பொருளடக்கம் பக்கம் செல்க


>புறநானூறு


1. இறைவனின் திருவுள்ளம்!
பாடியவர்:பெருந்தேவனார்.
பாடப்பட்டோன்: இறைவன்

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

2. போரும் சோறும்!
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.

மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

4. தாயற்ற குழந்தை!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி.
திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.

வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

5. அருளும் அருமையும்!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.

6. தண்ணிலவும் வெங்கதிரும்!
பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். துறை :
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு.

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!
செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!
ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!

7. வளநாடும் வற்றிவிடும்!
பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி. துறை: கொற்ற
வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம்.

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனும் இவனே.
திணை : பாடாண். துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். துறை :
இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து, இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.

‘ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!

10. குற்றமும் தண்டனையும்!
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.

வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!

11. பெற்றனர்! பெற்றிலேன்!
பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.
பாடப்பட்டோன் : சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாடாண். துறை :பரிசில் கடாநிலை.

அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

12. அறம் இதுதானோ?
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். துறை : இயன்மொழி.

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?

13. நோயின்றிச் செல்க!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண். துறை : வாழ்த்தியல்

‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

14. மென்மையும்! வன்மையும்!
பாடியவர் :கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண். துறை : இயன்மொழி

கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்,
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்;
பார்உடைத்த குண்டு அகழி
நீர் அழுவம் நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.

15. எதனிற் சிறந்தாய்?
பாடியவர் :கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண். துறை : இயன்மொழி

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்,
பா வடியாற்,செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய,
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

16. செவ்வானும் சுடுநெருப்பும்!
பாடியவர்: பாண்டரங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
திணை: வஞ்சி. துறை; மழபுல வஞ்சி.

வினை மாட்சிய விரை புரவியடு,
மழை யுருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச்சென்று, அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆகக்
கடி துறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்,
துணை வேண்டாச் செரு வென்றிப்,
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றைக், சுனிப் பாகல்,
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண்பணை பாழ் ஆக,
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை,
நாம நல்லமர் செய்ய,
ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.

17. யானையும் வேந்தனும்!
பாடியவர்; குறுங்கோழியூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை; வாகை. துறை: அரசவாகை; இயன்மொழியும் ஆம்.

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்,
பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்,
‘உண் டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்’எனவும்,
‘ஏந்து கொடி இறைப் புரிசை,
வீங்கு சிறை, வியல் அருப்பம்,
இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது’ எனவும்,
வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல் தோல், மலையெனத்
தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை,
உடலுநர் உட்க வீங்கிக், கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,
இடியென முழங்கு முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே!

18. நீரும் நிலனும்!
பாடியவர்; குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

19. எழுவரை வென்ற ஒருவன்!
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: அரசவாகை.

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
‘இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து.
நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;
‘இன்ன விறலும் உளகொல், நமக்கு?’என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக்
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

20. மண்ணும் உண்பர்!
பாடியவர்: குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை; மாந்தரஞ் சேரல்
எனவும் குறிப்பர்.
திணை: வாகை. துறை: அரச வாகை.

இரு முந்நீர்க் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை;
அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்
பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே;
அம்பு துஞ்சும்கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல் மாறே,
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

21. புகழ்சால் தோன்றல்!
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை: வாகை. துறை:அரசவாகை.

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்!
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை,
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
வேங்கை மார்பின் இரங்க வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையடு மாயப்,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!

22. ஈகையும் நாவும்!
பாடியவர்: குறுங்கோழியூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை:வாகை.துறை: அரசவாகை.

தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா வடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,
அயறு சோரூம் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்கப்:
பாஅல் நின்று கதிர் சோரும்
வான உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
‘ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்றக்
குற் றானா உலக் கையால்;
கலிச் சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரில் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறைக் காப் பாள!
வேந்து தந்த பணி திறையாற்
சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே!
நிற் பாடிய அலங்கு செந்நாப்
பிற்பிறர் இசை நுவ லாமை,
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
‘மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று’ எனக் கேட்டு, வந்து
இனிது காண்டிசின்: பெரும! முனிவிலை,
வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
சோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!

23. நண்ணார் நாணுவர்!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,
களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;
வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்,
கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,
இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன், என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.

24. வல்லுனர் வாழ்ந்தோர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்:மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.துறை: பொருண்மொழிக் காஞ்சி.

நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தென் கடல்திரை மிசைப்பா யுந்து;
திண் திமில் வன் பரதவர்
வெப் புடைய மட் டுண்டு,
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்,
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையடு_ கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்,
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே;
நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன, நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல,
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,
ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ‘ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.

25. கூந்தலும் வேலும்!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: அரசவாகை.

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

26. நோற்றார் நின் பகைவர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: அரச வாகை.

நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எ·கு ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வெளவி,
முடித் தலை அடுப் பாகப்,
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ் வோரே.

27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.

28. போற்றாமையும் ஆற்றாமையும்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
சிறப்பு: எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு.

‘சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்,’ என
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:-
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத் தோர், நின் தெவ்வர்; நீயே’
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின்செல்வம்;
ஆற்றாமை நின் போற்றா மையே.

29. நண்பின் பண்பினன் ஆகுக!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள்.

அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை!
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க
முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி
‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை’ என்போர்க்கு இனன் ஆகி லியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!

30. எங்ஙனம் பாடுவர்?
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :பாடாண். துறை : இயன்மொழி.
சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல்.

செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

31. வடநாட்டார் தூங்கார்!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை. துறை : அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினமை.

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,
‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,
வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.

32. பூவிலையும் மாடமதுரையும்!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.

கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
‘வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்,
ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக!’ என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல, அவன்
கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே.

33. புதுப்பூம் பள்ளி!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை:வாகை. துறை: அரசவாகை.
சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில்
வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி.

கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,
ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப், படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.

‘ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என,
‘நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என’
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
‘காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்,
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எங்கோன்,வளவன் வாழ்க!’என்று, நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,
படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்,
இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய, பலவே!

35. உழுபடையும் பொருபடையும்!
பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ
சிறப்பு: அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
சிறப்பு: 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர்.

நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.

36. நீயே அறிந்து செய்க!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:வஞ்சி. துறை: துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.

அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.

37. புறவும் போரும்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை; உழிஞை எனவும் பாடம்.
துறை: அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.

நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல்
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்,
செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
‘நல்ல’ என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி,
குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.

வரை புரையும் மழகளிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,
நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த,
எம் அளவு எவனோ மற்றே? ‘இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின், கையறவு உடைத்து’என,
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின்நாடு உள்ளுவர், பரிசிலர்:
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.

39. புகழினும் சிறந்த சிறப்பு!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். துறை : இயன்மொழி,
சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.

புறவின் அல்லல் சொல்லிய, கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்
முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு,
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,
கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி,
மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?

40. ஒரு பிடியும் எழு களிரும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ.

நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

41. காலனுக்கு மேலோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.

காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவின்
செருச்செய் முன்ப,! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.

42. ஈகையும் வாகையும்!
பாடியவர்: இடைக்காடனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : வாகை. துறை: அரச வாகை.
சிறப்பு : சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும்.

ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது, நொந்து,
‘களைக, வாழி, வளவ! ‘ என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலிபுறங் காக்கும் குருளை போல,
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,
பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்,
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு,
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.

43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
‘தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்’ எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

44. அறமும் மறமும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வாகை. துறை: அரச வாகை. குறிப்பு :
நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும்,
பாலில் குழவி அலறவும், மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்!
மறவை யாயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்,
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.

45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.
குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

46. அருளும் பகையும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.
குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!

47. புலவரைக் காத்த புலவர்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி
உய்யக் கொண்ட செய்யுள் இது.

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
‘நெடிய’ என்னாது சுரம்பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.

48. 'கண்டனம்' என நினை!
பாடியவர்: பொய்கையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை.

கோதை மார்பிற் கோதை யானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,
கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;
அ·துஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
‘அமர்மேம் படூஉங் காலை, நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம்’ எனவே.

49. எங்ஙனம் மொழிவேன்?
பாடியவர்: பொய்கையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை.

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்,
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!

50. கவரி வீசிய காவலன்!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை:பாடாண். துறை: இயன் மொழி.
குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன்
சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?

51. ஈசலும் எதிர்ந்தோரும் !
பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை: வாகை. துறை; அரச வாகை.
குறிப்பு; 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான
அறவுரையைக் கூறுவது.

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,
கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல,
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

52. ஊன் விரும்பிய புலி !
பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
வழுதி. திணை: வாகை. துறை; அரச வாகை.
குறிப்பு; நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி.

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,
வடபுல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்,
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே!

53. செந்நாவும் சேரன் புகழும்!
பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி.

முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக், கடுமான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; ‘தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே.

54. எளிதும் கடிதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை.
திணை: வாகை. துறை : அரசவாகை.

எங்கோன் இருந்த கம்பலை முதூர்,
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி,
மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

55. மூன்று அறங்கள்!
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ.

ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்;
கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும்,
நெஞ் சுடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
‘பிறர்’ எனக் குணங் கொல்லாது,,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

56. கடவுளரும் காவலனும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை : பூவை நிலை.

ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை,
மாற்றருங் கணிச்சி, மணி மிடற் றோனும்,
கடல் வளர் புரிவளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடி யோனும்;
மண் ணுறு திருமணி புரையும் மேனி,
விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்,
பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்_என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல்இசை, நால்வர் உள்ளும்,
கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே, வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா,
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து,
ஆங்கினிது ஒழுகுமதி! ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண்கதிர் மதியம் போல்வும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!

57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி. துறை : துணை வஞ்சி.

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு! நின்
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே.

58. புலியும் கயலும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்
பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.
குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது.
திணை: பாடாண். துறை : உடனிலை.

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்,
அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்,
காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று
அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.

59. பாவலரும் பகைவரும்!
பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை : பூவைநிலை.

ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,
தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!
வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.

60. மதியும் குடையும்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
திணை: பாடாண். துறை : குடை மங்கலம்.

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து,
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?

61. மலைந்தோரும் பணிந்தோரும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய
நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை. துறை; அரச வாகை.

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக,
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து,
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,
வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன்,
எ·குவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி,
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன்
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே!

62. போரும் சீரும்!
பாடியவர்: கழாத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்ப·றடக் கைப் பெருவிறற் கிள்ளி.
குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.
திணை: தும்பை. துறை : தொகை நிலை.

வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?
பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்,
பருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து,
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,
உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே;
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!

63. என்னாவது கொல்?
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.
திணை: தும்பை. துறை : தொகை நிலை.

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்,
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே?

64. புற்கை நீத்து வரலாம்!
பாடியவர்: நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். துறை : விறலியாற்றுப்படை.

அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள் ; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.

நல்யாழ்,ஆகுளி, பதலையடு சுருக்கிச்,
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்,
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு,
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

65. நாணமும் பாசமும்!
பாடியவர்: கழாஅத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது
புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.
திணை: பொதுவியல். துறை : கையறுநிலை.
சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.

மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!

66. நல்லவனோ அவன்!
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை : அரச வாகை.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

67. அன்னச் சேவலே!
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்,
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்,
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத், தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே-

68. மறவரும் மறக்களிரும்!
பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை.

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து,
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்,
உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்;
பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!

69. காலமும் வேண்டாம்!
பாடியவர்: ஆலந்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண். துறை: பாணாற்றுப்படை.

கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுவதுடன் வ¨ளைப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்,
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்.
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓங்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன் ; தகைத் தார்
ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றைப், பூவின்
ஆடுவண்டு இமிராத் தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

70. குளிர்நீரும் குறையாத சோறும்
பாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : பாடாண். துறை: பாணாற்றுப்படை.

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

71. இவளையும் பிரிவேன்!
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

72. இனியோனின் வஞ்சினம்!
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி

நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

73. உயிரும் தருகுவன்!
பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.
திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

74. வேந்தனின் உள்ளம்!
பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய
தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?

75. அரச பாரம்!
பாடியவன்: சோழன் நலங்கிள்ளி
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று,
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,

76. அதுதான் புதுமை!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை. துறை: அரச வாகை.

ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையடு, பொலியச் சூடிப்,
பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்,
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!

77. யார்? அவன் வாழ்க!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.
திணை: வாகை. துறை: அரசவாகை.

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.

78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை:
வாகை. துறை: அரசவாகை.

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,
விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்,
தந்தை தம்மூர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.

79. பகலோ சிறிது!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை; அரசவாகை.

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?

80. காணாய் இதனை!
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை. துறை: எருமை மறம்.

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்,
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.

81. யார்கொல் அளியர்?
பாடியவர்: சாத்தந்தையார்
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
திணை:வாகை துறை: அரசவாகை

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

82. ஊசி வேகமும் போர் வேகமும்!
பாடியவர் :சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை. துறை: அரசவாகை.

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு,
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

83. இருபாற்பட்ட ஊர்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல்.

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

84. புற்கையும் பெருந்தோளும்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல்.

என்ஜ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் ஜ் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!

85. யான் கண்டனன்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை துறை: பழிச்சுதல்.

என்னைக்கு ஊர் இ·து அன்மை யானும்,
என்னைக்கு நாடு இ·து அன்மை யானும்,
ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே;
ஆடன்று என்ப, ஒருசா ரோரே;
நல்ல,பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.

86. கல்லளை போல வயிறு!
பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம்.
பாடப்பட்டோன்
திணை: வாகை துறை: ஏறாண் முல்லை

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!

87. எம்முளும் உளன்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை. துறை; தானை மறம்.

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.

88. எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை. துறை; தானை மறம்.

யாவிர் அயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.

89. என்னையும் உளனே!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. துறை: தானை மறம்.

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,
மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்னையும் உளனே!

90. புலியும் மானினமும்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. துறை: தானை மறம்.

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

91. எமக்கு ஈத்தனையே!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. துறை: வாழ்த்தியல்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

92. மழலையும் பெருமையும்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. துறை: இயன் மொழி.

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.

93. பெருந்தகை புண்பட்டாய்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ;
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய,
அருஞ்சமம் ததைய நூறி, நீ
பெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே.

94. சிறுபிள்ளை பெருங்களிறு!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.

95. புதியதும் உடைந்ததும்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். துறை: வாண் மங்கலம்,

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.

96. அவன் செல்லும் ஊர்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.
திணை : பாடாண். துறை: இயன் மொழி.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,
திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,
‘விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,
மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ?’ என
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

97. மூதூர்க்கு உரிமை!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். துறை: இயன் மொழி.

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;
வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே;
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத்தோ லன்னே;
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது?’ தடந்தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின்,
ஒல்வான் அல்லன், வெல்போ ரான்’ எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று; அ·து அறிந்துஆ டுமினே.

98. வளநாடு கெடுவதோ!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை; கொற்றவள்ளையுமாம்.

முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்,
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
தோள் கழியடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்,
பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே;

99.
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல,
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்,
பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல்,
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு,
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு,

100. சினமும் சேயும்!
பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.
குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.

கையது வேலே; காலன பு¨ ழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக
வெட்சி மாமலர், வேங்கையடு விரைஇச்,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரி வயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.

101. பலநாளும் தலைநாளும்!
பாடியவர்: ஔவையார்,
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்’
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது; பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!

102. சேம அச்சு!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

‘எருதே இளைய; நுகம் உண ராவே;
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்?’ என, உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன,
இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை; இருள்
யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?

103. புரத்தல் வல்லன்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை.

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்,
‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப,
வறத்தற் காலை யாயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!

104. யானையும் முதலையும்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை. துறை: அரசவாகை.

போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது,
‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே.

105. தேனாறும் கானாறும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை.

சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யா தாயினும், அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட,
மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

106. தெய்வமும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.

107. மாரியும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

‘பாரி பாரி’ என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.

108. பறம்பும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின்,
‘வாரேன்’ என்னான், அவர் வரை யன்னே.

109. மூவேந்தர் முன் கபிலர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

110. யாமும் பாரியும் உளமே!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. துறை: ..மகள் மறுத்தல்.
சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.

111. விறலிக்கு எளிது!
பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.

அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

112. உடையேம் இலமே!
பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல் துறை: கையறு நிலை

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

113. பறம்பு கண்டு புலம்பல்!
பாடியவர் : கபிலர்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று,
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.

114. உயர்ந்தோன் மலை!
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.

115. அந்தோ பெரும நீயே!
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.

ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!

116. குதிரையும் உப்புவண்டியும்!
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்,
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா காலை!
பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும்,
கலையுங் கொள்ளா வாகப்,பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை
பெரிய நறவின், கூர் வேற் பாரியது
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.

117. தந்தை நாடு!
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.

118. சிறுகுளம் உடைந்துபோம்!
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே!

119. வேந்தரிற் சிறந்த பாரி!
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை.

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்,
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

120. கம்பலை கண்ட நாடு!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,
மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,
பெருந் தோள் தாலம் பூசல் மேவர,
வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

121. புலவரும் பொதுநோக்கமும்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல். துறை: பொருண் மொழிக் காஞ்சி.

ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின்,
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!

122. பெருமிதம் ஏனோ!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல்புனை திருந்துஅடிக் காரி! நின் நாடே;
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன், ‘துப்பா கியர்’ என,
ஏத்தினர் தரூஉங் கூழே, நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின், மடமொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
நினது என இலைநீ பெருமிதத் தையே.

123. மயக்கமும் இயற்கையும்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.

124. வறிது திரும்பார்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,
பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,
வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே.

125. புகழால் ஒருவன்!
பாடியவர் : வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: தேர்வண் மலையன்.
திணை: வாகை. துறை: அரச வாகை.
குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர்.

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,
பரூஉக் கண் மண்டை யடு, ஊழ்மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே,
நள் ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள ! நின் மகிழிருக் கையே
உழுத நோன் பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்,
கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
‘வெலீஇயோன் இவன்’ எனக்
‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
விரைந்து வந்து, சமந் தாங்கிய,
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு’ எனத்,
தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,
‘தொலைஇயோன் அவன்’ என,
ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே.

126. கபிலனும் யாமும்!
பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். துறை: பரிசில்

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும், வல்லே
நின்வயிற் கிளக்குவம் ஆயின், கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருநர்
தெறலரு மரபின் நின் கிளையடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன்,
இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப்,
பரந்து இசை நிறகப் பாடினன், அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்,
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப்,
பிறகலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, அசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே; முள்ளெயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப,
அண்ணல் யானையடு வேந்து களத்து ஒழிய,
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!

127. உரைசால் புகழ்!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின்.
திணை: பாடாண். துறை: கடைஇநிலை.

‘களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக்,
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்,
கான மஞ்ஞை கணனுடு சேப்ப,
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே.

128. முழவு அடித்த மந்தி!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்;
ஆடு மகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

129. வேங்கை முன்றில்!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.
சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல்.

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்;
ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று,
வானம் மீன்பல பூப்பின், ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே.

130. சூல் பத்து ஈனுமோ?
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு,
இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!

131. காடும் பாடினதோ?
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி .

மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

132. போழ்க என் நாவே!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல
தகரத் தண்ணிழல் பிணையடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமையம்,
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.

133. காணச் செல்க நீ!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை.

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது, காண்பறி யலையே;
காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்,
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

134. இம்மையும் மறுமையும்!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண் துறை: இயன் மொழி

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

135. காணவே வந்தேன்!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பரிசில்.

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை,
அருளிடர்ச் சிறுநெறி ஏறலின், வருந்தித்,
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்,
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்,
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்,
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்,
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை! யானே: யென்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன்! மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், படுநர்,பரிசிலர், ஆங்கவர்,
தமதெனத் தொடுக்குவர் ஆயின், எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு,
அன்ன வாக, நின் ஊழி; நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!

136. வாழ்த்தி உண்போம்!
பாடியவர் : துறையூர் ஓடை கிழார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை சிறப்பு: வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி.
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த ப·றுன்னத்து
இடைப் புரைபற்றிப், பிணி விடாஅ
ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த
பேஎன் பகையென ஒன்று என்கோ?
உண்ணா மையின் ஊன் வாடித்,
தெண் ணீரின் கண் மல்கிக்,
கசிவுற்ற என் பல் கிளையடு
பசி அலைக்கும் பகைஒன் றென்கோ?
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,
‘நின்னது தா’ என, நிலை தளர,
மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்,
குரங் கன்ன புன்குறுங் கூளியர்
பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ?
‘ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்,
எனக் கருதிப், பெயர் ஏத்தி,
வா யாரநின் இசை நம்பிச்,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
‘எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப’ வென
அனைத் துரைத்தனன் யான்ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும ! நீ நல்கிய வளனே.

137. நின்பெற்றோரும் வாழ்க!
பாடியவர் : ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.

இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,
கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
கண் ணன்ன மலர்பூக் குந்து,
கருங்கால் வேங்கை மலரின், நாளும்
பொன் னன்ன வீ சுமந்து,
மணி யன்ன நீர் கடற் படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

138. நின்னை அறிந்தவர் யாரோ?
பாடியவர் : மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பாணாற்றுப் படை.

ஆனினம் கலித்த அதர்பல கடந்து,
மானினம் கலித்த மலையின் ஒழிய,
மீளினம் கலித்த துறைபல நீந்தி,
உள்ளி வந்த, வள்ளுயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேரெண் ணலையே; நின்இறை,
’மாறி வா’ என மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

139. சாதல் அஞ்சாய் நீயே!
பாடியவர் : மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.
சிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்னும் புலவரது உள்ளச் செவ்வி.
சுவல் அழுந்தப் பல காய
சில் லோதிப் பல்இளை ஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலிய ருமே,
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்,
கனிபதம் பார்க்கும் காலை யன்றே;
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு, ஒருநாள்,
அருஞ் சமம் வருகுவ தாயின்,
வருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே

140. தேற்றா ஈகை!
பாடியவர் : ஔவையார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத், தான் பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?

141. மறுமை நோக்கின்று!
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண். துறை: பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.

பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையடு விளங்கக்,
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
யாரீ ரோ?’ என வனவல் ஆனாக்,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே ; என்றும்
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்
படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலிமான் பேகன்,
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என
மறுமை நோக்கின்றோ அன்றே,
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே.

142. கொடைமடமும் படைமடமும்!
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்,
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரி போலக்,
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.

143. யார்கொல் அளியள்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
குறிப்பு: துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பாடியது.

‘மலைவான் கொள்க!’ என, உயர்பலி தூஉய்,
‘மாரி ஆன்று, மழைமேக்கு உயர்க! ‘ எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,
பெயல்கண் மாறிய உவகையர், சாரல்
புனைத்தினை அயிலும் நாட! சினப் போர்க்
கைவள் ஈகைக் கடுமான் பேக!
யார்கொல் அளியள் தானே; நெருநல்,
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்,
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்.
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும்நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்.
முலையகம் நனைப்ப, விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள், பெரிதே?

144. தோற்பது நும் குடியே!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி.

அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார்எதிர் கானம் பாடினே மாக,
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப,
இனைதல் ஆனா ளாக, ‘இளையோய்!
கிளையை மன், எம் கேள்வெய் யோற்கு?’என,
யாம்தன் தொழுதனம் வினவக், காந்தள்
முகைபுரை விரலின் கண்ணீர் துடையா,
‘யாம், அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்,இனி;
எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும்,
வரூஉம் என்ப; வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல்லூ ரானே!’

145. அவள் இடர் களைவாய்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர்.

‘மடத்தகை மாமயில் பனிக்கும்’ என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்,
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி,
‘அறம்செய் தீமோ, அருள்வெய் யோய்!’ என,
இ·தியாம் இரந்த பரிசில்: அ·து இருளின்,
இனமணி நெடுந்தேர் ஏறி,
இன்னாது உறைவி அரும்படர் களைமே!

146. தேர் பூண்க மாவே!
பாடியவர் : அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி.

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவை யாயின், குரிசில் ! நீ
நல்கா மையின் நைவரச் சாஅய்,
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன,
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய,
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

147. எம் பரிசில்!
பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி.

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்,
கார்வான் இன்னுறை தமியள் கேளா,
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப்,
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

148. என் சிறு செந்நா!
பாடியவர் : வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண். துறை: பரிசில்.

கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி,
நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து,
கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்;
பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே.

149. வண்மையான் மறந்தனர்!
பாடியவர் : வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண். துறை: பரிசில்.

நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,
‘வரவுஎமர் மறந்தனர்; அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

150. நளி மலை நாடன்!
பாடியவர் : வன் பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு:தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்,
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்,
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்,
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,
“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம்” என,
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;
‘எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்!
‘யாரீ ரோ!’ எனப், பேரும் சொல்லான்;
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்,
நளிமலை நாடன் நள்ளிஅவன்’ எனவே.

151. அடைத்த கதவினை!
பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ. திணை: பாடாண்.
துறை: இயன்மொழி. குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.
அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப்
புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால் இயன்மொழி ஆயிற்று.)

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.

152. பெயர் கேட்க நாணினன்!
பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.
( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)

`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,
`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,
சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!

153. கூத்தச் சுற்றத்தினர்!
பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய, நன்றும்
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,
பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க,
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?

154. இரத்தல் அரிது! பாடல் எளிது!
பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். துறை: பரிசில் துறை.

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர், மாந்தர் : அதுபோல்,
அரசர் உழைய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர், புலவர் ; அதனால்,
`யானும்,`பெற்றது ஊதியம்; பேறியாது?` என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே;
`ஈயென இரத்தலோ அரிதே! நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின்
கொண்டுபெருங்கானம், பாடல் எனக்கு எளிதே.

155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!
பாடியவர் : மோசி கீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை

வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
`உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க``எனக்,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்;
பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு,
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங்காலத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே.

156. இரண்டு நன்கு உடைத்தே!
பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அ·தான்று
நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

157. ஏறைக்குத் தகுமே!
பாடியவர் : குறமகள் இளவெயினி.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது.

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல்,
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.

158. உள்ளி வந்தெனன் யானே!
பாடியவர்; பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன். திணை; பாடாண்.
துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம்.
சிறப்பு ; எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு.

முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,
கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்
கழைவளர் சிலம்பின் வழையடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையடு,
பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!

159. கொள்ளேன்! கொள்வேன்!
பாடியவர்; பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை; பாடாண். துறை: பரிசில் கடாநிலை.
சிறப்பு : வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம்.

`வாழும் நாளடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதுர்வினள் யாயும்;
பசந்த மேனியடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

160. புலி வரவும் அம்புலியும்!
பாடியவர்; பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை; பாடாண். துறை: பரிசில் கடாநிலை.
சிறப்பு : வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம்.
(பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்),

‘உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக், கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
அவிழ்புகுவு அறியா தாகலின், வாடிய
நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்,
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்,
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
“கோடின் றாக, பாடுநர் கடும்பு” என,
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி,
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்,
மட்டார் மறுகின், முதிரத் தோனே:
செல்குவை யாயின், நல்குவை, பெரிது` எனப்,
பல்புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று,
இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள்ளில் வருங்கலம் திறந்து, அழக் கண்டு,
மறப்புலி உரைத்தும், மதியங் காட்டியும்,
நொந்தனள் ஆகி, `நுந்தையை உள்ளிப்,
பொடிந்தநின் செவ்வி காட்டு` எனப் பலவும்
வினவல் ஆனா ளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்,
செல்லாச் செல்வம் மிகுந்தனை, வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை; படுதிரை
நீர்சூழ் நிலவரை உயர நின்
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே.

161. பின் நின்று துரத்தும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண். துறை: பரிசில். குறிப்பு : பாடிப் பகடு பெற்றது.
(பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது.)

நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு,
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றுதல், சூன்முதிர்பு,
உரும்உரறு கருவியடு, பெயல்கடன் இறுத்து,
வள்மலை மாறிய என்றூழ்க் காலை,
மன்பதை யெல்லாம் சென்றுணர், கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்,
`அன்பில் ஆடவர் கொன்று, ஆறு கவரச்,
சென்று தலைவருந அல்ல, அன்பின்று,
வன்கலை தெவிட்டும், அருஞ்சுரம் இறந்தோர்க்கு,
இற்றை நாளடும் யாண்டுதலைப் பெயர்` எனக்
கண் பொறி போகிய கசிவொடு, உரன்அழிந்து,
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்
தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்,
பனைமருள் தடக்கை யடு முத்துப்படு முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு,
ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில்
படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,
செலல்நசைஇ உற்றனென்-விறல்மிகு குருசில்!
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி!
வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே,
என்அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப,
வாள் அமர் உயர்ந்தநின் தானையும்,
சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே.

162. இரவலர்அளித்த பரிசில்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : இளவெளிமான்.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை. சிறப்பு : புலவர் பெருமிதம்.

இரவலர் புரவலை நீயும் அல்லை!
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க்
கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

163. தமிழ் உள்ளம்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : புலவரின் மனைவி.
திணை: பாடாண். துறை: பரிசில்.

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

164. வளைத்தாயினும் கொள்வேன்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப் பட்டோன்: குமணன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை. குறிப்பு: தம்பியால் நாடு
கொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது. [பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)]

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத், தேம்புபசி உழவாப்,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி,
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற்படர்ந் திசினே-நற்போர்க் குமண!
என்நிலை அறிந்தனை யாயின், இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென்-அடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்,
மண்ணமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.

165. இழத்தலினும் இன்னாது!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை. குறிப்பு: காடு பற்றியிருந்த குமணன்,
புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக்
கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்,
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள்தாழ் படுமணி இரட்டும், பூனுதல்,
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக்,`கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது` என,
வாள்தந் தனனே, தலை எனக்கு ஈயத்,
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்;
ஆடுமலி உவகையோடு வருவல்,
ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே.

166. யாமும் செல்வோம்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.
திணை: வாகை. துறை: பார்பபன வாகை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;
மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடிச்,
சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
சில சொல்லின் பல கூந்தல், நின்
நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;
காடு என்றா நாடுஎன்று ஆங்கு
ஈரேழின் இடம் முட்டாது,
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;
செல்வல் அத்தை யானே; செல்லாது,
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?

167. ஒவ்வொருவரும் இனியர்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி.
திணை: வாகை. துறை: அரச வாகை.

நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,
ஊறுஅறியா மெய் யாக்கை யடு.
கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!
அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்குமிவ் வுலகம்; அ·து
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.

168. கேழல் உழுத புழுதி!
பாடியவர்: கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : பிட்டங் கொற்றன்.
திணை: பாடாண். துறை: பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி,
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!
கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்,
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர், நாளும்;
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே!

169. தருக பெருமானே!
பாடியவர்: காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.
(பரிசில் வேட்டுப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று.
அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க.)

நும்படை செல்லுங் காலை, அவர்படை
எறித்தெறி தானை முன்னரை எனாஅ,
அவர்படை வருஉங் காலை, நும்படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்,
இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்,
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே!

170. உலைக்கல்லன்ன வல்லாளன்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்.

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்,
பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர்,
எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப,
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி,
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்; அவனே
சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து,
நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன, வல்லா ளன்னே.

171. வாழ்க திருவடிகள்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: 'ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம்.

இன்று செலினுந் தருமே; சிறுவரை
நின்று செலினுந் தருமே ; பின்னும்,
‘முன்னே தந்தனென்’ என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்;
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்;
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்,
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்,
அருங்கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே,
அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து,
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

172. பகைவரும் வாழ்க!
பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்
பரியல் வெண்டா வருபதம் நாடி,
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன், வயமான் பிட்டன்;
ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை
மாவள் ஈகைக் கோதையும்.
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

173. யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,

174. அவலம் தீரத் தோன்றினாய்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.
ணை: வாகை. துறை: அரச வாகை.

அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு,
அர சிழந்து இருந்த அல்லற் காலை,
முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,
பொய்யா நாவிற் கபிலன் பாடிய,
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,
சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே-நிரைத்தார் அண்ணல்!
கல்கண் பொடியக், கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்,
கோடை நீடிய பைதறு காலை,
இருநிலம் நெளிய ஈண்டி,
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன் : ஆதனுங்கன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

எந்தை; வாழி; ஆதனுங்க ! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின், மறக்குங் காலை,
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்,
என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.

176. சாயல் நினைந்தே இரங்கும்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன் : ஓய்மான் நல்லியக் கோடான்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்,
பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழி, யெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்,
காணாது கழிந்த வைகல், காணா
வழிநாட்கு இரங்கும், என் நெஞ்சம்-அவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.

177. யானையும் பனங்குடையும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும்
வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.)

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்,
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்,
பாடிப் பெற்ற பொன்னணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர்எனின்,
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்,
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்,
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்,
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,
பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

178. இன்சாயலன் ஏமமாவான்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம்.
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

கந்துமுனிந்து உயிர்க்கும்யானையடு,பணைமுனிந்து,
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை,
ஏம மாகத் தான்முந் துறுமே.

179. பருந்து பசி தீர்ப்பான்!
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,
தோலா நல்லிசை, நாலை கிழவன்,
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.

180. நீயும் வம்மோ!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து,
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி,
வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து,
ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத், தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்,
‘திருந்திலை நெடுவேல் வடித்திசின்’ எனவே.

181. இன்னே சென்மதி!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.
திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை.

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்,
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்,
புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை,
வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்;
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன்
பகைப்புலம் படரா அளவை, நின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

182. பிறர்க்கென முயலுநர்!
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

183. கற்கை நன்றே!
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,

184. யானை புக்க புலம்!
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

185. ஆறு இனிது படுமே!
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(இ·து உலகாளும் முறைமையைக் கூறியதாம்.)

கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

186. வேந்தர்க்குக் கடனே!
பாடியவர்: மோசிகீரனார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது.
ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.)

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

187. ஆண்கள் உலகம்!
பாடியவர்: ஔவையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.)
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

188. மக்களை இல்லோர்!
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.)

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.

189. உண்பதும் உடுப்பதும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)

தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

190. எலி முயன் றனையர்!
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.)

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையடு
இயைந்த வைகல் உளவா கியரோ!

191. நரையில ஆகுதல்!
பாடியவர்: பிசிராந்தையர்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.

192. பெரியோர் சிறியோர்!
பாடியவர்: கணியன் பூங்குன்றன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

193. ஒக்கல் வாழ்க்கை!
பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

194. முழவின் பாணி!

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.

195. எல்லாரும் உவப்பது!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.

196. குறுமகள் உள்ளிச் செல்வல்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!

197. நல் குரவு உள்ளுதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

198. மறவாது ஈமே!
பாடியவர்: வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.

``அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,
கடவுள் சான்ற, கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிக!`` என்று ஏத்தித்,
திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்,
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்,
பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும்,
ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும்,
நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும்,
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை; யானும்
கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.

199. கலிகொள் புள்ளினன்!
பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாடாண் துறை: பரிசில் கடா நிலை

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.

200. பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!

???
???

201. இவர் என் மகளிர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன் : இருங்கோவேள்.
திணை; பாடாண். துறை: பரிசில்.
குறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.)

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்!
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே!

202. கைவண் பாரி மகளிர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை:பாடாண். துறை: பரிசில்.
குறிப்பு: இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது.
(கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.)

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக்,
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,`இவர்
கைவண் பாரி மகளிர்` என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும;
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

203. இரவலர்க்கு உதவுக!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
திணை:பாடாண் துறை:பரிசில்

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்,
முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்,
உள்ளி வருநர் நசையிழப் போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே.

204. அதனினும் உயர்ந்தது!
பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.
திணை:பாடாண். துறை: பரிசில்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை:பாடாண். துறை: பரிசில்.

முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை,
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,
நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!
ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக்,
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.

206. எத்திசைச் செலினும் சோறே!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: துறை: பரிசில்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.

207. வருகென வேண்டும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்: துறை: பரிசில்.

எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்அழி,
அருகிற் கண்டும் அறியார் போல,
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாள்இலாளர் வேளார் அல்லர்?
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி,
வாயா வன்கனிக்கு உலமரு வோரே.

208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: துறை: பரிசில்.

`குன்றும் மலையும் பலபின் ஒழிய,
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு` என
நின்ற என்நயந்து அருளி, `ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க, தான்` என என்னை
யாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

209. நல்நாட்டுப் பொருந!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: மூவன்.
திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்திக், தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகத்து.
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்.
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசைதர வந்து, நின்இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள்
குறுநணி காண்குவ தாக - நாளும்,
நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித்,
தெரியிழை அன்ன மார்பின்,
செருவெம் சேஎய்! நின் மகிழ்இரு க்கையே!

210. நினையாதிருத்தல் அரிது!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை.

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது,
அன்புகண் மாறிய அறனில் காட்சியடு,
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி
உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல்? இறீஇயர், என் உயிர்!` என
நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்:
அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே.

211. நாணக் கூறினேன்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை.

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய,
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்,
குன்றுதூவ எறியும் அரவம் போல,
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று,
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்,
`வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்` எனக்,
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள்
பொய்யடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்,
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே வைகலும்,
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்,
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து,
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே.

212. யாம் உம் கோமான்?
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்: துறை: இயன்மொழி.

`நுங்கோ யார்?` வினவின், எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா,
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ,
வைகுதொழின் மடியும் மடியா விழவின்
யாணர் நல்நாட் டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,
கோழி யோனே, கோப்பெருஞ் சோழன்
பொத்தில் நண்பின் பொத்தியடு கெழீஇ,
வாயார் பெருநகை வைகலும் நமக்கே.

213. நினையும் காலை!
பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: வஞ்சி: துறை: துணை வஞ்சி.
குறிப்பு: கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்
பாடிச் சந்து செய்தது.

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,
வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,
அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்:
நினையுங் காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்
ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்,
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;
அதனால்,ஒழிகதில் அத்தை,நின் மறனே!வல்விரைந்து
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.

214. நல்வினையே செய்வோம்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

`செய்குவம் கொல்லோ நல்வினை!’எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே,

215. அல்லற்காலை நில்லான்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண் துறை: இயன்மொழி
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; 'அவர் வாரார்' என்றனர்
சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வ்க் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.

216. அவனுக்கும் இடம் செய்க!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண் துறை: இயன்மொழி
குறிப்பு : வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.

“கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய,
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
புன்பெயர் கிளக்கும் காலை, ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும், சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை,
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

217. நெஞ்சம் மயங்கும்!
பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்;
அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!

218. சான்றோர்சாலார் இயல்புகள்!
பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்.
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது.

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

219. உணக்கும் மள்ளனே!
பாடியவர்: பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே;
பலரால் அத்தை, நின் குறிஇருந் தோரே.

220. கலங்கனேன் அல்லனோ!
பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.

பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,
கலங்கினேன் அல்லனோ, யானே-பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

221. வைகம் வாரீர்!
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது.

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத்தக் கோனை,
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!
‘நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,
கெடுவில் நல்லிசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.

222. என் இடம் யாது?
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும் உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக் கேட்டுப் பாடியது இச் செய்யுள்
‘அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா’ என
என்இவண் ஒழித்த அன்பி லாள!
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாது? மற்று இசைவெய் யோயே!

223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

பலர்க்கு நிழ லாகி, உலகம் மீக்கூறித்,
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!

224. இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

225. வலம்புரி ஒலித்தது!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,
நிலமார் வையத்து வலமுறை வளைஇ,
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடு,
‘ஆற்றல்’ என்பதன் தோற்றம் கேள், இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
முள்ளுடை வியன்காட் டதுவே-‘நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?’
இன்னிசைப் பறையடு வென்றி நுவலத்,
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலைக்,
காலைத் தோன்றினும் நோகோ யானே.

226. இரந்து கொண்டிருக்கும் அது!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்-பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே.

227. நயனில் கூற்றம்!
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

228. ஒல்லுமோ நினக்கே!
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். துறை: ஆனந்தப் பையுள்.

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

229. மறந்தனன் கொல்லோ?
பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது.

ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்,
பங்குனி உயர் அழுவத்துத்,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல் நாள்மீன் துறை படியப்,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்,
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே:
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,
‘பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில்’லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்,
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே?

230. நீ இழந்தனையே கூற்றம்!
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.
திணை: பொதுவியல். துறை: கையுறுநிலை.

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,
களம்மலி குப்பை காப்பில வைகவும்,
விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்,
பொய்யா எழினி பொருதுகளம் சேர-
ஈன்றோர் நீத்த குழவி போலத்,
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்,
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி
நீ இழந் தனையே, அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்,
வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்,
நேரார் பல்லுயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே.

231. புகழ் மாயலவே!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

எரிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,
குருகினும் குறுகுக; குறுகாது சென்று,
விசும்பஉற நீளினும் நீள்க: பசுங்கதிர்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!

232. கொள்வன் கொல்லோ!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. திணை : தும்பை. துறை:பாண்பாட்டும் ஆம்.

இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?

233. பொய்யாய்ப் போக!
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!
‘இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்,
போர்அடு தானை, எவ்வி மார்பின்
எ·குஉறு விழுப்புண் பல’ என
வைகறு விடியல், இயம்பிய குரலே.

234. உண்டனன் கொல்?
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்,
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்-
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇ யோனே?

235. அருநிறத்து இயங்கிய வேல்!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது.

கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
மலை கெழு நாட! மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்குவரல் விடாஅது ‘ஒழிக’ எனக்கூறி,
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!

237. சோற்றுப் பானையிலே தீ!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
(வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது.)

‘நீடுவாழ்க!’ என்று, யான் நெடுங்கடை குறுகிப்,
பாடி நின்ற பசிநாட் கண்ணே,
‘கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று’ என
நச்சி இருந்த நசைபழுது ஆக,
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு,
‘அளியர் தாமே ஆர்க’ என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய,
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற,
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
ஆங்கு அது நோயின்று ஆக, ஓங்குவரைப்
புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்,
எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலி திரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
எழுமதி, நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே.

238. தகுதியும் அதுவே!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
(வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.)

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே, கட்கா முறுநன்;
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்,
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே;
ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே;
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,
எந்தை ஆகுல அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற
என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே?
மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின்,
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு,
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து,
அவல மறுசுழி மறுகலின்,
தவலே நன்றுமன் ; தகுதியும் அதுவே.

239. இடுக, சுடுக, எதுவும் செய்க!
பாடியவர்: பேரெயின் முறுவலார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

தொடி யுடைய தோள் மணந்தணன் ;
கடி காவிற் பூச் சூடினன் ;
தண் கமழுஞ் சாந்து நீவினன் ;
செற் றோரை வழி தபுத்தனன் ;
நட் டோரை உயர்பு கூறினன் ;
வலியரென, வழி மொழியலன் ;
மெலியரென, மீக் கூறலன்;
பிறரைத் தான் இரப் பறியலன் ;
இரந் தோர்க்கு மறுப் பறியலன் ;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
வருபடை எதிர் தாங்கினன் ;
பெயர் படை புறங் கண்டனன் ;
கடும் பரிய மாக் கடவினன் ;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;
ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்;
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்-
இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ !
படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!

240. பிறர் நாடுபடு செலவினர்!
பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,
‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.

241. விசும்பும் ஆர்த்தது!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

‘திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே.

242. முல்லையும் பூத்தியோ?
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?

244. கலைபடு துயரம் போலும்!
(பாடினோர் பாடபபட்டடோர் யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது.
பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன).

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .

245. என்னிதன் பண்பே?
பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!

246. பொய்கையும் தீயும் ஒன்றே!
பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்

பல்சான் றீரே ; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!

247. பேரஞர்க் கண்ணள்!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்,
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,
தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்
முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே!

248. அளிய தாமே ஆம்பல்!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே.

249. சுளகிற் சீறிடம்!
பாடியவர்: தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்,
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு,
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றே
அடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை,
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.

250. மனையும் மனைவியும்!
பாடியவர்: தாயங் கண்ணியார்
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,
அல்லி உணவின் மனைவியடு, இனியே
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

251. அவனும் இவனும்!
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை துறை: தாபத வாகை

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!

252. அவனே இவன்!
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை துறை: தாபத வாகை

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.’

253. கூறு நின் உரையே!
பாடியவர்: குளம்பாதாயனார்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,
‘நாகாஅல்’ என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங்கை ஓச்சிக்,
கிளையுள்’ஒய்வலோ? கூறுநின் உரையே!

254. ஆனாது புகழும் அன்னை!
பாடியவர்: கயமனார்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

இளையரும் முதியரும் வேறுபுலம் படர,
எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல,
இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,
‘இன்னன் ஆயினன், இளையோன்’ என்று,
நின்னுரை செல்லும் ஆயின்,’ மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்,
புள்ளார் யாணர்த் தற்றே’ என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு’ என , நாளும்
ஆனாது புகழும் அன்னை
யாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே!

255. முன்கை பற்றி நடத்தி!
பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
திரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!

256. அகலிதாக வனைமோ!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

257. செருப்பிடைச் சிறு பரல்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வெட்சி துறை: உண்டாட்டு

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால்,
அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண்,
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்,
செவிஇறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
யார்கொலோ, அளியன் தானே? தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும், இலனே ; காலைப்,
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்,
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்,
சிலையின் மாற்றி யோனே ; அவைதாம்
மிகப்பல ஆயினும், என்னாம்-எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியடு,
நாள்உறை மத்தொலி கேளா தோனே?

258. தொடுதல் ஓம்புமதி!
பாடியவர்: உலோச்சனார்
திணை: வெட்சி துறை: உண்டாட்டு

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்,
புலம்புக் கனனே, புல்அணற் காளை,
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி;
ஆதரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே.

259. புனை கழலோயே!
பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்
திணை: கரந்தை துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்).

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,
செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்;
முதுகுமெய்ப் புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ;
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!

260. கேண்மதி பாண!
பாடியவர்: வடமோதங்கிழார்
திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;
கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.

வளரத் தொடினும், வெளவுபு திரிந்து,
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி, களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,
‘காணலென் கொல் ?’ என வினவினை வரூஉம்
பாண ! கேண்மதி, யாணரது நிலையே;
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,
எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,
கையுள போலும் கடிதுஅண் மையவே;
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக,
வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையடு வந்த உரைய னாகி,
உரிகளை அரவ மானத், தானே
அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

261. கழிகலம் மகடூஉப் போல!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: கரந்தை துறை: கையறு நிலை

அந்தோ! எந்தை அடையாப் பேரில்;
வண்டுபடு நறவின் தண்டா மண்டையடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்,
வெற்றுயாற்று அம்பியின் எற்று ? அற்று ஆகக்
கண்டனென், மன்ற ; சோர்க, என் கண்ணே;
வையங் காவலர் வளம்கெழு திருநகர்,
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே
பல்ஆ தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி,
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட,
நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்,
கொய்ம்மழித் தலையடு கைம்மையுறக் கலங்கிய
கழிகலம் மகடூஉப் போல
புல்என் றனையால், பல்அணி இழந்தே.

262. தன்னினும் பெருஞ் சாயலரே!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: வெட்சி துறை: உண்டாட்டு (தலை தோற்றமுமாம்)

நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-
ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று;
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

263. களிற்றடி போன்ற பறை!
பாடியவர்
பாடப்பாட்டோர்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல ! சேறி ஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே-
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்,
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

264. இன்றும் வருங்கொல்!
பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?

265. வென்றியும் நின்னோடு செலவே!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை,
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்,
பல்ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்!
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.

266. அறிவுகெட நின்ற வறுமை!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்ப·றேர் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்,
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
நாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்!
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
ஆசாகு என்னும் பூசல்போல,
வல்லே களைமதி அத்தை- உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்,
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே!

267- 268 கிடைத்தில

269. கருங்கை வாள் அதுவோ!
பாடியவர்: ஔவையார்
திணை: வெட்சி துறை: உண்டாட்டு

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல்காழ் மாலை,
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்,
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்,
கொடுஞ்சிறைக் க்ரூஉப்பருந்து ஆர்ப்பத்,
தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.

270. ஆண்மையோன் திறன்!
பாடியவர்: கழாத்தலையார்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே-
நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!
நோகோ யானே ; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேரமர் உழந்த வெருவரு பறந்தலை.
விழுநவி பாய்ந்த மரத்தின்,
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.

271. மைந்தன் மலைந்த மாறே!
பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார்.
திணை: நொட்சி. துறை: செருவிடை வீழ்தல்.

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,
மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,
வெருவரு குருதியடு மயங்கி, உருவுகரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!

272. கிழமையும் நினதே!
பாடியவர்: மோசிசாத்தனார்
திணை: நொட்சி துறை: செருவிடை வீழ்தல்

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.

273. கூடல் பெருமரம்!
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை துறை: குதிரை மறம்

மாவா ராதே ; மாவா ராதே ;
எல்லார் மாவும் வந்தன ; எம்இல்,
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே-
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே?

274. நீலக் கச்சை!
பாடியவர்: உலோச்சனார்
திணை: தும்பை துறை: எருமை மறம்

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,
தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர்
எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்,
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;

275. தன் தோழற்கு வருமே!
பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை துறை: எருமை மறம்

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்
வடிமாண் எ·கம் கடிமுகத்து ஏந்தி,
“ஓம்புமின், ஓம்புமின், இவண்!’ ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,
கன்றுஅமர் கறவை மான ;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.

276. குடப்பால் சில்லுறை!
பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார்
திணை:தும்பை துறை: தானைநிலை

நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்,
இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்,
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்,
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.

277. சிதரினும் பலவே!
பாடியவர்: பூங்கணுத்திரையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

278. பெரிது உவந்தனளே!
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,
“மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்’ எனச் சினைஇக்,
கொண்ட வாளடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

279. செல்கென விடுமே!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை துறை: மூதின் முல்லை

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே!

280. வழிநினைந்து இருத்தல் அரிதே!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்
திணை: பொதுவியல் துறை: ஆந்தப் பையுள்

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண ! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும்
மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத்,
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே!

281. நெடுந்தகை புண்ணே!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி துறை: பேய்க் காஞ்சி

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,
வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ-காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!

282. புலவர் வாயுளானே!
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணையும் துறையும் தெரிந்தில.

எ·குஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,
யாண்டுளனோ?’வென, வினவுதி ஆயின்,
. . . . . . . . . . . .
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது, களத்துஒழி யதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,
நாநவில் புலவர் வாய் உளானே.

283. அழும்பிலன் அடங்கான்!
பாடியவர்: அடை நெடுங் கல்வியார்
திணை: தும்பை துறை: பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்).

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி,
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்,
மன்றுள் என்பது கெட .. .. .. ¡னே பாங்கற்கு
ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க,
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்,
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்,
மென்தோள் மகளிர் நன்று புரப்ப,
.. .. .. .. .. ண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.

284. பெயர்புற நகுமே!
பாடியவர்: ஓரம் போகியார்
திணை: தும்பை துறை: பண்பாட்டு

‘வருகதில் வல்லே ; வருகதில் வல்’ என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடிக் , காலின்,
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்,
தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.

285. தலைபணிந்து இறைஞ்சியோன்!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: வாகை துறை: சால்பு முல்லை

பாசறை யீரே ! பாசறை யீரே !
துடியன் கையது வேலே ; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே ; காண்வரக்
கடுந்தெற்று மூடையின் .. .. ..
வாடிய மாலை மலைந்த சென்னியன்;
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த
மூரி வேண்டோள் .. .. .. .. ..
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!
மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக;
நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ;
அதுகண்டு, பரந்தோர் எல்லாம்-புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே, குருசில் ! _ பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய;
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.

286. பலர்மீது நீட்டிய மண்டை!
பாடியவர்: ஔவையார்
திணை: கரந்தை துறை: வேத்தியல்

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்,
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

287. காண்டிரோ வரவே!
பாடியவர்: சாத்தந்தையார்
திணை: கரந்தை துறை: நீண்மொழி

துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்,
தண்ணடை பெறுதல் யாவது? படினே;
மாசில் மகளிர் மன்றல் நன்றும்,
உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!

288. மொய்த்தன பருந்தே!
பாடியவர்: கழாத்தலையார்
திணை: தும்பை துறை: மூதின் முல்லை

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

289. ஆயும் உழவன்!
பாடியவர்: கழாத்தலையார்.
திணை, துறை. தெரிந்தில.

ஈரச் செவ்வி உதவின ஆயினும்,
பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,
வீறுவீறு ஆயும் உழவன் போலப்,
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
மூதி லாளர் உள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,
‘இவற்கு ஈக !’ என்னும்; அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி_பாண! பாசறைப்,
‘பூக்கோள் இன்று’ என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?

290. மறப்புகழ் நிறைந்தோன்!
பாடியவர்: ஔவையார்
திணை: கரந்தை துறை: குடிநிலையுரைத்தல்

இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே.

291. மாலை மலைந்தனனே!
பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர்
திணை: கரந்தை துறை: வேத்தியல்

சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்;
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!
மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!

292. சினவல் ஓம்புமின்!
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்
திணை: வஞ்சி துறை: பெருஞ்சோற்று நிலை

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனென்’ என்று,
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்,
‘என்முறை வருக’ என்னான், கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி,
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

293. பூவிலைப் பெண்டு!
பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி துறை: பூக்கோட் காஞ்சி

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!

294. வம்மின் ஈங்கு!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்
திணை: தும்பை துறை: தானை மறம்

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்;
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்,
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து,
இறையும் பெயரும் தோற்றி,”நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு” எனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும்
அரவுஉமிழ் மணியின் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.

295. ஊறிச் சுரந்தது!
பாடியவர்: ஔவையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்,
தோடுஉகைத்து ‘எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி,
வாடுமலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

296. நெடிது வந்தன்றால்!
பாடியவர்: வெள்ளை மாளர்
திணை: வாகை துறை: எறான் முல்லை

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?

297. தண்ணடை பெறுதல்!
பாடினோர் பாடப்பட்டோன் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வெட்சி துறை: இண்டாட்டு

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்,
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி
நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்,
துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்,
மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே.

298. கலங்கல் தருமே!

எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே : நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே_
நேரார் ஆரெயில் முற்றி,
வாய் மடித்து உரறி,’ நீ முந்து? என் னானே.

299. கலம் தொடா மகளிர்!
பாடியவர்: பொன் முடியார்
திணை: நொச்சி துறை: குதிரை மறம்

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.

300. எல்லை எறிந்தோன் தம்பி!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: தும்பை துறை: தானைமறம்

‘தோல்தா; தோல்தா’ என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.

301. அறிந்தோர் யார்?
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: தும்பை துறை : தானை மறம்

பல் சான்றீரே ! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய,
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்;
ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்!
எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள்
எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே!
‘பலம்’ என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண்
நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி,
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி,
எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது,
ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!

302. வேலின் அட்ட களிறு?
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை துறை : குதிரை மறம்

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
விண்ணிவர் விசும்பின் மீனும்,
தண்பெயல் உறையும், உறையாற் றாவே.

303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை துறை : குதிரை மறம்

நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எ·கம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்,
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.

304. எம்முன் தப்பியோன்!
பாடியவர்: அரிசில்கிழார்
திணை: தும்பை துறை : குதிரை மறம்

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே;’நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியடு, ஓராங்கு
நாளைச் செய்குவென் அமர்’ எனக் கூறிப்,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று;
‘இரண்டா காது அவன் கூறியது’ எனவே.

305. சொல்லோ சிலவே!
பாடியவர்: மதுரை வேளாசான்
திணை: வாகை துறை : பார்ப்பன வாகை

வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

306. ஒண்ணுதல் அரிவை!
பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.

307. யாண்டுளன் கொல்லோ!
பாடியவர்: பெயர் புலனாகவில்லை
திணை: தும்பை துறை : களிற்றுடனிலை

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன;
கான ஊகின் கழன்றுகு முதுவீ
அரியல் வான்குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு,
வெஞ்சின யானை வேந்தனும், ‘ இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்’ எனப்,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.

308. நாணின மடப்பிடி!
பாடியவர்: கோவூர் கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எ·கம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே;
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்,
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.

309. என்னைகண் அதுவே!
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
திணை: தும்பை துறை : நூழிலாட்டு

இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்லரா உறையும் புற்றம் போலவும்,
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்,
மாற்றருந் துப்பின் மாற்றோர், ‘பாசறை
உளன்’ என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.

310. உரவோர் மகனே!
பாடியவர்: பொன்முடியார்
திணை: தும்பை துறை : நூழிலாட்டு

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.

311. சால்பு உடையோனே!
பாடியவர்: ஔவையார்
திணை: தும்பை துறை : பாண் பாட்டு

களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்;
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.

312. காளைக்குக் கடனே!

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

313. வேண்டினும் கடவன்!
பாடியவர்: மாங்குடி மருதனார்
திணை: வாகை துறை : வல்லான் முல்லை

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.

314. மனைக்கு விளக்கு!
பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: வாகை துறை : வல்லான் முல்லை

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.

315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை. துறை : வல்லான் முல்லை.

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே.

316. சீறியாழ் பனையம்!
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது, நீயும்;
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்,
சென்று வாய் சிவந்துமேல் வருக_
சிறுகண் யானை வேந்து விழுமுறவே.

317. யாதுண்டாயினும் கொடுமின்!
பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. ..
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.

318. பெடையடு வதியும்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅ யோளடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_
மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்,
பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான்
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்,
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன்புறப் பெடையடு வதியும்
யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.

319. முயல் சுட்டவாயினும் தருவோம்!
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

பூவற் படுவிற் கூவல் தோண்டிய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி,
யாம் க·டு உண்டென, வறிது மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை யணிய,
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.

320. கண்ட மனையோள்!
பாடியவர்: வீரை வெளியனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,
மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியடு இதல்கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாறத்
தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.

321. வன்புல வைப்பினது!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்,
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,
வன்புல வைப்பி னதுவே_சென்று
தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே.

322. கண்படை ஈயான்!
பாடியவர்: ஆவூர்கிழார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்,
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்,
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது,
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண்பணை யாளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே.

323. உள்ளியது சுரக்கும் ஈகை!
பாடியவர் பாடப்பட்டோர் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வாகை. துறை : வல்லாண் முல்லை.

புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.

324. உலந்துழி உலக்கும்!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்,
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
ஊக நுண்கோற் செறித்த அம்பின்,
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்,
குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
வெண்வாழ் தாய வண்காற் பந்தர்,
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை,
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.

325. வேந்து தலைவரினும் தாங்கம்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

களிறுநீ றாடிய விடுநில மருங்கின்,
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்,
குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்,
செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை,
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்,
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.

326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்,
கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே -மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.

327. வரகின் குப்பை!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை துறை : மூதின் முல்லை

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.

328. ஈயத் தொலைந்தன!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை துறை :மூதின் முல்லை

.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
.. .. .. .. .. .. டமைந் தனனே;
அன்னன் ஆயினும், பாண ! நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட.. ..
களவுப் புளியன்ன விளை.. .. .. ..
.. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியடு நெய்பெய்து அட்டுத்,
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு, இனி திருந்த பின். .. .. ..
.. .. .. தருகுவன் மாதோ-
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில்,
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.

329. மாப்புகை கமழும்!
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.

330. ஆழி அனையன்!
பாடியவர்: மதுரை கணக்காயனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.

331. இல்லது படைக்க வல்லன்!
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்).
திணை: வாகை துறை : மூதின் முல்லை

கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப்,
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக், குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன் ; உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில்
வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே.

332. வேல் பெருந்தகை உடைத்தே!
பாடியவர்: விரியூர் கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.

333. தங்கனிர் சென்மோ புலவீர்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: வாகை துறை : மூதின் முல்லை

நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண,
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்,
‘உண்க’என உணரா உயவிற்று ஆயினும்,
தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்,
குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்,
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. ..
.. .. .. .. உடும்பு செய்
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா,
வம்பணி யானை வேந்துதலை வரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே.

334. தூவாள் தூவான்!
பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள்
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,’
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய,
உரவேற் காளையும் கைதூ வானே.

335. கடவுள் இலவே!
பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

337. இவர் மறனும் இற்று!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,
வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.
வரலதோறு அகம் மலர . .. .. .. ..
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,
காண்டற்கு அரியளாகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.
அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக்,
காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி,
வருத லானார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா குவர்கொல் தாமே - நேரிழை
உருத்த பல்சுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?

338. ஓரெயின் மன்னன் மகள்!
பாடியவர்: குன்றூர் கிழார் மகனார்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினத்தைப் பற்றிய குறிப்பு.

ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின்,
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்,
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் தரினும், தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று
உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!

339. வளரவேண்டும் அவளே!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தற் பூக் குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
.. .. .. .. .. . . ..லத்தி
வளர வேண்டும், அவளே, என்றும்-
ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.

340. அணித்தழை நுடங்க!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக்
குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,
மாமகள் .. .. .. .. .. ..
.. .. .. ..லென வினவுதி, கேள், நீ
எடுப்பவெ .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.

341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்,
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
.. .. .. . .. .. ... .. .. .. ..
புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
‘பூக்கோள்’ என ஏஎய்க், கயம்புக் கனனே;
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்,
சுணங்கணி வனமுலை, அவளடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ-
ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்,
நீள்இலை எ·கம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று- எனப்
படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக்
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்,
பெருங்கவின் இழப்பது கொல்லோ,
மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே!

342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

‘கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்?’ என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை;
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்,
தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்,
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா,
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சி யவர் இவள் தன்னை மாரே.

343. ஏணி வருந்தின்று!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

‘மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை யம்பியின் மனைமறுக் குந்து!
மனைக் கவைஇய கறிமூ டையால்.
கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
கலந் தந்த பொற் பரிசம்
கழித் தொணியான் கரைசேர்க் குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன,
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்’ எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் _ வந்தோர்,
வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே_பருந்துஉயிர்த்து
இடைமதில் சேக்கும் புரிசைப்
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?

344. இரண்டினுள் ஒன்று!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளிர், பறந்தெழுந்து,
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;
புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து,
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;
இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.

345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)

களிறு அணைப்பக் கலங்கின, காஅ;
தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலங் கழாஅலின், துறை கலக்குற்றன;
தெறல் மறவர் இறை கூர்தலின்,
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்,
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை,
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி,
‘நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்’ எனக்;
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும், அன்னோ !
என்னா வதுகொல் தானே-
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே!

346. பாழ் செய்யும் இவள் நலினே!
பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

பிற .. .. .. ள பால் என மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்;
ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.

347. வேர் துளங்கின மரனே!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் ப·றேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
. . . . . . . . . . . . . .
என்னா வதுகொல் தானே? . .. . .
விளங்குறு பராரைய வாயினும், வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப,
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.

348. பெருந்துறை மரனே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,
கள்ளரிக்கும் குயம், சிறுசின்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே.

349. ஊர்க்கு அணங்காயினள்!
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே;
இ·துஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று,
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை,
மரம்படு சிறுதீப் போல,
அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.

350. வாயிற் கொட்குவர் மாதோ!
பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி

தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே, தாங்காது?
படுமழை உருமின் இறங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்து, எம்
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எ·கின் சிவந்த உண்கண்,
தொடியுறழ் முன்கை, இளையோள்
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.

351. தாராது அமைகுவர் அல்லர்!
பாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார்
திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி

படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்,
கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும்,
படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக்,
கடல்கண் டன்ன கண்அகன் தானை
வென்றுஎறி முரசின் வேந்தர், என்றும்,
வண்கை எயினன் வாகை அன்ன
இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என்ஆ வதுகொல் தானே- தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்,
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் லூரே?

352. தித்தன் உறந்தை யன்ன!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி குறிப்பு: இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது.
சிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம்.

தேஎங் கொண்ட வெண்மண் டையான்,
வீ . . . . . கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதன் முல்லைப் பூப்பறிக் குந்து;
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
குன்றுஏறிப் புனல் பாயின்
புறவாயால் புனல்வரை யுந்து;
. . . . . நொடை நறவின்
மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
கொடுப்பவும் கொளாஅ னெ. . . .
. . .ர்தந்த நாகிள வேங்கையின்,
கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
சிறுகோல் உளையும் புரவி¦ . . .
. . . . . . . . . . . . . .யமரே.

353. 'யார் மகள்?' என்போய்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்,
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்,
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்,
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை,
வினவல் ஆனா வெல்போர் அண்ணல்!
‘யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்;
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
. . . . . . . . . . . . . .
. . . உழக்குக் குருதி ஓட்டிக்,
கதுவாய் போகிய நுதிவாய் எ·கமொடு,
பஞ்சியும் களையாப் புண்ணர்.
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே.

354. நாரை உகைத்த வாளை!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
நிரைகாழ் எ·கம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத், தந்தையும் பெயர்க்கும்;
வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்,
கயலார் நாரை உகைத்த வாளை
புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ-
சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;
வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை
மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே?

355. ஊரது நிலைமையும் இதுவே?
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : பெயர் தெரிந்திலது.
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.

மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே;
. . . . . . . . . . . . .

356. காதலர் அழுத கண்ணீர்!
பாடியவர்: தாயங்கண்ணனார்
திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி

களரி பரந்து, கள்ளி போகிப்,
பகலும் கூஉம் கூகையடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்,
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.

357. தொக்குயிர் வௌவும்!
பாடியவர்: பிரமனார்
திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி

குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்,
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்,
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்,
மாண்ட வன்றே, ஆண்டுகள், துணையே
வைத்த தன்றே வெறுக்கை;
. . . . . . . . . . ணை
புணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத்
தொக்குஉயிர் வெளவுங் காலை,
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.

358. விடாஅள் திருவே!
பாடியவர்: வான்மீகியார்
திணை: காஞ்சி துறை: மனையறம், துறவறம்


பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட் டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

359. நீடு விளங்கும் புகழ்!
பாடியவர்: கரவட்டனார்.
பாடப்பட்டோன்: அந்துவன் கீரன்.
திணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி.

பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்,
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு
பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல,
பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி,
விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
களரி மருங்கில் கால்பெயர்த் தாடி,
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடுமுன் னினரே, நாடுகொண் டோரும்!
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும், இசையும் நிற்கும்;
அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்,
நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு,
பொலம் படைய மா மயங்கிட,
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
‘கொள்’ என விடுவை யாயின், வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டுநீடு விளங்கும், நீ எய்திய புகழே.

360. பலர் வாய்த்திரார்!
பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர்
திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி

பெரிது ஆராச் சிறு சினத்தர்,
சில சொல்லால் பல கேள்வியர்,
நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்,
கனி குய்யாற் கொழுந் துவையர்,
தாழ் உவந்து தழூஉ மொழியர்,
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள் இனி ; நாளும்,
பலரே தகை அ·து அறியா தோரே!”
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்
பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,
புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு,
அழல்வாய்ப் புக்க பின்னும்,
பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே

361. முள் எயிற்று மகளிர்!
பாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில.

கார் எதிர் உருமின் உரறிக், கல்லென,
ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத்
தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்,
தெருணடை மாகளிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,
உருள்நடைப் ப்·றேர் ஒன்னார்க் கொன்றுதன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,
புரி மாலையர் பாடி னிக்குப்
பொலந் தாமரைப் பூம் பாணரொடு
கலந் தளைஇய நீள் இருக் கையால்
பொறையடு மலிந்த கற்பின், மான்நோக்கின்,
வில்என விலங்கிய புருவத்து, வல்லென,
நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென
கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி,
அமிழ்தென மடுப்ப மாந்தி, இகழ்விலன்,
நில்லா உலகத்து நிலையாமைநீ
சொல்லா வேண்டா தோன்றல், முந்துஅறிந்த
முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே.

362. உடம்பொடுஞ் சென்மார்!
பாடியவர்: சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி

ஞாயிற்றுஅன்ன ஆய்மணி மிடைந்த
மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்,
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்,
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை,
கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்,
ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
அறம்குறித் தன்று; பொருளா குதலின்
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇக்,
கைபெய்த நீர் கடற் பரப்ப,
ஆம் இருந்த அடை நல்கிச்,
சோறு கொடுத்து, மிகப் பெரிதும்
வீறுசான் நன்கலம் வீசி நன்றும்,
சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்,
வாய்வன் காக்கை கூகையடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர ; மெல்ல
இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி,
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே,

363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கல னாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி

வாடா மாலை பாடினி அணியப்,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.

365. நிலமகள் அழுத காஞ்சி!
பாடியவர்: மார்க்கண்டேயனார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி

மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக,
இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்,
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்,
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற,
உள்ளேன் வாழியர், யான்’ எனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.

366. மாயமோ அன்றே!
பாடியவர்: கோதமனார்.
பாடப்பட்டோன்: தருமபுத்திரன்.
திணை : பொதுவியல். துறை: பெருங்காஞ்சி.

விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒருதா மாகிய பெருமை யோரும்,
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே;
அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!
. . . . . . . . . . உரைப்பக் கேண்மதி;
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி,
இரவின் எல்லை வருவது நாடி,
உரை . . . . . . . . . . .
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,
செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,
அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப,
கெடல் அருந் திருவ . . . . . . .
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்,
காவு தோறும் . . . . . . . .
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.

367. வாழச் செய்த நல்வினை!
பாடியவர்: ஔவையார்.
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;
யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

368. பாடி வந்தது இதற்கோ?
பாடியவர்: கழாத் தலையார்
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்
திணை: வாகை துறை: மறக்களவழி
குறிப்பு: இவன், சோழன் வேற்ப·றடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது, களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா முன்னர், அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள்.

களிறு முகந்து பெயர்குவம் எனினே.
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்,
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே;
கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே;
கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி,
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி,
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து,
ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ !
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்,
பாடி வந்த தெல்லாம், கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்தநின்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.

369. போர்க்களமும் ஏர்க்களமும்!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி.

இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,
கருங்கை யானை கொண்மூவாக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக,
அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்,
வெவ் விசைப் புரவி வீசுவளி யாக,
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை,
ஈரச் செறுவயின் தேர்ஏ ராக,
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்.
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்,
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு,
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்,
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்,
பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள!
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்,
பாடி வந்திசின் பெரும; பாடான்று
எழிலி தோயும் இமிழிசை யருவிப்,
பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத் தன்ன
ஓடைநுதல, ஒல்குதல் அறியாத்,
துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி;
தாழா ஈகைத், தகை வெய் யோயே!

370. பழுமரம் உள்ளிய பறவை!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: வாகை. துறை: மறக்களவழி.

. . . . . . . . . . . . . . . வி,
நாரும் போழும் செய்துண்டு, ஓராங்குப்
பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ,
வேர்உழந்து உலறி, மருங்கு செத்து ஒழியவந்து,
அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை,
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்,
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்,
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங்குரல் அரிந்து, கால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
எருதுகளி றாக, வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்,
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
‘வெந்திறல் வியன்களம் பொலிக!’ என்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும;
வடிநவில் எ·கம் பாய்ந்தெனக், கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி, வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக், கழுகொடு
செஞ்செவி எருவை திரிதரும்;
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!

371. பொருநனின் வறுமை!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி.

போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்,
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
பறையடு தகைத்த கலப்பையென், முரவுவாய்
ஆடுறு குழிசி பாடின்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்,
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்,
கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப,
வருகணை வாளி . . . . . அன்பின்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை,
வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்,
குறைத்தலைப் படுபிணன் எதிரப், போர்பு அழித்து
யானை எருத்தின் வாள்மட லோச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
மதியத் தன்ன என் விசியுறு தடாரி
அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணைமருள் நெடுந்தாள், பல்பிணர்த் தடக்கைப்,
புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும!
களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி,
விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள்,
குடர்த்தலை மாலை சூடி, ‘உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர், பல’ என,
உருகெழு பேய்மகள் அயரக்,
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே!

372. ஆரம் முகக்குவம் எனவே!
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
திணை: வாகை. துறை: மறக்கள வேள்வி.

விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்,
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்,
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த,
‘வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க” எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே.

373. நின்னோர் அன்னோர் இலரே!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.,

உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்,
செருநவில் வேழம் கொண்மூ ஆகத்,
தேர்மா அழிதுளி தலைஇ , நாம் உறக்
கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை,
இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள்
பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்,
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே!
. . . . . . தண்ட மாப்பொறி
மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து,
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ. . . . . . . . . . . . .
. . . . .அணியப் புரவி வாழ்கெனச்,
சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர,
நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர்முகம் காணா,
. . . . . . . . . ற்றொக்கான
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை,
மாட மயங்கெரி மண்டிக், கோடிறுபு,
உரும் எறி மலையின், இருநிலம் சேரச்,
சென்றோன் மன்ற சொ¦ . . . .
. . . . . ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக்கள னாக,
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
கொண்டனை பெரும! குடபுலத்து அதரி;
பொலிக அத்தை நின் பணைதனற . . . ளம்!
விளங்குதிணை, வேந்தர் களந்தொறுஞ் சென்ற,
“புகர்முக முகவை பொலிக!” என்றி ஏத்திக்,
கொண்டனர்’ என்ப பெரியோர் : யானும்
அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற,
. . . . . லெனாயினுங் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்,
மன்னெயில் முகவைக்கு வந்திசின், பெரும!
பகைவர் புகழ்ந்த அண்மை, நகைவர்க்குத்
தாவின்று உதவும் பண்பின், பேயடு
கணநரி திரிதரும் ஆங்கண், நிணன் அருந்து
செஞ்செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!

374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?
பாடியவர்: உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பூவைநிலை.

கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்
புல்வாய் இரலை நெற்றி யன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி, என்
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங்கலை ஓர்ப்ப இசைஇக், காண்வரக்,
கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்,
புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்
மான்கண் மகளிர், கான்தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை,
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்,
புகர்முக வேழத்து முருப்பொடு, மூன்றும்,
இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ,
விரிந்து இறை நல்கும் நாடன், எங்கோன்,
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னானே!

375. பாடன்மார் எமரே!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண் . துறை: வாழ்த்தியல்.

அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
பொதியில் ஒருசிறை பள்ளி யாக
முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி,
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,
‘ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?’ எனப்
புரசம் தூங்கும் அறாஅ யாணர்,
வரையணி படப்பை, நன்னாட்டுப் பொருந!
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்பத், தாவது,
பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும்
ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்
புலவர் புக்கில் ஆகி, நிலவரை
நிலீ இயர் அத்தை, நீயே! ஒன்றே
நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன் மாரோ, புரவலர்! துன்னிப்,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவின்,
பாடில், மன்னரைப் பாடன்மார் எமரே!

376. கிணைக்குரல் செல்லாது!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியாதன்.
திணை:பாடாண். துறை: இயன்மொழி.

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
சிறுநனி பிறந்த பின்றைச், செறிபிணிச்
சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்,
பாணர் ஆரும் அளவை, யான்தன்
யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்!
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக்,
குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்,
பண்டுஅறி வாரா உருவோடு, என் அரைத்
தொன்றுபடு துளையடு பருஇழை போகி,
நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி,
‘விருந்தினன் அளியன், இவன்’ எனப், பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு. சூடுதருபு,
நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே,
இரவி னானே, ஈத்தோன் எந்தை;
அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி,
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்,
தோன்றல் செல்லாது, என் சிறுகிணைக் குரலே.

377. நாடு அவன் நாடே!
பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்,
இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி,
‘அவி உணவினோர் புறங் காப்ப,
அற, நெஞ்சத்தோன் வாழ, நாள்’ என்று,
அதற் கொண்டு வரல் ஏத்திக்
கரவு “இல்லாக் கவிவண் கையான்,
வாழ்க!” எனப் பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் பிறர் இல், என
அது நினைத்து, மதி மழுகி,
அங்கு நின்ற எற் காணூஉச்
‘சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
நீபுரவலை எமக்கு’ என்ன,
மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவிற் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
நனவின் நல்கியோன், நகைசால் தோன்றல்;
நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
வேந்தென மொழிவோர், ‘அவன் வேந்தென மொழிவோர்
. . . . . பொற்கோட்டு யானையர்
கவர் பரிக் கச்சை நன்மான்
வடி மணி வாங்கு உருள
. . . . நல்தேர்க் குழுவினர்,
கத ழிசை வன்க ணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டிக்,
கடல் ஒலி கொண்ட தானை
அடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே!

378. எஞ்சா மரபின் வஞ்சி!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் . துறை: இயன்மொழி.

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

379. இலங்கை கிழவோன்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்
பாடப்பட்டோன்: ஓய்மான்வில்லியாதன்
திணை:பாடாண் துறை: பரிசில்

யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை;
அவனே பெறுக, என் நாஇசை நுவறல்;
நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்,
பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து,
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம்; பெரும!
குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்!
நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா,
வல்லன், எந்தை, பசிதீர்த்தல்’ எனக்,
கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்,
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது.
விண்தோய் தலைய குன்றம் பிற்பட,
‘ . . . . ரவந்தனென், யானே-
தாயில் தூவாக் குழவிபோல, ஆங்கு அத்
திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.

380. சேய்மையும் அணிமையும்!

தென் பவ்வத்து முத்துப் பூண்டு
வட குன்றத்துச் சாந்தம் உரீ இ.
. . . . . . . ங்கடல் தானை,
இன்னிசைய விறல் வென்றித்,
தென் னவர் வய மறவன்,
மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து,
நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய,
தேறுபெ. . . . . . . . த்துந்து,
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்;
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;
நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்;
வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல,
. . . த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்;
அன்னன் ஆகன் மாறே, இந்நிலம்
இலம்படு காலை ஆயினும்,
புலம்பல்போ யின்று, பூத்தஎன் கடும்பே.

381. கரும்பனூரன் காதல் மகன்!
பாடியவர்: புறத்திணை நன்னகனார்.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

ஊனும் ஊணும் முனையின், இனிதெனப்,
பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து, மெல்லிது பருகி,
விருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாகச்,
‘சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?’ என,
யாம்தன் அறியுநமாகத்’ தான் பெரிது
அன்புடை மையின், எம்பிரிவு அஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப், பழம்ஊழ்த்துப்,
பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண்
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்,
சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி,
விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்,
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,
இருநிலம் கூலம் பாறக், கோடை
வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்,
சேயை யாயினும், இவணை யாயினும்
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ!
சிறுநனி, ஒருவழிப் படர்க’ என் றோனே - எந்தை,
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்;
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான, மறப்பின்று,
இருங்கோள் ஈராப் பூட்கைக்
கரும்பன் ஊரன் காதல் மகனே!

382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

கடல் படை அடல் கொண்டி,
மண் டுற்ற மலிர் நோன்றாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
நலங் கிள்ளி நசைப் பொருநரேம்;
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
அவற் பாடுதும், ‘அவன் தாள் வாழிய!’ என!
நெய் குய்ய ஊன் நவின்ற
பல்சோற்றான், இன் சுவைய
நல் குரவின் பசித் துன்பின் நின்
முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்,
யானும், ஏழ்மணி யங்கேள், அணிஉத்திக்,
கட்கேள்விக், சுவை நாவின்
நிறன் உற்ற, அரா அப் போலும்
வறன் ஒரீ இ, வழங்கு வாய்ப்ப,
விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்!
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய;
எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
எறிதொறும் நுடங்கி யாங்கு, நின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்,
வென்ற தேர், பிறர் வேத்தவை யானே.

383. வெள்ளி நிலை பரிகோ!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது
(கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்)
திணை: பாடாண். துறை: கடைநிலை.

ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து,
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி,
நெடுங்கடை நின்று, பகடுபல வாழ்த்தித்,
தன்புகழ் ஏத்தினெ னாக, ஊன்புலந்து,
அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்,
கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்,
தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்,
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
கழைபடு சொலியின் இழை அணி வாரா.
ஒண்பூங் கலிங்கம் உடீ இ, நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பின், அவ்வாங்கு உந்திக்,
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல,
எற் பெயர்ந்த நோக்கி . . . . .
. . . . கற்கொண்டு,
அழித்துப் பிறந்ததென னாகி, அவ்வழிப்,
பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே;
குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி,
நரைமுக வூகமொடு, உகளும், சென. . .
. . . . . . கன்றுபல கெழீ இய
கான்கெழு நாடன், நெடுந்தேர் அவியன், என
ஒருவனை உடையேன் மன்னே, யானே;
அறான், எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?

384. நெல் என்னாம்! பொன் என்னாம்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்.
திணை: பாடாண். துறை: கையறுநிலை.

மென் பாலான் உடன் அணை இ,
வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்;
வன் பாலான் கருங்கால் வரகின்
. . .
அங்கண் குறுமுயல் வெருவ, அயல
கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து;
விழவின் றாயினும், உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து;
. . . . . கிணையேம் பெரும!
நெல் என்னாம், பொன் என்னாம்,
கனற்றக் கொண்ட நறவு என்னும்,
. . . . மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கிப்,
புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை;
அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட
உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்.
வந்த வைகல் அல்லது,
சென்ற எல்லைச் செலவு அறி யேனே!

385. காவிரி அணையும் படப்பை!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப,
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்,
தன்கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி,
வறன்யான் நீங்கல் வேண்டி, என் அரை
நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து,
வெளியது உடீஇ, என் பசிகளைந் தோனே;
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்.
நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே!

386. வேண்டியது உணர்ந்தோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

நெடு நீர நிறை கயத்துப்
படு மாரித் துளி போல,
நெய் துள்ளிய வறை முகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன் எந்தை, இசைதனது ஆக;
வயலே நெல்லின் வேலி, நீடிய கரும்பின்
பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின;
புறவே , புல்லருந்து பல்லா யத்தான்,
வில்இருந்த வெங்குறும் பின்று;
கடலே, கால்தந்த கலம் எண்ணுவோர்
கானற் புன்னைச் சினைநிலக் குந்து;
கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து;
அன்னநன் நாட்டுப் பொருநம், யாமே;
பொரா அப் பொருந ரேம்,
குணதிசை நின்று குடமுதற் செலினும்,
வடதிசை நின்று தென்வயிற் செலினும்,
தென்திசை நின்று குறுகாது நீடினும்,
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே!

387. சிறுமையும் தகவும்!
பாடியவர்: குண்டுகட் பாலியாதனார்.
பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண் டன்ன,
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண்கண் மாக்கிணை இயக்கி, “என்றும்
மாறு கொண்டோர் மதில் இடறி,
நீறு ஆடிய நறுங் கவுள,
பூம்பொறிப் பணை எருத்தின,
வேறு வேறு பரந்து இயங்கி,
வேந்துடை மிளை அயல் பரக்கும்,
ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்,
திருந்து தொழிற் பல பகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்து, நின்
நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி,
மிகப்பொலியர், தன் சேவடியத்தை !” என்று
யாஅன் இசைப்பின், நனிநன்று எனாப்,
பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்!
மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்,
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி,
வென் றிரங்கும் விறன் முரசினோன்,
என் சிறுமையின், இழித்து நோக்கான்.
தன் பெருமையின் தகவு நோக்கிக்,
குன்று உறழ்ந்த களி றென்கோ;
கொய் யுளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கவை கனவுஎன மருள, வல்லே, நனவின்
நல்கி யோனே, நகைசால் தோன்றல்;
ஊழி வாழி, பூழியர் பெருமகன்!
பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

388. நூற்கையும் நா மருப்பும்!
பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.
பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான் பண்ணன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம், வாடிய பயன்இல் காலை,
இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்,
தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல்,
நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ; அவன்
வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா,
நாடொறும் பாடேன் ஆயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி,
கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!

389. நெய்தல் கேளன்மார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன்: ஆதனுங்கன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

‘நீர் நுங்கின் கண் வலிப்பக்
கான வேம்பின் காய் திரங்கக்,
கயங் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போகுறு காலை,
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!
என்றுஈத் தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து,
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்,
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்!
ஆத னுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும!
ஐதுஅகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே!

390. காண்பறியலரே!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்,
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்,
விழவணி வியன்களம் அன்ன முற்றத்து,
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்,
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப, வென்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்,
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
வந்ததற் கொண்டு,’ நெடுங்கடை நின்ற
புன்தலைப் பொருநன் அளியன் தான்’ எனத்,
தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி,
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்நடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற,
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்,
‘கொண்டி பெறுக!’ என் றோனே; உண்துறை
மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்,
கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி,
. . . . . . . . . . . . . . .
வான்அறி யலவென் பாடுபசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியலர், காண்பறி யலரே!

391. வேலி ஆயிரம் விளைக!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி,
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்,
‘முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின், பொருநன் இவன்’ என,
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்,
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்
ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்,
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளடு,
இன்துயில் பெறுகதில் நீயே; வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய,
வேலி ஆயிரம் விளைக நின் வயலே!

392. அமிழ்தம் அன்ன கரும்பு!
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்
பசலை நிலவின் பனிபடு விடியல்,
பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ,
‘உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது’ எனச்
சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத்
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்த மன்ன
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.

393. பழங்கண் வாழ்க்கை!
பாடியவர்: நல்லிறையனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையடும் கூமை வீதலிற்,
குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்
வள்ளன் மையின்எம் வரைவோர் யார்?’ என;
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா,
உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென,
மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி,
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
கூர்ந்தஎவ் வம்வீடக், கொழுநிணம் கிழிப்பக்,
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன,
வெண்நிண மூரி அருள, நாளுற
ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்,
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன,
அகன்றுமடி கலிங்கம் உடீஇச், செல்வமும்
கேடின்று நல்குமதி, பெரும! மாசில்
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்,
‘கோடை யாயினும் கோடி . . . .
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!
வாய்வாள் வளவன் வாழ்க! எனப்
பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே.

394. என்றும் செல்லேன்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,
ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,
வள்ளிய னாதல் வையகம் புகழினும்!
உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்!
யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை,
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,
பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக,
அகமலி உவகையடு அணுகல் வேண்டிக்,
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி
யான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அது
சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர்
பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு,
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்,
‘துன்னரும் பரிசில் தரும்’ என,
என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே!

395. அவிழ் நெல்லின் அரியல்!
பாடியவர்: மதுரை நக்கீரர்.
பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புக வருந்திப்,
புதல் தளவின் பூச் சூடி,
அரில் பறையாற் புள்ளோப்பி,
அவிழ் நெல்லின் அரியலா ருந்து;
மனைக் கோழிப் பைம்பயி ரின்னே,
கானக் கோழிக் கவர் குரலொடு,
நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து;
வே யன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளிகடி யின்னே;
அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து;
ஆங்கப் , பலநல்ல புலன் அணியும்
சீர்சான்ற விழுச் சிறப்பின்,
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,
தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
தீங்குரல் . . கின் அரிக்குரல் தடாரியடு,
ஆங்கு நின்ற எற் கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான்,
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி,
ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி,’இவனை
என்போல் போற்று’ என் றோனே; அதற்கொண்டு,
அவன்மறவ லேனே, பிறர்உள்ள லேனே;
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
குள மீனோடும் தாள் புகையினும்,
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த,
‘விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க!’ என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
ஆங்குஅமைந் தன்றால்; வாழ்க, அவன் தாளே!

396. பாடல்சால் வளன்!
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

கீழ் நீரால் மீன் வழங்குந்து;
மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து;
கழி சுற்றிய விளை கழனி,
அரிப் பறையாற் புள் ளோப்புந்து;
நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
மென் பறையாற் புள் இரியுந்து;
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீந் தேறல் நறவு மகிழ்ந்து
தீங் குரவைக் கொளைத்தாங் குந்து;
உள்ளி லோர்க்கு வலியா குவன்,
கேளி லோர்க்குக் கேளா குவன்
கழுமிய வென்வேல் வேளே;
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
கிணை யேம், பெரும!
கொழுந் தடிய சூடு என்கோ?
வளநனையின் மட்டு என்கோ?
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறுநெய்ய சோறு என்கோ?
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ?
அன்னவை பலபல . . .
. . . . வருந்திய
இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;
எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே;
மாரி வானத்து மீன் நாப்பண்,
விரி கதிர வெண் திங்களின்,
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை!
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
நிரைசால் நன்கலன் நல்கி,
உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!

397. தண் நிழலேமே!
பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம்.

வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே;
பொய்கையும் போடுகண் விழித்தன; பையச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடெழுந்து
இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எ·குஇருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! பலகோள்
செய்தார் மார்ப! எழுமதி துயில்!’ எனத்,
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
நெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து,
‘உள்ளி வந்த பரிசிலன் இவன்’ என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு,
மாரி யன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங்கலம் நல்கி யோனே; என்றும்,
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை,
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயடு விளங்கும் நாடன், வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்;
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்,
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,
என்னென்று அஞ்சலம் யாமே; வென்வெல்
அருஞ்சமம் கடக்கும் ஆற்றல், அவன்
திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே!

398. துரும்புபடு சிதா அர்!
பாடியவர்: திருத்தாமனார்.
பாடப்பட்டோன்: சேரமான் வஞ்சன்.
திணை: பாடாண். துறை: கடைநிலை.

மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,
வகைமாண் நல்லில் . . . . .
பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,
பொய்கைப் பூமுகை மலரப், பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்,
பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்
புலியினம் மடிந்த கல்லளை போலத்,
துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்,
மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி,
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,
‘உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்!
‘தள்ளா நிலையை யாகியர் எமக்கு’ என,
என்வரவு அறீஇச்,
சிறி திற்குப் பெரிது உவந்து,
விரும்பிய முகத்த னாகி, என் அரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித், தன் அரைப்
புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ,
அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை,
நிழல்காண் தேறல் நிறைய வாக்கி,
யான்உண அருளல் அன்றியும், தான்உண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை,
கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர,
வரையுறழ் மார்பின், வையகம் விளக்கும்,
விரவுமணி ஒளிர்வரும், அரவுஉறழ் ஆரமொடு,
புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்.
உரைசெல அருளி யோனே;
பறைஇசை அருவிப் பாயல் கோவே.

399. கடவுட்கும் தொடேன்!
பாடியவர்: ஐயூற் முடவனார்
பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்
திணை: பாடாண் துறை: பரிசில் விடை

அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,
மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,
செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,
பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,
மெய்களைந்து, இன்னொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்,
அழிகளிற் படுநர் களியட வைகின்,
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்,
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,
ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே,
‘அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன்,தொல்லோர் மருகன்,
இசையிற் கொண்டான், நசையமுது உண்க’ என,
மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்,
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்;
‘கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தை யான் வேண்டிவந் தது’ என,
ஒன்றியான் பெட்டா அளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை; விசும்பின்
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியடு நல்கி யோனே; சீர்கொள
இழுமென இழிதரும் அருவி,
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.

400. உலகு காக்கும் உயர் கொள்கை!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

மாசு விசும்பின் வெண் திங்கள்
மூ வைந்தான் முறை முற்றக்,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்திக்
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் கொள்கை,
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;
கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது:
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி,
மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
. . . . . . . . . . லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,
நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;
போ தறியேன், பதிப் பழகவும்,
தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்ததன் . . . . .
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்,
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்,
உறைவின் யாணர் , நாடுகிழ வோனே!

புறநானூறு முற்றும்.

தலைப்புக்கு செல்க