ஒரு நாள் எடுத்துக் கொள்ளுங்கள். இன்றிரவு உங்கள் குடும்பத்தாரோடும் மனம் திறந்து பேசுங்கள். நாளைக்குக் கையெழுத்துப் போடுவது பற்றி முடிவு செய்யுங்கள்" என்றார்.

சுந்தரம் கை நீட்டி அந்தப் பத்திரங்களை வாங்கிக் கொண்டார். "மதர் மேகி! ஏற்கனவே தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பி உங்களையெல்லாம் குழப்பிவிட்டேன். வருத்தி விட்டேன். இனியும் நானும் காத்திருந்து உங்களையும் காக்க வைத்துக் குழப்ப விரும்பவில்லை! எங்கே என்று சொல்லுங்கள், கையெழுத்துப் போடுகிறேன்!" என்றார்.

மதர் மேகி கோடுகளைக் காட்ட கையெழுத்தைப் போட்டார். போடும் அந்த நேரத்திலேயே ராம்லி தன்னுடைய குற்றச் சாட்டை இவ்வளவு சாதாரணமாகத் தள்ளி விட்டாரே என்ற ஒரு சந்தேகம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

-----

அந்திம காலம் - 14


அவர்கள் வீடு வந்து சேர மணி மூன்றாகிவிட்டது. சுந்தரத்தை வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டு ராமா போய்விட்டார். வீட்டுக்குள் வந்த போது வீட்டில் அத்தை மட்டுமே இருந்தாள். காலையில் பரமாவோடு ஆஸ்பத்திரிக்குப் போன ஜானகியும் அன்னமும் இன்னும் திரும்பவில்லை என்று தெரிந்தது. பரமாவுக்கு என்ன முடிவு என்று தெரிந்து கொள்ள மனம் தத்தளித்தது.

காரை எடுத்துக் கொண்டு தாமாக ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குப் போகலாமா என நினைத்தார். ஆனால் அதற்கு உடல் இடம் கொடுக்காது எனத் தெரிந்தது. கால்கள் தளர்ந்திருந்தன. கால் கை தசையில் இறுக்கமான பிடிப்புகளும் வலியும் இருந்தன. இரத்த ஓட்டம் குறைந்துவிட்டிருந்தது தெரிந்தது. கொஞ்சம் நடந்தாலே இளைத்தது. இன்று காலை நடக்க முயன்று பட்ட அவதியை நினைத்துக் கொண்டார். ஜானகியும் அன்னமும் செய்தி கொண்டு வரட்டும் என்று காத்திருந்தார்.

அத்தை கதவின் ஓரத்தில் அவருக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்பது போல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். அவருக்கு வயிறு பசித்தது. "சாப்பாடு இருக்கா அத்தை? எனக்குக் கொஞ்சம் சோறும் ரசமும் எடுத்து வையேன்!" என்றார். அத்தை விரைந்து சமையலறைக்குப் போனாள்.

வயிறு பசிப்பதற்குக் காரணம் டாக்டர் ராம்லிதான். அவர் போட்டுவிட்ட ஊசிதான்.

தான் கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு ஒருமுறை கையெழுத்தைச் சரி பார்த்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. மதர் மேகி அவரிடம் கேட்ட கேள்வி பற்றியோ தங்கள் பழைய ஆசிரியர் - மாணவர் தகராறு பற்றியோ வாய் திறக்கவில்லை. அவருடைய முகம் என்றும் போல்தான் இருந்தது. கசப்போ இனிப்போ காரமோ ஒன்றும் இல்லை. சுந்தரமும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தார்.

தாமாக ஒரு ஊசியை எடுத்து ஒரு குப்பியிலிருந்து மருந்து நிரப்பி அவருடைய கையில் குத்தி விட்டார். சில மாத்திரைகளைக் கொடுத்துத் தண்ணீர் கொடுத்து விழுங்கச் சைகை காட்டினார். சில மருந்துகள் அவர் பெயர் எழுதப் பட்டு தயாராக இருந்தன. அவற்றை சுந்தரத்திடம் கொடுத்தார்.

"இவற்றை எப்படிச் சாப்பிடுவதென்று லேபிலில் எழுதியிருக்கிறது. தவறாமல் சாப்பிடுங்கள். இன்றிரவு தொண்டை வீங்கிக் கரகரக்கக் கூடும். இந்த மாத்திரைகள் அதைத் தணிக்கத்தான். சாப்பிடுங்கள். அதிகம் பேசவேண்டாம். இது தூக்க மாத்திரை. தேவை ஏற்பட்டால் மட்டும் சாப்பிடுங்கள். நாளைக்காலை ஒன்பதரை மணிக்கு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.

ஏதாவது பேசாமல் போகக் கூடாது. அது பகைமையை வளர்க்கும் என எண்ணினார் சுந்தரம். "இப்போது போட்டீர்களே, அது என்ன ஊசி?" என்று கேட்டார்.

"அது அன்றைக்குப் போட்டதைப் போலத்தான். வாந்தி குமட்டலைக் குறைத்துப் பசியைக் கொடுக்கும்!" என்றார் ராம்லி. அன்று அவர் கொடுத்த மருந்து நல்ல பலன் கொடுத்ததை சுந்தரம் நினைத்துப் பார்த்தார்.

தயங்கித் தயங்கிச் சொன்னார்: "டாக்டர், மதர் மேகி உங்களிடம் பேசியது பற்றி...!"

"ஆமாம். அது சின்ன பழைய விஷயம். அதை மறந்து விடுங்கள். நாளைக்குப் பார்ப்போம்!" என விடை கொடுத்து வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார் டாக்டர் ராம்லி.

கொஞ்சமும் பிடி கொடுக்கவில்லை. தனது சந்தேகங்களைப் போக்கிச் சுமுகத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதில் அவருக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை எனத் தெரிந்தது. உள்ளே என்ன நினைக்கிறார் என்பது கொஞ்சமும் புரியவில்லை.

வீட்டுக்கு வரும் வழியில் ராமா கேட்டார்: "என்ன சொல்றாரு நம் ராம்லி?"

"ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாரு ராமா! இந்த விஷயத்தைப் பெரிசாகவே எடுத்துக்கில. மறந்திருங்கன்னு மட்டும் சொன்னார்."

"அப்புறம் என்ன? மறந்திடு சுந்தரம்! நான் அப்பவே சொன்னேன்ல, இதெல்லாம் மனசில வெச்சிக்க மாட்டார்னு!"

"ஆனா ஒரு கடுமையான முகமூடி போட்டுக்கிட்டே பேசிறாரு. சுமுகமே இல்ல!"

"அது முகமூடின்னு நீ நெனைக்கிற! அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா?"

சாப்பாட்டு மேசையில் அமர்ந்ததும் ராம்லியின் முகம் நினைவுக்கு வந்தது. அது முகமா முகமூடியா என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர் கொடுத்த அந்த மருந்து அன்று போலவே இன்றும் விரைவான பலன் கொடுத்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் குமட்டல் முற்றாக நின்றிருந்தது. பசித்தது. சோற்றின் மேல் ஆசை வந்தது. ஆனால் பரமாவின் நினைவு வந்ததும் மீண்டும் வயிறு கொஞ்சம் கலவரம் அடைந்தது. அடக்கிக் கொண்டு சோற்றைக் கொஞ்சமாகப் பிணைந்து ஒரு கவளம் அள்ளி வாயில் வைத்த போது வாசல் மணி அடித்தது.

எட்டிப் பார்த்தார். ஒரு கூரியர் வேன் நின்றிருந்தது. சிப்பந்தி ஒருவர் ஒரு பெரிய கடித உரையுடன் இறங்கினார். சுந்தரம் கை கழுவி வௌியே சென்று கையெழுத்திட்டு அதை வாங்கிக் கொண்டார். இங்கிலாந்திலிருந்து வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் முகவரி உரையில் எழுதியிருக்க வில்லை.

கிழித்துப் பார்த்தார். ஒரு காப்புறுதிப் பத்திரம் இருந்தது. ராதாவின் கையெழுத்தில் குறிப்பு ஒன்று இருந்தது.

"அப்பா, பிரேமின் மருத்துவக் காப்புறுதி அனுப்பியிருக்கிறேன். மருத்துவ மனையில் காட்டுங்கள். எல்லாச் செலவையும் ஏற்றுக் கொள்வார்கள். என் கண்மணியைப் பார்த்துக் கொள்ளுங்கள். விமானத்தில் இடம் கிடைத்ததும் வருகிறேன். ராதா"

பணத்துக்குக் குறைச்சலில்லை. இந்தத் துன்பங்களுக்கிடையே அது ஒன்றுதான் நிம்மதி. உன் நோய்களை நீ ஓய்வாக அனுபவிக்க நான் உனக்கு வேண்டிய பணம் கொடுக்கிறேன் என ஆண்டவன் சொல்கிறானா? இந்தப் பணத்தைக் கொடுத்து உடல் நலத்தை வாங்க முடியுமா? இந்தப் பணத்தைக் கொடுத்து உயிரை வாங்க முடியுமா?

இறைவனே! உன் பெயரில் இந்த உலகில் எங்காவது பொருளகம் இருக்கிறதா? இதோ இந்தக் காப்புறுதிப் பணத்தையும் என் உயிரையும் அங்கு வைப்புத் தொகையாகக் கட்டுகிறேன். என் பேரனின் உயிரை மீட்டுக் கொடுப்பாயா?

காப்புறுதியை மேசை மீது வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தார். மெதுவாகச் சாப்பிட்டார். இனிமையாக இருந்தது. அமுதமாக இருந்து. அத்தையின் சமையல் தொண்டையில் இறங்கி வயிற்றில் சுகமாகத் தங்கியது. அற்ப சுகம்தான். ஆனால் அனுபவிக்கும் போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது?

எதுவும் சிரமத்திற்குப் பிறகுதான் தெரிகிறது. சாப்பிடாமல் வாடிக் கிடந்த பின் சாப்பாட்டின் அருமை தெரிகிறது. நடக்க முடியாமல் முடங்கிக் கிடந்த பின்னர்தான் நடையின் அருமையும் காலின் அருமையும் தெரிகின்றன. இவற்றின் அருமை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தண்டனைகளா? வௌிச்சத்தின் அருமை தெரியாத அறிவிலியே, கொஞ்ச நாள் இருட்டறையில் இருந்து தண்டனை அனுபவி. அதன் பின் சாதாரண வௌிச்சமே உனக்கு அபூர்வமாகத் தெரியும். அதை உனக்குக் காட்டுகிறேன் என இறைவன் விதித்திருக்கிறானா?

"இவற்றையெல்லாம் தண்டனை என நினைக்க வேண்டாம். சோதனை என எண்ணிக் கொள்ளுங்கள்!" என்ற மதர் மேகியின் சொற்கள் நினைவுக்கு வந்தன.

சரி, நான் இதைச் சோதனை என்று எடுத்துக் கொள்கிறேன். பரமாவுக்கும் இது சோதனையா? இந்தப் பச்சிளம் வயதிலா? இது சோதனை என அவனுக்குத் தெரியுமா? இந்தச் சோதனைக்குப் பின் வாழ்க்கையைப் புதிதாகப் பார்த்து அதன் அருமைகளைப் புதிதாகக் கற்றுக் கொள்ளப் போகிறானா?

இந்தச் சோதனைகள் இல்லாமலேயே வாழ்க்கை அவனுக்குப் புதிதாகத்தானே இருக்கிறது? தைப்பிங் ஏரிப் பூங்காவில் அவன் தட்டாம் பூச்சி பிடிக்க முயன்றதை நினைத்துப் பார்த்தார். புல்லையும் சிறு காட்டுப் பூக்களையும் சிறு கைகளால் பிய்த்து உற்றுச் சோதித்ததையும் நினைத்துப் பார்த்தார். திருக்குறளை மழலையில் சொல்லிச் சிரித்ததை நினைத்ததார்.

எல்லாமே அவனுக்குப் புதியவைதானே! இப்போதுதானே முதலில் தெரிந்து கொள்கிறான். அன்பையும் பரிவையும் தெரிந்து கொள்கிறான். தன் தகப்பனிடமிருந்து வன்முறையையும் தெரிந்து கொள்ளுகிறான். தன் தாயின் அன்பு இருந்தாலும் அவளுக்கு அந்த அன்பைவிட ஏதோ இன்னொரு ஈர்ப்பு இன்னொரு இடத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுகிறான். தெரிந்து கொண்டு இதன் அர்த்தங்கள் புரியாமல் திணறுகிறான். இப்படி அவன் பாதி கற்றுக் கொள்ளும் வேளையிலேயை தெய்வங்கள் சோதனை வைக்க வேண்டுமா?

"ஏ சுந்தரம்! மடையனே! 57 வயதில் நீ வாழ்க்கையைப் பற்றி என்னதான் கற்றுக் கொண்டாய்?" என்று என்னைக் கேட்பது சரி. எனக்கு சோதனை வைப்பது சரி. "ஏ பரமா என்னும் பையனே! மூன்று வயதாகிவிட்டதே உனக்கு, என்ன கற்றுக் கொண்டாய்?" என அவனுக்குச் சோதனை வைக்கும் கொடுமைக்கார தெய்வம் எது? மதர் மேகி! இதற்கு என்ன பதில்?

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் வீட்டுக்கு முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அன்னம் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள். அவர் போய் அவசரமாகக் கை கழுவி துடைத்து வந்தார்.

ஜானகி பரமாவைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள். அவன் தூங்கிக் கொண்டிருக்கிறானா மயக்கத்தில் இருக்கிறானோ என அவருக்குத் தெரியவில்லை. அவனுக்குப் போர்வை போட்டு சுத்தியிருந்தார்கள். அவர்கள் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார் சுந்தரம். "என்ன ஆச்சு அக்கா? ஏன் இவ்வளவு நேரம்?" என்றார்.

"ரெண்டு மூணு டாக்டர்கள் கூடிக் கூடிப் பேசி முடிவு சொல்லி எல்லாம் செட்டில் பண்ண இவ்வளவு நேரமாச்சி தம்பி. இப்பத்தான் விட்டாங்க" என்றாள் ஜானகி.

"என்ன சொல்றாங்க அக்கா?"

"நாம மிந்தி நெனச்சத விட மோசமாகத்தான் இருக்கு. அக்யூட் லியூகேமியான்னு உறுதிப் படுத்திட்டாங்க. பல உறுப்புக்களுக்குப் பரவியிருக்காம். ரத்த சோகை ரொம்ப அதிகமா இருக்காம். மொதல்ல 'போன் மேரோ' (எலும்புச் சோறு) மாற்று அறுவை பண்ணனும்னாங்க. பிள்ளைக்கு சகோதரர்கள் இருக்காங்களான்னு கேட்டாங்க. இல்லைன்னேன். அப்பா அம்மா வரமுடியுமான்னு கேட்டாங்க. இல்ல, தாத்தா பாட்டிதான் இருக்காங்கன்னு சொன்னேன். அப்புறம் அதுவும் வேண்டான்னுட்டு ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியுந்தான் ஆரம்பிச்சிருக்காங்க."

தான் பட்ட பாடு அனைத்தும் அவனும் படப் போகிறான் என நினைத்து அவர் உள்ளம் சோர்ந்தது. ஜானகி அவனைக் கொண்டு உள்ளே படுக்கையில் கிடத்தினாள். அவனிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.

"சிகிச்சை ஆரம்பிச்சாட்டங்களா அக்கா?"

"ஆரம்பிச்சிட்டாங்க. சில மருந்துகள் குடுத்திருக்காங்க. உடனே அட்மிட் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா இன்னக்கி ராத்திரி இவனோட அப்பன் வரப்போற கதையைச் சொல்லி கூட்டி வந்திட்டோம். ஆனா முடிஞ்சா இன்னக்கி ராத்திரியே அட்மிட் பண்றது நல்லது தம்பி! அட்மிட் பண்ண ரெண்டாயிரம் வெள்ளி டெப்போசிட் கேக்கிறாங்க!"

ராதா காப்புறுதிப் பத்திரம் அனுப்பியிருப்பதைச் சொல்லி பணத்தைப் பற்றிப் பிரச்சினை இல்லை எனச் சொன்னார்.

"ரொம்ப துவண்டு போயிட்டான் தம்பி. டாக்டர் சொக்கலிங்கம்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்து எங்கிட்ட பேசினாரு. புற்று நோய் செல்கள் ரொம்ப வளந்திருக்கு. பல உறுப்புக்கள பாதிச்சிருக்கு. இதக் கட்டுப் படுத்தலன்னா ஒரு மாசம் கூட பிள்ள தாங்கமாட்டான்னு சொல்றாரு!"

அறைக்குள் சென்று அவனைப் பார்த்தார். தன் வேதனைகளை மறந்து அவன் தூக்கத்தில் இருந்தான். ஜானகி அவன் தலையணையைச் சரி செய்து அவனுக்குப் போத்திவிட்டு போர்வையின் விளிம்புகளை உள்ளே சொருகி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

"உங்களுக்கு உடம்பு பத்தி என்ன சொன்னாங்க?" என்று கேட்டாள். அவள் குரலில் சோகம் தோய்ந்திருந்தது.

இந்த வீட்டில் நல்ல சேதிக்கு இடமில்லை என்பது உனக்குத் தெரியாதா ஜானகி என்பது போல் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு "முன்னேற்றம் ஒண்ணும் இல்ல! புது சிகிச்சை ஆரம்பிச்சிருக்காங்க! பாக்கலாம்!" எனப் பெரு மூச்சு விட்டார்.

வாடிப் போன பூவைப்போல் கிடக்கும் அவனை மீண்டும் பார்த்தார். தனக்கும் பரமாவுக்கும் இப்போது ஒரு பந்தயம் நடக்கிறது. யார் முதலில் போவது? பரமா! சாவுக்கு என்னோடு போட்டி போடாதே! தாத்தா முதலில் போகும் வரை காத்திரு! இல்லாவிட்டால் நீ அங்கே தனியாக இருந்து ஏங்குவாய்! நான் போய் நீயும் வந்து சேர, நாம் அங்கே உட்கார்ந்து தமிழ்ப் படிக்கலாம். கண்ணீர் துளிர்த்தது. எழுந்து வௌியே வந்தார்.

டாக்டர் ராம்லியின் மருந்துகள் சில அமிலங்களை அடக்கி வைத்திருந்தாலும் பரமா பற்றிய இந்தச் செய்திகள் வேறு அமில ஊற்றுக்களைத் தோற்றுவித்திருக்க வேண்டும். வயிற்றில் ஒரு புரட்டலும் வலியும் தோன்றின. நெஞ்சு குமட்டியது.

இன்று இரவு சிவமணியும் அவன் தாயாரும் வரப் போகிறார்கள் என்ற நினைவு வந்தது. இன்றிரவு மீண்டும் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது. தயாராகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.


*** *** ***

ஆறு மணி முதலே காத்திருந்தார்கள். சிவமணியும் அவன் தாயாரும் வந்து சேர்ந்தவுடன் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கு அழைத்துச் சென்று அவன் தகப்பன் மூலமாகவே பரமாவை அங்கு சேர்க்க வேண்டும் என்பது திட்டம்.

அப்படி சிவமணி ஒத்துக் கொண்டால் அன்றைக்கு இரவு அன்னம் மருத்துவ மனையில் பரமாவுக்குத் துணையாகத் தங்கியிருப்பதாக ஏற்பாடு. ஆகவே தனக்கு மாற்றுத் துணிகளையும் இரவில் குடிக்க மைலோவைக் கலந்து பிளாஸ்கிலும் எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டாள் அன்னம். பரமாவின் துணிகள் ஒரு தனிப் பையில் இருந்தன.

"ஒத்துக்குவானா தம்பி, உன் மருமகன்? இல்ல பிள்ள செத்தாலும் சரி, எனக்கு என் ரோஷந்தான் முக்கியம்னு தரதரன்னு இழுத்திட்டுப் போயிடுவானா?" என்று கேட்டாள் அன்னம்.

"பார்ப்போங்கா! அப்படி இழுத்திட்டுப் போனாலும் நாம் தடுக்க முடியாது. அவன் பிள்ள, அவன் இஷ்டம்! நாம் என்ன பண்ண முடியும்?" என்றார். பரமா படுத்திருந்த அறையை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தார்.

ஏழு மணிக்குத்தான் தன் கார் டெலிபோனிலிருந்து அழைத்தான். "பிரேம் தயாரா இருக்கானா?" என்று கேட்டான்.

"சிவமணி! இதக் கேளு, பரமாவுக்கு உடம்பு சரியில்ல... ஆஸ்பத்திரியில..."

"ஷட் அப்" அவனுடைய பதில் ஒரு கிளவ்ஸ் அணிந்த குத்துச் சண்டைக்காரனின் பலத்துடன் அவர் முகத்தில் குத்தியது. "இந்த சாக்குப் போக்கெல்லாம் தேவையில்ல. அவனுடைய துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க. நானும் அம்மாவும் அங்க வந்து எறங்குவோம். அவன என் காடியில ஏத்துவோம். உடனே திரும்பிடுவோம். அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட உங்க வீட்டில தங்க மாட்டோம்."

"கேளுப்பா..."

"நான் பினேங் பாலத்துப் பக்கம் இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில வந்திருவேன்." போனைத் துண்டித்தான்.

நாயைக் கட்டி வைத்து முன் கேட்டைத் தயாராய் திறந்து வைத்து அரை மணி நேரம் நெருப்புத் தணலில் இருந்தார்கள்.

ஏழரை மணிக்கு அவனுடைய ராட்சசப் பாஜேரோ ஜீப் வண்டி தீப்பந்தங்கள் போன்ற தன் முன் விளக்குகள் எரிய அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. கட்டி வைத்திருந்த நாயின் இடைவிடாத குரைப்புப் பின்னணியில் சிவமணி இறங்கினான். அவன் தாயார் - மிக அபூர்வமாகத் தான் பார்த்துள்ள சம்பந்தியம்மாள் - ஜீப்பிலேயே உட்கார்ந்திருந்தாள்.

கதவருகில் வந்து நின்றதும் அவன் அவரைப் பார்த்துக் கேட்டான்: "எங்க பிரேம்? கொண்டாங்க வௌிய, நான் போகணும்!" என்றான். முகத்தில் கடுமைதான் இருந்தது.

"வா சிவமணி. உள்ளுக்கு வா. உன் மகன்தான, நீ நல்லா அழைச்சிட்டுப் போலாம். ஆனா உள்ளுக்கு வந்து நாங்க சொல்றதக் கேட்டுட்டு அழச்சிட்டுப் போ!" என்றார்.

"தேவையில்ல! அதையும் இதயும் சொல்லி அவன வச்சிக்கப் பாப்பிங்க! நான் இப்படியே போறதுதான் நல்லது!" என்றான்.

"சரி. சந்தோஷம். எப்படியிருந்தாலும் உன்மகன் நடக்கிற நிலமையில இல்ல. நீ உள்ள வந்து அவனப் பாத்திட்டு படுக்கையிலேருந்து தூக்கிட்டுப் போ!" என்றார்.

அவன் திரும்பித் தன் தாயைப் பார்த்தான். "அம்மா! நீ வா. போய்ப் பையனத் தூக்கிட்டு வா!" என்றான்.

சம்பந்தியம்மாள் காரைவிட்டு இறங்கினாள். அவள் முகத்திலும் அனல் பறந்தது. அவள் உள்ளே நுழைய அவர் வடூவிட்டார். அன்னம் அவளைப் பரமா படுத்திருந்த அறைக்கு அழைத்துப் போனாள். சிவமணி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கேட்டருகில் இருளான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்குள் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.

ஜானகி பரமாவின் பக்கத்தில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். சம்பந்தியம்மாள் பரமாவைப் பார்த்ததும் முகம் சுருங்கினாள். அவன் உடம்பு அப்போது கொதிக்க ஆரம்பித்திருந்தது. அவனைத் தொட்டுப் பார்த்து கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.

"அவன் உடம்புக்கு என்ன?" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டாள்.

அன்னம் அந்த அம்மாளை எரித்துவிடுவது போலப் பார்த்தாள். "இப்பவாவது அந்தக் கேள்வியக் கேக்க மனசு வந்திச்சே உங்களுக்கு! கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க பேரனுக்குக் கேன்சர். இரத்தக் கேன்சர். பிள்ளை இப்ப சாகப் பிழைக்கக் கெடக்கிறான்!" என்றாள்.

சம்பந்தியம்மாள் மருண்டு போய் பிள்ளையையும் அன்னத்தையும் ஜானகியையும் மாறி மாறிப் பார்த்தாள். "ஏன் இத மிந்தியே சொல்லல?" என்று கேட்டாள்.

சுந்தரம் அறை வாசலில் நின்று பதில் சொன்னார். "நீங்க சொல்ல விட்டாதான சொல்றதுக்கு? எனக்குக் கடுமையான எச்சரிக்கை குடுக்கிறதிலதான் உங்க மகனுக்கு அக்கறை இருந்ததே தவிர நான் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சி பண்ணியும் அவர் காது குடுத்துக் கேக்கவே இல்ல. நீங்களே வந்து தெரிஞ்சிக்குங்கன்னு விட்டாச்சி!" என்றார்.

"கேன்சரா?" என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்டாள்.

"கேன்சர்தான். அக்யூட் லியுகேமியா."

"உண்மையாவா?"

"டாக்டர் சொன்னாதான் நம்புவிங்கன்னா, அங்கேயே போய் கேட்டுக்கலாம். அங்க போகத்தான் நாங்களும் தயாரா இருக்கோம்!"

சம்பந்தியம்மாள் வௌியே போய் சிவமணியைத் தனியாகக் கொண்டு போய் அவன் காதில் குசுகுசுத்தாள். அவன் அவர் பக்கம் குரூரமாகப் பார்த்தான். பின் சத்தமாகச் சொன்னான். "எல்லாம் பொய்ம்மா! பெரிய நாடகம் போட்றாங்க. இப்படி நடக்கும்னு நான் சொன்னேனா இல்லியா! நீ போய் தூக்கிட்டு வா! அவனுக்கு என்ன சீக்கானாலும் கோலாலம்பூர்ல நாம கொண்டி வச்சிப் பாத்துக்கலாம். போ! இவங்க சொல்றத நம்பாத. தூக்கிட்டு வா! நாம் போவோம்!" என்றான்.

சம்பந்தியம்மாள் தயங்கித் தயங்கி மீண்டும் உள்ளே வந்தாள். அன்னத்தைப் பார்த்தாள். "நெசந்தானா நீங்க சொல்றது? இல்ல என் மகன் சொல்ற மாதிரி நாடகம் போட்றிங்களா?" என்று கேட்டாள்.

"நம்புறது நம்பாதது உங்களப் பொறுத்தது. நாங்க என்ன செய்ய முடியும்? உள்ளதச் சொல்லியாச்சி. அவன் படுத்த படுக்கைதான். அவனுக்கு உடனடியா மருத்துவ சிகிச்சை தேவை. ஆனா உங்க மகனுக்கு தகப்பன்கிற முறையில பிள்ளயக் கொண்டு போக எல்லா உரிமையும் இருக்கு. நாங்க எத்தனையோ தடவ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சாச்சி! பரவாயில்ல! அள்ளித் தூக்கிட்டுப் போங்க! வடூயிலேயே செத்துப் போனா நீங்களே ஏற்பாடு பண்ணிப் பொதைச்சிடுங்க!" என்று கூறிவிட்டு அன்னம் அழுதாள்.

சம்பந்தியம்மாள் மீண்டும் மகனிடம் போய் குசுகுசுத்தாள். அவன் "பொய் சொல்றாங்கம்மா" என்று திருப்பித் திருப்பிச் சொன்னது காதில் விழுந்தது. அந்த அரை இருட்டுப் பகுதியில் அவன் கையில் சிகிரெட் முனை எரிந்தது மினுமினுப்பாகத் தெரிந்தது. அவன் கை வீச்சில் அது அங்குமிங்குமாக அலைந்தது.

சம்பந்தியம்மாள் கொஞ்சம் கோபமாகப் பேசியது அவர்கள் காதில் விழுந்தது. "சீக்குப் பிள்ளய நான் வச்சிப் பாக்க முடியாது. நீ வேற யாரையாவது வச்சிப் பாத்துக்க. என்னால ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைய முடியாது. நீயே போய் தூக்கிக்க! நீயே ஆள் வச்சிப் பாத்துக்க!" என்றாள்.

"என்னம்மா இவ்வளவு தூரம் வந்து இப்படிச் சொல்ற!" என்றான்.

"அப்பிடித்தான். நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு!" அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காகச் சத்தமாகவே சொன்னாள். விஷத்தைக் கக்கும் வேளை வந்து விட்டால் அது மற்றவர்களைப் பாதிக்காமல் கக்கி என்ன பயன்? சுந்தரம் உள்ளுக்குள் கொதித்தார். ஆனால் அடங்கியிருந்தார்.

சிவமணி கொஞ்ச நேரம் குழம்பியிருந்தான். அங்குமிங்கும் அலைந்தான். பின்னர் சிகரெட்டைத் தூக்கியெறிந்துவிட்டு சப்பாத்தைக் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தான். ஜிம்மி மீண்டும் சங்கிலியில் திமிறிக் கொண்டு அவனைப் பார்த்துக் குலைத்தது.

படுக்கையருகில் வந்து பரமாவைப் பார்த்தவாறு நின்றான். அவன் வாயிலிருந்து அந்த அறைக்குள் சிகிரெட்டின் நாற்றம் பரவியது. ஜானகி எழுந்து தள்ளி நின்றாள். படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான். நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். பரமாவின் நெஞ்சில் போர்வையின் மேல் கைவைத்து இலேசாக உலுக்கினான்.

"பிரேம்! லுக் போய்! லுக், டேடி இஸ் ஹியர்" என்றான்.

பிரேம் கண்களை மெதுவாகத் திறந்தான். சிவமணியைப் பலவீனமாகப் பார்த்தான். "டேடி, ஐ எம் சிக்!" என்றான். மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

ஜானகியைப் பார்த்து முறைத்தான் சிவமணி. "காய்ச்சல்தான அடிக்குது. கேன்சர்னு ஏன் பெரிய பொய்யச் சொல்றீங்க?" என்றான்.

"தூக்கிட்டுப் போப்பா! உனக்கு ஏன் நாங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும்? கேன்சரா இல்லையாங்கிறத நீயே டாக்டரக் கேட்டுத் தெரிஞ்சிக்க!" என்று சீறினாள் ஜானகி.

கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மகனைப் பார்த்தவாறு இருந்தான். வாசல் பக்கம் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்தான். "எப்ப உங்களுக்குத் தெரியும்?" என்று கேட்டான். அவன் கோபத்தின் சுருதிகள் குறைந்திருந்தன.

"ரெண்டு வாரமா சோதனைகள் நடந்தது. போன வாரம் உத்தேசமாத் தெரியும். இன்றைக்குத்தான் நிச்சயமா சொன்னாங்க! ஸ்பெஷலிஸ்ட் சென்டர்ல சேக்கிறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு உனக்காகக் காத்திருக்கோம். அவ்வளவுதான்" என்றார் சுந்தரம்.

தலையைக் குனிந்து கொண்டான். யோசித்தவாறு இருந்தான். பின் தலை தூக்கிக் கேட்டான். "அவளுக்குத் தெரியுமா?"

"எவளுக்கு?"

"உங்க மகளுக்கு!" என்றான்.

அவள் பெயரைக் கூடச் சொல்ல அவனுக்கு நா வரவில்லையே எனக் கோபப் பட்டார். கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். "தெரியும்"

"அப்ப அவனப் பார்க்க வர்ராளா? எப்ப வர்ரா?"

யோசித்துச் சொன்னார். "அது எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் உனக்குச் சொல்றதா இல்ல. பிள்ளை பேர்ல எடுத்த ஆஸ்பத்திரி இன்சூரன்ஸ் பத்திரம் மட்டும் அனுப்பியிருக்கு. இன்னைக்குத்தான் கூரியர்ல வந்தது" என்றார்.

தலை குனிந்தவாறு இருந்தான். அப்புறம் விருட்டென்று எழுந்து வௌியில் போனான். முன்பு சிகிரெட் பிடித்துக் கொண்டு நின்ற அதே இருளில் இன்னொரு சிகிரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். புகைத்தவாறு இருந்தான்.

அவன் தாய் வரவேற்பரையில் ஒரு நாற்காலியின் விளிம்பில் குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். இங்கு வந்து மகனோடு சேர்ந்து அடாவடித் தனம் செய்து அனைவரையும் அவமானப் படுத்திவிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டு போகவேண்டும் என்று அவள் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறாத ஏமாற்றமும் எரிச்சலும் முகத்தில் தெரிந்தன.

சுந்தரம் இன்னொரு நாற்காலியில் வயிற்றைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தார். இது மருந்து சாப்பிட வேண்டிய நேரம் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு நடக்கின்ற நாடகத்தின் இந்தக் காட்சி ஒரு முடிவுக்கு வராமல் தான் எழுந்து போவது நன்றாக இருக்காது என உட்கார்ந்திருந்தார். தலை விண் விண் எனத் தெறித்தது. கால் கை தசைகளை வலி பிசைந்து கொண்டிருந்தது. வயிற்றுத் தசைகளிலும் வலி தோன்றியிருந்தது.

இரண்டு மூன்று நிமிடங்களில் சிகிரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பி வந்தான் சிவமணி. சுந்தரத்தின் முன் நின்றான். "சரி வாங்க! அவனக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுவோம்! நானும் டாக்டர்கிட்ட பேசணும்" என்றான்.

அந்த முடிவு கிடைத்ததற்கப்புறம் வீடு பரபரத்தது. சாமான்கள் அடுக்கப்பட்டன. காரில் ஏறின.

சுந்தரம் தன் அறைக்குப் போய் மருந்துகளைக் கவனமாகப் பொறுக்கிச் சாப்பிட்டார். ஜானகி கதவைத் திறந்து கொண்டு நுழைந்தாள்.

"ஏங்க! நீங்களுமா ஆஸ்பத்திரிக்கு வரணும்? உங்களுக்கு தலையும் வயிறும் வலிக்குதுன்னு பாத்தாலே தெரியுது. நீங்க மாத்திரை சாப்பிட்டு வீட்ல இருங்க. நானும் அக்காவும் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோமே!" என்றாள்.

"இல்ல ஜானகி. இவ்வளவு நடக்கும்போது நான் ஒண்டியா வீட்ல உக்காந்திருக்க முடியாது. நானும் வாரேன். வலி இருக்கத்தான் செய்யிது. ஆனா எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா பழகிக்கிட்டு வருது! சமாளிச்சிக்கலாம் வா!" என்று புறப்பட்டார்.

உடல் வலி மட்டும் அல்ல. மன வலிகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொண்டுதான் வருகிறது. சமாளிக்க முடிகிறது. ஆனால் அணைகள் உடைகின்ற தருணம் ஒன்று இருக்கத்தானே வேண்டும், அது எப்போதோ என்று எண்ணியவாறு அன்னத்தின் காரில் ஏறி உட்கார்ந்தார்.

அன்னத்தின் சிறிய கஞ்சில் கார் வழிகாட்ட பாஜேரோ ஒரு புலி போலப் பின்னால் வந்து கொண்டிருந்தது.

-----

அந்திம காலம் - 15


அந்த மருத்துவ மனை சுத்தமாக இருந்தது. விசாலமாக இருந்தது. புதிதாக சில டாக்டர்கள் ஒன்று சேர்ந்து பெரும் பணம் முதலீடு செய்து கட்டியது. நுழைவாயில், வரவேற்பறை, அடையாளப் பலகைகள் அத்தனையையும் நவீனமாக பளபளப்பாக இருந்தன. பணியாளர்கள் பணிவுடனும் பரிவுடனும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்கள்.

பரமாவின் பதிவு மிக வேகமாக நடந்தது. காப்புறுதிப் பத்திரம் பார்த்தவுடன் வைப்புத் தொகை ஏதும் கேட்கவில்லை. தாதியர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வார்டில் ஒரு சுத்தமான அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளுடன் அவனையும் படுக்க வைத்தார்கள். விசாலமான அறை. பிரகாசமான வர்ணங்களைச் சுவரில் பூசியிருந்தார்கள். குழந்தை ஓவியங்கள் நிறையத் தொங்கின.

டாக்டர் சொக்கலிங்கம் என்ற இனிய முகம் கொண்ட டாக்டர் ஒருவர் பரமாவை உடனே வந்து பார்த்தார். பக்கத்தில் நின்றிருந்த சிவமணியை பிள்ளையின் தகப்பன் என்று அன்னம் அறிமுகப் படுத்தி வைக்கக் கைகுலுக்கினார். "பிள்ளை மிகவும் பலவீனமாக இருக்கிறான்! அவனுக்கு டிரிப் போடுவதுதான் நல்லது" என்று சொல்லி தாதியைக் கூப்பிட்டு டிரிப்புக்கு ஏற்பாடு பண்ணினார்.

சிவமணி டாக்டரிடம் ஆங்கிலத்தில் கேட்டான்: "என்ன நினைக்கிறீர்கள் டாக்டர் சொக்கலிங்கம்?"

டாக்டர் சொக்கலிங்கம் அன்னத்தையும் ஜானகியையும் காட்டி, திருத்தமான தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கலந்து சொன்னார்: "மத்தியானம் இவங்கிட்ட விளக்கமா சொல்லியிருக்கேன். அக்யூட் லியூகேமியா, ரொம்ப வேகமா மத்த உறுப்புக்களுக்குப் பரவி வருது. வயிறு, சிறுநீரகம், ஈரல் எல்லாத்திலியும் பாதிப்பு இருக்கு. கெமோதெராப்பி ஆரம்பிச்சிட்டோம். ரேடியோதெராப்பி நாளைக்குக் காலையில ஆரம்பிச்சிடுவோம்!"

"எதினால இப்படி?" டாக்டர் தமிழ் பேசுவதைப் பார்த்து சிவமணியும் தமிழிலேயே கேட்டான்.

"எப்படின்னு சொல்ல முடியாது மிஸ்டர் சிவமணி. புற்று நோய்க்கான காரணங்களைக் கூற முடியாது. ஏராளமான காரணங்கள ஒரு உத்தேசமாத்தான் கூறலாம். உங்க மகன் கேசில பாரம்பரியத்தையும் கவனத்தில எடுத்துக்க வேண்டியிருக்கு!" என்றார்.

"என்ன பாரம்பரியம்?" என்று கேட்டான் சிவமணி.

"இதோ பிள்ளையினுடைய குடும்பத்தில இவனுடைய தாய் வழி தாத்தாவுக்கு புற்று நோய் இருக்கிறதா போட்டிருக்கே!" என்றார்.

"யாரைச் சொல்றிங்க?"

"மிஸ்டர் சுந்தரம், தாயின் தகப்பன்னு போட்டிருக்கே!"

சிவமணி திரும்பி சுந்தரத்தைப் பார்த்தான். "அப்படியா! உங்களுக்குக் கேன்சரா?" என்று வாய்பிளந்து கேட்டான்.

டாக்டர் சொக்கலிங்கம் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்தார். "நீங்கதானா அது? மன்னிக்கணும். நான் உங்கள முன்பு பார்த்தில்லை." கை குலுக்கினார்.

"நெசமா மாமா? உங்களுக்குக் கேன்சரா?" மீண்டும் கேட்டான்.

இந்த விஷயம் இப்படிப் பொதுவில் உடைபடும் என்பது தெரியாமல் போயிற்று. எல்லாருக்கும் சொல்லித் தன்னைப் பரிதாபத்துக்குரிய காட்சிப் பொருளாக ஆக்கிவிடக் கூடாது என்ற அவர் நோக்கம் அங்கு தகர்ந்தது.

டாக்டர் சொக்கலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். "உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்?"

"மௌன்ட் மிரியத்திலிருந்து டாக்டர் ராம்லிகிறவர் போன் பண்ணினார். உங்களுக்கு அவர் புதிய முறை சிகிச்சை ஆரம்பிச்சிருக்கிறாராமே! உங்க குடும்ப விவரங்கள்ள உங்கள் மகள் வழிப் பேரனுடைய நோயைப் பதிவு பண்ணி வைக்கணும்னு விவரம் கேட்டார். செல் ஆய்வுகள் பற்றிய விவரங்களையும் அனுப்பச் சொன்னார். அப்பதான் எங்களுக்கும் இந்த விவரம் தெரியும்."

டாக்டர் சொக்கலிங்கம் சுந்தரத்தின் புற்று நோய் பற்றிய சில விரங்களை மட்டும் மேலோட்டமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். டாக்டர் ராம்லி மேலும் விவரங்களை அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்.

கொஞ்ச நேரம் மௌனமாகத் தலை குனிந்திருந்த சிவமணி டாக்டரிடம் கேட்டான். "இந்தப் பிள்ளை குணமடைகிற வாய்ப்புக்கள் எப்படி டாக்டர்?"

டாக்டர் சொக்கலிங்கம் யோசித்தார். "வௌிப்படையா சொல்லப் போனா அவன் நோய் ரொம்ப முத்தின நிலையில இருக்கு. ரத்தத்தில வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகமாப் போச்சி. அதனால உடம்புக்கு இரத்தம் சக்தியைக் கொண்டு போறது ரொம்பக் குறைஞ்சி ரத்த சோகை ஏற்பட்டு பிள்ளை ரொம்ப பலவீனமாயிட்டான். அந்த வெள்ளை அணுக்களைக் கட்டுப் படுத்த அதிகமான மருந்துகள் உள்ள செலுத்திட்டோம். இதுக்கும் அதிகமா செலுத்தினா அவனுடைய கிட்னிகள், ஈரல் இதெல்லாம் பழுதாயிடும். மருந்த அது தாங்காது. நாளைக்கு ஈரலுக்கு ரேடியேஷன் குடுக்கப் போறோம். அது எப்படி அதை ஏத்துக்கிதுன்னு பாத்திட்டு அப்புறம்தான் ரேடியேஷன அதிகப் படுத்தலாமான்னு பாக்க முடியும்."

"உயிர் பிழைச்சிக்குவானா டாக்டர்?"

"மன்னிக்கணும் மிஸ்டர் சிவமணி! மெடிக்கல் விவரங்களை மட்டும்தான் நான் சொல்ல முடியும். எங்க சிகிச்சை முறைகள் ரொம்ப நவீனமான முறைகள்தான். ஆனா அது கூட சில சமயங்கள்ள இந்தப் புற்று நோயின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமப் போகலாம். நம்பிக்கையோட இருங்க. பல நோயாளிகளின் வாழ்க்கையில மருந்துகள விட ஆண்டவன் புரியிற அற்புதம் அதிகம்!"

டாக்டர் விடை பெற்றுப் போய்விட்டார்.

சிவமணி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான். அப்புறம் சுந்தரத்தைப் பார்த்துக் கொஞ்சம் இரக்கமான குரலில் கேட்டான்: "எவ்வளவு நாளா உங்களுக்கு...?"

சுந்தரம் பேசவில்லை.

"எங்கிட்ட சொல்லவே இல்லையே!"

மௌனம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இத்தனை அவமானப் படுத்திய பிறகு "வாயை மூடு" என்றெல்லாம் அதட்டிப் பேசிய பிறகு, மரியாதை தெரியாத இந்த முரடன் தன் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு வார்த்தைகள் கனிவாகப் பேசிவிட்டான் என்பதால் அவனிடம் உடனடியாக நட்புப் பாராட்டிவிட அவருக்கு மனம் வரவில்லை. கோபம்தான் கொப்புளித்துக் கொண்டு வந்தது.

அருகில் வந்து கையைப் பிடித்தான். "மன்னிச்சிருங்க! நான் ரொம்ப முரட்டுத் தனமா நடந்துக்கிட்டேன்!"

அவன் கையை உதறினார். வேறு பக்கம் பார்த்தார். ஜானகியும் அன்னமும் பார்த்துப் பார்க்காதது போல இருந்தார்கள்.

சிவமணி கொஞ்ச நேரம் அங்குமிங்குமாக அலைந்தான். அவனுக்குச் சிகிரெட் பிடிக்கும் ஆசை வந்து விட்டது. ஆஸபத்திரிக்குள் எங்கும் சிகிரெட் பிடிக்க முடியாதாகையால் அலைகிறான் எனத் தெரிந்து கொண்டார்.

சம்பந்தியம்மாள் இதிலெல்லாம் எதிலும் சம்பந்தமில்லாதவள் போல் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள். பின் எழுந்து மகனிடம் போய்ப் பேசினாள். "சிவமணி, நாம் போலாமா? இனி கே.எல். போய்ச் சேரணுமே. உங்க அப்பா வேற தனியா காத்துக்கிட்டு இருப்பாரு!" என்றாள்.

சிவமணி அவள் முகத்தை முறைத்துப் பார்த்தான். "நீதான் இதெற்கெல்லாம் காரணம்!" என்பது போல அந்த முறைப்பு இருந்தது. அப்புறம் மெதுவாக ஜானகியிடம் வந்தான்.

"அத்தை! நான் போகணும். அம்மாவ கொண்டி திரும்ப விடணும். இல்லைன்னா இங்கியே தங்கிப் போவேன். நான் நெனச்சி வந்தது ஒண்ணு, இங்க நடக்கிறது வேறொண்ணு!." சொல்லித் தலை குனிந்திருந்தான். பின் தொடர்ந்தான்: "என் மகனப் பாத்துக்குங்க அத்தை! நான் நாளக்கி நாளன்னிக்கு வரப் பாக்கிறேன். கண்டிப்பா வருவேன். இடையில போன் பண்ணி கேட்டுக்கிறேன்!" என்றான்.

சிலுவார் பைக்குள் கையை விட்டு தன் பணப்பையை எடுத்துச் சில 50 ரிங்கிட் நோட்டுக்களைப் பிடுங்கினான். "இத வச்சிக்குங்க அத்தை! எங்கிட்ட இப்ப இருக்கிறது இவ்வளவுதான். பின்னால கொண்டு தர்ரேன்!" என்றான்.

ஜானகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "உன் பணம் எங்களுக்கு வேண்டாம்பா! ராதா அவனுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கா! அதுக்கு மேல செலவுக்கு எங்ககிட்ட காசு இருக்கு!" என்றாள்.

காசை பரமாவின் படுக்கையின் மீது போட்டான். இறுதியாக எல்லா மிடுக்குகளும் தணிந்த குரலில் "என்ன மன்னிச்சிடுங்க! நான் முரடன்! எனக்கு யோசிக்கத் தெரியாது! சரியாப் பேசத் தெரியாது! நான் வர்ரேன்!."

அம்மாவை வா என்று கூடச் சொல்லாமல் விருட்டென்று எழுந்து போனான். சம்பந்தியம்மாள் பின்னாலேயே ஓடினாள்.

அந்த அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளும் அவர்களுடைய பெற்றோர்கள் சிலரும் உறவினர்களும் இருந்தார்கள். இவர்கள் அனைவரின் முன்னிலையிலும்தான் இந்த நாடகங்கள் நடந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் சீனர்களாக இருந்ததால் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லை. என் நோயும் என் குடும்ப ரகசியங்களும் வெட்ட வௌிக்கு வந்தாயிற்று. இனி யார் பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன? என நினைத்தார்.

கனிந்து வந்த இந்த முரட்டு மருமகனிடம் தாங்கள் இப்படி உதாசீனமாக நடந்து கொண்டது சரிதானா என்று எண்ணிப் பார்த்தார். ஆனால் அவன் அவர்கள் மேல் அள்ளி வீசியுள்ள அவமானங்களுக்கு இந்த உதாசீனம் ஒரு பொட்டளவுதான் எனத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

நடப்பது ஒன்றும் தெரியாமல் பரமா மயங்கிக் கிடந்தான். அவனுக்கு டிரிப் போட்டிருந்ததோடு இப்போது வாயில் பிராண வாயுக் குழாயும் பொருத்தியிருந்தார்கள். ஒரு பரவௌி மனிதன் போல உடலிலிருந்து ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்க அவன் முகம் மேலும் துவண்டு கிடந்தது.

அவருக்கு உடம்பு பலவீனத்தால் நடுங்க ஆரம்பித்திருந்தது. தலையிலும் கை கால்களிலும் வலிகள் கூடியிருந்தன. தலை சுற்ற ஆரம்பித்திருந்தது. வீட்டுக்குப் போவதானால் அக்காவைத்தான் கேட்க வேண்டும். அவள் அவரையும் ஜானகியையும் இந்த இருட்டில் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு, ஒண்டியாக ஆஸ்பத்திரிக்குத் திரும்பி வரவேண்டும்.

அவள் பக்கம் பார்த்தார். அவள் பரமாவின் முகத்தை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு பிரமை இருந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவளுக்குள்? அவளுக்கென்று குடும்பம் இல்லை. இந்த மாதிரிப் பிரச்சினைகள் தன் வாழ்வில் வேண்டாம் என்பதைப் போல திருமணத்தையே தவிர்த்து விட்டவள். ஆனால் எல்லாப் பாரங்களையும் இப்போது அவள் முதுகில்தான் ஏற்றி வைத்திருக்கிறேன் என நினைத்தார். என் நோய், என் பேரப்பிள்ளையின் நோய், என் குடும்பம், என் மகளின் குடும்பத் தகராறு எல்லாம் உன் முதுகில்தானா அக்கா? எப்படி எல்லாவற்றையும் சுமக்கிறாய்? ஏன் சுமக்கிறாய்?

எக்கேடு கெட்டாவது போங்கள். தைப்பிங்கில் ஏரியோரத்தில் என் வசதியான பெரிய வீட்டில் நான் எனக்குத் தொந்திரவே கொடுக்காத ஓர் ஊமை அத்தையுடன் நிம்மதியாக இருக்கப் போகிறேன் என்று ஏன் எங்களைத் தூக்கி எறிந்து விட்டுப் போகவில்லை? எந்த பந்தம் உன்னைக் கட்டி வைத்திருக்கிறது? ஏன் எனக்காக இவ்வளவு செய்கிறாய்? அக்கா! உனக்கு நான் தம்பியா, மகனா?

ஜானகி வந்து தோள்களைப் பிடித்தாள். "ஏன் உங்களுக்கு இப்படி உதறுது?" என்று கேட்டாள்.

அன்னம் தலை நிமிர்ந்து பார்த்தாள். "என்ன வீட்டில கொண்டு விட்டுடு அக்கா!" என்றார். அன்னம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வந்து, "வா போகலாந் தம்பி!" என்றாள்.


*** *** ***

வீட்டிற்கு வந்து சேருவதற்குள் உடம்பு அதிகமாக உதறத் தொடங்கிவிட்டது. இப்படிக் காய்ச்சல் வரும் நேரங்களில் போட்டுக் கொள்வதென்று தனி மாத்திரை வீட்டில் இருந்தது. அதைக் கையோடு எடுத்துக் கொண்டு போகாதது தவறு என நினைத்துக் கொண்டார்.

வீட்டில் வண்டியை நிறுத்தி இரண்டு பெண்களுமாக அவரை அணைத்துப் பிடித்தவாறு வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவரைப் படுக்கையில் கிடத்தினார்கள்.

ஜானகியிடம் சொல்லி அந்தக் காய்ச்சல் மாத்திரையையும் தூக்க மாத்திரையும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு கம்பளிக்குள் சுருண்டார். உடல் கதகதப்பாகி உதறல் கொஞ்சம் அடங்கியது. தொடர்ந்து வந்தது தூக்கமா, மயக்கமா என்பது தெரியவில்லை. ஆனால் நினைவு குறைந்து கண்களுக்குள் புகை மூண்டு இருண்டது. நல்லதுதான் என நினைத்துக் கொண்டார்.


*** *** ***

இருள் கனத்த மையாகக் கவிந்திருந்த நேரம். போன் அடித்தது போல இருந்தது. மூடிய கதவு நோக்கி போர்வையை நீக்கிக் கூர்ந்து கேட்டார். "டிரிங்... டிரிங்..." என்று போன்தான் வரவேற்பறையிலிருந்து விடாமல் அடித்தது. யார் இந்த நேரத்தில்...? ஜானகி அலுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். தலைமாட்டில் அலாரத்தைப் பார்த்தார். இரவு மணி இரண்டு! யார்? யார்?

பரமா பற்றிய செய்தியா? ராதாவா?

ஜானகியை எழுப்ப மனம் வரவில்லை. எழுந்து சென்று போனை எடுக்க முடியுமா? உடம்பு இடம் கொடுக்குமா? பேச முடியுமா?

போர்வையை நீக்கி எழுந்தார். தலை கொஞ்சம் சுற்றி அடங்கியது. கதவு திறந்தார். இரவு விளக்கு ஒன்று மட்டும் மஙகலாக ஹாலில் எரிந்து கொண்டிருந்தது. அந்த அரை இருளில் மெதுவாக அடிமேல் அடி வைத்துப் போனார். போனை எடுத்தார். மெதுவாக "ஹலோ" என்றார். அந்தச் சத்தம் கொஞ்சம் கரகரப்பாக வௌிவந்தது.

பதில் இல்லை. ஆனால் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று முதலில் புரியவில்லை. "ஹலோ" என்றார் மீண்டும். பதில் இல்லை. குழப்பமான ஒரு சத்தம். தவறான எண்ணா? விஷமிகள் விளையாடுகிறார்களா? இப்படித் தன்னைத் துன்பப் படுத்தி?

"ஹலோ" என்றார் மீண்டும்.

"மாமா!" என்று குரல் வந்தது. மாமாவா? சிவமணி குரல் போல...! ஏன் திணறுகிறான்.

"யாரு? சிவமணியா?" என்றார்.

"மாமா!" அழுகிறான். தேம்புகிறான்.

"என்ன சிவமணி?" என்றார்.

"மாமா! என் மகனப் பாத்துக்குங்க! பிளீஸ். என்னால தூங்க முடியில. எனனோட துக்கத்தத் தாங்க முடியில!" என்றான். தேம்பினான்.

"என்னப்பா! அழுவுறியா? ஏன் அழுவுற? நாங்கள்ளா இருக்கமே, பாத்துக்காமயா இருப்போம்? அழுவாத சிவமணி!" என்று ஆறுதல் சொல்ல முயன்றார்.

"மாமா! நான் முரடன். எனக்கு நல்லது கெட்டது தெரியாது. ஆனா உங்களுக்குக் கேன்சர்ங்கிறது தெரிஞ்சிருந்தா அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டேன்!"

"அத மறந்திருப்பா! சின்ன விஷயம்!" என்றார்.

"மறக்க முடியாது மாமா! நான் பிடிக்க வந்த கைய உதறிட்டிங்கள, அத மறக்க முடியாது"."
.
அவருக்கே தன் செயல் முரட்டுத் தனமாகப் பட்டது. "சிவமணி, நான் அப்படி செஞ்சிருக்கப் படாது. நானும் ஒரு கோவத்திலதான்..."

"என் மூஞ்சில நீங்க அறைஞ்சிருக்கணும். காறித் துப்பியிருக்கணும்...!"

"சே! சே! அது அநாகரிகம்!"

"அதுதான் எனக்குக் கிடையாது மாமா! நாகரிகம் கிடையாது. அதினாலதான் ராதாவும் என்ன விட்டு ஓடிட்டா!"

அந்தக் கதைக்கு அவர் போக விரும்பவில்லை. உடல் தளர்ச்சி மீண்டும் வந்தது. "சிவமணி! பிறகு பேசிக்குவோம். நான் போய் படுக்கணும்!"

"மாமா! உங்களக் கையெடுத்துக் கும்பிட்றேன். என் பையனப் காப்பாத்தி எங்கிட்டக் குடுத்திடுங்க!" என்று மீண்டும் விம்மினான்.

"எல்லாம் பிறகு! மொதல்ல அவன் பிழைச்சி வரட்டும்னு பிரார்த்தன பண்ணு!" என்றார்.

போனை வைத்துவிட்டான். அவர் போனை வைத்துத் திரும்பியபோது ஜானகி தலை முடியைக் சேர்த்துக் கட்டியவாறு பின்னால் நின்றிருந்தாள்.

"யாருங்க?" என்றாள்.

"சிவமணிதான். மனம் உடைஞ்சி பேசிறான். மன்னிப்புக் கேக்கிறான்!" என்றார்.

"ஆமா இன்னைக்கு மன்னிப்பு, நாளைக்கு சண்டை, நாளன்னிக்கு அடி உதை! இதெல்லாம் உருப்படாத ஜென்மங்கள்!" என்றாள். "நீங்க வந்து படுங்க! நான் போன் அடிச்சதே கேக்காம தூங்கிட்டம் பாருங்க!" என்றாள்.

மெதுவாக வந்து படுத்தார். ஆனால் தூக்கம் முற்றாகப் போய்விட்டது. பேசியதில் தொண்டையில் வலி ஏற்பட்டிருந்தது. விடிய விடிய விழித்துப் புரண்டு கொண்டிருந்தார். அடுக்கடுக்கான எண்ணங்கள் வந்தன.

பரமா எப்படியிருப்பான் என எண்ணிப் பார்த்தார். அவன் கண் மூடிக்கிடக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தக் கண்மூடல் தூக்கமா, மயக்கமா? பிள்ளைக்கு உள்ளே என்னவெல்லாம் வலியிருக்கும்? எப்படி அவற்றை வௌியில் சொல்லுவான்?

மருமகனை எண்ணிப் பார்த்தார். திருந்தி விட்டானா? அழுதழுது பேசினானே! இதற்கு முன் அவன் அழுது தான் பார்த்ததில்லையே! என்று யோசித்தார். மனித குணம் ஒரு குறிப்பிட்ட வயதில் உருவாகி விட்டால் அப்புறம் அதிகமாகத் திருந்துவதில்லை. வார்ப்பு ஒன்று திடமாக உருவாகி விடுகிறது. தீய குணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவதில்லை. சட்டமும் சில சமயம் வாழ்க்கையும் கொடுக்கின்ற தண்டனைகளுக்குப் பயந்து தீய செயல்களிலிருந்து விலகி இருக்கலாம். தற்காலிக விலக்கம்தான். அப்புறம் அடிப்படையில் ஊறிவிட்ட குணம் மீண்டும் தலையெடுக்கும்.

விடிந்தால் சிவமணியின் உள்ளம் இதே போல நினைக்குமா என எண்ணிப் பார்த்தார். இந்த இருட்டில், அவன் மகனுக்கு நேர்ந்துவிட்ட துயரத்தில், இந்த நேரத்தில் அவன் இளகியிருக்கிறான். ஒரு வேளை இரவில் குடித்திருப்பான். குடி அவன் உணர்ச்சிகளை மிகைப் படுத்தியிருக்கலாம். காலையில் அவனுடைய சுற்றுச் சூழல்களும் நண்பர்களும் அவனுக்கே உரிய முரட்டுத் தனமும் அவனை ஆளத் தொடங்கும் போது இப்படி நினைப்பானா? "என் மகனைப் பறித்துக் கொண்டீர்கள்" என்று சொல்ல மாட்டானா? சம்பந்தியம்மாள் சொன்னாளே, 'நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு!' அப்படிச் சொல்பவர்கள் பேச்சைக் கேட்டுத் தானும் வெறி கொண்டு ஆடமாட்டானா?

மனிதர்கள் அடிப்படைக் குணங்கள் மாறுவதில்லை என்பதாகத்தான் அவருக்குத் தோன்றியது. நல்லவர்கள் தீயவர்களாக ஆக நினைத்தாலும் முடிவதில்லை. அடாவடித்தனம் செய்வதில் சில லாபங்கள் இருக்கின்றன என்று தெரிந்தாலும் அப்படிச் செய்யத் தங்களைத் தாங்களே வற்புறுத்தினாலும் முடிவதில்லை. மனம் இசைந்தாலும் இயல்பு கட்டிப் போடுகிறது.

தீயவர்களும் அப்படித்தான். நன்மை செய்ய நினைத்தாலும் முடிவதில்லை. மனம் இருந்தாலும் இயல்பு அந்தப் பக்கம்தான் தள்ளுகிறது. தீயவன் மனந்திருந்தி வாழ்வது என்பதெல்லாம் சிறுவர் நீதிக் கதைகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சரி. ஆனால் வாழ்க்கையின் இயற்கையான நியதி அவரவர்களைக் கட்டித்தான் வைத்திருக்கிறது.

சிவமணி தீமையில் கட்டுப் பட்டிருக்கிறான். இன்று இரவு இது தற்காலிகத் தளர்ச்சி. நாளை இறுகிவிடுவான்.

பொறுத்திருந்து பார்ப்போம் என நினைத்துக் கொண்டார். தொண்டை வலி அதிகமாயிற்று. தொட்டுப் பார்த்தார். தடித்திருந்தது. வீக்கம் கண்டு வருகிறது என நினைத்துக் கொண்டார். டாக்டர் ராம்லியின் எச்சரிக்கை நினைவு வந்தது.

டாக்டர் ராம்லியும் தன்னுடைய இயல்பில் கட்டுண்டிருக்கிறாரா? என்னதான் டாக்டர் வேஷம் போட்டிருந்தாலும் பழைய தீயவன்தானா? அப்படி இருந்தால் தன் கதி என்ன ஆவது? சுந்தரத்துக்கு குழப்பம் அதிகமாயிற்று.

தொண்டை வறண்டது. படுக்கையின் பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலிலிருந்து ஒரு முழுத் தம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்தார். ஒவ்வொரு மிடறுக்கும் தொண்டை வலித்தது.

நாலரை மணி வரை கடிகாரம் பார்த்திருந்தார். அப்படியானால் ஐந்து மணி வாக்கில்தான் தூங்கியிருக்க வேண்டும்.


*** *** ***

"டிரிங்... டிரிங்..."

டெலிபோன் அலறியதைக் கேட்டுத்தான் கண்விடூத்தார். இமைகளைப் பிரிக்க முடியவில்லை. உடனே படுக்கையை விட்டு எழவும் முடியவில்லை.

ஜானகி எழுந்து விட்டிருந்தாள். அவள் போய் டெலிபோனை எடுத்துப் பேசுவது மூடியிருந்த கதவினூடே மெல்லக் கேட்டது.

"ஹலோ... ஆமா... ராதாவா? ... அம்மாதாம்மா பேசிறேன்."

....

"நேத்து ராத்திரி கொண்டி ஆஸ்பத்திரியில சேத்தாச்சிம்மா."

....

"அவ்வளவு நல்லால்ல ராதா. மயக்கத்தில இருக்கிறான். ரொம்ப முத்திப் போச்சின்னு டாக்டர் சொல்றாரு. இன்னக்கித்தான் ரேடியேஷன் தெராப்பி ஆரம்பிக்கப் போறாங்களாம்."

....

"வியாழக் கிழம உறுதியாயிடுச்சா? சரி! ஆனா விமான நிலையத்தில இருந்து நீயாதான் டேக்சி எடுத்து வரணும். உன்ன வந்து அழச்சிக்க யாரும் இல்ல...!"

....

"அப்பா இருக்காரும்மா. படுத்திருக்கிறாரு."

....

"இல்ல இப்ப பேசமுடியாது."

....

"கோவம் இல்லம்மா! அவரு நெலமய நீயே நேரா வந்து பாத்துக்க!"

....

"டெலிபோன்ல சொல்ல விரும்பில. நீயே நேரே வந்து பாத்துக்க!"

....

"உன் புருஷனுக்குத் தெரியும். நேத்து ராத்திரி இங்கதான் இருந்திச்சி. அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. ஆஸ்பத்திரிக்கும் வந்தாங்க!"

....

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்து எல்லாத்தையும் கவனிச்சிக்க. வச்சிரட்டுமா!

....

"சரிம்மா பாத்துக்கிறோம். அழுவாத. அதுதான் வந்து நீயே பாக்கப் போறிய!"

டெலிபோனை வைக்கும் சத்தம் கேட்டது.

எழுந்து உட்கார்ந்தார். தலை சுழன்றவாறு இருந்தது. நிதானப்படவில்லை. ஜானகி கதவு திறந்து உள்ளே வந்தாள்.

"எழுந்திருச்சிட்டிங்களா? ராதா இப்பதான் போன் பண்ணினா!"

"கேட்டேன்! எனக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திக் குடு!" தொண்டையிலிருந்து சத்தம் கரகரப்பாக வந்தது.

தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்ததாள். "உங்க தொண்ட ஏன் இப்படி கரகரப்பா இருக்கு? வலிக்குதா?" என்று கேட்டாள்.

ஆமாம் என்று தலையாட்டிவிட்டுத் தண்ணீரை மெதுவாக விழுங்கினார். தொண்டை வலித்தது.

ஜானகி தடவிப் பார்த்துவிட்டு "வீங்கியிருக்குங்க!" என்றாள்.

"மருந்துதான் காரணம்" என்றார்.

"ராதா வியாழக்கிழம வர்ரது உறுதியாயிடுச்சாம். சாயந்தரம் 3 மணிக்கு கே.எல்.ல இறங்கி அடுத்த பிளைட் எடுத்து 5 மணிக்கு பினாங்கு வர்ராளாம்!"

"தெரிகிறது!" என்று தலையாட்டினார்.

மணி ஏழாகி விட்டிருந்தது. உடம்பு எப்படியிருந்தாலும் எழுந்து தயாராக வேண்டும். மருத்துவ மனைக்கு அழைத்துப் போக ராமா வந்து விடுவார்.

ராமாவைக் கொஞ்சம் வெள்ளன வரச்சொல்லியிருக்க வேண்டும். போகிற வடூயில் ஜானகியை ஸபெஷலிஸ்ட் சென்டரில் விட்டுப் போகவேண்டும். நேற்றுச் சொல்ல மறந்து விட்டது. இப்போது சொல்லலாமென்றால் திடீரென்று அந்த நல்ல நண்பனைத் தொந்திரவு படுத்த மனமில்லாமல் இருந்தது. இப்போதே எவ்வளவோ தொந்திரவு கொடுத்தாகிவிட்டது. அவர் வருகிற நேரத்தில் வரட்டும்.

குளியலறையில் இருந்த போதும் தலை சுற்றிக் கொண்டிருந்தது. எதையும் நேராக நின்று சரியாகச் செய்ய முடியவில்லை.

ஏழரை மணிக்குச் சட்டையை மாட்டிக் கொண்டிருந்த போது ராமா வந்து விட்ட ஓசை கேட்டது. எப்போதும் எட்டு மணிக்கு வருபவர் இன்றைக்கு எப்படி ஏழரை மணிக்கெல்லாம் வந்தார்? வௌியே வந்து அவரைப் பார்த்தார்.

"குட் மோர்னிங்" என்று தன் வழக்கமான சந்தோஷச் சிரிப்போடு சொன்னார் ராமா.

"குட் மோர்னிங் ராமா?". அவர் குரலின் கரகரப்பு ராமாவை வியக்க வைத்தது.

"ஏன் குரல் இப்படிப் பேச்சி...?"

"எல்லாம் மருந்துதான் ராமா! எப்படிப்பா இன்னக்கி வெள்ளனே வந்திட்ட?" என்று கேட்டார்.

"அதான் நேத்து நீங்க பரமாவ ஆஸ்பத்திரியில சேத்திருப்பீங்கன்னு தெரியும். உங்க மருமகன் வந்து பெரிய நாடகம் ஆடியிருப்பார்னு தெரியும். சேதியையும் கேட்டுட்டு தேவையானா ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கும் போயிட்டு, அப்படியே போவமேன்னுதான் எதுக்கும் வெள்ளனே வந்தேன்!" என்றார்.

கேட்கிறதையெல்லாம் கொடுக்கிறவன் மட்டுமல்ல தோழா நீ, கேளாததையும் குறிப்பறிந்து கொடுக்கிறவன் என்று எண்ணிக் கொண்டு ராமாவைத் தழுவிக் கொண்டார் சுந்தரம்.

--------

அந்திம காலம் - 16


ஓ சிஷ்யர்களே, எல்லாப் பொருள்களும் நெருப்பில் எரிகின்றன. நெருப்பில் எரியும் இந்தப் பொருள்கள் யாவை, ஓ சிஷ்யர்களே?

கண், ஓ சிஷ்யர்களே, எரிகிறது. கண் பார்க்கும் உருவங்கள் எரிகின்றன. கண்ணைப் பார்க்க வைக்கும் நரம்புகள் எரிகின்றன. இந்தக் கண்பார்வையின் மூலமாக என்னென்ன இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பெறுகிறோமோ, இந்த உணர்ச்சிகள் அனைத்தும் எரிகின்றன.
- கயாவில் புத்த பெருமானின்
தீ உபதேசம்.


பொழுது போகாத அந்த மாலையில் சுந்தரம் தனது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு "கருணைமகான் புத்தர்" என்ற புத்தகத்தைப் புரட்டி அங்குமிங்குமாகப் படித்துக் கொண்டிருந்தார்.

நேற்றும் முந்தா நாளும் நிறையப் பேர் அவரைப் பார்க்க வந்த வண்ணமாக இருந்தார்கள். அவருடைய நோய் பற்றிய செய்தியும் அவருடைய பேரப்பிள்ளையின் நோய் பற்றிய செய்தியும் அவருடைய குடும்பத்தைத் தெரிந்தவர்களிடையே பரபரவெனப் பரவியிருந்தது. அவருடைய முன்னாள் சக ஆசிரியர்கள், கல்வி இலாக்கா அதிகாரிகள் சிலர் வந்து கைகுலுக்கி ஆதரவு சொல்லிப் போனார்கள்.

அவர்களுடைய அன்பில் அவர் பெருமிதம் கொண்டாலும், தன் நோயும் பலவீனமும் இப்படி அம்பலப் பொருளாக ஆகிப் போனது வெட்கமாகத்தான் இருந்தது. ஆனால் இது இப்படி வௌிப்பட்டு விட்டதில் ஒரு ஆறுதலும் தோன்றியது. இனி இதைப் பார்ப்பவர்களிடமிருந்தெல்லாம் மறைத்து வைக்க வேண்டும் என்ற மன அழுத்தம் இருக்காது. "ஏன் இப்படி இளைத்துப் போனீர்கள்? ஏன் தலைமுடி கொட்டிவிட்டது?" என்று கேட்பவர்களிடம் மழுப்பிப் பேசவேண்டிய தேவையில்லை. "ஆமாம்! எனக்குப் புற்று நோய்!" என்று அவர்கள் கண்களைப் பார்த்து ஒரு விரக்திப் புன்னகையுடன் நேராகச் சொல்லலாம்.

எல்லாருடனும் கொஞ்சம் கொஞ்சம் பேசினார். தொண்டையின் வீக்கம் தணிந்து குரல் அப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருந்தது.

அவர் விளையாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றில் அதிகாரியாக இருந்து பல ஊர்கள் சுற்றி வந்த போது அவருடன் நின்று பகலில் உழைத்து, இரவில் சகோதர பாசத்துடன் பியர் குடித்துக் குலவியிருந்து, இனப் பாகுபாடு என்பது கொஞ்சமும் நினைவுக்கு வராமல் கொச்சையும் பச்சையுமான நகைச்சுவைகள் பரிமாறிக் கொண்ட சீன, மலாய், பஞ்சாபி நண்பர்கள் வந்து பேசியிருந்து அந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை நினைவு படுத்தி அவரது வலிகளைக் கொஞ்ச நேரம் மறக்கக் கற்றுக் கொடுத்துப் போனார்கள். சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பலர் விடை பெற்றுச் செல்லும் போது கண்கள் கலங்கியதையும் கண்டிருக்கிறார்.

புற்று நோய் கண்ட மற்றவர்களின் கதைகள் அடுக்கடுக்காய் வந்தன. வென்றவர்கள் கதைகள் கேட்டு மனம் தேறியது. வீழ்ந்தவர்கள் கதை கேட்டுச் சோர்ந்தது.

"இந்தப் புற்று நோய்க்கு இந்த மருந்தாலெல்லாம் பயன் இல்லை. தியானம் பண்ணுங்கள். இந்த நோயிலிருந்து விடுபடுவேன் என சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். நோயை அகற்று என்று உடலுக்குக் கட்டளையிடுங்கள். நோய் தானாக மறையும்!" என்ற ஆலோசனைகள் வந்தன.

யோகாசனத்திலிருந்து குண்டலினி வரையில் சக்தியுள்ள மாற்று சிகிச்சைகள் அவருக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டன. "ஒரு அரை கிலோ காரட்டைச் சாறாக்கி தினமும் சாப்பிடுங்கள்" என்பதிலிருந்து பச்சை ஜின்செங்கை பொடியாக்கி சாப்பிடுவது வரை இயற்கை மருந்துகள் உபதேசிக்கப் பட்டன.

"ராஜ யோகாவுக்கு வாருங்கள்" "பாபாவை நம்புங்கள்" "திருத்தணியில் ஒரு சித்தர் இருக்கிறார்" என்ற வடூகாட்டல்கள் பல வந்தன. இத்தனை சுவாமியார்களா இருக்கிறார்கள்? முன் பின் பெயர் கேள்விப் பட்டதில்லை. ஆனால் அவர்களுக்காக உடல் பொருள் ஆவியைத் தரத் தயாராக உள்ள இத்தனை பிடிப்பு மிக்க அடியார்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகள் அவருக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருந்தன. திருநீறு, குங்குமம் முதல் கங்கா ஜலம் வரை அவருக்குக் கொடுத்துச் சென்றார்கள்.

இவற்றிலெல்லாம் மிகவும் பயன்படக் கூடியதாக இருந்தவை உபதேசம் செய்த நண்பர்கள் அவரிடம் கொடுத்துச் சென்ற புத்தகங்கள்தாம். பைபிளிலிந்து மிக நவீன காலத்து ஊக்குவிப்புச் சிந்தனை குருமார்கள் எழுதிய புத்தகங்கள் வரை வந்திருந்தன. புத்த சமயத்தில் தீவிர ஈடுபாடுள்ள அவருடைய சீன நண்பர் ஒருவர் கௌதம புத்தரின் உபதேச புத்தகம் ஒன்றை விட்டுச் சென்றிருந்தார்.

"ஆனால் ஓ சிஷ்யர்களே, இவை எதனால் எரிகின்றன?

"இவை ஆசையால் எரிகின்றன என நான் சொல்லுகிறேன். இவை காமத்தால் எரிகின்றன. இவை வெறுப்பால் எரிகின்றன. பிறப்பால், முதுமையால், இறப்பால், துன்பத்தால், அழுகையால், ஏமாற்றத்தால் இவை எரிகின்றன.

"ஆகவே இதைப் பார்த்தபின், ஓ சிஷ்யர்களே, ஒரு நல்ல விவேகமான சிஷ்யன் கண்களின் மீது உள்ள ஆசையை அறுக்க வேண்டும். கண்கள் காணும் உருவங்கள் மீது ஆசையை அறுக்க வேண்டும். கண்ணைப் பார்க்க வைக்கும் நரம்புகளின் மீது ஆசையை அறுக்க வேண்டும். இந்தக் கண்பார்வையின் மூலமாக என்னென்ன இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பெறுகிறோமோ, இந்த உணர்ச்சிகள் அனைத்தின் மீதும் உள்ள ஆசைகளை அறுக்க வேண்டும்."

புத்தகத்தை மெதுவாகக் கீழே வைத்தார். ஆமாம்! உடல் நோயால் பற்றி எரிவது மட்டுமல்ல, உள்ளமும்தான் பாசத்தாலும் பந்தத்தாலும் எரிகிறது. அதைத் தணிக்க வேண்டும் என நினைக்கும் நேரத்தில் இன்னும் தீவிரமாக எரிகிறது. அதுவாக எரிந்து தணிந்த சில கணங்களில்தான் ஓய்வு. ஆனால் ஓய்வு கொடுத்த சில நிமிடங்களுக்குள் இந்த நினைவுத் தீ மீண்டும் பற்றிக் கொள்ளுகிறது.

பரமாவை அவர் செவ்வாய்க்கிழமை மாலை போய் பார்த்ததுதான். அப்போது அந்த மருத்துவ மனை வார்டில் ஜானகியை இலேசாகப் பிடித்துக் கொண்டு நடந்துதான் போனார். பரமாவின் நிலைமையில் அதிக மாற்றம் இல்லை என்று சொன்னார்கள். ரேடியேஷன் ஆரம்பித்து விட்டதாகவும் அதன் முடிவு தெரிய நாட்களாகும் என்றார்கள். அவர் பார்த்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குத் தொடர்ந்து டிரிப் போடப் பட்டிருந்தது. வாயால் அவனால் சாப்பிட இயலவில்லை என்றும் சாப்பிட்டாலும் தங்குவதில்லை என்றும் சொன்னார்கள். அவனைப் பார்த்த போது மனம் குப்பென்று தீப்பற்றி எரிந்து.

இன்று என்ன கிழமை? இப்போதெல்லாம் நாளும் கிழமையும் நேரமும் கூட நினைவில் நிற்பதில்லை. பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படித் திருப்பித் திருப்பிக் கேட்கும் போது சொல்பவர்கள், இந்த ஜானகி உட்பட, எரிச்சல் அடைகிறார்கள் என அவர்கள் கொடுக்கும் பதிலில் இருந்தே தெரிந்து விடுகிறது. என்னோடு வாழ்வில் பந்தம் கொண்ட இவர்களே இறுதியில் என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று எண்ணுகிற பொழுதெல்லாம் மனம் பற்றி எரிகிறது.

இன்று என்ன கிழமை? பலமாக யோசித்துப் பார்த்தார். டாக்டர் ராம்லி தனக்கு சிகிச்சை ஆரம்பித்தது திங்கள் கிழமை. பரமாவை மருத்துவ மனையில் சேர்த்தது அன்று இரவில்தான். மீண்டும் செவ்வாய்க் கிழமைதான் பரமாவைச் சென்று பார்த்தது. செவ்வாய்க் கிழமை இரவு கால்கள் மிகத் தளர்ந்து விட்டன. நடக்கமுடியவில்லை. அடுத்த நாள் புதன் கிழமை ராமா ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து வீட்டுக்குக் கொண்டு வந்தார்.

அதைப் பார்த்தபோது புத்தர் சொன்னதைப் போல உடம்பின் ஒவ்வொரு நரம்பும் எரிந்தது. அதை எட்டி உதைத்துத் தள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் கால்களில் கொஞ்சமும் பலம் இல்லை. முகத்தில் வெடித்த கோபத்தைப் பார்த்து ராமா சமாதானமாகச் சொன்னார்: "இது தற்காலிகமாத்தான் சுந்தரம். இது மருந்தினுடைய பக்க விளைவுன்னு டாக்டர் ராம்லி சொன்னாரில்ல! ரெண்டு மூணு வாரத்தில அநேகமா சரியாயிடும்னு சொன்னாரில்ல!"

டாக்டர் சொல்வதில் எதை நம்புவதென்று தெரியவில்லை. தன் மீது டாக்டர் ராம்லி பாய்ச்சுகின்ற இந்த மெதுவாக வேலை செய்யும் நஞ்சு அதன் குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. செவ்வாய் இரவில் கால்கள் பலவீனமாகிவிட்டன. அன்று இரவில் கண்ணை மூடினால் பயங்கரக் கனவுகள் வந்தன. பாழடைந்த மாளிகைகள், பயங்கரமாய் வாய் பிளக்கும் கட்டில்கள், தீப்பந்தங்களைக் கண்களாய்க் கொண்ட ராட்சச நாய்கள் இப்படியாக மாறி மாறி வந்து பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அவரை எழுப்பி அப்புறம் ஒரு மணி நேரம் கண்ணை மூட முடியாமல் செய்தன.

நள்ளிரவில் ஒரு முறை அப்படி விழித்த போது ஜானகி என்னமோ துணியை வைத்துப் படுக்கையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். படுக்கை நனைந்திருந்தது.

புதன் கிழமை காலையில் எங்கிருந்தோ ஒரு பீங்கான் கழிவுத் தட்டு கொண்டு வந்து படுக்கைக்குக் கீழே வைத்தாள். அவள் கொஞ்சமும் முகம் சுளிக்காவிட்டாலும் அவர் உடலும் மனமும் அவமானத்தில் பற்றி எரிந்தன.

அதெல்லாம் நேற்று. ஆகவே இன்று வியாழக்கிழமை. இன்று என்னமோ விசேஷம் இருக்கிறதே! ஜானகி காலையிலேயே பரபரப்பாக ஏதோ பேசினாளே! ஆ! ஞாபகத்துக்கு வந்தது. ஆமாம். இன்றைக்கு ராதா வருகிறாள். இங்கிலாந்திலிருந்து தன் மகனைப் பார்க்க அவள் வந்து சேரும் நாள் இன்றுதான். இப்போது மாலையாகி விட்டது. அவள் வருகின்ற நேரம்தான்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு வாசலைப் பார்த்தார். எழுந்து நடக்கவேண்டும் என ஆசை ஏற்பட்டது. முயன்றால் எழுந்து எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கலாம். அப்படி ஒன்றும் கால் முற்றாக விளங்காமல் போய்விடவில்லை. ஆனால் தவறி விழுந்து விடுவோமோ என்ற பயம் அதிகம் ஆகிவிட்டது. யாரையாவது உதவிக்குக் கூப்பிட வேண்டும். கூப்பிடலாம். எல்லாரும் அந்த நேரத்தில் வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குத் தொந்திரவு கொடுக்க அவர் விரும்பவில்லை.

இரண்டு நோயாளிகளுக்கு விடாமல் பணிவிடை செய்து இரண்டு பெண்களும் களைத்திருக்கிறார்கள். இவர்கள் செய்ய முடியாத வீட்டு வேலைகளைச் செய்து அத்தையும் களைத்திருக்கிறாள். உலாத்தப் போக வேண்டும் என்ற அற்ப ஆசைக்காக அவர்களையெல்லாம் அழைத்துத் தொந்திரவு படுத்தக் கூடாது.

பரமாவின் தந்தை சிவமணியும் இங்குதான் தங்கியிருக்கிறான் என்ற விஷயம் அவருக்குத் திடீரென நினைவுக்கு வந்தது. நேற்று புதன் கிழமை காலை தன் துணிப் பெட்டியுடன் வந்து விட்டான். அவனுடைய குட்டி யானை போன்ற பாஜேரோ, வீட்டிற்கு வௌியில் நின்று அவனை ஞாபகப் படுத்தியது. உபயோகிக்க ஆளில்லாமல் துருப்பிடித்துக் கொண்டிருக்கும் ராதாவின் சின்னக் காரின் பக்கத்தில்தான் அது நின்றது.

இந்த முறை தனியாகத்தான் வந்தான். அவன் தாய் அவனுடன் இல்லை. பணிவுடனும் கனிவுடனும் பேசினான். "மாமா! பிரேம் குணமாகிற வரையில நானே இங்கிருந்து கவனிச்சிக்கிறேன். உங்களுக்கு ஒரு தொந்திரவும் குடுக்க மாட்டேன்! என்ன வீட்டில தங்கவிடுங்க!" என்றான்.

ஜானகி, அன்னம் ஆகியவர்களின் முகங்களைப் பார்த்தார். அந்த முகங்களில் வெறுப்பு இருந்தது. ஆனால் இத்தனை இறங்கி வந்து விட்ட இந்த மருமகனை இரக்கமில்லாமல் விரட்ட முடியவில்லை. என்ன இருந்தாலும் இந்தக் குடும்பத்துக்குள் வந்து விட்டவன். தன் மகளின் கணவன்.

இன்னமும் கணவனா? அது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் பரமாவின் தந்தை என்ற உண்மையை மாற்ற முடியாது. ஆகவே அவனுக்கு இடங் கொடுத்தார். "சரி, இங்கியே தங்கிக்க சிவமணி! ஆனா வீட்டுக்குள்ள சிகெரெட் பிடிக்காத!" என்றார்.

அன்று இரவு ஜானகி கேட்டாள்: "நீங்க பாட்டுக்கு அவனுக்கு இடங் கொடுத்திட்டிங்கள, நாளைக்கு ராதா வந்தா என்ன ஆகும்னு யோசிச்சிப் பாத்திங்களா? ராதாவ எப்படியாச்சும் பிடிக்கணும்னு திட்டம் போட்டுத்தான் அவன் இப்ப இங்க வந்திருக்கான்!"

இருக்கலாம். ஆனால் பிடிக்க உரிமை உள்ளவன்தான். அந்த உரிமையை அத்தனை எளிதாக அவனிடமிருந்து பறித்து விட முடியாது.

வந்ததிலிருந்து அவனால் தொந்திரவு ஒன்றும் இல்லை. நேற்றிரவு அனைவருக்கும் வௌியிலிருந்து சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான். பெரும்பாலும் மருத்துவ மனையில் பரமாவின் பக்கத்திலேயே இருந்து காலம் கழித்தான். அவன் வந்தது அன்னத்துக்கும் ஜானகிக்கும் கொஞ்சம் ஓய்வாகவும் இருந்தது.

இன்று காலை வழக்கம் போல ராமா அவரை மௌன்ட் மிரியத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். வீட்டிலிருந்தவர்கள் கைபிடித்துத் தாங்கித்தான் ஏற்றி விட்டார்கள். காரிலிருந்து இறங்கியதும் சக்கர நாற்காலி துணையுடன்தான் அவரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். டாக்டர் ராம்லி வழக்கமான சோதனைகளை நடத்தினார்.

தனது நேற்றைய உபாதைகளை அவரிடம் சொன்னார் சுந்தரம்.

"உடல் பலவீனம் எதிர்பார்க்கப் பட்டதுதான். நீங்கள் சிரமப் பட்டாவது திரவ ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலுக்குச் சத்து இருக்கும். இந்தக் கனவுகள் பிரமைகள் எல்லாம் மருந்தின் பக்க விளைவு. அதைத் தணிக்க இன்றைக்கு மருந்து தருகிறேன். தூக்க மாத்திரையும் தருகிறேன்" என்றார் ராம்லி.

"உங்கள் புதிய மருந்து புற்று நோயைக் கட்டுப் படுத்தும் அறிகுறி தெரிகிறதா?" என்று கேட்டார் சுந்தரம்.

"இப்போது சொல்ல முடியாது. இரண்டு வாரங்கள் போகட்டும். அப்போதுதான் முதல் அறிகுறிகளைப் பார்க்க முடியும்" என்றார்.

கேட்டது ஓரு நப்பாசையில்தான். நம்பிக்கைக்கு ஒரு ஆதாரமும் இல்லை என்று அவருக்கே தெரிந்தது. தான் ஒரு இருண்ட பள்ளத்துக்குள் விழுந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் வேகமாக விழுந்து சாகாமல் ஸ்லோ மோஷனில் அணு அணுவாக விழுந்து செத்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.

தன் உடல் தன்னைக் கைவிட்டுவிட்டது தெரிந்தது. ஆனால் மனத்தையாவது காப்பாற்ற முடியுமா?

கையிலிருந்த புத்ததகத்தை விரித்து இன்னொரு பகுதியைப் படித்தார்:

"பகவானே! நான் முதியவன், தளர்ந்தவன். என் வாழ்நாளைக் கடந்து விட்டேன். தொடர்ந்து நோயில் உழலுகிறேன். என் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டுங்கள்!" என்று நகுலபிதன் கேட்டான்.

"அப்படித்தான் இல்லறத்தவனே, அப்படித்தான்! உன் உடல் தளர்ந்திருக்கிறது, நோயுற்றிருக்கிறது, முதுமை அடைந்திருக்கிறது. ஆனால் இந்த உடம்பைத் தூக்கிச் சுமந்து கொள்ள ஆரோக்கியத்தைக் கேட்கிறாயே, என்ன அறியாமை! உனக்கு நீயே இப்படிக் கூறிக்கொள்: "என் உடல் நோயுற்றாலும், என் உள்ளம் நோயுறக் கூடாது!" இப்படியே கூறி உன்னைப் பயிற்சிப் படுத்திக் கொள்."

"நகுலபிதனுக்கு அது விளங்கவில்லை: "உடல் நோயுற்ற போது உள்ளத்தை நோயுறாமல் வைத்துக் கொள்வது எப்படி?" என சரிபுத்தர் என்னும் இன்னொரு துறவியைக் கேட்டான்.

"தம்மத்தைப் பயின்றிராதவன் தன் உடலையே தானாக நினைக்கிறான். உடல்தான் நான், நான்தான் உடல் என்ற எண்ணமே அவனை ஆண்டிருக்கிறது. ஆகவே உடலின் வாதை அவனுடைய வாதையாகிறது.

"தம்மத்தைப் பயின்றவன் தன் உடலைத் தானாக நினைப்பதில்லை. தான் என்பது தன் உடல் அல்ல என அவனுக்கு விளங்கும். நான் உடல் அல்ல, உடல் நான் அல்ல என்ற எண்ணமே அவனை ஆண்டிருக்கும். ஆகவே உடலின் வாதை அவனது வாதையாகாது. தான் என்பது தன் எண்ணம் அல்ல, எண்ணத்துக்கு அப்பாற் பட்டது என அவனுக்குத் தெரியும்.

"ஆகவேதான் இல்லறத்தவனே, அவனுக்கு உடல் நோயுற்றிருந்தாலும் உள்ளம் நோயுறுவதில்லை!"

விளங்கவில்லை. ஆனால் படித்ததில் ஏதோ ஆறுதல் தோன்றியது..

வௌியே டேக்ஸி வந்து நின்றது. ராதா ஒரு பையுடன் அவதி அவதியாக இறங்கினாள்.


*** *** ***

ராதாவின் வருகை அந்த வீட்டின் அமைதியைக் குரூரமாகக் கலக்கி விட்டது. சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு வௌியில் போக்குவரத்துக் குறைந்திருந்த சாலையைப் பார்த்தவாறு வீட்டின் ஒலிகளைக் கேட்டுக் கொண்டு புத்தரின் போதனைகளில் தன் துயரத்துக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த அந்த வேளையில் டேக்ஸியை விட்டு இறங்கிய மகள் "அப்பா" என்ற அலறலுடன் அந்தக் குளத்தில் ஒரு பெரிய பாறையைத் தூக்கிப் போட்டாள்.

ராதா பார்த்துக் கேட்டு அதிர்ச்சியடைய அந்த வீட்டில் பல நிகழ்ச்சிகள் இருந்தன.

"எப்படி இருக்கான் அப்பா என் டார்லிங்? எப்படி இருக்கான்? உண்மையச் சொல்லுங்க!" என்பது அவள் முதலில் கேட்ட கேள்வி. அழுகை, விம்மல், அலறலுடன் அந்தக் கேள்வி இருந்தது.

"இருக்காம்மா! ஆஸபத்திரியோட கண்காணிப்பில இருக்கான்! நீ போய் பாக்கத்தானே போற! அவசரப் படாத! நீயே டாக்டர நேரா பாத்து தெரிஞ்சிக்க!" என்று அவள் தலையைத் தடவிக் கொடுத்ததார்.

"நீங்க ஏன் அப்பா இப்படி இளைச்சிப் போயிருக்கிங்க? உங்க உடம்புக்கு என்ன? ஏன் உங்க மூஞ்செல்லாம் ஒடுக்கு விழுந்து..." கண்களைத் துடைத்துக் கொண்டு உண்மையான வியப்புடன் அக்கறையுடன் அடுத்த கேள்வி கேட்டாள்.

எனக்கு நோய் என்பதை என் வௌி அவயவங்கள் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டன. முன்பு உள்ளே அழுக வைத்தாலும் வௌித் தோலில் தெரியாமல் இருந்தது. இப்போது எல்லாம் வௌியாகி விட்டது. யாரிடமும் மறைக்க முடியாது.

ஜானகியும் அன்னமும் வந்து நின்றார்கள். ஜானகி சொன்னாள். "கேளம்மா, இப்பவாவது கேட்டுத் தெரிஞ்சிக்க! ஒன் மகனுக்கு வந்த நோய் வேற ரூபத்தில அப்பாவுக்கு ஏற்கனவே வந்தாச்சி!"

"என்ன சொல்ற அம்மா?"

"அப்பாவுக்கும் கேன்சர்தாம்மா. மூளையில கட்டி ஆரம்பிச்சி இப்ப உடம்பு முழுக்க பரவியிருக்கு!" ஜானகி தலை குனிந்து அழுதாள்.

"அப்படியா! அப்பா! நெசமாத்தான் சொல்றிங்களா?"

இந்தக் கேள்வி இப்போது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. பலமுறை கேட்டு அலுத்து விட்டது. இந்தக் கேள்வியைக் கேட்பதனால் தன் காதில் விழுகின்ற இந்தக் கெட்ட செய்தி புஸ்ஸென்று பொய்யாகப் போய்விடும் என்று கேட்பவர்கள் எதிர் பார்க்கிறார்களோ?

"ஆமாம்!" எனத் தலையாட்டினார்.

அவள் அவரை அணைத்ததவாறு அவர் முகத்தையும் தலையையும் வெறித்துப் பார்த்தாள். தடவிக் கொடுத்தாள். "இத்தன தடவ நான் போன் பண்ணிப் பேசியும் எனக்கு இது பத்தி ஒரு வார்த்தையும் சொல்லாம மறைச்சிட்டிங்களே அப்பா! ஏன்? நான் உங்க மகள் இல்லியா? எங்கிட்ட சொல்லக் கூடாதா?" என்று அழுதாள்.

"உனக்கு ஒன் சொந்தத் துயரமே ஏராளமா இருக்கம்மா. அதோட இதச் சேர்க்க வேண்டான்னு விட்டிட்டோம். நேரம் வரும்போது நீயா தெரிஞ்சிக்குவேன்னு விட்டுட்டோம். அதான் இப்ப தெரிஞ்சிக்கிட்டியே!" என்றார்.

"ரொம்ப மோசமா அப்பா!"

"ரொம்ப மோசம்தான். பரமா மாதிரிதான்! என் வயசில என்னாலத் தாங்கி உட்கார்ந்து பேச முடியுது. அவன் சின்னப் பிள்ள. உடம்பில பலம் இல்லாம படுத்துட்டான். அவ்வளவுதான் வித்தியாசம்!" என்றார்.

அவர் மார்பில் முகம் புதைத்துக் கொஞ்ச நேரம் தேம்பினாள்.

"ஏன் இப்படி நடக்குதப்பா? நம்ம குடும்பத்துக்கே எல்லாம் ஏன் இப்படி நடக்குது?" என்று கேட்டாள்.

"இது தண்டனை அல்ல, சோதனை. கடவுள் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம்!" என மதர் மேகி சொன்ன தத்துவங்களை அவளுக்குச் சொல்லிக் காட்ட வேண்டுமென்று முதலில் நினைத்தார். அப்புறம் அந்த பதில் அவளுக்குப் பிடிக்குமோ என்னவோ! பரவாயில்லை, அவளுக்கு வேண்டிய பதிலை அவளே கற்பித்துக் கொள்ளட்டும் என்று அவள் தலையைக் கோதிக் கொடுத்து அமைதியாக இருந்தார்.

அன்னம் குறுக்கிட்டாள். "ராதா, களைச்சி வந்திருக்க. இந்தா டீ போட்டு வைக்கிறேன். போய் குளிச்சிட்டு வா. பிரேமப் போய் பாத்துட்டு வருவோம்! அப்பாவும் ஓய்வெடுத்துக்கிட்டும்" குழப்பம் நிலவும் இடத்தில் திடீரென்று பொறுப்பெடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் முறைப் படுத்துகின்ற தன் திறமையை மீண்டும் அங்கு நிலை நாட்டினாள். அப்புறம் அவளே தொடர்ந்து அந்த மற்ற விஷயத்தையும் அறிமுகப் படுத்தினாள். "இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கே! இனி உன் புருஷன வேற பாத்து கதைகளப் பேசித் தீர்க்கணுமே!" என்றாள்.

ராதா குழப்பத்துடன் திரும்பி அன்னத்தைப் பார்த்தாள். "யாரச் சொல்றிங்க அத்தை?"

சிவமணி அறைக்குள் இருந்து வௌியில் வந்து கதவருகில் நின்றான். ராதா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து கண்களில் முள் குத்தியது போல் படீரென்று குனிந்து கொண்டாள். முதலில் அவள் முகத்தில் பயம் இருந்தது. அப்புறம் மெதுவாக ஆத்திரம் பொங்கியது.

முகம் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். சீறினாள். "ஏன் வந்திங்க இங்க? எதுக்காக என் வீட்டுக்கு வந்திங்க? நாந்தான் உங்க மூஞ்சில முழிக்க மாட்டேன்னு போயிட்டேன்ல, அப்புறம் ஏன் என்னத் தொரத்தி வந்திங்க? என் பிள்ளயக் கொல்லவா? ஏன் வந்திங்க?" உச்ச தொனியில் கத்தினாள்.

சிவமணி அவள் அருகில் வந்தான். "டார்லிங். நான் சொல்றதக் கேள். அமைதியா இரு!" என்றான்.

அவனைக் கொஞ்சம் வியப்புடன் பார்த்தாள். அவன் இப்படி நயந்து பேசிப் பார்த்து அவளுக்குப் பழக்கமில்லை போலும்.

அவன் அவள் தோள்களைப் பற்றினான். "இப்ப நம்ப சண்டை முக்கியமில்ல. பிரேம்தான் முக்கியம். அவன் குணமடையிற வரையில நம்ப சண்டய நிறுத்தி வைப்போம்!" என்றான்.

கண நேரம் யோசித்திருந்தாள். "உன்ன நம்ப மாட்டேன்! நீ ஒரு மிருகம்" என்றாள்.

அன்னம் எழுந்து கொஞ்சம் உரத்த குரலில் சொன்னாள். "சிவமணி, ராதா! உங்க சண்டையை எல்லாம் வேற இடத்தில வச்சிக்குங்க. ஏன் ராதா! உங்க அப்பா இருக்கிற நெலயில அவர் முன்னால இப்படிச் சண்ட போட்டு அவரத் தொந்திரவு செய்றது நல்லா இருக்கா?" என்றாள்.

ராதா தன் தந்தையை நோக்கினாள். "இவருகிட்ட சொல்ல வேணான்னு எத்தன தடவ கேட்டுக்கிட்டேன் அப்பா! ஏன் இவர வீட்டுக்குள்ள விட்டீங்க?" என்று கேட்டாள்.

"அவன் உன் பிள்ளையோட தகப்பன். அந்த உரிமய மறுக்க முடியாதம்மா!" என்றார்

கொஞ்சம் அழுது சொன்னாள் "என்ன மன்னிச்சிடுங்க அப்பா! உங்க நிலைமைக்கும் பிரேமோட நெலமைக்கும் நாங்க ரெண்டு பேரும் போட்ற சண்டதான் காரணம். என்னோட பாவங்கதான் உங்க எல்லோரையும் பாதிக்கிது!" தேம்பி அழுதாள்.

சுந்தரம் அவள் தலையை மீண்டும் தடவி விட்டார். "ராதா! அதெல்லாம் இப்ப யோசிக்க வேணாம். ரொம்பக் களைப்பா இருப்ப! போய் குளிச்சிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் பரமாவப் பாத்துட்டு வா. மத்ததெல்லாம் பிறகு பேசிக்கிவோம்!" என்றார்.

எழுந்து அறை நோக்கிப் போனாள். அவள் போகும் திசையை ஏக்கமாகப் பார்த்தவாறு சிவமணி நின்றான். பின்னர் ஒரு பெரு மூச்சுவிட்டு வௌியே போனான்.

கேட்டுக்குப் பக்கத்தில் நின்றவாறு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துப் பிடித்தான்.

"ஆனால் ஓ சிஷ்யர்களே, இவை எதனால் எரிகின்றன? இவை ஆசையால் எரிகின்றன என நான் சொல்லுகிறேன். இவை காமத்தால் எரிகின்றன. இவை வெறுப்பால் எரிகின்றன. பிறப்பால், முதுமையால், இறப்பால், துன்பத்தால், அழுகையால், ஏமாற்றத்தால் இவை எரிகின்றன."

----

அந்திம காலம் - 17


சடசடவென்று மழை பெய்து கொண்டிருந்தது. அவருடைய வார்டிலிருந்து பார்த்தால் மௌன்ட் மிரியத்தின் பின்னால் உள்ள செமினரிக் கட்டடம் தெரிந்தது. இங்குதான் கிறித்துவ சமயத்தைப் பரப்பத் தேவையான குருமார்களைப் பயிற்றுவிக்கிறார்கள். அந்தக் கட்டடத்தைச் சுற்றி வீடுகள் இருந்தன. பினாங்குத் தீவின் மத்திய தர வர்க்கத்தினரின் வீடுகள். சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள் என்று வேறுபாடு கருதாமல் வாழ்கிறார்கள்.

தங்கள் குடியிருப்புப் பகுதியின் மத்தியில் இப்படி ஒரு உள்ளுக்குள் உறுப்புகள் அழுகும் புற்று நோய்க்காரர்களைக் கொண்ட மருத்துவ மனை இருக்கிறதே என்று யாரும் முகம் சுளித்ததில்லை. மாறாக அந்தக் கட்டடத்தை ஒரு மரியாதை கலந்த அன்புடன் பார்க்கிறார்கள். வாழ்க்கையில் அவலப் பட்டவர்களுக்கு இங்கு உதவப் படுகிறது. இது மானுடத்தின் உன்னதமான கடமைகளில் ஒன்று என மதிக்கிறார்கள்.

அவலப் பட்டவர்களில் நானும் ஒருவன் என நினைத்த போது அழுகை வந்தது. அவலப் பட்டவர்களில் பரமாவும் ஒருவன். ஒரே குடும்பத்தில் அவலப் படுபவர்கள் இரண்டு பேர் இருக்கிறோம். ஒரே நேரத்தில் அவலப் படுகிறோம். இது நீதியில்லை என தெய்வங்களிடம் பலமுறை முறையீடு செய்தாகிவிட்டது. ஆனால் நிலைமை மாறவில்லை. மாறாக தெய்வத் தீர்ப்பையா அவமதிக்கிறீர்கள் என்று இருவரின் தண்டனைகளும் இன்னும் தீவிரமாக்கப் பட்டுள்ளன.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மழைத் தாரைகளினூடே அந்த செமினரிக் கட்டடத்தின் கூரையைப் பார்த்தவாறே இருந்தார்.


*** *** ***

மூன்று வாரங்களுக்கு முன்னால் ராமாவும் சிவமணியுமாக அவரைத் தூக்கிக் காரில் உட்கார வைத்து இங்கு கொண்டு வந்தார்கள். டாக்டர் ராம்லியுடன் டாக்டர் லிம்மும் அன்று அவரை நீண்ட நேரம் பரிசோதித்து அவர்களுக்குள் கலந்து பேசினார்கள். பின்னர் கொஞ்ச நேரத்தில் மதர் மேகியும் அங்கு வந்து அவர்கள் பேச்சில் கலந்து கொண்டார். இப்போதெல்லாம் டாக்டரைப் பார்த்து உடம்பு எப்படியிருக்கிறது என்ற கேள்வியை கேட்கக் கூட அவருக்கு தெம்பு இருப்பதில்லை. மதர் மேகியிடமும் நீண்ட நேரம் கேள்வி கேட்டுத் தொந்திரவு கொடுக்க அவருக்கு முடிவதில்லை. ஆகவே அவர்கள் பேசிக் கொண்டிருக்க அவர் சோர்ந்து படுத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கடூத்து மதர் மேகி மட்டும் படுக்கையின் பக்கமாக வந்தார். "சுந்தரம், எப்படியிருக்கிறீர்கள்?" என்று வழக்கமான புன்னகையுடன் கேட்டார்.

"அதுதான் நீங்களே பார்க்கிறீர்களே!" என்றார் சுந்தரம்.

"சோர்ந்திருக்கிறீர்கள். ஆனால் நான் பார்த்துள்ள சில மோசமான கேஸ்கள் போல நீங்கள் மனத்தால் சோரவில்லை! அது மிகவும் முக்கியம்!" என்றார்.

பலவீனமாகப் புன்னகைத்தார். சாவுக்கு என்னை நான் ஒப்புவிக்கத் தயாராக இல்லை என்பது உண்மைதான். ஆனால் வாழ்வில் உள்ள எல்லாச் சுவைகளும் மறைந்து கொண்டு வருகின்றன. வாழ்வதற்கு வேண்டிய காரணங்கள் மிகவும் அருகிவிட்டன. தனிமையில் மலமும் ஜலமும் கடூத்து சுத்தப் படுத்திக் கொள்ளும் அடிப்படைகளைக் கூட இழந்து விட்ட பிறகு பிழைப்பு வெட்கம் கெட்டதாகத்தான் போய்விட்டது. ஆனாலும் உயிரை விட்டு விடலாம் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை.

மதர் மேகி தொடர்ந்து பேசினார்: "மருந்து முறைகளையும் சிகிச்சையையும் கொஞ்சம் தீவிரப் படுத்தி அணுக்கமாக அதைக் கவனிக்கவிருப்பதால் இங்கே மருத்துவ மனையிலேயே நீங்கள் தங்கிக் கொள்வது நல்லது என டாக்டர் ராம்லி கருதுகிறார். டாக்டர் லிம்மின் கருத்தும் அதுதான். என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

உள்ளத்துக்குள் குப்பென்று மறுப்புத் தோன்றியது. என் வீட்டை விட்டு என்னைத் தனிமைப் படுத்துவது என் கூட்டைவிட்டு என்னை வௌியே தூக்கிப் போடுவது போல அல்லவா? இந்த மருத்துவ மனையின் மருந்தும் மரணமும் கலந்த சூழ்நிலையிலா என் முழு நேரமும் கழிவது? என்று எண்ணி அயர்ந்தார்.

ஆனால் ஜானகியின் களைத்த முகம் கண்ணில் தெரிந்தது. தான் உறங்காத இரவுகளில் அவளும் உறங்காமல் மருந்து கொடுத்து, உடம்பு துடைத்து, மல ஜலம் அள்ளி, பின் காலையில் பேரப் பிள்ளையைப் பார்க்கத் தூக்கம் கலையாத முகத்துடன் ஓடுவதை எண்ணிப் பார்த்தார். சில வேளைகளில் அவளும் சரி அன்னமும் சரி தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தூணில் சாய்ந்து தூங்குகிறார்கள்.

ராமா தன் குடும்பத்தை மறந்து எனக்காக ஓடியாடித் திரிகிறார். இன்னும் சிரித்த முகம் மாறாமல் இருக்கிறார். ஆனால் சிரமும் களைப்பும் அவருக்கும் இருக்கிறது.

அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். நல்லதுதான். ஆனால்...

தன்னை மருத்துவ மனையிலேயே முழு நேரமாகத் தங்கச் சொல்லும் டாக்டர் ராம்லியின் நோக்கம் சரியானதுதானா எனத் தெரியவில்லை. சிகிச்சையில் எந்த முன்னேற்றத்தையும் காணோம். சிகிச்சை எப்படி நடக்கிறது என்பதை அவர் விளக்கிச் சொல்வதுமில்லை. இந்த நிலையில் தன்னை முழு நேரமாகத் தன் பாதுகாப்பில் அவர் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்? அவர் தயார்ப் படுத்தியுள்ள தூக்குக் கயிற்றில் தன் கழுத்தை முழுமையாக மாட்டிய பின் கடைசி இறுக்கத்தைத் தானே இழுத்து முடித்து வைத்து மகிழ விரும்புகிறாரா?

"மதர் மேகி! சிகிச்சையில் ஒரு மாற்றமும் தெரியவில்லையே. இந்த நிலையில் ஏன் நான் இங்கு முழு நேரமாகத் தங்க வேண்டும்?" என்று பலவீனமாகக் கேட்டார்.

"அவர் உங்களுக்காக வகுத்திருக்கும் ஹோர்மோன் தெராப்பியில் அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானவை என அவர் நினைக்கிறார். ஹோர்மோன் சுரப்பிகளின் இயக்கத்தை அடிக்கடி சோதித்து மருந்தை அளந்தும் மாற்றியும் கொடுக்க வேண்டும் என்கிறார்! அதற்காகத்தான் இந்த ஏற்பாடு!"

இதில் சுந்தரத்துக்கு அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் தான் நினைப்பதை மதர் மேகியிடம் சொல்லவும் முடியவில்லை. இந்த அன்னைத் தன் வாழ்க்கையில் மனிதர்களின் நல்ல குணங்களின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருப்பவர். ஆண்டவனின் நல்ல குணத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தன்னை அதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரிடம் தன்னுடைய அவநம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் சொல்வதற்கு வெட்கமாக இருந்தது. ஒரு முறை சொல்லி அதனை விரைவாகப் பேசித் தீர்த்து விட்டார். இன்னொரு முறை அந்த விஷயத்தை எழுப்பி எல்லோர் மீதும் சந்தேக நாற்றத்தை அவர் தௌிக்க விரும்பவில்லை.

அதோடு ஜானகியின் களைத்த முகம் மீண்டும் நினைவுக்கு வந்தது. தனக்காக ஒவ்வொரு நாளும் காரை எடுத்துக் கொண்டு அலைகின்ற அன்பு நண்பன் ராமாவின் நினைவு வந்தது. சரியென்று முடிவு செய்து விட்டார்.

"சரி மதர் மேகி! இன்றைக்கு வீடு திரும்பிச் சொல்லிவிட்டு முடிந்தால் இன்று மாலையே வந்து விடுகிறேன்!" என்றார்.

"நல்லது. அப்படியானால் நாம் இங்கே இனிமேல் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கலாம், இல்லையா!" என்று கேட்டு விட்டு டாக்டர்களுக்குத் தகவல் சொல்லப் போனார் மதர் மேகி.

என்னவோ மதர் மேகியுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதில் கூட இப்போது ஆசையில்லாமல் போய்விட்டது.


*** *** ***


விஷயம் கேட்டு ஜானகி அழுதாள். இப்போது எதற்கெடுத்தாலும் சுலபமாக அழுகிறாள். சில சமயங்களில் தனியாக உட்கார்ந்தும் அழுது கொண்டிருக்கிறாள்.

"நான் ஒருத்தி உங்களுக்குப் பணிவிட செய்ய இங்க இருக்கும் போது நீங்க எதுக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்கணும்?" என்று கேட்டாள்.

"நானாகவா போய் இருக்கணும்னு சொல்றேன்? டாக்டர்கள்தான் அங்க இருக்கச் சொல்றாங்க ஜானகி!" என்றார்.

அன்னம் வந்துதான் அறிவுடன் பேசினாள்: "ஜானகி! தம்பிய நம்பளால பாத்துக்க முடியாதுன்னு அவங்க இப்படிச் சொல்லல. அடிக்கடி மருந்து குடுத்துப் பரிசோதிக்க வேண்டியிருக்கிறதினாலதான் இப்படிச் சொல்றாங்க. அது தம்பியோட நன்மைக்குத்தானே! பக்கத்திலதான ஆஸ்பத்திரி! எப்ப வேணும்னாலும் போய்ப் பார்க்கலாம! போகவிடு ஜானகி!" என்றாள்.

ஜானகி நீண்ட நேரம் முனகிக்கொண்டும் அழுது கொண்டும் இருந்து அப்புறம் அவருக்கு வேண்டிய அத்தியாவசியத் துணிகளையும் உணவுப் பொருள்களையும் எடுத்து ஒரு பையில் அடுக்கினாள்.

மாலையில் ராமாவின் காரில் ஜானகி, அன்னம் இருவரும் அவரோடு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டுப் போனார்கள். ஜானகி கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள்.


*** *** ***

சில மனிதர்களுக்குச் சாவு ஒரு நொடியில் வருகிறது. லாரியில் அடிபட்டு அரைபட்டுப் போய்விடுகிறார்கள். யாரையும் கட்டிப் பிடித்து அழுது "நான் போயிட்டு வாரேன்! என் பிள்ளை குட்டிகளைப் பாத்துக்குங்க!" என்று சொல்ல அவர்களுக்கு நேரமும் தேவையும் இருப்பதில்லை.

சில மனிதர்களுக்குச் சாவு நீண்டதாக இருக்கிறது. சாவின் தொடக்கம் எது என்று புரிவதில்லை. எப்போது முடிந்தது என்பதிலும் தௌிவில்லை. கோமாவில் ஆண்டுக் கணக்கில் கிடந்து செத்துப் போனவர்களுக்கு எந்தக் கணத்தில் உயிர் போயிருக்கும் என்பது மருத்துவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.

தன் சாவு மௌன்ட் மிரியத்தின் அந்தப் படுக்கையில் வந்து படுத்தபோது ஆரம்பித்திருக்கிறது என அவர் நினைத்துக் கொண்டார். ஒரு வேளை இதற்கு முன்பே கூட ஆரம்பித்திருக்கலாம். அவர் மூளையில் அந்தப் புற்று நோய் செல் கருக்கொண்ட அந்தக் கணம் தனது சாவின் தொடக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு நாளும் நேரமும் யாராலும் நிர்ணயிக்க முடியாது. டாக்டர்களாலும் கூட முடியாது.

தான் டாக்டர் ராம்லியை சந்தித்த நாளைக் கூடத் தனது சாவின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம். அந்த நாள் அந்த நேரம் நன்றாக நினைவிருக்கிறது. அவருடைய உணர்ச்சியில்லாத பார்வையில் சாவு கருக்கொண்டிருக்க வேண்டும். அப்போது அது தெரியவில்லை.

ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு சாவுக்கெதிரான தற்காப்புகள் இருந்தன. வீடு என்று ஒன்று இருந்தது. குடும்பம் என்று ஒன்று இருந்தது. ஜானகியும் அன்னமும் இருந்தார்கள். ராமா எப்போதும் இருந்தார். உயிர் காப்பான் தோழன்.

பிறகு தனக்குப் பிடிக்காத மருமகனும் ஆதரவாக வந்திருந்தான். தன்னை மருத்துவ மனைக்குக் கொண்டு வருவதில், தூக்கிச் சக்கர நாற்காலியில் உட்கார வைப்பதில், "உடம்பு இப்ப எப்படி மாமா?" என்று கேட்பதில் ஆதரவாக, தன் சாவை நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக பக்க பலமாக இருந்தான்.

பின்னால் மகளும் வந்து சேர்ந்தாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்வது என்பதே அவளுடைய முக்கிய குணமாக இருந்தாலும் தன் வாழ்க்கைப் பிரச்சினைகளும், தன் மகனின் நோயுமே அவள் மனதைப் பெரும்பாலும் சூழ்ந்திருந்தாலும் "அப்பா, அப்பா" என்று அவள் குழையக் குழைய அழைத்து மனதுக்கு இதமாக இருந்தாள்.

இந்தத் தற்காப்புகளை எல்லாம் எத்தனை சுலபமாக எத்தனை திறமையாக அகற்றிவிட்டார் இந்த ராம்லி! இப்போது நான் முற்றிலும் அவர் கைகளில். நான் இந்தப் படுக்கையில் வந்து படுத்த நேரம்தான் டாக்டர் ராம்லியின் கொலை முயற்சியிலிருந்து எல்லாத் தற்காப்புக்களையும் இழந்த நேரம். ஆகவே இதுதான் என் சாவின் தொடக்கம்.

மருத்தும மனையின் அந்த முதல் இரவு பயங்கரமானதாக இருந்தது. அந்த வார்டில் அதிகமான நோயாளிகள் இல்லை. ஆனால் இருந்த ஓரிருவருக்கு நோய் முற்றிய நிலையில் இருந்தது.

உண்மையான தனிமை என்பது என்ன என்பதை அன்றுதான் உணர்ந்தார். ஜானகி தன் படுக்கையில் இல்லாத தனிமை. தன் படுக்கையே தனக்கு இல்லாமல் போன கொடுமை. தன் வீட்டின் அமைதியான ஒலிகளைக் கேட்டு சுகங்காண முடியாத வெறுமை.

இனி காலையில்தான் வருவார்கள். ஜானகியும் அன்னமும் முறை வைத்துக் கொண்டு வருவார்கள். ஏனென்றால் பரமாவைப் பார்க்க ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கும் அவர்கள் மாறி மாறிப் போக வேண்டும்.

தொடர்ந்து எத்தனை நாள் இப்படி வருவார்கள்? சலிக்காதா? சலிக்கும். அப்புறம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார்கள். "நேத்து ஒடம்பு சரியில்ல!" என்று சமாதானம் கூறுவார்கள். "இங்கதான் உங்கள நல்லா கவனிச்சிக்கிறாங்கள அப்புறம் நாங்க ஏன் அடிக்கடி வரணும்!" என்பார்கள். வருகையின் இடை வௌி நீளும். ஏனென்று கேட்டால் எரிச்சல் படுவார்கள். "எங்களுக்கு வேற வேல இல்லியா?" என்று கேட்பார்கள். இந்தத் தனிமை பழகிப் போகும். ஆஸ்பத்திரி வாழ்க்கை அன்றாட வாழ்க்கையாகிவிடும். அப்புறம் இங்குள்ள மற்ற நோயாளிகளின் முகங்களில் பூத்துள்ள வெறுமையும் விரக்தியும் தன் முகத்திலும் பூத்துவிடும்.

ஆஸ்பத்திரியின் மங்கலான விளக்குகளில் இருள் மஞ்சள் பூசியிருந்தது. ஆனால் அவர் மனதுக்குள் இருந்த இருள் கன்னங்கரிய இருளாக இருந்தது. மனதுக்குள் அதள பாதாளங்கள் தோன்றியிருந்தன. அவற்றுக்குள் அவர் உருண்டு விழுந்தவாறிருந்தார். தரை எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. தரை தட்டப் போவதில்லை என்றே தோன்றியது. ஒருவேளை இப்படி விழுந்த வாக்கிலேயே தன் வாழ்க்கை முடிவுற்று விடலாம் என நினைத்தார்.


*** *** ***


ஆனால் போன இரண்டு வாரங்களில் வீட்டிலிருந்து யாராவது தொடர்ந்து வந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஜானகி உணவு கொண்டு வருவாள். கூடவே இருந்து சாப்பிட உதவிக் கழுவி வைத்து விட்டுச் செல்லுவாள். பெரும்பாலும் கஞ்சியாக்கப்பட்ட உணவுகளை மட்டும்தான் சாப்பிட முடிந்தது. திடப் பொருள்களை ஜானகியின் வற்புறுத்தலால் கொஞ்சம் சாப்பிட்டாலும் பேதியானது. அதையும் அவளே கழுவி எடுக்க வேண்டுமே என்ற பயத்திலேயே திடப் பொருள்களைச் சாப்பிடுவதை விட்டு விட்டார்.

உடல் இளைத்துக் கொண்டே வந்தது. பேசினாலும் மூச்சு வாங்கியது.

ராமா காலையில் வந்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் இதமாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஏதாகிலும் புத்தகங்கள் கொண்டு வந்து கொடுத்தவாறு இருப்பார். சுந்தரத்தின் பக்க மேசையில் ஏராளமான புத்ததகங்கள் வந்து சேர்ந்து விட்டன. மதர் மேகியும் சில புத்தகங்கள் கொடுத்திருந்தார். முடியும் நேரங்களிலெல்லாம் படித்தார். கண்களில் தௌிவு குறையவில்லை.

மதர் மேகி முதல் மூன்று நாட்கள் வந்து படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். மூன்றாவது நாள் பேசி விட்டுப் புறப்படும்போது சொன்னார்: "சுந்தரம். நான் இரண்டு வாரங்கள் இனி வந்து உங்களைப் பார்க்க முடியாது. ரோம் போகிறேன். வத்திக்கனில் எங்களுக்கு ஒரு கருத்தரங்கு நடக்கிறது. அதை முடித்து ஒரு இரண்டு நாள் பெல்ஜியத்திற்குப் போய் என் குடும்பத்தைப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவேன்!" என்றார்.

"அடடா! நீங்கள் இல்லாமல் எனக்குப் பொழுது போகாதே!" என்றார் சுந்தரம்.

"நீங்கள்தான் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறீர்களே! உங்களைப் போலத் தீவிரமாகப் படிப்பவரை நான் பார்த்ததில்லை! உங்களைப்போல நிறையப் படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லையே என நான்தான் பொறாமைப் படுகிறேன்!" என்றார்.

சுந்தரம் தன் புத்தகங்களைத் தேடி "இராமகிருஷ்ணர் அருளுரை" என்ற சிறு புத்தகத்தை எடுத்து மதர் மேகியிடம் கொடுத்தார். "விமானத்தில் போகும் போது படியுங்கள்!" என்றார்.

"மிக்க நன்றி. விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு படித்திருக்கிறேன். அவருடைய குருநாதரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு. மீண்டும் நன்றி!" என்று எழுந்து நின்றார்.

"மதர் மேகி! வத்திகனில் உள்ள தேவாலயத்தில் மைக்கலேஞ்சலோ ஓவியம் ஒன்று உள்கூரையில் இருக்கிறதாம். அதில் கடவுளின் கரங்கள் மனிதனை நீக்கி நீண்டிருந்தாலும் அவரின் விரல்கள் மனிதனின் விரலைத் தொடாமல் இடைவௌி விட்டு நிற்கிறதாம். அந்த ஓவியத்தை நீங்கள் பார்த்தால் அதன் கீழ் நின்று இறைவனின் விரல்கள் மனிதனை விரைவில் தொடவேண்டும் என எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்றார்.

மதர் மேகி சிரித்தவாறிருந்தார். ஏன் என்று கேட்கவில்லை. "சரி! அப்படியே வேண்டிக் கொள்வேன்!" என்றார்.

"போப்பாண்டவரைக் கண்டாலும் என் அன்பைக் கூறுங்கள்!" என்றார் சுந்தரம் சிரித்துக் கொண்டே.

"இந்தக் கருத்தரங்கின் போது அந்த பாக்கியம் கிடைக்கும் என நினைக்கவில்லை. ஆனால் வத்திக்கனில் இருக்கும்போது இரவில் பிரார்த்தனை பண்ணும் போது இயேசுவிடம் சொல்லி போப்பாண்டவருக்கு உங்கள் அன்பைத் தெரிவிக்கச் செய்வேன்" என்றார்.

"இத்தனை பெரிய தூதுவர் உங்களுக்கு இருக்கும் போது என்ன குறை?" என்றார் சுந்தரம்.

மதர் மேகி அடுத்த படுக்கைக்குப் போய் கொஞ்ச நேரம் பேசியிருந்து போய்விட்டார். அவர் அந்த அறையை விட்டு வௌியேறியதும் தனிமை இன்னும் மோசமானது.

டாக்டர் ராம்லி அவரைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்தார். இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை வந்து பரிசோதிப்பார். நடுநிசியிலும் வருவார். உதவியாளர்களைக் கொண்டு ரத்தம் எடுப்பார். திடீரென்று எக்ஸ்ரேக்கள் எடுக்கச் சொல்லுவார். ரேடியோதெராப்பிக்கு உத்தரவிடுவார். தான் கொன்று தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒரு பகைவனுக்காக ஒரு கொலைகாரன் இத்தனை சிரமப்பட்டு சிகிச்சை செய்வது சுந்தரத்துக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது.


*** *** ***

இன்று ஏன் இப்படி காலையிலிருந்து அடை மழை பொடூகிறதென்று தெரியவில்லை. இதனால் காலையில் வந்திருக்க வேண்டிய நண்பன் ராமாவையும் காணவில்லை.

அன்று இரவு கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கினார். உடம்பின் வருத்தங்கள் அதிகமாகத் தெரியவில்லை. காலையில் எழுந்து மெதுவாகத் தாமே மைலோ கலந்து குடித்தார். ஜானகியிடம் சொல்லி இன்னொரு டின் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைவு படுத்திக் கொண்டார்.

தாதியைக் கூப்பிட்டுக் குளியலறைக்கு அழைத்துப் போகச் சொன்னார். அந்தச் சீனப் பெண் தோளுக்குக் கீழ் கைகொடுத்து அவரைக் குளியலறையில் விட்டு வந்தாள். வழுக்கி விழுந்து விடுவோமோ என பயந்தார். அதையும் இதையும் பிடித்துப் பிடித்துக் காலைக் கடன்களையும் குளியலையும் முடித்தார். தலை கொஞ்சம் சுற்றினாலும் விரைவில் நிலைப் பட்டது. ஆனால் விரைவில் களைப்புத் தோன்றிவிட்டது. படுக்கையில் சாய்ந்து விட்டார்.

தாதி காலை உணவு கொண்டு வந்தாள். டோஸ்ட், வெண்ணெய், அவித்த முட்டை, காப்பி. சாப்பிட்டார். அத்தனையையும் தங்க வைத்துக் கொள்ள முடிந்தது. உணவு உடம்புக்குக் கொஞ்சம் தெம்பூட்டியது.

தாதியிடம் சொல்லி சக்கர நாற்காலியில் உட்கார வைத்து ஜன்னலோரமாக நிறுத்தச் சொன்னார். அவள் அவரை வசதியாக உட்காரப் பண்ணிவிட்டு மடியில் போர்வையை விரித்து மடித்துச் சொருகிவிட்டு "நீண்ட நேரம் இப்படி உட்கார்ந்திருக்காதீர்கள். மழைநாளாக இருக்கிறது. சளி பிடிக்கும்!" என எச்சரித்துவிட்டுச் சிரித்துப் போனாள்.

வழிந்து கொண்டிருக்கும் மழைத்தாரைகள் அவரை வசியப் படுத்தின. எங்கு எப்பொழுது மழை பொழிந்தாலும் அதில் ஒரு வசியம் இருக்கிறது. மனதை அப்படியே ஈர்த்துவிடுகிறது. அதிலும் இன்று இடியோடும் மின்னலோடும் "சோ" என்ற சத்தத்தோடு பெய்கிறது. மௌன்ட் மிரியத்தின் கூரைகளில் சத்தத்தோடு கொட்டுகிறது. வடிகுழாய்களில் சடசடவென இறங்குகிறது. கால்வாய்களில் சலசலவென ஓடுகிறது.

பக்கமுள்ள மரங்களைக் குளிப்பாட்டுகிறது. அந்த மரங்களில் நீர் கோத்துக் கிளைகள் தாழத் தொங்கின. இலைகள் மழைத் துளிகளை வாங்கிக் குனிந்து தரையில் ஊற்றிவிட்டு மீண்டும் நிமிர்ந்து, வாங்கி, ஊற்றி....

இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் நேரத்தில் தாம் ஒரு சிறுபிள்ளையாகிப் போய் விடுவதாக நினைத்துக் கொண்டார். அதுவும் நல்லதுதான். சிறுபிள்ளையாகிவிட்டால் வாழ்வின் துயரங்கள் மறந்துவிடும்.

உண்மைதானா? சிறுபிள்ளைகளுக்கு வாழ்க்கையின் துயரம் தெரியாதா? பிள்ளைப் பருவத்தில் பல பயங்கள் இல்லையா? இருட்டைப் பார்த்தால் பயம். புதியவர்களைப் பார்த்தால் பயம். மிருகங்களைப் பார்த்தால் பயம். அதிலும் வேடிக்கையாக பயம் காட்டும் பெற்றோர்கள் அல்லது சகோதரர்கள் இருந்து விட்டால் மூலைக்கு மூலை பயம்தான். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தலை தூக்கி நிற்கும் அளவுக்கு அவற்றில் உள்ள மர்மங்களுக்கு பயந்து பயந்து சாவதும் சிறு பிள்ளைப் பருவத்தில்தான்.

பரமா அப்படித்தான். எதைப் பார்த்தாலும் முதலில் பயப்படுவான். விளையாட்டுப் பொருள்களில் ஆடும் ஓடும் இயந்திர பொம்மைகள் இருந்தால் பயப்படுவான். பின்னர் பழகிவிட்டால் விளையாடுவான்.

முதல் முதலில் ஜிம்மியைப் பார்த்ததும் அவனுக்கு பயம்தான். தன் தாயின் கழுத்தைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டு தொங்கினான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரம் கொடுத்த தைரியத்தில் அதன் தோலைத் தடவிக் கொடுக்கப் பழகினான். அதன் பின் ஜிம்மி அவன் முன் பதுங்கி வாலை ஆட்டி குதித்து அவன் முகத்தை நக்கி அவனை வசியப் படுத்தி விட்டது. அப்புறம் அவனும் ஜிம்மியும் கட்டிப் புரண்டிருக்கிறார்கள். அதன் குரைப்பும் அவன் சிரிப்பும் அவர்கள் வீட்டை நிறைத்ததுண்டு. "ஐயோ, இந்த நாய வெரட்டுங்களேன். பிள்ளய போட்டு அழுக்காக்குதே!" என்று ஜானகி கத்துவாள். ராதாவோ சுந்தரமோ அவர்களை வற்புறுத்தி இழுத்துப் பிரித்தால்தான் உண்டு.

ஆனால் இப்போது பரமாவைக் கட்டிக் கொண்டிருக்கும் மிருகம் ஜிம்மியைப் போல மென்மையானதல்ல! அது விளையாடும் மிருகம் அல்ல! அது புற்று நோய் என்னும் கொலைப் பிராணி. அதன் பிடியும் கடியும் விளையாட்டுக்கள் அல்ல. வினைகள். அதைப் பார்த்து பயப்படக் கூட பரமாவுக்குத் தெரியாது. அது ஜிம்மியைப் போல மென்மையான மயிர்ப் போர்வை கொண்ட மிருகம் அல்ல. அதை நாம் அணைக்கவோ தள்ளவோ முடியாது. அதுவே அணைக்கும். இறுக்கும். மூச்சுத் திணற வைக்கும். கொல்லும். அது என்னையும் இப்போது இறுக்கியிருக்கிறது. மூச்சு இப்போது மெதுவாகத் திணறுகிறது. விரைவில் கொல்லும்.

பரமாவின் நிலைமை பற்றி அடிக்கடி அவருக்குத் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அவனுடைய உறுப்புக்கள் செயலிழக்க ஆரம்பித்திருந்தன. கிட்னி செயலிழந்ததால் டயலிஸிஸ் செய்ய ஆரம்பித்திருந்தார்கள் என்று சொன்னார்கள்.

போன வார இறுதியில் டாக்டரின் அனுமதி பெற்று பரமாவைப் பார்க்கப் போனார். ராமாவுடன் சிவமணி வந்திருந்து சக்கர நாற்காலியில் உட்கார வைத்து காரில் ஏற்றி இரண்டு பேருமாக பரமாவின் படுக்கை வரை அவரைக் கொண்டு சென்றார்கள். அன்னம், ஜானகி, ராதா அனைவரும் அப்போது அவனுடன்தான் இருந்தார்கள்.

அவன் படுத்த வாக்கில்தான் இருந்தான். கிட்டத்தட்ட கோமா நிலைதான். அவன் இதயத் துடிப்பு பலவீனமாக இருப்பதாகச் சொன்னார்கள். பலவிதக் குழாய்கள் போட்டிருந்தார்கள்.

சோகம் ஒரு கரிய புகைமூட்டம் போல் கவிந்து நின்ற அந்தச் சூழ்நிலையில் யாரிடம் என்ன பேசுவது என சுந்தரத்துக்குத் தெரியவில்லை. தான் என்ன சொன்னாலும் அந்தச் சூழ்நிலையை அது இன்னும் மோசமாக்குமே தவிர பிரகாசப் படுத்தாது. ஒரு வகையில் தானும் தனது சக்கர நாற்காலியும் அங்கு வந்ததன் மூலமாகவே அந்த சூழ்நிலையை இன்னும் சோகப் படுத்திவிட்டோம் எனத் தோன்றியது.

ராதா கூந்தல் கலைந்து சோர்ந்து நோயாளி போல இருந்தாள். சிவமணி அவள் பின்னால் நின்று தோள்களை அழுத்திக் கூந்தலைத் தடவிவிட்டதை அவள் ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டதைப் பார்த்த போது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பரமாவின் இந்த நோயால் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறதோ?

"ராதாவும் சிவமணியும் ஒரு வகையில சமாதானமாப் போயிட்டதாகத்தான் தெரியுது. ராதா இனி திரும்ப லண்டனுக்குப் போறதப்பத்தி ஒண்ணும் முடிவு பண்ணலன்னு அன்னைக்கிச் சொன்னா! அநேகமா போகமாட்டா போலத்தான் இருக்கு" என்று ஜானகி அவரிடம் ஒரு நாள் சொல்லியிருந்தாள்.

"அப்ப அவளோட அந்த வெள்ளைக்காரக் காதலன் என்ன ஆனான்...?" என்று கேட்டார்.

"அந்தச் சனியனெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தப் பிள்ளைங்க கோவத்தில அதையும் இதையும் பண்ணிட்டு அப்புறம் இப்படித்தான் சிக்கல்ல மாட்டிக்கிட்டு நிக்கும்" என்றாள்.

பரவாயில்லை. வெள்ளைக்காரக் கலாச்சாரத்தில் இது தீவிரக் குழப்பத்தை ஏற்படுத்தாது. எப்படி தீவிரமாக, எல்லாருக்கும் தெரிய பகிரங்கமாகக் காதலிக்கிறார்களோ, அதே தீவிரத்தில் பகிரங்கமாகப் பிரிந்து விடுவார்கள். அது ஆணையும் பெண்ணையும் வாழ்நாள் முழுக்கப் பிணித்து வைக்கும் கலாச்சாரமல்ல. திருமண பந்தம் எல்லாம் தனி மனித வசதிக்கு ஏற்பத்தான். இன்று வசதியானால் திருமணம். நாளை வசதியில்லையானால் ரத்து. ராதாவின் வெள்ளைக்காரக் காதலன் சரிகட்டிப் போய்க் கொள்வான்.

ஆனால் ராதாவும் சிவமணியும் தங்கள் வாழ்க்கையை அத்தனை எளிதாகச் சரிகட்டிக் கொள்ள முடியாது. சிவமணி இப்போதைய துயரத்தில் ராதாவின் குறைகளை மறந்து அவளை ஏற்றுக் கொள்வது போல் இருக்கிறான். அவளும் அவன் தீயகுணங்களைத் தற்காலிகமாக மறந்திருக்கிறாள். ஆனால் நமது கலாச்சாரத்தில் நாம் பழைய புண்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டோம். கிளறிக் கிளறிச் சண்டை போடுவோம்.

பரமாவின் படுக்கை அருகில் ராதாவின் தோளைப் பற்றி நிற்கும் சிவமணியைப் பார்த்த போது அவர்கள் வாழ்க்கையில் அந்தக் கிளறல்களும் சண்டைகளும் வக்கிரமாகவும் விகாரமாகவும் ஆகாமல் பார்த்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வார்கள் என மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

டாக்டர் சொக்கலிங்கம் அந்தப் பக்கம் வந்தார். சுந்தரத்தின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் குலுக்கினார். "மன்னிக்க வேண்டும். இனி உங்கள் பேரப்பிள்ளைக்கு நாங்கள் செய்வதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை. பிள்ளையின் உறுப்புக்கள் செயலிழந்து வருகின்றன. மூளையும் செயலிழந்து வருகிறது. ஒரே ஒரு நிம்மதி இந்த வலியையெல்லாம் அவன் உணரமுடியாது என்பதுதான்" என்றார்.

சுந்தரம் பலவீனமாகத் தலையாட்டினார். கண்களுக்குள் கண்ணீர் கொப்புளித்தது.

டாக்டர் சொக்கலிங்கம் தொடர்ந்தார்: "உங்கள் வியாதிக்கும் உங்கள் பேரப்பிள்ளை வியாதிக்கும் சம்பந்தம் இருக்கிறது. டாக்டர் ராம்லி சொல்லியிருக்க வேண்டுமே!" என்றார்.

டாக்டர் ராம்லியின் குணாதிசயங்கள் பற்றிப் பேச விரும்பாததால் "சொல்லவில்லை. எப்படி? நீங்களாவது சொல்லுங்களேன்" என்றார்.

"உங்கள் இரண்டு புற்று நோய் செல்களும் அமைப்பில் ஒரே விதமாக உள்ளன. இரண்டுக்குமே மருந்து எதிர்ப்புச் சக்தி தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் மற்ற நோயாளிகளைக் குணப் படுத்தும் மருந்துகள் உங்களையும் உங்கள் பேரப் பிள்ளையையும் குணப் படுத்த முடியவில்லை! அநேகமாக இது "ஜெனடிக்", அதாவது பரம்பரையாக வருவதுதான். உங்கள் ஜீனில் இது இருக்கிறது. பெரும்பாலும் ஆண் வாரிசுகளுக்குத்தான் வரும் என டாக்டர் ராம்லி கூறுகிறார்" என்றார்.

அப்படியானால் நான்தான் இதற்குக் காரணமா என எண்ணி அந்தக் குற்ற உணர்ச்சியில் மனம் சோர்ந்து போனது.

டாக்டர் சொக்கலிங்கம் தொடர்ந்தார்: "உங்கள் டாக்டர் ராம்லி, ஒரு ஜீனியஸ். அருமையான மருத்துவ ஆராய்ச்சியாளர். இந்தப் புற்று நோய்த் துறை ஆராய்ச்சியால் நம் நாட்டுக்குப் பெரிய பெருமைகளைக் கொண்டு வரப் போகிறார் பாருங்கள்!"

'ஆனால் இந்த டாக்டர் ராம்லி எனது உயிர்ப் பகைவன் என்பது உங்களுக்குத் தெரியாது' என மனதுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம். டாக்டர் போய்விட்ட வெகு நேரம் வரை பரமாவின் நிலைமைக்கு நான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி திரும்பத் திரும்ப மேலெழுந்து கொண்டிருந்தது.


*** *** ***

மழை விட்டது போல் இருந்தது. தூறல் ஆரம்பித்திருந்தது. இலைகளிலிருந்து மழைநீர் கொட்டுவது நின்று சொட்ட ஆரம்பித்திருந்தது. வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. மழைக்காட்சி அவருக்கும் அலுத்து விட்டது. உட்கார்ந்திருந்த இடத்திலேயே இருப்பது எரிச்சலாக இருந்தது. தாதியைக் கூப்பிட்டு மீண்டும் படுக்கைக்குக் கொண்டு செல்லச் சொல்லலாமா என நினைத்தார்.


தானாக ஏன் நடக்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. என்ன ஆகிவிடும். கீழே விழுவேன். அடிபடும். பலத்த அடியானால் உயிர் போகும். அவ்வளவுதானே. ஒன்றும் பெரிய விஷயமில்லை.

சக்கர நாற்காலியின் இரண்டு பக்கப் பிடிகளையும் அழுத்திக் காலை ஊன்றி உந்தினார். முழங்கைகளும் கால் தசைகளும் வலியில் கெஞ்சின. இடங் கொடுக்காமல் உந்தி எழுந்து நின்றார். வலிகள் பொங்கி ஆறின.

வலது கால் ஒரு அரையடி நகர்ந்தது. இடது கால் அந்த அரையடியை இழுத்து நிரப்ப, மீண்டும் வலது கால் அரையடி முன்னேறி, இடது, வலது, இடது...!

சக்கர நாற்காலியை விட்டுத் தள்ளித் தள்ளிப் போக படுக்கை கிட்டக் கிட்ட வந்தது. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒரு சீன சக நோயாளி அவருடைய நடை முன்னேற்றத்தைப் பொறாமையுடன் பார்த்தார். வலது, இடது, வலது, இடது...!

கால்களை ஊன்றுவதில் அவற்றின் மீது நடப்பதில் ஒரு தன்னம்பிக்கை தோன்றியது. வலது, இடது, வலது, இடது...!

மனதுக்குள் நம்பிக்கை ஊற்று ஒன்று பொங்கியது. தளர்ந்த கால்களில் கூன் குருகி நடந்தாலும் உள்ளம் நிமிர்ந்திருந்தது. கால்களில் தரை வசப்பட்டதும் மனதில் வானம் வசப்பட்டது. வலது, இடது... நான் நடக்கிறேன்! எனக்கும் என் படுக்கைக்கும் இடையே உள்ள தூரத்தை நான் வெற்றி கொள்ளுகிறேன். எனக்கும் என் சக்கர நாற்காலிக்கும் உள்ள தூரத்தை நான் அதிகப் படுத்துகிறேன்.

ஏ என் சீன சக நோயாளியே! என்னைப் பார்! என் மீது நம்பிக்கை வை! என்னை உதாரணமாகக் கொள்!

மனதுக்குள் பாரதியின் பாடல் ரீங்காரம் செய்தது.

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்"

படுக்கையை அடைந்தார். படுக்கையின் விளிம்பைப் பிடித்து வெற்றிப் புன்னகையுடன் நிமிர்ந்த போது வார்டின் வாசலிலிருந்து ராமா அவசரமாக வந்து கொண்டிருந்தார்.

"வா ராமா, வா. மழையைப் பார்த்து பயந்து தாமதமாக வரும் என் தோழனே, நான் இங்கே மலையையே வெற்றி கொண்டிருக்கிறேன். வா என் வெற்றியை என்னோடு சேர்ந்து கொண்டாடு!" என அவருக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில், அவர் வாய் திறக்கு முன்னரே ராமா அவசரமாகக் கூறினார்:

"சுந்தரம். பிரேம் போயிட்டாம்பா! காலையில ஒம்போது மணிக்கு அவன் கதை முடிஞ்சது பிரேதத்தை வீட்டுக்குக் கொண்டு வந்திட்டாங்க!" என்றார்.

படுக்கைக்குப் பக்கமாக நின்றது நல்லதாகப் போயிற்று. ராமா கை நீட்டிப் பிடிப்பதற்குள் சுந்தரம் தலை சுற்றி அந்தப் படுக்கையின் மேலேயே விழுந்தார்.


--------

அந்திம காலம் - 18


"மூன்றாவதாக உனக்கு என்ன வரம் வேண்டும்?" என யமன் கேட்டான்.

"ஓ யமனே, ஒரு மனிதன் இறந்து விடும் போது சிலர் அவன் இருக்கிறான் என்றும் சிலர் அவன் இல்லை என்றும் சொல்கிறார்கள். மரணத்தின் தெய்வமே! அந்த ரகசியத்தை நீ எனக்குச் சொல்ல வேண்டும். மரணத்திலிருந்து மனிதன் தப்பிக்க முடியுமா?" என நசிகேதன் கேட்டான்.

"அதை மட்டும் கேட்காதே! இதைப்பற்றி தெய்வங்களுக்கும் சந்தேகமுண்டு. அதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அது சூட்சுமமானது. ஓ நசிகேதா! வேறு வரம் கேள்! உனக்குப் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் தருகிறேன்" என்றான் யமன்.

"செல்வத்தால் யாருக்கும் நிலைத்த இன்பம் வராது. இந்த ஒரு வரமே வேண்டும். வேறு வேண்டாம். மனிதன் மரணத்திடமிருந்து தப்பிப்பது எப்படி?"

கதோபனிஷத்.


சுந்தரத்தை சக்கர நாற்காலியில் ஓர் ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள். பலர் வந்து அவர் கைகளைக் குலுக்கி அனுதாபம் தெரிவித்துப் போனார்கள். கோலாலம்பூரிலிருந்து ராதா சிவமணிக்குத் தெரிந்த பலர் வந்திருந்தார்கள். அவருக்கு அவர்களை யார் எனத் தெரியவில்லையானாலும் பலவீனமாகத் தலையாட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பரமாவின் உடலின் மேல் நிறைய வாசனைப் பொருள்கள் தௌித்து வைத்திருந்தார்கள். அவன் உறங்குவது போல இருந்தான். அவன் முகம் தௌிவாக இருந்தது. அவனுக்காக வந்த பூவளையங்கள் வீட்டின் பல பகுதிகளில் வைக்கப் பட்டிருந்தன.

புதிதாக யாராவது வந்த போதெல்லாம் ராதா அலறி அழுதாள். "என் மகனைப் பார்த்திங்களா, என் பச்சப் பிள்ள என்ன விட்டுட்டுப் போயிட்டான் பாத்திங்களா?" என்று அழுதாள். சிவமணி அவள் பின்னால் நின்று அவள் தோள்களைப் பிடித்து "அமைதியா இரு ராதா! அமைதியா இரு!" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

சிவமணியின் தாயும் தகப்பனும் வந்து சோக முகங்களோடு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள்.

ராமாவும் இன்னும் ஓரிருவரும் மயான வேலைகளைக் கவனிப்பதில் தீவிரமாயிருந்தார்கள். சிறு பிள்ளையாதலால் எரிக்கக் கூடாதென்றும் புதைக்கத்தான் வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

ஜானகி இடிந்து போய் மௌனமாக அழுது கொண்டிருந்தாள். எழுந்து சென்று அவளின் தோள்களைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் கால்களில் பலம் இல்லை. அன்னம் மட்டும் அடிக்கொரு தரம் தன் பின்னால் வந்து "எப்படி தம்பி இருக்கு உடம்புக்கு? குடிக்க ஏதாச்சும் கொண்டு வரட்டுமா? கொஞ்ச நேரம் வந்து படுத்திருக்கியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் வேண்டாம் என்று சொன்னார்.

உடம்பின் வாதை பெரிதாகத் தெரியவில்லை. அது எப்படி இருந்தாலும் பொருட்டில்லை. பரமாவின் அண்மையை விட்டு நான் அகலமாட்டேன். இது அவனுடன் நான் இருக்க முடிந்த கடைசி சில மணி நேரங்கள். அகலமாட்டேன்.

இங்கேயே மயங்கித் தலை குப்புற விழுந்து இறந்து விட்டாலும் பரவாயில்லைதான். பரமாவுக்குத் துணையாகப் போய்ச் சேரலாம்.

பரமாவின் மொட்டுப் போன்ற முகத்தைப் பார்த்தார். "தாத்தா! ஐ வான்ட் சொக்கலேட்!" என்று ஓடிவந்த முகமா இது? "தாத்தா! ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று அழுத முகமா இது? "அகர முதல எழுத்தெல்லாம்..." என்று மழலையில் திருக்குறள் சொல்லித் தன் உள்ளத்தை வானளவுக்கு உயர்த்திய முகமா இது?

அந்த மொட்டை இப்படிக் கொடுமையாகப் பறித்து விட்ட தெய்வத்தை எண்ணி உள்ளுக்குள் சபித்தார். "காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்" என்று ஒவ்வொரு முறையும் தான் கர்வத்தோடு கூவிய போதெல்லாம் காலன்தான் என்னைப் போட்டு மிதித்திருக்கிறான். அவனை வெல்பவர்கள் இல்லையா? நசிகேதன் வென்றானா? நசிகேதன் சாவின் உண்மையைக் கேட்டறிந்தானா? அல்லது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் போதும் என்று கேட்டு வாங்கிப் போனானா? படித்தது இப்போது ஞாபகமில்லை. பரவாயில்லை விரைவில் காலனை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு நடப்பதெல்லாம் விரைவில் தனக்கு நடக்கவிருக்கும் சடங்குகளுக்கான ஒத்திகைதான் என நினைத்துக் கொண்டார். தன்னை இப்படி வீட்டு நடுவில் கிடத்தி எத்தனை பேர் எப்படியெல்லாம் அழுவார்கள் எனக் கற்பனை செய்து பார்த்தார். ஆனால் அந்த நேரத்தில் யார் அழுகிறார்கள், யார் வருகிறார்கள் என்பதெல்லாம் தனக்குத் தெரியப் போவதில்லை. அது முக்கியமாகவும் இருக்கப் போவதில்லை என நினைத்துக் கொண்டார்.

உடல்தான் இறக்குமாமே, ஆன்மாவுக்கு இறப்பில்லையாமே! "அர்ஜுனா, இவ்வாத்மா வெட்டுண்ணான், வேகான், நனையான், உலரான். இவன் நித்தியமாய், நிறைவாய், நிலையாய், அசைவற்றவனாய் என்றும் இருப்பவனாம்!" என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்.

ஆன்மா இங்கு நடப்பவற்றைப் பார்க்க முடியுமானால் தன் இறப்புக்கு, தன் உடலுக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவிக்க யார் யார் வருகிறார்கள், யார் யார் அழுகிறார்கள் என்பது முக்கியம்தான். ஆனால் அந்த ஆன்மாவுக்கு இந்த விருப்பு வெறுப்புக்கள் முக்கியமாகப் படுமா? தன்னை வணக்கம் செய்வோரைக் கண்டு அது ஆனந்திக்குமா? தன்னை வணக்கம் செய்யாதவரைக் கண்டு அது வருந்துமா?

பரமா! நீ ஆன்மாவாக இருக்கிறாயா? இங்கு நடப்பனவற்றைப் பார்க்கிறாயா? உனக்கு இதெல்லாம் விளங்குகிறதா கண்ணா? ஒரு வேளை இறந்து ஆன்மாவாக நீ ஆகிவிட்ட பிறகு நீ குழந்தையாக இல்லாமல் சகல அறிவும் பெற்ற பூரண நிலையில் இருப்பாய்! அப்படியானால் இங்கு நடப்பதை விளங்கிக் கொள்வாய்!

தாத்தா ஏன் அழாமல் இருக்கிறேன் என்று பார்க்கிறாயா? எனக்கு அழுவதற்கு இப்போது சக்தியில்லை. என் உடலில் எல்லாச் சக்திகளும் வடிந்து விட்டன. நான் வெறுங் கூடாக இருக்கிறேன். என் மனத்தில் நீ ஒருத்தன் சிறகடித்தவாறு இருந்தாய். இப்போது நீயும் போய்விட்டபின் அந்த உள்ளமும் வெறுமையாகிவிட்டது. என் உடம்பு ஒரு அழுகும் கூடு. அதன் உள்ளே என் உள்ளம் ஒரு வெற்றுக் கூடுதான். இந்த இரு கூடுகளுக்குள் நான் அர்த்தமில்லாமல் சிறைபட்டுக் கிடக்கிறேன்.

பரமா! உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். என் வாழ்க்கை வாழ்ந்து அலுத்து விட்ட வேளையில் உன் மரணமும் என் மரணமும் விதிக்கப் பட்டுவிட்ட இந்த வேளையில் இந்த அற்ப ஆசை தோன்றி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. அதையும் இல்லாமல் செய்து விட்டாயே கண்ணு!

அனுபவிக்க வேண்டியவை எவ்வளவு இந்த உலகில் இருக்கின்றன? ஓ மரண தெய்வமே! என் பரமா இன்னமும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் பெற்று அனுபவிக்கவில்லையே! அதற்குள் ஏன் அவனைப் பறித்துக் கொண்டாய்?

பரமா! உனக்கு முன் நான் போய் ஆவிகள் தங்கும் உலகம் எதுவாக இருந்தாலும் அங்கு தங்கி உன்னை வரவேற்க வேண்டும் என்று நினைத்திருந்தேனே! ஏன் என்னை முந்திக் கொண்டாய்? பரவாயில்லை இன்னும் சில நாட்களோ, பல நாட்களோ, நானும் வந்து விடுவேன். நோய்த் தொல்லை இல்லாமல் மேகங்களின் மேல் அமர்ந்து நல்ல தமிழ்ப் புலவர்கள் மத்தியில் நாம் தமிழ்ப் படிக்கலாம்.

"சரி சரி! நேரமாச்சி எடுங்க, எடுங்க!" என்றார்கள். உடனே அழுகைகளின் சுருதிகள் கூடின.

என் பரமாவை அன்புடன் முறையாக வடூயனுப்பாமல் நான் இருப்பேனா? என் அன்புப் பேரனே! இந்தத் தாத்தாவின் முத்தத்தைப் பெறாமல் நீ போவாயா?

சக்கர நாற்காலிகளின் பிடிகளை அழுத்தி உந்தி எழுந்தார். அவர் எழுவதைப் பார்த்து இரண்டு பேர் வந்து கைத்தாங்கலாக அவரைப் பிடித்தார்கள். பரமாவின் உடலின் அருகில் போக வேண்டும் என்றார். மெதுவாக நடத்திக் கொண்டு சென்றார்கள். பிணப்பெட்டி அருகில் சென்றதும் அதன் விளிம்புகளைப் பிடித்துக் கொண்டு குனிந்தார். தலை சுற்றும், விழப் போகிறோம் என்ற பயம் வந்தது. விழுந்தால் பரவாயில்லை. அதுவும் செத்து இந்தப் பிணப் பெட்டிக்குள்ளே விழுந்தாலும் நல்லதுதான். பரமாவோடு துணையாகப் படுத்துவிடலாம்.

ஆனால் உடம்பு விழவில்லை. அவர் வேண்டுமளவுக்கு வளைந்து கொடுத்தது. முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு சென்றார். சாமந்திப் பூக்கள், மல்லிகை, ரோஜா, பன்னீர் ஆகியவை கலந்த நல்ல நறுமணம் பரமாவின் உடலிலிருந்து வந்தது.

"ஐயோ அப்பா, உங்க பேரன் உங்கள விட்டுப் போயிட்டான் பாத்திங்களா!" என்று ராதா பக்கத்திலிருந்து அலறினாள்.

அவள் அலறல் காதில் கேட்டுக் கொண்டிருக்கக் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டார். எழ முடியவில்லை. மீள விரும்பவில்லை. அந்த சங்கமம் அவரை உருக்கிற்று. அவருடைய உடல் குலுங்கிற்று. அவருடைய கண்ணீர் வடூந்து அவன் கன்னங்களை நனைத்தது.

இரண்டு பேர் வலிந்து அவரைப் பிரித்தார்கள். கொண்டு வந்து சக்கர நாற்காலியில் மீண்டும் இருத்தினார்கள்.

"சரி, சரி பெட்டியை மூடலாம்" என்று யாரோ கூறப் பெட்டியை மூடினார்கள்.

"போய் வா கண்ணு! சீக்கிரம் வந்து விடுவேன்! அது வரை தேவதைகள் உன்னைக் கவனித்துக் கொள்வார்கள்!"


*** *** ***

அன்றிரவு தன் வீட்டிலேயே தங்கியிருந்தார். வீடு அமைதியிழந்திருந்தது. அந்த வீட்டில் பல மாதிரி உணர்வுகள் இருந்தன. பரமா போய்விட்ட வெறுமை கனத்திருந்தது. ராதா வாழ்வில் பறிகொடுத்த எல்லாப் பொருள்களிலும் பரமாவின் இறப்பே அவளுக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. அவளுடைய சோகம் வீடு முழுவதையும் கவ்வியிருந்தது.

அவர் முகத்தை அனைவரும் பாவத்தோடும் பயத்தோடும் பார்த்தார்கள். இந்த சோகம் முடிந்த பின்னர் இன்னொரு பெரிய சோகம் இந்த வீட்டைப் பெரிதாகக் கவ்வப் போகிறது என்ற துயரம் கலந்த எதிர்பார்ப்பு எல்லார் முகத்திலும் இருந்தது. குறிப்பாக அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஜானகி முகத்தில் அந்த பயம் இருந்தது.

இதற்கிடையே ராதா மீது சிவமணி காட்டும் பாசம் ஒரு புதிய நம்பிக்கை விளக்கை அங்கு ஏற்றி வைத்திருந்தது. அவன் அவளுடைய தவறுகள் எதையும் எடுத்துப் பேசவில்லை. அவளை முற்றாக மன்னித்துவிட்டதைப் போலவே நடந்து கொண்டான். அடிக்கொரு தரம் அவள் தோள்களைத் தழுவி ஆறுதல் கூறினான். அவளும் அவனிடம் இணங்கியிருந்தாள். அவன் மார்பில் முகம் புதைத்து அழுவது அவளுக்கு விருப்பமாகவும் நிம்மதியாகவும் இருப்பது போலத்தான் தோன்றியது.

இது நிரந்தரமா தற்காலிகமா என்ற கேள்வி அவர் உள்ளத்தில் எழத்தான் செய்தது. ஆனால் இப்போதைக்கு இது உண்மைதான். அது வரை நிம்மதிதான் என்று எண்ணிக் கொண்டார். எதிர்காலம் எந்தத் திசையில் போகும் என்று யார் கண்டார்கள்? ஏன் அதற்காகக் கவலைப் பட வேண்டும்? எல்லாருடைய எதிர் காலத்திலும் ஒன்றே ஒன்றுதான் நிச்சயமாக இருக்கிறது. மரணம்!

மறுநாள் காலை அவரை மீண்டும் ஆஸ்பத்திரியில் கொண்டு விட ஏற்பாடுகள் நடந்தன. அவருக்கு அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. "போகத்தான் வேணுமா அக்கா!" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டார்.

"என்ன தம்பி பேசிற! சிகிச்சைய முடிக்க வேணாமா? போகாம இருந்தா எப்படி?" என்று கேட்டாள் அன்னம்.

ராமாவும் வந்து வலியுறுத்தினார். "பாதில விட்டுட்டா எப்படி சுந்தரம்! கடைசி வரை இருந்து பாத்தாதான நல்லது?" என்றார். "கடைசி வரை" என்பது என்ன என விளங்கவில்லை. மரணம் வரை சிகிச்சை என்றால், மரணத்துக்குக் காத்திருக்கத்தான் மருத்துவ மனைக்குப் போவதென்றால் அது தேவையில்லை எனத் தோன்றியது. ஆனால் சுற்றியுள்ளவர்களின் வற்புறுத்தலை மறுக்க முடியவில்லை.

சிவமணியும் ராமாவும் அவரைக் காரில் ஏற்றிவிட கை கொடுக்க வந்தார்கள். அதை மறுத்துத் தாமாக நிதானமாக நடந்து காரில் ஏறிக் கொண்டார்.


*** *** ***

அவர் அங்கு இல்லாமல் இருந்த ஒரு நாளில் அவருடைய வார்டில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தன் அடுத்தடுத்த படுக்கைகளில் இருந்த இரண்டு நோயாளிகளையும் காணவில்லை. படுக்கைகளில் புது விரிப்புகள் போடப்பட்டு அடுத்த நோயாளிகளுக்காகத் தயார் செய்யப் பட்டிருந்தன.

மத்தியானம் ரத்தம் எடுக்க வந்த தாதியிடம் விவரம் கேட்டார்.

"அந்தச் சீனக்கிழவர் மண்டையைப் போட்டுவிட்டார். அவருடைய பிரேதத்தை உறவினர்கள் கொண்டு சென்று விட்டார்கள். அந்த இளம் பயனுக்கும் இனி செய்ய முடிந்தது ஒன்று மில்லை என பேர் வெட்டி அனுப்பி விட்டார்கள். அவனை இறக்கும் தறுவாயிலுள்ள நோயாளிகளுக்கான கருணை இல்லத்தில் அவர்கள் குடும்பம் கொண்டு சேர்த்து விட்டது!" என்று உணர்ச்சியில்லாமல் சொன்னாள் அந்தத் தாதி.

இந்த இடத்தில் மரணம் கூத்தாடுகிறது. இங்கு எல்லாரும் அதன் பேய்ப் பிடியில்தான் இருக்கிறோம். இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது. இது மரணப் பேயின் விருந்துக் கூடம் என்று அவருக்குத் தோன்றியது. இங்கு உட்கார்ந்து கொண்டு மரணம் தன்னைப் பறித்துத் தின்னும் நாளுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைத்தார்.

இங்கு ஏராளமான டாக்டர்கள் வெள்ளை வெள்ளையாக அங்கிகள் போட்டுக் கொண்டு கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்க அவசரம் அவசரமாகத் தங்கள் நோயாளிகளைக் கவனித்துக் காப்பாற்றுவதாக நடிக்கிறார்கள். ஏராளமான இயந்திரங்களையும், குப்பி குப்பியாக மருந்துகளையும் வைத்துக்கொண்டு மரண தேவதையோடு பாம்பும் ஏணியும் விளையாட்டு விளையாடுகிறார்கள். இவர்கள் பாய்ந்து பாய்ந்து ஒரு ஏணியில் ஏறினால் இந்த மரணப் பாம்பு தன் முதுகைக் கொடுத்து அவர்களை அதல பாதாளப் பள்ளத்தில் தள்ளி விடுகிறது. அப்புறம் தனக்கு விருப்பமானவர்களை இவர்கள் கண் முன்னாலேயே கொத்திக் கொண்டு போய் தின்கிறது. டாக்டர்கள் இதற்கெல்லாம் ஏதாவது ஒரு மருத்துவப் பெயரைச் சொல்லி விட்டு அடுத்த நோயாளிக்காக அடுத்த ஏணியில் ஏறுகிறார்கள்.

இப்படித்தான் ஏராளமான வெள்ளை அங்கிகள் அணிந்த டாக்டர்களின் கண் முன்னால் மரணம் பரமாவைக் கொத்திக் கொண்டு போயிற்று. என்ன செய்ய முடிந்தது இவர்களால்?

வேண்டாம். இந்த நரகத்தில் இருக்க வேண்டாம். எனக்கு ஓரிரு வார்த்தைகள் ஆறுதல் சொல்லக் கூடிய மதர் மேகி கூட இங்கு இல்லை. இந்த இடத்தில் அன்பும் கருணையும் இல்லை. இங்கு வெறும் மருந்தும் சிகிச்சையும்தான் இருக்கிறது. இது நோயை நீட்டித்து மரணத்தைத் தாமதப் படுத்தும் இடந்தானே யல்லாமல் நோயை ஒடூக்கின்ற இடம் அல்ல.

இங்கிருந்து வௌியேற வேண்டும். அன்பும், அமைதியும், எனக்கு விருப்பமான மனிதர்களும் சூழ்ந்துள்ள என் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். உயிரை விடுவதில் இப்போது பயம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த உயிரை எனது இந்தச் சக நோயாளிகள் போல மருத்துவ மனைப் படுக்கையிலும் கைவிடப்பட்ட கேஸ்கள் காலத்தைக் கழிக்கும் கருணை இல்லங்களிலும் விட மாட்டேன்.

டாக்டர் வந்தவுடன் "உன் மருந்தை நீயே வைத்துக் கொள்" என்று சொல்லி வௌியாகிவிட வேண்டியதுதான் என முடிவு செய்து கொண்டார். டாக்டர் ராம்லியின் சித்திரவதைகளுக்கு இனியும் தன்னை ஆளாக்கிக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. மாலையில் ராமா அல்லது சிவமணி யாராவது ஒருத்தர் தன்னைப் பார்க்க வருவார்கள். அவர்களோடு வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியதுதான்.

அந்த எண்ணமே ஒரு விடுதலை போல இருந்தது. எழுந்து நின்று தமது துணிகளைப் பைக்குள் அடுக்கினார். பிளாஸ்க்கையும் மைலோ டின்னையும் அதற்குள் வைத்தார். புத்தகங்களையும் உள்ளே போட்டார். ஜிப்பை இழுத்து மூடினார்.

வீடு திரும்பிப் புற்று நோயைச் சுதந்திரமாக முற்றவிட்டு, ஜானகியின் மடியில் தலை வைத்தவாறு விரைவில் செத்துப் போகத் தயாராகக் காத்திருந்தார்.


*** *** ***

பிற்பகல் நேரத்தில் டாக்டர் ராம்லி வந்தார். இன்னொரு இளம் டாக்டரும் ஒரு தாதியும் புடை சூழ வந்தார். அவர் படுக்கையின் பக்கத்தில் வந்தவுடன் தௌிவாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்துவிட்டு அவருடைய ஃபைலைத் திறந்து ஏதோ குறிப்புகள் எழுதினார். அவருடைய இறுக்கமான முகத்துக்கு அந்தப் புன்னகையே ஒரு பெரிய மாற்றம்தான்.

சுந்தரம் தன் மனதைத் தைரியப் படுத்திக் கொண்டு சொன்னார்: "டாக்டர் ராம்லி! என்னை இந்த சிகிச்சையிலிருந்து விடுவித்து விடுங்கள்" என்றார்.

டாக்டர் ராம்லி நிமிர்ந்து பார்த்தார். "ஏன்?" என்று கேட்டார்.

"இந்த சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே இப்படியே நாளைக் கடத்த நான் விரும்பவில்லை! இந்த மருத்துவ மனைச் சூழ்நிலை எனக்கு வெறுப்பாக இருக்கிறது. என் வீட்டுக்குத் திரும்பி விட விரும்புகிறேன்!" என்றார்.

சில விநாடிகள் அவரை உற்றுப் பார்த்தார் ராம்லி. பின்பு ஃபைலைத் திறந்து ஏதோ வேகமாக எழுதி மூடினார். திரும்பித் தாதியிடம் கூறினார்: "நர்ஸ், இந்த பேஷண்டை டிஸ்சார்ஜ் செய்து விட்டேன். அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றார்.

சுந்தரத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு கோபக்காரரா இந்த ராம்லி! நோயாளி ஒரு ஏமாற்றத்தில் பேசக் கூடும் என்ற பரிதாபம் சற்றும் இல்லாமல் எடுத்தெறிந்து காரியம் செய்கிறாரே!

அவர் தன்னை அங்கு தங்கியிருந்து சிகிச்சையைத் தொடருமாறு கேட்கக்கூடும் என நினைத்து அதற்குரிய பதில்களைத் தயாரித்து வைத்திருந்த சுந்தரத்திற்கு டாக்டர் இவ்வளவு விறைப்பாகத் தன் சிகிச்சையை முடித்துக் கொண்டது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் அதனால் பாதகமில்லை. போவது என்று முடிவு செய்தாகி விட்டது. போவது உறுதிதான். ஆனால் இந்த டாக்டரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டாம் என்று நினைத்தார். சமாதானமாகப் போவோம் என நினைத்தார்.

மென்மையாகத் தணிந்த குரலில் சுந்தரம் சொன்னார்: "டாக்டர் ராம்லி, என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கோபம் கொண்டது போல் தெரிகிறது?" என்றார்.

"இல்லை. நான் கோபப்படவில்லை" என்றார் ராம்லி.

"அப்புறம் ஏன் இத்தனை விரைவாக என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு செயல் படுத்தினீர்கள்?" என்று கேட்டார் சுந்தரம்.

"மிஸ்டர் சுந்தரம். உங்களுக்கு நாங்கள் இந்த மருத்தும மனையில் செய்ய முடிந்தது வேறு ஒன்றும் இல்லை!" என்றார்.

அவ்வளவுக்கா இந்த நோய் முற்றிவிட்டது? இனி கருணை இல்லத்தில் இருந்து காலங் கழிக்க வேண்டிய கேஸ்தானா நான்? இத்தனை நேரம் மனதில் இருந்த வீராப்பு இப்போது முற்றாகச் சரிந்து விட்டது.

"அவ்வளவு மோசமாகமா ஆகிவிட்டது என் நோய்?" என்று ஈனசுரத்தில் கேட்டார்.

"அப்படி இல்லை! உங்களை இங்கு வைத்து நாங்கள் சிகிச்சையளிக்க வேண்டிய தேவை ஒன்றுமில்லை. உங்கள் நோய் குணமாகிவிட்டது"

ஒரு காந்த அலை காலிலிருந்து புறப்பட்டு உச்சி வரை ஓடி உடம்பில் குப்பென்று பரவியது. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார் சுந்தரம். "டாக்டர் ராம்லி! என்ன சொல்கிறீர்கள்?"

"உங்களுக்கு இப்போதெல்லாம் தலை வலிக்கிறதா?"

"அவ்வளவாக இல்லை!"

"நேற்று உங்கள் பேரப்பிள்ளையின் மரணச் சடங்குகளுக்குப் போனீர்களே! அதற்குரிய பலம் இருந்ததா? மயக்கம் வந்ததா?"

"இல்லை"

"வயிற்றுக் குமட்டல், வாந்தி?"

"சில நாட்களாக இல்லை!"

"சாப்பாடு வயிற்றில் தங்குகிறதா?"

"ஓரளவு சாப்பிட முடிகிறது"

"தோலின் ரணம்?"

"குறைந்துதானிருக்கிறது!"

"கால் கைகளின் வலி?"

"குறைந்திருக்கிறது!"

"அன்றைக்கு சக்கர நாற்காலியை விட்டு எழுந்து படுக்கை வரை நடந்து போனீர்களாமே!"

"ஆமாம்!"

"அப்புறம் சிகிச்சையில் ஒன்றும் முன்னேற்றம் இல்லை என்று சொன்னீர்களே! இதெல்லாம் முன்னேற்றம் இல்லையா?"

"முன்னேற்றந்தான்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வெட்கித் தலை குனிந்தார் சுந்தரம். ஏன் நான் கவனிக்கவில்லை? என் நோய் என் மீது பிடியைத் தளர்த்தியிருந்தும் என் மனம் என் நோயின் மீதுள்ள பிடியைத் தளர்த்தவில்லையோ? என்னைச் சுற்றியுள்ள அவலங்களில் ஆழ்ந்து போய் எழ முடிந்தும், எழ மனமில்லாதவனாகக் கிடந்து விட்டேனா? வாழ்க்கை என்னை அணைக்க வந்தும் நான் மரணத்தையே தழுவிக் கொண்டு கிடந்து விட்டேனா?

டாக்டர் ராம்லி சிரித்தவாறு நின்றிருந்தார். சுந்தரம் தலை தூக்கிப் பார்த்தார். "உண்மையா டாக்டர் ராம்லி!"

மறுபடியும் இந்தக் கேள்வி அவருக்கே வெட்கமாக இருந்தது. இந்த மனம் ஒரு தடவையில் கெட்ட செய்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை, நல்ல செய்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை. மறுமுறை சொல், பலமுறை சொல் என்று வருத்தி வருத்திக் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள விரும்புகிறது.

"உங்கள் மூளையின் கட்டி பெரும்பாலும் கரைந்து விட்டது. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து சாதாரண நிலைக்கு வந்திருக்கிறது. கல்லீரல், கிட்னி எல்லா இடத்திலும் புற்று நோய் அறிகுறிகள் மறைந்து விட்டன. ஹோர்மோன்தெராப்பி உங்கள் உடம்பில் நன்றாக வேலை செய்திருக்கிறது. ஆகவே ரேடியோதெராப்பியை முற்றாக ரத்துச் செய்து விட்டோம். ஆனால் இதனால் உங்கள் நோய் முற்றாகக் குணமாகிவிட்டது என அர்த்தமல்ல. நாங்கள் அதைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்போதைக்கு உங்களுடைய உயிரை நீட்டித்து புது ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். நீங்கள் பயமில்லாமல் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம். கெமோதெராப்பிக்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருங்கள். போவதற்கு முன் சில மருந்துகள் கொடுக்கிறேன்" என்றார் ராம்லி.

படுக்கையிலிருந்து எழுந்து நின்று அந்த டாக்டரைத் தழுவிக் கொண்டார் சுந்தரம். "உன்னைப் பற்றி என்னவெல்லாம் நினைத்தேன் ராம்லி! கடமை வீரனே! என் உயிர் காத்த என் அன்பு மாணவனே! எப்படியெல்லாம் மனதுக்குள் உன்னைத் தூற்றிவிட்டேன். மனிதர்களைப் பற்றிய என் மதிப்பீடு இவ்வளவு தவறாகவா போய்விடும்? நான் முட்டாள். நான் குருடன். நான்... நான்... மிகவும் கொடுத்து வைத்தவன்" என எண்ணிக் கொண்டார். அவற்றையெல்லாம் சொல்ல நா வரவில்லை. அவருடைய கண்களில் கண்ணீர் கோத்து வழிந்தது.

"என்னை மன்னித்து விடுங்கள். டாக்டர் ராம்லி! ஏதோ பழைய விஷயங்களை நினைந்து...."

"பரவாயில்லை. சின்ன விஷயம். நான் எப்போதோ மறந்து விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து கெமோதெராப்பிக்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கிறேன். அப்போது உங்களுக்கு முழுமையான ரிப்போர்ட்டும் கொடுக்கிறேன். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். பை, பை!" என்று அடுத்த படுக்கைக்குச் சென்றார் டாக்டர் ராம்லி.

----

அந்திம காலம் - 19


அப்புறம்...?

பரமாவின் பதினாறாம் நாள் சடங்கை ஒரு பண்டாரத்தை வைத்துச் செய்தார்கள். சுந்தரம் கூட இரவு கொஞ்ச நேரம் தூங்கி விடியற் காலையில் எழுந்து அவர்களோடு கடற்கரை வரை சென்று வந்தார்.

சடங்குகள் முடிந்ததும் ராதாவும் சிவமணியும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கோலாலம்பூர் திரும்பினார்கள். ராதா சுந்தரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதாள். இழந்த மகனை நினைத்து அழுகிறாளா, திடீரென்று கைவிட நேர்ந்த இங்கிலாந்துக் காதலனை நினைத்து அழுகிறாளா, அல்லது சிவமணியோடு சேர்ந்து அனுபவிக்கக் காத்திருக்கும் எதிர்காலத் துன்பங்களை நினைத்து அழுகிறாளா என்று அவருக்கு விளங்கவில்லை. அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

சுந்தரம் மூன்றாம் மாதப் பரிசோதனைக்கும் ஆறாம் மாதப் பரிசோதனைக்கும் மௌன்ட் மிரியம் சென்று வந்தார். பினாங்கு பொது மருத்துவ மனையிலும் சோதனைகள் நடந்தன. புற்று நோய் திரும்பவில்லை. ஆனால் முற்றாக இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஓராண்டு செல்ல வேண்டும் என எச்சரித்து வைத்தார்கள். "கடவுள் உங்களுக்கு வைத்த சோதனையில் நீங்கள் தேர்ந்துவிட்டதாகத்தான் தெரிகிறது" என மதர் மேகி தன் சிரிப்பு மாறாத முகத்துடன் அவரிடம் கூறியிருந்தார்.

அன்னம் அக்காளும் அத்தையும் தைப்பிங்கிற்குத் திரும்பியிருந்தார்கள். அன்னம் டியூஷன் வகுப்புக்களை மீண்டும் தொடங்கியிருந்தாள். ஆனால் அவள் வாழ்க்கை முன்பு போல் அமைதியாக இல்லை. அத்தை அடிக்கடி நோய்வாய்ப் பட்டுக் கொண்டிருந்தாள். அத்தைக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அத்தையை கிளினிக், தைப்பிங் பொது மருத்துவ மனை என்று கொண்டு ஓராண்டுகள் திரிந்தாள். கடைசி முறையாக அத்தை மூச்சிறைக்க வீட்டில் கிடந்த போது உதவிக்கு ஆள் இல்லாமல் ஆம்புலன்சைக் கூப்பிட்டு ஏற்றிக் கொண்டு செல்லும் வழியிலேயே அத்தையின் மூச்சு பிரிந்து விட்டது. சாகும் போதும் அவள் "ஐயோ தண்ணி! தண்ணி!" என்று முனங்கிக் கொண்டுதான் கிடந்தாள் என அன்னம் கூறினாள்.

அத்தையின் ஈமச் சடங்குகளை தைப்பிங்கிலேயே அடக்கமாக நடத்தினாள் அன்னம். சுந்தரமும் ஜானகியும் சென்று உதவிகள் செய்து வந்தார்கள். "தனியாக இருக்க வேண்டாம் பினாங்கில் வந்து எங்களோடு இரு" என்று எவ்வளவோ வற்புறுத்தியும் அன்னம் "பார்க்கலாம், பார்க்கலாம்" எனத் தட்டிக் கழித்துவிட்டாள்.

தைப்பிங்கில் ஈமச் சடங்கை முடித்துக் கொண்டு அவர்கள் பினாங்கு திரும்பிய நாளில் ஜிம்மி சோர்ந்து படுத்திருந்ததைக் கண்டார். அன்றும் அடுத்த நாளும் அது சாப்பாட்டைத் தொடவில்லை. காலையில் சுந்தரம் எழுந்து வௌியே வரும் வேளைகளில் படுத்த இடத்தை விட்டு நகராமல் முகத்தைத் தரையில் பதித்து வாலை மட்டும் தரையில் தட்டி அவரை விழித்து விழித்துப் பார்த்தது.

ராமாவை வரச் சொல்லி இருவருமாக ஜிம்மியைத் தூக்கிக் காரில் போட்டு விலங்கு வைத்தியரிடம் கொண்டு சென்றார்கள். அவர் பரிசோதித்து விட்டு வயிற்றில் கடுமையான புண் இருக்கிறதென்றார். ஏதோ நச்சுள்ள பொருள் சாப்பிட்டிருக்கிறதென்றார். இரண்டு நாள் வைத்துப் பார்க்கிறேன் என்றார். ஆனால் மறுநாள் மாலையில் போன் செய்து ஜிம்மி உயிரை விட்டு விட்டதென்றார். அதன் உடலைப் போய் பார்த்து விட்டு, தடவிக் கொடுத்துவிட்டு அந்த விலங்கு மருத்துவர் மூலமாகவே உடலை எரிக்க ஏற்பாடு செய்து விட்டு வந்தார்கள்.

சுந்தரம் பகலெல்லாம் கவலையாக, ஆனால் தைரியமாக இருந்துவிட்டு அன்று இரவில் அழுதார். ஜிம்மி இல்லாத காலைப் பொழுதுகள் வெறிச்சோடிப் போய்விட்டன.

ஜானகி இரவில் தூங்கவும் மூச்சுவிடவும் சிரமப் பட்டாள். அவளுக்கு ஆஸ்த்துமா கண்டிருக்கிறது என டாக்டர்கள் கூறினார்கள். முதிய வயதில் ஆஸ்த்மா வந்தால் கடுமையாக இருக்கும் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அவளுக்குத் திரவ மருந்துகளும் வாயில் வைத்து இழுத்து நுரையீரலுக்குள் நேராக மருந்து செலுத்தும் பம்ப்பும் கொடுத்தார்கள்.

ஜானகியின் சுகமின்மையைக் கேள்விப்பட்டு அவளைப் பார்க்க ராதா தனியாகத்தான் வந்திருந்தாள். சிவமணி வேலையாக இருப்பதாகக் கூறினாள். ராதா கொஞ்சம் தடித்திருப்பது போல் தோன்றியது. ஜானகியின் சந்தேகம் சரியாக இருந்தது. "ராதா மறுபடியும் கர்ப்பமா இருக்குங்க!" என்று சுந்தரத்திடம் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கூறினாள் ஜானகி. ஆனால் ராதாவின் முகத்தில் அது பற்றிப் பெரிய மகிழ்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.

பிறக்கும் குழந்தை ஆணாக இல்லாமல் பெண்ணாக இருந்தால் நல்லது என நினைத்தார். தனது புற்றுநோய் ஜீன் ஆண்களைத்தான் பாதிக்கிறது, ஆண்கள் வழியாகத்தான் பரவுகிறது என்ற நினைப்பு இருந்து கொண்டே இருந்தது. வசந்தனைப் பற்றிய கவலையும் தோன்றியிருந்தது.

சுந்தரத்தின் நோய் குணமானது என்று உறுதிப் பட்டவுடன் இனியும் மகனுக்குத் தெரிவிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக அவனுக்கு நடந்தவற்றை விரிவாக எழுதினார் சுந்தரம். அவன் டாக்டரிடம் இதைச் சொல்லி தனது உடலையும் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தார்.

கடிதம் கிடைத்த அன்று அவன் உடனே போன் செய்து பேசினான். இவ்வளவு நடந்திருந்தும் தனக்குச் சொல்லவில்லையே எனக் கோபித்துக் கொண்டான். அடுத்த ஆண்டு இறுதியில் படிப்பை முடித்துக் கொண்டு திரும்பிவிடுவேன் எனச் சொன்னான்.

தைப்பிங்கில் இருந்து தனியாக ஆக்கிச் சாப்பிட்டு டியூஷன் நடத்தி அன்னத்துக்கு அலுத்து விட்டது. ஜானகியின் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி சுந்தரம் மீண்டும் ஒருமுறை பினாங்குக்குத் திரும்பும்படி வற்புறுத்தியவுடன் அவள் அதை ஏற்றுக் கொண்டாள். தைப்பிங் தாமான் இளையதம்பி வீட்டையும் வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவள் ஒரு நல்ல நாளில் பினாங்கில் சுந்தரத்துடன் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாள்.

ராதாவின் பிரசவம் கோலாலம்பூரிலேயே அவள் மாமியாரின் மேற்பார்வையில் நடந்தது. அவளைப் பினாங்குக்கு அனுப்புவதில் அவர்கள் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.

தனது அழகிய பேத்தியை எடுத்து உச்சி முகர்ந்து திருப்பிக் கொடுத்து வந்தார்கள். பேரக் குழந்தை பேத்தியாக இருந்ததில் சுந்தரத்துக்குக் கொஞ்சம் நிம்மதி இருந்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வசந்தன் திரும்பி வந்து பெற்றோர்களுடன் கொஞ்ச நாள் இருந்து அப்புறம் கோலாலம்பூரில் வேலை தேடிப் போய்விட்டான்.

அவனுக்குப் பெண் பார்க்கப் பல இடங்களுக்கு அலைந்ததில் சோர்வுற்ற ஜானகி படுக்கையில் விழுந்தவள் ஒருநாள் படுக்கையை விட்டு எழவில்லை. பக்கத்திலேயே படுத்திருந்த சுந்தரத்துக்கும் தெரியாமல் அவள் உயிர் பிரிந்திருந்தது.

அந்த இழப்பை எப்படி ஈடு செய்வது என சுந்தரத்துக்குத் தெரியவில்லை. யாரிடம் என்ன சொல்லி எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம் அவருக்குப் புரியவில்லை. யாரிடமும் பேசாமல் கண்ணீரும் விடாமல் நடக்கின்ற எந்த சடங்கிலும் அக்கறை காட்டாமல் அவர் இருந்தார். ஆனால் அன்றிலிருந்து அவருடைய பேச்சும் நடமாட்டங்களும் குறைந்துவிட்டன.

நண்பர் ராமா தன் பிள்ளைகளுடன் போயிருக்க கோலாலம்பூர் போய்விட்டார். எப்பவாவது ஒரு முறை சுந்தரத்தைப் பார்க்க வந்து ஓரிரு நாள் அவர்கள் வீட்டில் தங்கிப் போவார்.

அன்னமும் சுந்தரமும் அந்த வீட்டில் இன்னமும் இருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கைப் பெண்டுலம் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மேலே போகும் போது உற்சாகப் படுவதையும் கீழே இறங்கும் போது கவலைப் படுவதையும் அவர் குறைத்துக் கொண்டார்.

சுந்தரத்துக்குப் புற்று நோய் அறிகுறிகள் ஏதும் பின்னர் வரவே இல்லை.


(முற்றும்)