பொருளடக்கம் பக்கம் செல்க

இராமலிங்க அடிகள் பாடல்கள்

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி பாடல்கள் (3872 - 4614)

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி

39. பொதுநடம் புரிகின்ற பொருள்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3872 அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
அளித்தெனை வளர்த்திட அருளாம்
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
தெய்வமே சத்தியச் சிவமே
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
ஏற்றிய இன்பமே எல்லாப்
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
1
3873 சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
கடவுளே கருணையங் கடலே
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
தனக்கறி வித்ததோர் தயையே
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
2
3874 கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
கற்பங்கள் கணக்கில கடப்ப
நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
நித்திய நிற்குண(258) நிறைவே
அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
அருட்பெருங் கடல்எனும் அரசே
புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே.
3
(258). நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
3875 தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
சத்திய சாத்தியக் கனலே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
நல்கிய ஞானபோ னகமே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
4
3876 அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
அறிவென அறிகின்ற அறிவே
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
துரியநல் நிலத்திலே துலங்கும்
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
செல்வமே சித்தெலாம் புரியும்
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
5
(259). சற்புதர் - நல்லறிவுடையவர்.
3877 தத்துவ பதியே தத்துவம் கடந்த
தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
தமக்குளே சார்ந்தநற் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
பெறல்அரி தாகிய(260) பேறே
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே.
6
(260). பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
3878 மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
விளைவெலாம் காட்டிமெய் வேத
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
நோக்கமே ஆக்கமும் திறலும்
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
நாயகக் கருணைநற் றாயே
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
7
3879 அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
அரும்பெருஞ் சோதியே சுடரே
மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
மருந்தெலாம் பொருந்திய மணியே
உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
8
3880 பரம்பர நிறைவே பராபர வெளியே
பரமசிற் சுகந்தரும் பதியே
வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
வயங்கிய பெருஞ்சுடர் மணியே
கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
கருதிய கருத்துறு களிப்பே
புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
9
3881 வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
கருணைவான் அமுதத்தெண் கடலே(261)
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
ஆனந்த மாம்அனு பவமே
பொற்புறு பதியே அற்புத நிதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
10
(261). தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
3882 தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
தரவல்ல சம்புவே சமயப்
புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
புண்ணியர் நண்ணிய புகலே
வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
11
3883 மூவிரு முடிபின் முடிந்ததோர்(262) முடிபே
முடிபெலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
சத்தியத் தனிநடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே
விளைவெலாம் தருகின்ற வெளியே
பூவியல் அளித்த புனிதசற் குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே
12
(262). முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
3884 வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
விளம்பிய அனுபவ விளைவும்
போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
போனது மாய்ஒளிர் புலமே
ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
விருநிலத் தியல்அருள் ஒளியால்
பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
13
3885 அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
அருள்வடி வெடுத்தெழுந் தருளி
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
நிலைஎலாம் அளித்தமா நிதியே
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
வயங்கநல் வரந்தந்த வாழ்வே
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
14
3886 என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
இதயத்தில் இருக்கின்ற குருவே
அன்புடை அரசே அப்பனே என்றன்
அம்மையே அருட்பெருஞ் சோதி
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
என்னுயிர் நாதனே என்னைப்
பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
15
3887 சத்திய பதியே சத்திய நிதியே
சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே
நித்திய வாழ்வருள் நெறியே
சித்திஇன் புருவே சித்தியின் கருவே
சித்தியிற் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
16
3888 சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
சிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
17
3889 கலைவளர் கலையே கலையினுட் கலையே
கலைஎலாம் தரும்ஒரு கருவே
நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
நித்திய வானமே ஞான
மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
மாபலம் தருகின்ற வாழ்வே
புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
பொதுநடம் புரிகின்ற பொருளே.
18
3890 மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
விளக்கமே விளக்கத்தின் வியப்பே
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
கருணையே கரிசிலாக் களிப்பே
ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
அற்புதக் காட்சியே எனது
பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
19
3891 காரண அருவே காரிய உருவே
காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும்
அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
நாரண தலமே(263) நாரண வலமே
நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
பூரண ஒளிசெய் பூரண சிவமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
20
(263). தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.

40. ஆனந்தானுபவம்

நேரிசை வெண்பா
3892 கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264)
வாணா நினக்கடிமை வாய்த்து.
1
(264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
3893 காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று.
2
3894 மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான்.
3
3895 கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது.
4
3896 கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான்.
5
3897 பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான்.
6
3898 எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
7
3899 கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
8
(265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
3900 கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
தனைஉவந்து கொண்டான் தனை.
9
(266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா.
3901 தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர்.
10
3902 திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர்.
11
3903 என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாதமலர்.
12

41. பரசிவ நிலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3904. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
1
3905 எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
2
3906 தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
3
3907 என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
4
3908 எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
5
3909 இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
6
267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.
3910 சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
7
3911 தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
8
3912 எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
9
3913 சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
10

42. பேரானந்தப் பெருநிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3914. அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
ஆனந்த போகமே அமுதே
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
மன்னும்என் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
தூயவே தாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
1
3915 திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
உவந்தர சளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
2
3916 துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
சோதியுட் சோதியே எனது
மதிவளர் மருந்தே மந்திர மணியே
மன்னிய பெருங்குண மலையே
கதிதரு துரியத் தனிவெளி நடுவே
கலந்தர சாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
3
3917 சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
செல்வமே என்பெருஞ் சிறப்பே
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
திருந்தர சளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
4
3918 உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
மந்திரத் தாற்பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
நிறைந்தர சாள்கின்ற நிதியே
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
5
3919 மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மெய்யறி வானந்த விளக்கே
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
கதிர்நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
பால்அர சாள்கின்ற அரசே
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
6 <
3920 இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
இன்பமே என்னுடை அன்பே
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
வெளிஅர சாள்கின்ற பதியே
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
7
3921 அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
அரும்பெருஞ் சோதியே எனது
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
8
3922 வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மாபெருங் கருணைஎம் பதியே
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
உலகமும் நிறைந்தபே ரொளியே
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
வயங்கும்ஓர் வெளிநடு மணியே
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
9
3923 தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
நண்புகொண் டருளிய நண்பே
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
வயங்கிய தனிநிலை வாழ்வே
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
10

43. திருவடி நிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3924. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
உவப்பிலா அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
றிருந்தென விருந்தன மிடைந்தே
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
தென்பர்வான் திருவடி நிலையே.
1
3925 தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
கண்டனன் திருவடி நிலையே.
2
3926 அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
ஏத்துவன் திருவடி நிலையே.
3
3927 இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
தெரிந்தனன் திருவடி நிலையே.
4
3928 பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
போந்தவான் முடியதாங் கதன்மேல்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
தத்திலே இலங்கிய ததன்மேல்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
தழுவினன் திருவடி நிலையே.
5
3929 மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
கருதுரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
நவின்றனர் திருவடி நிலையே.
6
3930 தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
மன்னிஎங் கணும்இரு பாற்குத்
தகையுறு முதலா வணங்கடை யாகத்
தயங்கமற் றதுவது கருவிச்
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
என்பரால் திருவடி நிலையே.
7
3931 மன்றஓங் கியமா மாயையின் பேத
வகைதொகை விரிஎன மலிந்த
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
உற்றன மற்றவை எல்லாம்
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
நின்றசத் திகளொடு சத்தர்
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
என்பரால் திருவடி நிலையே.
8
3932 பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
பெரியஓங் காரமே முதலா
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
என்றவற் றவண்அவண் இசைந்த
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
மன்அதி காரம்ஐந் தியற்றத்
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
என்பரால் திருவடி நிலையே.
9
3933 பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
என்பரால் திருவடி நிலையே.
10

44. காட்சிக் களிப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3934. அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
1
3935 பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
2
3936 உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
3
3937 உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
மறவானை அறவாழி வழங்கி னானை
வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
இறவானைப் பிறவானை இயற்கை யானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
4
3938 அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
5
3939 செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
கையானை என்னைஎன்றும் கையா தானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
6
3940 மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
மந்திரங்க ளானானை வான நாட்டு
விருந்தானை உறவானை நண்பி னானை
மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
7
3941 ஆன்றானை அறிவானை அழிவி லானை
அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை
முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
8
3942 தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
ஈய்ந்தானை(268) ஆய்ந்தவர்தம் இதயத் தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
9
(268). ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
3943 நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
நின்றானைப் பொன்றாத நிலையி னானை
நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
என்றானை என்றும்உள இயற்கை யானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
10

45. கண்கொளாக் காட்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3944. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
1
3945 விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்(269)
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானேநா னாகி என்றும்
தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என்உயிருக் கின்பா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
2
(269). விரைத்தானை மெய்யே என்னை - பி. இரா.பதிப்பு.
3946 நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
3
3947 சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
காற்றானை வெளியானைக் கனலா னானைக்
கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
4
(270). சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.
3948 சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
5
3949 முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
முளைத்தானை மூவாத முதலா னானைக்
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பி லானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
6
3950 புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு ளானை
அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
7
3951 தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண்காண விளங்கி னானை
மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
8
3952 தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
தானேதா னானானைத் தமிய னேனைக்
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
9
3953 உடையானை அருட்சோதி உருவி னானை
ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
இடையானை என்னாசை எல்லாந் தந்த
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
10

46. இறை திருக்காட்சி

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3954. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அரசை
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியைப்
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
தீபத்தைக் கண்டுகொண் டேனே.
1
3955 துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
என்பொலா மணியை என்சிகா மணியை
என்னிரு கண்ணுள்மா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
எந்தையைக் கண்டுகொண் டேனே.
2
3956 சிதத்திலே(271) ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
பரம்பர வாழ்வைஎம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
மருந்தைமா மந்திரந் தன்னை
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
இறைவனைக் கண்டுகொண் டேனே.
4
(271). 271. சிதம் - ஞானம்
3957 உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
பொருளைஎன் புண்ணியப் பயனைக்
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
குருவைஎண் குணப்பெருங் குன்றை
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
4
3958 புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
பொற்சபை அப்பனை வேதம்
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
ஜோதியைச் சோதியா தென்னை
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
மன்னிய பதியைஎன் வாழ்வை
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
இறைவனைக் கண்டுகொண் டேனே.
5
3959 பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
பதியுமாம் ஒருபசு பதியை
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
நல்கிய கருணைநா யகனை
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
இறைவனை மறைமுடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
6
3960 பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
சாமியைத் தயாநிதி தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான
வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
ஒருவனைக் கண்டுகொண் டேனே.
7
3961 ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
8
3962 என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப்
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
பொருந்திய மருந்தையென் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
9
3963 புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே.
10
3964 ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
உடையஎன் ஒருபெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
தலைவனைக் கண்டுகொண் டேனே.
11
3965 துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
அன்புளே கலந்த தந்தையை என்றன்
ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
இனிதமர்ந் தருளிய இறையை
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
12
3966 நனவினும் எனது கனவினும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
13
3967 கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
ஆவியை ஆவியுட் கலந்த
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
பேசுதற் கரும்பெரும் பேற்றை
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
விளக்கினைக் கண்டுகொண் டேனே.
14
3968 களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக்
களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
துள்ளகத் தூறும்இன் அமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே.
15
3969 சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
சாமியைக் கண்டுகொண் டேனே.
16
3970 ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
ஆகம முடிஅமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக்
காரிய காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்
சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
பொருளினைக் கண்டுகொண் டேனே.
17
3971 சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
மெய்மையைக் கண்டுகொண் டேனே.
18
3972 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
நீதியைக் கண்டுகொண் டேனே.
19
3973 அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதியை உலகக்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
காட்சியைக் கருணையங் கடலை
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
ஒளியையும் உதவிய ஒளியைக்
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
20
3974 சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சமரச சத்திய வெளியைச்
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
21
3975 அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
22
3976 பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
நல்கிய நண்பைநன் னாத
இயமுற வெனது குளநடு நடஞ்செய்
எந்தையை என்னுயிர்க் குயிரைப்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
பொற்புறக் கண்டுகொண் டேனே.
23
3977 கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
வரவுபோக் கற்றசின் மயத்தை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
அன்பினிற் கண்டுகொண் டேனே.
24
3978 மும்மையை எல்லாம் உடையபே ரரசை
முழுதொருங் குணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
வியப்புற அளித்தமெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என்பே
ரன்பனைக் கண்டுகொண் டேனே.
25
3979 கருத்தனை எனது கண்அனை யவனைக்
கருணையா ரமுதெனக் களித்த
ஒருத்தனை என்னை உடையநா யகனை
உண்மைவே தாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
றம்பலத் தருள்நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான
நிலையனைக் கண்டுகொண் டேனே.
26
3980 வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
விளைவையும் விளைக்கவல் லவனை
அத்தெலாங்(272) காட்டும் அரும்பெறல் மணியை
ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
சபைத்தனித் தலைவனைத் தவனைச்
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
27
(272). அத்து - செந்நிறம். முதற்பதிப்பு.
3981 உத்தர ஞான சித்திமா புரத்தின்
ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண் டேனே.
28
3982 புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
29
3983 பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
பரமனை என்னுளே பழுத்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
30

47. உளம் புகுந்த திறம் வியத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3984. வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
1
3985 படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
2
3986 உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
3
3987 தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
4
3988 இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
5
3989 உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
6
3990 மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில்
மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
7
3991 சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
8
3992 பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற்(273) கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்(274) அரசே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
9
(273). உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
(274). பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
3993 கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
10

48. வரம்பில் வியப்பு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3994. பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
புகலரும் பெரியஓர் நிலையில்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி
இயற்றலே ஆதிஐந் தொழிலும்
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
அவன்தனை மறுப்பவர் யாரே.
1
3995 மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
மன்னுருத் திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
குறுபெருந் தொழில்பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
அவன்தனை மறுப்பவர் யாரே.
2
3996 தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
ஒருதனிப் பெரும்பதி உவந்தே
புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
பொறுத்தருட் பூரண வடிவாய்
என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
எந்தையைத் தடுப்பவர் யாரே.
3
3997 பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
பாலதோ பால்உறா அதுவோ
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல்வகை யாதோ எனமறை முடிகள்
விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
வள்ளலைத் தடுப்பவர் யாரே.
4
3998 வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
வருபர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
பராபர உணர்ச்சியும் பற்றா
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
5
3999 படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
பரம்பர ஒளிஎலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
6
4000 அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
பேசநின் றோங்கிய பெரியோன்
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
கருணையா ரமுதளித் துளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
வள்ளலைத் தடுப்பவர் யாரே.
7
4001 உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே.
8
4002 அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
தையகோ ஐயகோ அறிவின்
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
திருவுளம் தடுப்பவர் யாரே.
9
4003 கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
கொள்கையாய்க் கொள்கையோ டளவா
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
வண்மையைத் தடுப்பவர் யாரே.
10

49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4004. அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
1
4005 திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
2
4006 பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
3
4007 மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
4
4008 மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
5
4009 ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
6
4010 திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
7
4011 கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
8
4012 நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
9
4013 மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.
10

50. ஆண்டருளிய அருமையை வியத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4014. அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே.
1
4015 அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே.
2
4016 எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே.
3
4017 அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
அம்பலத் தெம்பிரான் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
நீடும்என் நேயனே என்கோ
பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
பெரியரிற் பெரியனே என்கோ
இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
கென்னைஆண் டருளிய நினையே.
4
4018 அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
அன்பிலே நிறைஅமு தென்கோ
சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
மன்னும்என் வாழ்முதல் என்கோ
இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
என்னைஆண் டருளிய நினையே.
5
4019 மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
மயக்கநீத் தருள்மருந் தென்கோ
பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
பதச்சுவை அனுபவம் என்கோ
சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே.
6
4020 அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
அறிவிலே அறிவறி வென்கோ
இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
என்னுயிர்த் துணைப்பதி என்கோ
வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
மன்னும்அம் பலத்தர சென்கோ
என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
என்னைஆண் டருளிய நினையே.
7
4021 தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
சர்க்கரைக் கட்டியே என்கோ
அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
அம்பலத் தாணிப்பொன் என்கோ
உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
உள்ளொளிக் குள்ளொளி என்கோ
இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
என்னைஆண் டருளிய நினையே.
8
4022 மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
குணப்பெருங் குன்றமே என்கோ
பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
பெரியஅம் பலத்தர சென்கோ
இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே.
9
4023 என்உளம் பிரியாப் பேர்ஒளி என்கோ
என்உயிர்த் தந்தையே என்கோ
என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
என்உயிர்த் தலைவனே என்கோ
என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
என்னுடை நண்பனே என்கோ
என்ஒரு(275) வாழ்வின் தனிமுதல் என்கோ
என்னைஆண் டருளிய நினையே.
10
(275).என்பெரு - பி. இரா. பதிப்பு.

51. இறைவனை ஏத்தும் இன்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4024. கருணைமா நிதியே என்னிரு கண்ணே
கடவுளே கடவுளே என்கோ
தருணவான் அமுதே என்பெருந் தாயே
தந்தையே தந்தையே என்கோ
தெருள்நிறை மதியே என்குரு பதியே
தெய்வமே தெய்வமே என்கோ
அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ நின்றனை அறிந்தே.
1
4025 ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
வெட்டியே என்கோ வெட்டியில்(276) எனக்கு
விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
பெரியவர் வைத்ததோர் தங்கக்
கட்டியே என்கோ அம்பலத் தாடும்
கருணையங் கடவுள்நின் றனையே.
2
(276) கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
4026 துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
சோதியுட் சோதியே என்கோ
அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
அம்மையே அப்பனே என்கோ
இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
என்உயிர்க் கின்அமு தென்கோ
என்பொலா மணியே என்கணே என்கோ
என்னுயிர் நாதநின் றனையே.
3
4027 கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
ஒருதனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
நிறைஅருட் சோதிநின் றனையே.
4
4028 தாயனே எனது தாதையே ஒருமைத்
தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
பெருந்தகைப் பெரும்பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
சித்தெலாம் வல்லசித் தென்கோ
தூயனே எனது நேயனே என்கோ
சோதியுட் சோதிநின் றனையே.
5
4029 அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
ஆனந்தத் தனிமலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
கடையனேன் உடையநெஞ் சகமாம்
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
சோதியுட் சோதிநின் றனையே.
6
4030 தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
சர்க்கரை அமுதமே என்கோ
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
முகநகைக் கணவனே என்கோ
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
புணர்ந்தஓர் பூவையே என்கோ
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
அம்பலத் தாடிநின் றனையே.
7
4031 தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
ஓங்கிய ஒருமையே என்கோ
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலத்தவ நினையே.
8
4032 யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
ஓங்கிய காட்சியே என்கோ
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
இசைந்தபே ரின்பமே என்கோ
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
சார்ந்தசற் குருமணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
9
4033 இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்(277)
வயங்கிய வான்பொருள் என்கோ
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
செய்ததோர் சித்தனே என்கோ
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
களித்தளித் தருளிய நினையே.
10
(277) நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.

52. பாமாலை ஏற்றல்

நேரிசை வெண்பா
4034. நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
நல்லான்தன் தாட்கே நயந்து.
1
4035 சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
சேமநட ராஜன் தெரிந்து.
2
4036 ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார
விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
எந்தைநட ராஜன் இசைந்து.
3
4037 இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க
என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு
நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
4
4038 என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
சாலையிலே வாஎன்றான் தான்.
5
4039 என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
6
4040 முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
தாரா வரங்களெலாம் தந்து.
7
4041 பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
தெல்லாம் திருவருட்சீ ரே.
8
4042 பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
9
4043 நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும்
ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
10
4044 எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
11
4045 ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
12

53. உத்தரஞானசிதம்பர மாலை

கட்டளைக் கலித்துறை
4046. அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
1
4047 இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
2
4048 உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
3
4049 பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
4
4050 ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
5
4051 எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
6
4052 குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
7
4053 கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
8
4054 காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
9
4055 சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார்
நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
10
4056 ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
11

54. செய்பணி வினவல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4057. அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத்
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே.
1
4058 ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
2
4059 அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச்
சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
3
4060 பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
4
4061 ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
5
4062 இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
6
4063 மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
7
4064 ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
8
4065 ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
9
4066 மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
10
4067 . ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
11
4068 பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே.278
12
4067, 4068. இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில்
இருப்பதாகக் கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார்.
பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.
13

55. ஆன்ம தரிசனம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4069. திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
உளஎலாம் ஆங்கவன் தனக்கே
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
செயலிலேன் எனநினைத் திருந்தேன்
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
1
4070 நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
நினைப்பற நின்றபோ தெல்லாம்
எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
என்செயல் என்னஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
2
4071 களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
தெளித்தனன் செய்கைவே றறியேன்
ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
3
4072 உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென் குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
4
4073 களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன்
உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன்
கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
5
4074 திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும் சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன் உலகுறு மாயைக்
கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான் அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
6
4075 சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
7
4076 பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச்
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
8
4077 ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும்
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ இயல்அருட் சித்திகள் எனைவந்
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
9
4078 கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற் றோங்குதல் என்றுவந் துறுமோ
வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
10

56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4079 அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
1
4080 ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத(279) அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
2
(279). எய்யாத - அறியாத. முதற்பதிப்பு.
4081 அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
3
4082 அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
4
4083 அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
5
4084 அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டம்எலாம் பிண்டம்எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
6
4085 அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
7
4086 அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
8
4087 அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
9
4088 அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
10
4089 அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி(280) அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
11
(280). கமை - பொறுமை. முதற்பதிப்பு.

57. அருள் விளக்க மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4090 அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
1
4091 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
2
4092 இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
தூயதிரு அடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
3
4093 ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
4
4094 மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
5
4095 கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
6
4096 கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
7
4097 கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
8
4098 அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
9
4099 நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
10
4100 நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
11
4101 தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
12
4102 உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி
இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
13
4103 நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
கோவேஎன் கணவாஎன் குரவாஎன்(281) குணவா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
14
(281). எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4104 கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
15
4105 கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை
வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
16
4106 தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
17
4107 மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
18
4108 கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
19
4109 உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
20
4110 நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
தேகமும்உள் உயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
21
4111 எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
22
4112 சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே
23
4113 அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
24
4114 அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
25
4115 பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
26
4116 பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
உற்றொளிகொண் டோ ங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
27
4117 ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
28
4118 வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
29
4119 பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
30
4120 மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
31
4121 சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
32
4122 சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
33
4123 நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
34
4124 மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
35
4125 விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
36
4126 தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும்
மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
37
4127 வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
38
4128 கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
39
4129 காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
40
4130 திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
41
4131 கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
42
4132 தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
43
4133 தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்(282) தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
44
(282). தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
4134 ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
45
4135 தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
46
4136 ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
47
4137 இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
48
4138 நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
49
4139 நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
கிளர்ந்தொளிகொண் டோ ங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
50
4140 நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்(283) மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
51
(283). முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க., மடிமேல் - பி. இரா., ஆ. பா.
4141 மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
பரநாத நாட்டரசு பாலித்த பதியே
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
52
4142 இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
53
4143 கையாத தீங்கனியே கயக்காத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
54
4144 எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.
55
4145 சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
56
4146 சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
57
4147 நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித்
தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
58
4148 திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
59
4149 என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
60
4150 மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
61
4151 நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
62
4152 விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பேர் ஒளியே
எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
63
4153 கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
64
4154 மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
65
4155 என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
66
4156 தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
67
4157 பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
68
4158 வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
69
4159 கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
70
4160 உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த்(284) தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
71
(284). மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.
4161 வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
72
4162 கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
73
4163 தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
74
4164 அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
75
4165 வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த
பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
76
4166 ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
77
4167 பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
78
4168 மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
79
4169 அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
80
4170 சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
81
4171 பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
82
4172 உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
83
4173 கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
84
4174 நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
85
4175 எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
86
4176 இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
87
4177 தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
88
4178 நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
89
4179 தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
90
4180 ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
91
4181 காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
92
4182 சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
93
4183 ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
94
4184 கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
95
4185 அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
96
4186 எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
மெய்த்துணையாம் திருவருட்பேர் அமுதம்மிக அளித்து
வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
97
4187 இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
அதிசயிக்கத் திருஅமுதும் அளித்தபெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
98
4188 குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
99
4189 தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி
அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
100

58. நற்றாய் கூறல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4190. காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
உவந்திலேன் உண்மையீ தென்றாள்
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
மாதய வுடைய வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
1
4191 மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
உயிர்தரி யாதெனக் கென்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
கடலமு தளித்தருள் என்றாள்
வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
2
4192 அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
அன்பினால் அணைத்தருள் என்றாள்
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
படமுடி யாதெனக் கென்றாள்
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
3
4193 பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
சற்றுநான் தரித்திடேன் என்றாள்
மாமிகு கருணை வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
4
4194 அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
ஆசைமேற் பொங்கிய தென்றாள்
தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
சொலமுடி யாதெனக் கென்றாள்
மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
5
4195 தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
தருகநற் றருணம்ஈ தென்றாள்
கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
குறையுமோ குறைந்திடா தென்றாள்
நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
ஞாயமோ நண்பனே என்றாள்
வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
6
4196 பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
பொங்கிய தாசைமேல் என்றாள்
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
என்னள வன்றுகாண் என்றாள்
கொன்செயும் உலகர் என்னையும் உனது
குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
7
4197 மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
மேவிலை என்னையோ என்றாள்
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
வைத்தல்உன் மரபல என்றாள்
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
8
4198 ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
நம்பினேன் நயந்தருள் என்றாள்
குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
குழியிலே இருந்திடேன் என்றாள்
மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
9
4199 ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
அன்பினால் கூடினன் என்றாள்
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
கூடுதல் கூடுமோ என்றாள்
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
10

59. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4200. அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
1
4201 அங்கலிட்ட(285) களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
2
(285). அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப்
பொருள்கொள்க - முதற்பதிப்பு. இருள் - நஞ்சு.
4202 பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
3
4203 புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
4
4204 தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள்
இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.
5
4205 அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
6
4206 கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
7
4207 ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
8
4208 என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
9
4209 அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
10

60. தலைவி வருந்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4210. பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
1
4211 அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
2
4212 கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.
3
4213 எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
4
4214 இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
5
4215 வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
6
4216 அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்தேன்
அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
7
4217 பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
வள்ளல்நட ராயர்திரு உள்ளமறிந் திலனே.
8
4218 கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
9
4219 மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழிமுகம் புலர்ந்தாள்
எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
10
4220 கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
11
4221 மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
12
4222 கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
13
4223 காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
14
4224 கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.
15
4225 கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
16
4226 மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
17
4227 தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
18
4228 தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
19
4229 அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
20
4230 மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.
21
4231 பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
22
4232 மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
23
4233 கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
24

61. ஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும்

நேரிசை வெண்பா
4234. அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே
ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
1
4235 நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
மன்றொன்று வானை மகிழ்ந்து.
2
4236 ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
என்றே எனக்குநினக் கும்.
3
4237 கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையான் கால்மலர்க்குக்
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணீர்கொண் - டுய்த்தலைமேல்
காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
காணாயே நெஞ்சே களித்து.
4
4238 கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது.
5
4239 அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
நலமே வதிலேநின் னாவூர் திருவம்
பலமேவக் காட்டும் பரிசு.
6
4240 நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
7
4241 நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
அடிப்பாவை யும்(286)வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
8
(286). அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,
4242 பூமி பொருந்து புரத்தே(287) நமதுசிவ
காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
களித்தான் அவன்றான் களித்து.
9
(287). பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம். பூமி - பார், பொருந்து - வதி.

62. சிவபதி விளக்கம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4243. உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
1
4244 ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.
2
4245 அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே
படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே.
3
4246 சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
4
4247 திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
5
4248 நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
6
4249 தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.
7
4250 நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
8
4251 அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
9
4252 நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.
10

63. ஞானோபதேசம்

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்
4253. கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
1
4254 வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
2
4255 அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
3
4256 தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
4
4257 துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
5
4258 என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
6
4259 திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
7
4260 தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
8
4261 பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
9
4262 நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
10

64. ஆரமுதப் பேறு

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்
4263. விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
1
4264 விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
2
4265 துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
3
4266 மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
4
4267 பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர்
அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
5
4268 முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
6
4269 தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
7
4270 ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
8
4271 மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
9
4272 முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
10
4273 பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
11
4274 தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
12
4275 பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே
செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே
கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய்
அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே.
13

65. உபதேச வினா

கலித்தாழிசை
4276. வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.
1
4277 தொம்பத உருவொடு தத்பத வெளியில்
தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
எம்பதமாகி இசைவாயோ தோழி
இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
2
4278 சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
என்மய மாகி இருப்பாயோ தோழி
இச்சை மயமாய் இருப்பாயோ(288) தோழி.
3
(288). மயமாய்ப் பொருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
4279 நவநிலை மேற்பர நாதத் தலத்தே
ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
மவுனத் திருவீதி வருவாயோ தோழி
வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.
4
4280 ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
ஏறி இழிந்திங் கிறப்பாயோ(289) தோழி.
5
(289). இழிந்திங் கிருப்பாயோ - முதற்பதிப்பு.
4281 வகார வெளியில் சிகார உருவாய்
மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
விகார உலகை வெறுப்பாயோ தோழி
வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.
6
4282 நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
துட்டநெறியில் கெடுவாயோ தோழி.
7
4283 அறிவில் அறிவை அறியும் பொதுவில்
ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.
8
4284 என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்
இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி
நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.
9
4285 துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
காணாது போய்ப்பழி(290) பூண்பாயோ தோழி.
10
(290) பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,
4286 தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும்
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
குறியா துலகில் வெறிப்பாயோ தோழி
11

66. நெஞ்சொடு நேர்தல்

கலித்தாழிசை
4287. அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே(291)
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன் றோ.
1
(291) காணவே - பி. இரா., பதிப்பு
4288 வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள்.
2
4289 காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
3
4290 ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
4
4291 தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய்.
5
4292 கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
பையுள்(292) உனக்கென்னை யோ - நெஞ்சே
பையுள் உனக்கென்னை யோ.
6
(292). பையுள் - வருத்தம். முதற்பதிப்பு.
4293 என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னைகண் டாய்.
7
4294 நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
ஏன்பற்று வாயென்ப தார்.
8
4295 தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
தத்துவ முன்னுவ தேன்.
9
4296 ஒக்க அமுதத்தை உண்டோ ம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய்.
10

67. அஞ்சாதே நெஞ்சே

சிந்து

பல்லவி
4297. அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
1
கண்ணிகள்
4298 வஞ்சமி லார்நாம்(293) வருந்திடில் அப்போதே
அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 1
(293). வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா. பதிப்பு.
4299 துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 2
4300 மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 3
4301 இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 4
4302 சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 5
4303 சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 6
4304 தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 7
4305 வன்பர் மனத்தை மதியா தவர்நம
தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 8
4306 தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 9
4307 நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 10
4308 தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்
அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 11
4309 பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 12
4310 காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 13
4311 நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 14
4312 இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 15
4313 உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 16
4314 வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 17
4315 எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 18
4316 நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 19
4317 செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 20
4318 விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 21
4319 செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே 22
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே
அஞ்சா தே

68. ஆடிய பாதம்

சிந்து

பல்லவி
4320. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
1
கண்ணிகள்
4321 பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர்(294) நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்
ஆடிய 1
(294) மாதவன் - ஆ. பா. பாதிப்பு.
4322 தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம்.
ஆடிய 2
4323 ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம்.
ஆடிய 3
4324 நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம்.
ஆடிய 4
4325 எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்
ஆடிய 5
4326 தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம்.
ஆடிய 6
4327 துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம்.
ஆடிய 7
4328 சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்.
ஆடிய 8
4329 ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்.
ஆடிய 9
4330 ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
அபயர்(295) எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம்.
ஆடிய 10
(295) ஐயர் - ச. மு. க. பதிப்பு.
4331 ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம்.
ஆடிய 11
4332 தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம்.
ஆடிய 12
4333 எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்.
ஆடிய 13
4334 ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்.
ஆடிய 14
4335 அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம்.
ஆடிய 15
4336 நாரண னாதியர் நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம்.
16
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.

69. அபயம் அபயம்

சிந்து

பல்லவி
4337. அபயம் அபயம் அபயம். 1
கண்ணிகள்
4338 உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே(296)
அபயம் 1
(296) பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.
4339 எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே
அபயம் 2
4340 தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே
அபயம் 3
4341 ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே
அபயம் 4
4342 வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே
அபயம் 5
4343 நாரா யணனொடு நான்முக னாதியர்
பாரா யணம்செயும் பதும பதத்திற்கே
அபயம் 6
4344 அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே
அபயம் 7
4345 குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே
அபயம் 8
4346 செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே
அபயம் 9
4347 வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே
அபயம் 10
4348 எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே
அபயம் 11
4349 மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே
அபயம் 12
4350 நாத முடியில்/(297) நடம்புரிந் தன்பர்க்குப்
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே
அபயம் 1313
(297) முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4351 உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே
அபயம் 14
4352 சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே
அபயம் 15
அபயம் அபயம் அபயம்.

70. அம்பலவாணர் வருகை

சிந்து

பல்லவி
4353. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர்.
1
கண்ணிகள்
4354 அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
அம்பல வாணரே வாரீர்
அன்புடை யாளரே வாரீர்.
வாரீர் 1
4355 அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
அந்தண ரேஇங்கு வாரீர்
அம்பலத் தையரே வாரீர்.
வாரீர் 2
4356 அன்புரு வானவர் இன்புற உள்ளே
அறிவுரு வாயினீர் வாரீர்
அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர்.
வாரீர் 3
4357 அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும்பெருஞ் சித்தரே வாரீர்
அற்புத ரேஇங்கு வாரீர்.
வாரீர் 4
4358 அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
அன்பனு மாயினீர் வாரீர்
அங்கண ரேஇங்கு வாரீர்.
வாரீர் 5
4359 அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
அம்பல வாணரே வாரீர்
செம்பொரு ளாயினீர் வாரீர்.
வாரீர் 6
4360 அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
அன்பருக் கன்பரே வாரீர்
இன்பம் தரஇங்கு வாரீர்.
வாரீர் 7
4361 அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
அடிக்கம லத்தீரே வாரீர்
நடிக்கவல் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 8
4362 அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
அளித்திட வல்லீரே வாரீர்
களித்தென்னை ஆண்டீரே வாரீர்.
வாரீர் 9
4363 அம்பர மானசி தம்பர நாடகம்
ஆடவல் லீர்இங்கு வாரீர்
பாடல்உ வந்தீரே(298) வாரீர்.
வாரீர் 10
(298) பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4364 ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
ஆனந்த நாடரே வாரீர்.
வாரீர் 11
4365 ஆகம வேதம் அனேக முகங்கொண்
டருச்சிக்கும் பாதரே வாரீர்
ஆருயிர் நாதரே வாரீர்.
வாரீர் 12
4366 ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
ஆரிய ரேஇங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர்
. வாரீர் 13
4367 ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
ஆரிய ரேஇங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர்.
வாரீர் 14
4368 ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
ஆனந்த ரேஇங்கு வாரீர்
ஆடல்வல் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 15
4369 ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
தமுதம் அளித்தீரே வாரீர்
ஆடிய பாதரே வாரீர்.
வாரீர் 16
4370 ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர்.
வாரீர் 17
4371 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
ஜோதிய ரேஇங்கு வாரீர்
வேதிய ரேஇங்கு வாரீர்.
வாரீர் 18
4372 ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
கூடவல் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 19
4373 ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
ஆண்டவ ரேஇங்கு வாரீர்
தாண்டவ ரேஇங்கு வாரீர்.
வாரீர் 20
4374 ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
ஆணவம் போக்கினீர் வாரீர்
காணவந் தேன்இங்கு வாரீர்.
வாரீர் 21
4375 இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
இறையவ ரேஇங்கு வாரீர்
இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர்.
வாரீர் 22
4376 இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
இதுதரு ணம்இங்கு வாரீர்
இன்னமு தாயினீர் வாரீர்.
வாரீர் 23
4377 இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
இருக்கின்ற நாதரே வாரீர்
இருக்கின் பொருளானீர் வாரீர்.
வாரீர் 24
4378 இரவும் பகலும் இதயத்தி லூறி
இனிக்கும் அமுதரே வாரீர்
இனித்தரி யேன்இங்கு வாரீர்.
வாரீர் 25
4379 இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
இதுதரு ணம்இங்கு வாரீர்
இருமையும் ஆயினீர் வாரீர்.
வாரீர் 26
4380 இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
கிதுதரு ணம்இங்கு வாரீர்
இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்
27
4381 இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
இத்தரு ணம்இங்கு வாரீர்
இதநடஞ் செய்கின்றீர் வாரீர்.
வாரீர் 28
4382 இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
இதுஎன் றளித்தீரே வாரீர்
இதயத் திருந்தீரே வாரீர்.
வாரீர் 29
4383 இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
எங்கும் நிறைந்தீரே வாரீர்
இந்தெழில் வண்ணரே வாரீர்.
வாரீர் 30
4384 இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
ஏறவைத் தீர்இங்கு வாரீர்
இறுதியி லீர்இங்கு வாரீர்.
வாரீர் 31
4385 ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
கின்பமும் ஆயினீர் வாரீர்
அன்பருக் கன்பரே வாரீர்.
வாரீர்32
4386 ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
உதயச் சுடரினீர் வாரீர்.
வாரீர் 33
4387 ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
இன்புறச் செய்கின்றீர் வாரீர்
வன்பர்க் கரியீரே வாரீர்.
வாரீர் 34
4388 ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
கெட்டா திருந்தீரே வாரீர்
நட்டார்க் கெளியீரே வாரீர்.
வாரீர்35
4389 ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
டேசரே நீர்இங்கு வாரீர்
நேசரே நீர்இங்கு வாரீர்.
வாரீர் 36
4390 ஈசர் பலிக்குழல்(299) நேசர்என் றன்பர்கள்
ஏசநின் றீர்இங்கு வாரீர்
நாசமில் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 37
(299) ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
4391 ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
இயம்பநின் றீர்இங்கு வாரீர்
வயந்தரு வீர்இங்கு வாரீர்.
வாரீர் 38
4392 ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
கீதல்செய் வீர்இங்கு வாரீர்
ஓதரி யீர்இங்கு வாரீர்.
வாரீர் 39
4393 ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
றீடணை யீர்இங்கு வாரீர்
ஆடவல் லீர்இங்கு வாரீர்.
வாரீர்40
4394 ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
ஆண்டவ ரேஇங்கு வாரீர்.
வாரீர் 41
4395 உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
குள்ள துரைசெய்தீர் வாரீர்
வள்ளல் விரைந்திங்கு வாரீர்.
வாரீர் 42
4396 உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
என்றும்நல் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 43
4397 உறவும் பகையும் உடைய நடையில்
உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
பிறவுநண் ணேன்இங்கு வாரீர்.
வாரீர் 44
4398 உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
உள்ளத் திருந்தீரே வாரீர்
விள்ளற் கரியீரே வாரீர்.
வாரீர் 45
4399 உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
உய்யவல் லேன்இங்கு வாரீர்
செய்யவல் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 46
4400 உடையவ ரார்இக் கடையவ னேனுக்
குடையவ ரேஇங்கு வாரீர்
சடையவ ரே(300) இங்கு வாரீர்.
வாரீர்47
(300) தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4401 உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
இறங்கமாட் டேன்இங்கு வாரீர்.
வாரீர் 48
4402 உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
துண்டி விரும்பினேன் வாரீர்
உண்டி தரஇங்கு வாரீர்.
வாரீர் 49
4403 உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
உத்தம ரேஇங்கு வாரீர்
உற்ற துணையானீர் வாரீர்.
வாரீர் 50
4404 உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
குற்றவர் மற்றிலை வாரீர்
உற்றறிந் தீர்இங்கு வாரீர்.
வாரீர் 51
4405 ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
மோன நடேசரே வாரீர்
ஞான நடேசரே வாரீர்.
வாரீர் 52
4406 ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
வோருமில் லீர்இங்கு வாரீர்
யாருமில் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 53
4407 ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
வீறுடை யீர்இங்கு வாரீர்
நீறுடை யீர்இங்கு வாரீர்.
வாரீர் 54
4408 ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
ஆன்றவ ரேஇங்கு வாரீர்.
வாரீர் 55
4409 ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
தேற்றம் அருள்செய்வீர் வாரீர்.
வாரீர் 56
4410 ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
ஆடல்நல் லீர்இங்கு வாரீர்.
வாரீர் 57
4411 ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
ஆக்க மடுத்தீரே வாரீர்
தூக்கம் தவிர்த்தீரே வாரீர்.
வாரீர் 58
4412 ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
றோமை அறிவித்தீர் வாரீர்
சேமஞ் செறிவித்தீர் வாரீர்.
வாரீர் 59
4413 ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
யோகம் கொடுத்தீரே வாரீர்
போகம் கொடுத்தீரே வாரீர்.
வாரீர் 60
4414 ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
ஓதிய நாதரே வாரீர்
ஆதிஅ னாதியீர் வாரீர்.
வாரீர் 61
4415 என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
என்குறை என்முன்னீர் வாரீர்
தன்குறை இல்லீரே வாரீர்.
வாரீர் 62
4416 என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
இன்னுயிர் ஆயினீர் வாரீர்
என்னுயிர் நாதரே வாரீர்.
வாரீர் 63
4417 என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
என்கண் ணனையீரே வாரீர்
மின்கண் ணுதலீரே வாரீர்.
வாரீர் 64
4418 எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
சொல்லா நிலையினீர் வாரீர்.
வாரீர் 65
4419 எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
எட்டும் படிசெய்தீர் வாரீர்
எட்டுரு வாயினீர் வாரீர்301.
வாரீர்66
(301) எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா.
எட்டுரு - அஷ்டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத `அஒ ஆகும்)
அகர வடிவம். எட்டுரு - அரு. ச. மு. க
4420 என்று கண்டாய்இது(302) நன்றுகொண் டாளுக
என்றுதந் தீர்இங்கு வாரீர்
அன்றுவந் தீர்இன்று வாரீர்.
வாரீர் 67
(302) கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4421 எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
இச்சம யம்இங்கு வாரீர்
மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்.
வாரீர் 68
4422 என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
இன்பால் பெறுகென்றீர் வாரீர்
தென்பால் முகங்கொண்டீர் வாரீர்.
வாரீர் 69
4423 எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
திச்சைகண் டீர்இங்கு வாரீர்
அச்சம்த விர்த்தீரே வாரீர்.
வாரீர் 70
4424 எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
எண்ணம் எனக்கில்லை வாரீர்
வண்ணம் அளிக்கின்றீர் வாரீர்.
வாரீர் 71
4425 ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
பாராய ணம்செய்வீர் வாரீர்
ஊராயம் ஆயினீர் வாரீர்.
வாரீர் 72
4426 ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
ஏம சபேசரே வாரீர்
சோம சிகாமணி வாரீர்.
வாரீர் 73
4427 ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
ஏதது சொல்லுவீர் வாரீர்
ஈதல் உடையீரே வாரீர்.
வாரீர் 74
4428 ஏக பராபர யோக வெளிக்கப்பால்
ஏக வெளிநின்றீர் வாரீர்
ஏகர் அனேகரே வாரீர்.
வாரீர் 75
4429 ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
ஏறவைத் தீர்இங்கு வாரீர்
தேறவைத் தீர்இங்கு வாரீர்.
வாரீர் 76

4430
ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
தேகாந்தம் இல்லீரே வாரீர்.
வாரீர் 77
4431 ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
றேகாத லாற்சொன்னீர் வாரீர்
வேகாத காலினீர் வாரீர்.
வாரீர்78
4432 ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
ஏடாஎன் றீர்இங்கு வாரீர்
ஈடாவார் இல்லீரே வாரீர்.
வாரீர் 79
4433 ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
ஈசான மேலென்றீர் வாரீர்
ஆசாதி இல்லீரே வாரீர்.
வாரீர் 80
4434 ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
ஆனின்பால் ஆடுவீர் வாரீர்.
வாரீர் 81
4435 ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்
இந்து சிகாமணி வாரீர்.
வாரீர் 82
4436 ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
ஐயம் தவிர்த்தீரே வாரீர்
மெய்யம் பலத்தீரே வாரீர்.
வாரீர் 83
4437 ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
தையர் தொழநின்றீர் வாரீர்
துய்யர் உளநின்றீர் வாரீர்.
வாரீர் 84
4438 ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
றைவணர் ஏத்துவீர் வாரீர்
பொய்வணம் போக்குவீர் வாரீர்.
வாரீர் 85
4439 ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
நன்றேநின் றீர்இங்கு வாரீர்.
வாரீர் 86
4440 ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
ஒப்பாரி அல்லகாண் வாரீர்
முப்பாழ் கடந்தீரே வாரீர்
. வாரீர் 87
4441 ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
ஒத்த இடங்காட்ட வாரீர்(303)
சித்த சிகாமணி வாரீர்.
வாரீர் 88
(303) 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை
வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ள மில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு
மறப்பு அற்ற இடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,' என்பது ச. மு. க. குறிப்பு.
இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
4442 ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
எட்டுக் குணத்தீரே வாரீர்.
வாரீர் 89
4443 ஒருமை நிலையில் இருமையும் தந்த
ஒருமையி னீர்இங்கு வாரீர்
பெருமையி னீர்இங்கு வாரீர்.
வாரீர் 90
4444 ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
பெண்மை(304) இடங்கொண்டீர் வாரீர்.
வாரீர் 91
(304) வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
4445 ஓங்கார நாடகம் பாங்காகச்(305) செய்கின்ற
ஓங்கார நாடரே வாரீர்
ஆங்கார நீக்கினீர் வாரீர்.
வாரீர் 92
(305) பாங்காரச் - பி. இரா.
4446 ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
ஓங்கு நடேசரே வாரீர்
பாங்குசெய் வீர்இங்கு வாரீர்.
வாரீர் 93
4447 ஓசையின் உள்ளேஓர் ஆசை(306) உதிக்கமெல்(307)
ஓசைசெய் வித்தீரே வாரீர்
பாசம் அறுத்தீரே வாரீர்.
வாரீர் 94
(306) ஓசை - பிரதிபேதம். ஆ. பா.
307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4448 ஓரா துலகினைப் பாரா திருநினக்
கோரா வகைஎன்றீர் வாரீர்
பேரா நிலைதந்தீர் வாரீர்.
வாரீர் 95
4449 ஓடாது மாயையை நாடாது நன்னெறி
ஊடா திருஎன்றீர் வாரீர்
வாடா திருஎன்றீர் வாரீர்.
வாரீர்96
4450 ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
ஓலக்கங் காட்டினீர் வாரீர்
காலக் கணக்கில்லீர் வாரீர்.
வாரீர் 97
4451 ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
யூடத்தைக் காட்டினீர் வாரீர்
வேடத்தைப் பூட்டினீர் வாரீர்.
வாரீர் 98
4452 ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
ஓமத்தன்(308) ஆக்கினீர் வாரீர்
சாமத்த(309) நீக்கினீர் வாரீர்.
வாரீர் 99
(308) ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
4453 ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
ஊமென்று(310) காட்டினீர் வாரீர்
நாமென்று நாட்டினீர் வாரீர்.
வாரீர்100
(310) ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
4454 ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர்.
வாரீர் 101
4455 கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
கடல்பொங்கு கின்றது வாரீர்
உடல்தங்கு கின்றது வாரீர்.
வாரீர் 102
4456 கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
கண்மணி யீர்இங்கு வாரீர்
உண்மணி யீர்இங்கு வாரீர்.
வாரீர் 103
4457 கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்
காரண ரேஇங்கு வாரீர்
பூரண ரேஇங்கு வாரீர்.
104
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர்.

71. அம்பலவாணர் ஆடவருகை

சிந்து

பல்லவி
4458. ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
1
கண்ணிகள்
4459 தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்
ஆடவா ரீர் 1
4460 திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர்2
4461 வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 3
4462 இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 4
4463 ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 5
4464 சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 6
4465 அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 7
4466 பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 8
4467 கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 9
4468 நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 10
4469 என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
என்னுடைஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
ஆடவா ரீர் 11
ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.

72. அம்பலவாணர் அணையவருகை

சிந்து

பல்லவி
4470. அணையவா ரீர் என்னை அணையவா ரீர்
அணிவளர்(311)சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
1
(311) அணிகிளர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
கண்ணிகள்
4471 இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 1
4472 உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர்
கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
கண்ணனைய காதலரே அணையவா ரீர்
அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
இலகுசபா பதியவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 2
4473 பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர்
மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்
மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர்
விதுவின்அமு தானவரே அணையவா ரீர்
மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர்
இதுதருணம் இறையவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 3
4474 வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 4
4475 சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்
பொய்யாத வாசகரே அணையவா ரீர்
இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 5
4476 சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 6
4477 அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 7
4478 அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 8
4479 கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்
கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்
அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்
தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்
சத்தியரே நித்தியரே அணையவா ரீர்
இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 9
4480 சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 10
4481 கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
அணையவா ரீர் 11
அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
அணிவளர்(312) சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
(312) அணிகிளர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.

73. வருவார் அழைத்துவாடி

சிந்து

பல்லவி
4482. வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
1
பல்லவி எடுப்பு
4483 திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்
வருவார் 1
கண்ணிகள்
4484 சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே
வருவார் 1
4485 இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை(313)என்றுசொன்னால்
வருவார் 2
(313) உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4486 மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
வருவார் 3
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.

74. என்ன புண்ணியம் செய்தேனோ

சிந்து

பல்லவி
4487. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.
1
பல்லவி எடுப்பு
4488 மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே.
என்ன 1
கண்ணிகள்

4489
பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே.
என்ன 1
4490 பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே.
என்ன 2
4491 எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே.
என்ன 3
4492 ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே.
என்ன 4
4493 அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே.
என்ன 5
4494 ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே.
என்ன 6
4495 பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
என்ன 7
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.

75. இவர்க்கும் எனக்கும்

சிந்து

பல்லவி
4496. இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
என்றும் தீரா வழக்குக் காண டி.
1
பல்லவி எடுப்பு
4497 எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார்.
இவர்க்கும் 1
கண்ணிகள்
4498 அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே.
இவர்க்கும் 1
4499 அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன்.
இவர்க்கும் 2
4500 சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு.
3
இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
என்றும் தீரா வழக்குக் காண டி.

76. இது நல்ல தருணம்

சிந்து

பல்லவி
4501. இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.
1
பல்லவி எடுப்பு
4502 பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன்.
இதுநல்ல 1
கண்ணிகள்
4503 மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது.
இதுநல்ல 1
4504 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த(314) மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது.
இதுநல்ல 2
(314) கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.
4505 கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது.
இதுநல்ல 3
4506 கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
4
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.

77. ஆனந்தப் பரிவு

தாழிசை

4507. நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
1
4508 சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
2
4509 துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
3
4510 மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
4
4511 துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க
அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
5
4512 பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற
அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
6
4513 பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
7
4514 தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான
அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
8
4515 பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.
9
4516 மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன்அந்தோஅந்தோ
10
4517 எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு
அக்கரைசேர்த்தருளெனுமோர்சர்க்கரையும்எனக்களித்தான்அந்தோஅந்தோ(315).
11
(315) இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி
இப்பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.

78. ஞான மருந்து

சிந்து

பல்லவி
4518. ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து.
1
கண்ணிகள்
4519 அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து.
ஞான 1
4520 எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
என்றும் விடாமல் இனிக்கு மருந்து
சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து.
ஞான 2
4521 காணாது காட்டு மருந்து - என்றன்
கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
வாகி மணிமன்றில் ஆடு மருந்து.
ஞான 3
4522 சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
சோதி மலையில் துலங்கு மருந்து
சித்துரு வான மருந்து - என்னைச்
சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து.
ஞான 4
4523 அன்பர்க் கெளிய மருந்து - மற்றை
ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை
இன்ப நிலையில் இருத்து மருந்து.
ஞான 5
4524 நாதாந்த நாட்டு மருந்து - பர
ஞான வெளியில் நடிக்கு மருந்து
போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்
பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து.
ஞான 6
4525 ஆதி அனாதி மருந்து - திரு
அம்பலத் தேநட மாடு மருந்து
ஜோதி மயமா மருந்து - என்னைச்
சோதியா தாண்ட துரிய மருந்து.
ஞான 7
4526 ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
ஊறந்த மில்லா மருந்து - எனக்
குள்ளே கலந்த உறவா மருந்து.
ஞான 8
4527 என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்
தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து
என்னுயிர் காக்கு மருந்து - என்றும்
என்னுயி ராகிய இன்ப மருந்து.
ஞான 9
4528 என்னறி வுட்கொள் மருந்து - என்றும்
என்னறி வாகி இலங்கு மருந்து
என்னறி வின்ப மருந்து - என்னுள்
என்னறி வுக்கறி வென்னு மருந்து
ஞான 10
4529 என்குரு வான மருந்து - என்றும்
என்தெய்வ மாகி இருக்கு மருந்து
என்அன்னை யென்னு மருந்து - என்றும்
என்தந்தை யாகிய இன்ப மருந்து.
ஞான 11
4530 என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
என்செல்வ மாகி இருக்கு மருந்து
என்னுயிர் நட்பா மருந்து - எனக்
கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து.
ஞான 12
4531 என்னிறை யான மருந்து - மகிழ்ந்
தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
தன்னறி வாகு மருந்து - என்னைத்
தந்த மருந்தென்றன் சொந்த மருந்து.
ஞான 13
4532 உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
உயிருக் கனாதி உறவா மருந்து
தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து.
ஞான 14
4533 மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா
வேதா கமத்தும் விளங்கு மருந்து
கைப்பொரு ளான மருந்து - மூன்று
கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து.
ஞான 15
4534 மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்
மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து
கதிதரும் இன்ப மருந்து - அருட்
கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து.
ஞான 16
4535 கற்பூர ஜோதி மருந்து - பசுங்
கற்பூர நன்மணங் காட்டு மருந்து
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
போதம் தவிர்த்தசிற் போத மருந்து.
ஞான 17
4536 மேலை வெளியா மருந்து - நான்
வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
சாலை விளக்கு மருந்து - சுத்த
சமரச சன்மார்க்க சங்க மருந்து.
ஞான 18
4537 என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே
இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து
துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட்
சோதியால் என்னைத் துலக்கு மருந்து.
ஞான 19
4538 பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து
கையிற் கிடைத்த மருந்து - சிவ
காமக் கொடியைக் கலந்த மருந்து.
ஞான 20
4539 ஆணவம் தீர்க்கு மருந்து - பர
மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
மாணவ வண்ண மருந்து - என்னை
வலிய அழைத்து வளர்க்கு மருந்து.
ஞான 21
4540 வானடு வான மருந்து - என்னை
மாமணி மேடைமேல் வைத்த மருந்து
ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து.
ஞான 22
4541 மலையிலக் கான மருந்து - என்றன்
மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து
கலைநலம் காட்டு மருந்து - எங்கும்
கண்ணாகிக் காணும் கனத்த மருந்து.
ஞான 23
4542 அற்புத ஜோதி மருந்து - எல்லாம்
ஆகியன் றாகி அமர்ந்த மருந்து
தற்பதம் தந்த மருந்து - எங்கும்
தானேதா னாகித் தனித்த மருந்து.
ஞான 24
4543 தன்னை அளித்த மருந்து - என்றும்
சாகாத நல்வரம் தந்த மருந்து
பொன்னடி ஈந்த மருந்து - அருட்
போனகம் தந்த புனித மருந்து.
ஞான 25
4544 கண்ணுக் கினிய மருந்து - என்றன்
கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து
எண்ணுக் கடங்கா மருந்து - என்னை
ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து.
ஞான 26
4545 சுட்டப் படாத மருந்து - என்றன்
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
எட்டுதற் கொண்ணா மருந்து - நான்
எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து.
ஞான 27
4546 உன்னற் கரிதா மருந்து - எனக்
குள்ளும் புறத்தும் உலாவு மருந்து
தன்னந் தனித்த மருந்து - சுத்தச்
சாக்கிரா தீதச் சபேச மருந்து.
ஞான 28
4547 ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த
ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து
அன்றிமூன் றான மருந்து - நான்
காகிஐந் தாகி அமர்ந்த மருந்து.
ஞான 29
4548 வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
வெளியும் கடந்து விளங்கு மருந்து
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
ஒளியும்தா னாகிய உண்மை மருந்து.
ஞான 30
4549 ஆறாறுக் கப்பால் மருந்து - அதற்
கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து
ஈறாதி இல்லா மருந்து - என்னை
எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து.
ஞான 31
4550 ஆரணத் தோங்கு மருந்து - அருள்
ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
காரணம் காட்டு மருந்து - எல்லாம்
கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து.
ஞான 32
4551 மலமைந்து நீக்கு மருந்து - புவி
வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து
நலமிக் கருளு மருந்து - தானே
நானாகித் தானாளு நாட்டு மருந்து.
33
ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து.

79. சிவசிவ ஜோதி

சிந்து

பல்லவி
4552. சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.
1
கண்ணிகள்
4553 சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி.
சிவசிவ 1
4554 சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - என்னை
ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி.
சிவசிவ 2
4555 சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி.
சிவசிவ 3
4556 ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி.
சிவசிவ 4
4557 மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
துன்னிய வச்சிர ஜோதி - முத்து
ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி.
சிவசிவ 5
4558 பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி.
சிவசிவ 6
4559 ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி.
சிவசிவ 7
4560 மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
இனமான உள்ளக ஜோதி - சற்றும்
ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி.
சிவசிவ 8
4561 முக்குண மும்மூன்றாம் ஜோதி - அவை
முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி.
சிவசிவ 9
4562 பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்
பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி
பகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்
விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி.
சிவசிவ 10
4563 கால முதற்காட்டும் ஜோதி - கால
காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்
குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி.
சிவசிவ 11
4564 தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி.
சிவசிவ 12
4565 சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி - பர
முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி.
சிவசிவ 13
4566 ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி.
சிவசிவ 14
4567 பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
வாரமுற் றோங்கிய ஜோதி - மன
வாக்குக் கெட்டாததோர் மாமணி(316) ஜோதி.
சிவசிவ 15
(316) மாணிக்க - ச. மு. க. பதிப்பு.
4568 ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி.
சிவசிவ 16
4569 மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
துய்ய சிவானந்த ஜோதி - குரு
துரியத் தலத்தே துலங்கிய ஜோதி.
சிவசிவ 17
4570 சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் ஜோதி - என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி.
சிவசிவ 18
4571 என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே
இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி
அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை
ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி.
சிவசிவ 19
4572 சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
புத்தமு தாகிய ஜோதி - சுக
பூரண மாய்ஒளிர் காரண ஜோதி.
சிவசிவ 20
4573 தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
வீதியும் வீடும் விளக்கிய ஜோதி.
சிவசிவ 21
4574 சுகமய மாகிய ஜோதி - எல்லா
ஜோதியு மான சொரூபஉட் ஜோதி
அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி
தானந்த ஜோதி சதானந்த ஜோதி.
சிவசிவ 22
4575 நித்த பரானந்த ஜோதி - சுத்த
நிரதிச யானந்த நித்திய ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - எல்லா
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி.
சிவசிவ 23
4576 பொய்யாத புண்ணிய ஜோதி - எல்லாப்
பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி
நையா தருள்செய்த ஜோதி - ஒரு
நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஜோதி.
சிவசிவ 24
4577 கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்
எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி.
சிவசிவ 25
4578 விந்து ஒளிநடு ஜோதி - பர
விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
நம்துயர் தீர்த்தருள் ஜோதி - பர
நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி.
சிவசிவ 26
4579 தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி.
சிவசிவ 27
4580 தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை
ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி.
சிவசிவ 28
4581 அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி.
சிவசிவ 29
4582 காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
நானாகித் தானாகி நண்ணிய ஜோதி.
சிவசிவ 30
4583 ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி.
சிவசிவ 31
4584 சுத்த சிவமய ஜோதி - என்னை
ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி.
32
சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.

80. ஜோதியுள் ஜோதி

சிந்து

பல்லவி
4585. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
1
கண்ணிகள்
4586 சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 1
4587 வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 2
4588 சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 3
4589 தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 4
4590 ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 5
4591 மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
செய்யென்று தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 6
4592 என்பால் வருபவர்க் கின்றே - அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே(317)
தென்பால் இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 7
(317) ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.
4593 துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 8
4594 பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 9
4595 தற்பர மேவடி வாகி - அது
தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 10
4596 நவவெளி நால்வகை யாதி - ஒரு
நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 11
4597 மேருவெற் புச்சியின் பாலே - நின்று
விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 12
4598 ஆரண வீதிக் கடையும் - சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 13
4599 பாடல் மறைகளோர் கோடி - அருட்
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 14
4600 நீடு சிவாகமங் கோடி - அருள்
நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 15
4601 பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 16
4602 பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
பிரம வெளியினில் பேரரு ளாலே
சித்தாடு கின்றது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 17
4603 தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோ ங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 18
4604 எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 19
4605 சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 20
4606 எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 21
4607 எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 22
4608 பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 23
4609 வருவித்த வண்ணமும் நானே - இந்த
மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 24
4610 பாரிடம் வானிட மற்றும் - இடம்
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 25
4611 உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 26
4612 உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
உளமும் எனக்கே உதவிய தன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 27
4613 எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 28
4614 பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
சீருறச் செய்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
ஜோதி 29
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
திருச்சிற்றம்பலம்