பொருளடக்கம் பக்கம் செல்க


மதுராபுரி அம்பிகை மாலை

குலசேகர பாண்டியன்


விநாயகர் காப்பு
கட்டளைக் கலித்துறை

நடக்கும் திரு விளையாட்டு ஓர் அறுபத்து நாலும் சொக்கர்
அடக்கும் தென் கூடலில் அம்பிகை மாலைக்கு அருவி மதத்,
தடக் கும்ப, கம்பச், சிறு கண், புகர் முகத்து, ஆல வட்டம்
முடக்கும் தடக்கை, ஒரு கோட்டு வாரணம் முன் நிற்கவே.

நூல்

திருவே! விளைந்த செந்தேனே! வடி இட்ட தெள் அமுதின்
உருவே! மடப் பிள்ளை ஓதிமமே! ஒற்றை ஆடகப் பூந்
தருவே! நின் தாமரைத் தாளே சரணம், சரணம் கண்டாய்,
அருவே! அணங்கு அரசே! மதுராபுரி அம்பிகையே! 1.

நாள் கொண்ட கொங்கைத் துணையும், பொன் மேனியும், நஞ்சு அளித்த
வாள் கொண்ட நாட்டமும், தொண்டைச் செவ் வாயும், மருங்கு உடுத்துத்
தோள் கொண்ட செம் பட்டும், முத்து ஆரமும் கொண்டு தோன்றி எனை
ஆள் கொண்ட நாயகியே! மதுராபுரி அம்பிகையே! 2.

கரும்பும், கணை ஐந்தும், பாச அங்குசமும், கைக் கொண்டு அடியேன்
திரும்பும் திசை தொறும் தோற்று கண்டாய் - இசை தேக்கு மணிச்
சுரும்பு உண்ட காவியும், சோதி நிலாவும், துளிரும் சற்றே
அரும்பும் கனம் குழலாய்! மதுராபுரி அம்பிகையே! 3.

குன்றே எனும் முலையார் தரும் காதல் கொடுமை எல்லாம்
வென்றேன், மறலியை விட்டு விட்டேன், விரைத் தாமரைத் தாள்
என்றே என் சென்னி வைத்தாய், பின்னை யான் செய்யும் ஏவல் எல்லாம்
அன்றே உன் ஏவல் கண்டாய், மதுராபுரி அம்பிகையே! 4.

வடி வைத்த வேல் விழியார் அநுராக மயக்கில் சென்று
குடி வைத்த நெஞ்சு என்று மீளும் கொலோ! அன்பு கொண்ட தொண்டர்
முடி வைத்தவாறு, என் புலைத் தலை மேல் வைத்த முத்தின் தண்டை
அடி வைத்த பேர் இன்பமே! மதுராபுரி அம்பிகையே! 5.

வடக் குன்ற மேருவும், மூது அண்டம் எட்டி வளைந்து புறம்
கிடக்கும் கடலும், புவனங்கள் ஏழும், கிளர் மருப்புத்
தடக் குஞ்சரம் எட்டும், எல்லாம் திரு உந்தித் தாமரையில்
அடக்கும் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே! 6.

ஒளி கொண்ட வெண் பிறைத் தோடும், பொன் ஓலையும், ஊறிய தேன்
துளி கொண்ட செங்கனி வாயும், முத்தாரமும், தோளும் என்றன்
களி கொண்ட நெஞ்சம் குடி கொண்டவா இசை கக்கு மணி
அளி கொண்ட பூங்குழலாய்! மதுராபுரி அம்பிகையே! 7.

மணியும், தரளமும், வெண் நகையோ? வழி மூவர் செயத்
துணியும், தொழிலும் உன் செய் தொழிலோ? பத்தித் துத்தி முடிப்
பணியும், சுடரும், கடல் ஏழும் நின் கழல் பங்கயத்தில்
அணியும் திரு உருவே! மதுராபுரி அம்பிகையே! 8.

செழும் துங்கக் கொங்கையும், முத்து ஆரமும், பொன் சிலம்பும், திங்கள்
கொழுந்தும், மகரக் குழையும் எல்லாம், வண்டு கொண்டு சுற்றி
உழும் தும்பை சூடும் திரு மேனியும், உன் உடலும் ஒன்றாய்
அழுந்தும் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே! 9.

கணையும், குமிழும், இணை நெடும் சாபமும், காரும், வள்ளைத்
துணையும், பவளமும், சோதி நிலாவும், துவண்ட பச்சைப்
பணையும், பனித் தடம் காந்தளும், பாந்தளும் பத்தும் ஒன்றாய்
அணையும் திரு உருவே! மதுராபுரி அம்பிகையே! 10.

இணங்கேன் ஒருவரை; நின் இரு தாள் அன்றி எப்பொழுதும்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன்; வஞ்ச நெஞ்சர் உடன்
பிணங்கேன் - அமுதம் பெருகும் செம் பாதிப் பிறை முடித்த
அணங்கே! சரணம் கண்டாய், மதுராபுரி அம்பிகையே! 11.

முலைக்கே அவசத் துயர் விளைப்பார் இன்ப மோகம் என்னும்
வலைக்கே அகப்பட்டு அழுந்தி விடாமல், வலிய வந்து என்
தலைக்கே பதம் வைத்த தண் அளியாய்! முத்தம் தத்து திரை
அலைக்கே விழி துயில்வாய்! மதுராபுரி அம்பிகையே! 12.

கொடிக் கொண்ட சிறு இடையார் மணி நூபுரம் கொஞ்சும் அடிப்
பொடிக் கொண்ட சென்னி உன் கால் வைக்குமோ? புற்று அரவெடுத்து
முடிக் கொண்ட சொக்கர் அழியா விரதம் முடிக்க என்றே,
அடிக் கொண்ட பூண் முலையாய்! மதுராபுரி அம்பிகையே! 13.

விளையும் கருக் குழி வீழாமல், என் தன் வினைப் பிறவி
களையும் படிக்கும் கருது கண்டாய் - கழுநீரை வென்று
வளையும் தரள மணித் தோடு அழுத்திய வள்ளையைச் சென்று
அளையும் கயல் விழியாய்! மதுராபுரி அம்பிகையே! 14.

ஊடும் பொழுது உன் கருணை விடாமல் உவப்பதற்குக்
கூடும் தொழிலை மறப்பது உண்டோ ? நறைக் கொன்றை அம் தார்
சூடும் தலைவர் திரு மார்பில், வாரி சொரி தரளம்
ஆடும் துணை முலையாய்! மதுராபுரி அம்பிகையே! 15.

மழைக் கொந்து அளக மடவார் தம் காதல் வலைத் தலைப்பட்டு
உழைக்கும் துயரம் ஒழிப்பது என்றோ? இரண்டு ஊசல் மணிக்
குழைக்கும் கலந்த பசுமை எலாம் குழை ஊடு நடந்து
அழைக்கும் கயல் விழியாய்! மதுராபுரி அம்பிகையே! 16.

இணைக் கும்ப மென் முலையார் விழி வேலுக்கும், எய்யு மதன்
கணைக்கும் தனி இலைக்கா விடவோ? மணிக் கச்சு அகலாத்
துணைக் கும்ப மென் முலையாய்! சொக்கர் மேனி துவளக் கட்டி
அணைக்கும் கமலம் உள்ளாய்! மதுராபுரி அம்பிகையே! 17.

நும் கேள்வர் பாகத்தும், அந் நான் மறை எனும் நூல் இடத்தும்,
கொங்கு ஏய் பொகுட்டுக் கமல ஆலயத்தும், குடி கொண்ட நீ
எங்கே இருக்கினும் நாய் அடியேனுக்கு இடர் வரும் போது
அங்கே வெளிப்படுவாய்! மதுராபுரி அம்பிகையே! 18.

பொன்னே! நவ மணியே! அமுதே! புவி பூத்து அடங்கா
மின்னே! ஒளி உற்ற மெய் பொருளே! கரு மேதியின் மேல்
எந் நேரம் காலன் வந்து ஆவி விட்டாலும், எனக்கு அஞ்சேல் என்று
அந் நேரம் வந்து அருள்வாய்! மதுராபுரி அம்பிகையே! 19.

விருந்து உண்டு போகைக்கு நாயேன் சடலத்தை வெம் கழுகும்,
பருந்தும் சுழலு முன்னே வருவாய் - மணப் பந்தலிலே
திருந்தும் கரம் பற்றி நிற்பார் திரு முகச் செவ்வி எல்லாம்
அருந்தும் கயல் விழியாய்! மதுராபுரி அம்பிகையே! 20.

நாரணன் கொஞ்சும் புகழ் நான்முகற்கும், பொன் நாட்டவர்க்கும்
காரணம் கொஞ்சும் நின் சிறு அடிக்கே திசை கட்டும் எட்டு
வாரணம் கொஞ்சும் கடம்பு அடவியின் மகிழ்நருடன்
ஆரணம் கொஞ்சும் அம்மே! மதுராபுரி அம்பிகையே! 21.

நெளிக்கும் புழுவுக்கு இடம் ஆம் குரம்பையின் நின்றும், உயிர்
ஒளிக்கும் பொழுது வெளிப்படுவாய் - ஒழியாப் பிறவிச்
சுளிக்கும் கடலில் சுழலாமல் வாழ்வைத் துறந்து, படைத்து,
அளிக்கும் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே! 22.

ஒழியாப் பனித் தடம் கண் நீர் சொரிய வந்து, உன் அடிக்கே
பொழியாப் புது மலர் இட்டு நிற்பார்க்கு, உன் பொழி கருணை
விழியால் சுரப்ப, அலர்ந்த செம் தாமரை வீடு ஒன்றவே
அழியாப் பதம் தருவாய், மதுராபுரி அம்பிகையே! 23.

ஏலம் அடங்கும் குழலார் குறு ஏவலில் எய்த்து, அடியேன்
காலம் அடங்கும் முன்னே வருவாய் - விண் கடந்து நின்ற
கோலம் அடங்கும் அறியாத பச்சைக் குழவியைப் போல்
ஆலம் அடங்கும் அம்மே! மதுராபுரி அம்பிகையே! 24.

போர்க்கும் கலா மதியும், கொன்றை மாலையும், பொன் முடி மேல்
சேர்க்கும் தலைவர் முன் செல்லும் அப் போது, திரண்ட முத்தின்
வார்க் குங்குமக் கொங்கை யானைக்கு முன்னம் மணி முரசம்
ஆர்க்கும் பராசக்தியே! மதுராபுரி அம்பிகையே! 25.

நோக்கும் கருணை விழியால் பொது அற நோக்கி, என்னைக்
காக்கும் படிக்கும் கருது கண்டாய் - ஒளி கக்கு நிலா
வீக்கும் சடை அடவியார் உண்ட காள விடத்தை அமுது
ஆக்கும் சிவ ஆனந்தமே! மதுராபுரி அம்பிகையே! 26.

உலை குதிக்கும் தழல் ஊறிய கானலை உன்னிச் சென்று,
கலை குதிக்கும்படி போல் இழைத்தேன் - கழிச் சேல் வெகுண்டு
வலை குதிக்கும் செம் கழுநீர் உடைந்து வழிந்த செம் தேன்
அலை குதிக்கும் தடம் சூழ் மதுராபுரி அம்பிகையே! 27.

பொடி பட்ட பிட்டுக்குத் தோள் கொண்டு கூடை மண் போட்டுப், பொங்கி
வெடி பட்ட வையை அடைத்த அந் நாள், சொக்கர் மேனி சுற்றும்
கொடி பட்ட போது முழு நீலக் கோமள மேனியிலும்
அடி பட்டதோ? அணங்கே! மதுராபுரி அம்பிகையே! 28.

பூண்ட கை வாரிப், புது மலர் தூவி, நின் பொன் அடிக்கே
கூண்ட கை, சென்னி குவிக்கப் பெற்றேன் - பிறைக் கோடு அணிந்து,
நீண்ட கை வேழப் பிடர் ஏறி, வட்ட நிலம் புரக்கும்
ஆண் தகையே! அணங்கே! மதுராபுரி அம்பிகையே! 29.

கொஞ்சும் குதலை மின்னார்க்கு அன்பு பூண்டு குலையும் என் தன்
நெஞ்சு, உன் பொன் பாதம் நினைப்பது உண்டோ ? வெண் நிலா மதிக் கூன்
பிஞ்சும், கணை வில்லும், அங்குச பாசமும், பிஞ்சு மலர்
அஞ்சும் தரித்தவளே! மதுராபுரி அம்பிகையே! 30.

நூற்பயன்

பிடித்தாரைக் கட்டி அணைத்து, அமுது ஊட்டிய பேயின் முலை
குடித்து ஆடும் மாயன், குலசேகரன், வட குன்றைச் செண்டால்
அடித்தான் வடித்த சொல் அம்பிகை மாலை, ஐ ஆறு கவி
படித்தார்கள் கற்பகக் காவும், பொன் நாடும் படைப்பவரே.

தலைப்புக்கு செல்க